search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோகித் சர்மா
    X
    ரோகித் சர்மா

    14 நாட்கள் தனிமை எனக் கூறியதால் பயிற்சியை தொடங்க முடியாத நிலையில் மும்பை, கொல்கத்தா அணிகள்

    அபு தாபியில் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் நடைமுறையில் இருப்பதால் கொல்கத்தா, மும்பை இந்தியன்ஸ் அணிகள் பயிற்சியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
    13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடக்கிறது.

    ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகியவை 20-ந்தேதியும், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சஸ் பெங்களூர் ஆகிய அணிகள் 21-ந்தேதியும், டெல்லி கேபிடல்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகியவை 23-ந்தேதியும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்தன.

    மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் அபுதாபியில் உள்ளன. அந்த இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட முடியாததால் அதிருப்தியில் உள்ளனர்.

    மும்பை இந்தியன்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் 7 நாட்களுக்கு மேலாக ஓட்டல் அறையிலேயே தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் வெளியே வருவதற்கு இன்னும் அனுமதி இல்லை.

    ஐக்கிய அரபு எமிரேட்சில் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு வீரர்கள் பயிற்சியில் ஈடுபடலாம் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் தற்போது அபுதாபியில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், வீரர்கள் 14 நாட்கள் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதன் காரணமாகவே இந்த இரு அணி வீரர்களும் ஓட்டல் அறையிலேயே முடக்கப்பட்டு உள்ளார்கள். இதனால் வீரர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

    ஐ.பி.எல். போட்டி தொடங்க இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில் போட்டி அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த வார இறுதியில் அட்டவணை வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அபுதாபியில் பாதிப்பு அதிகமாக இருப்பதால் 2-ம் கட்ட போட்டிகளை அங்கு நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்கட்ட போட்டிகளை துபாய் மற்றும் சார்ஜாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    மொத்தம் உள்ள 56 போட்டியில் துபாய், அபுதாபியில் தலா 21 ஆட்டங்களும், சார்ஜாவில் 14 ஆட்டங்களும் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் துபாயில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையில் இரண்டு அணிகளும் இந்த விவகாரத்தை ஐபிஎல் ஆட்சிமன்றக்குழுவிடம் எடுத்துச் சென்றனர். அவர்கள் பிசிசிஐ-யிடம் தெரிவிக்க, பிசிசிஐ எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் இரண்டு அணிகளும் பயிற்சியில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×