search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி, சுனில் கவாஸ்கர்
    X
    விராட் கோலி, சுனில் கவாஸ்கர்

    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கோலி தலைமையிலான அணியே சிறந்தது - கவாஸ்கர்

    இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி தலைமையிலான நடப்பு அணியே சிறந்தது என்று முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியுள்ளார்.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரருமான சுனில் கவாஸ்கர் டி.வி. சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    விராட் கோலி தலைமையிலான தற்போதைய அணியே இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த அணி என்று நம்புகிறேன். வீரர்களின் திறமை, அதை வெளிப்படுத்தும் விதம், சரியான கலவை, மனஉறுதி ஆகியவற்றின் அடிப்படையில் இதை சொல்கிறேன். உலகின் எந்த ஆடுகளத்திலும் வெற்றியை தேடித்தரக்கூடிய பந்து வீச்சு தாக்குதல் (பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர்குமார், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், அஸ்வின் உள்ளிட்டோர்) தற்போதைய அணியிடம் உள்ளது. சீதோஷ்ண நிலை உதவிகரமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்களால் எந்த இடத்திலும் சாதிக்க முடியும். பேட்டிங்கை பொறுத்தவரை 1980-களில் உள்ளது போன்றே அபாரமாக இருக்கிறது. ஆனால் இன்று விராட் கோலிக்கு கிடைத்த பவுலர்கள் அப்போதைய இந்திய அணியில் இல்லை. பந்து வீச்சில் நிறைய வித்தியாசங்களை இந்திய அணி கொண்டிருக்கிறது. அது தான் முக்கியமான அம்சம். எந்த ஆடுகளத்திலும் இவர்களால் 20 விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். 20 விக்கெட்டுகளை கைப்பற்ற முடியாவிட்டால் டெஸ்டில் வெற்றி காண முடியாது.

    அதே சமயம் போதுமான ரன்கள் குவிக்க வேண்டியது முக்கியம். 2018-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் அதை கண்கூடாக பார்த்தோம். ஒவ்வொரு முறையும் எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் சாய்த்தோம். ஆனால் போதிய ரன்கள் சேர்க்க தவறி (இரு தொடரிலும் தோல்வி) விட்டோம். இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அவர்களை விட அதிக ரன்கள் எடுக்கக்கூடிய பேட்டிங் வரிசை நம்மிடம் உள்ளதாக கருதுகிறேன்.

    இந்திய வீரர் ரோகித் சர்மா, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கி முதல் ஓவரில் இருந்தே பந்தை அடித்து நொறுக்கும் விதத்தை பார்க்கும் போது, எனக்கும் அந்த மாதிரி விளையாட வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால் அப்போதைய சூழல், எனது திறமை மீது இருந்த நம்பிக்கையின்மை காரணமாக அந்த மாதிரி வேகமாக ஆட முடியாமல் போய் விட்டது. ஆனால் அடுத்த தலைமுறை வீரர்கள் இதை செய்யும் போது பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

    இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.
    Next Story
    ×