search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெஹாரா - விராட் கோலி
    X
    நெஹாரா - விராட் கோலி

    கேப்டன் பொறுப்பில் விராட்கோலி இன்னும் முன்னேற்றம் காண வேண்டும் - நெஹரா

    கேப்டன் பதவியை பொறுத்தமட்டில் விராட் கோலி இன்னும் முன்னேற்றம் காண வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹரா கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹரா டெலிவிஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாடுகையில் கூறியதாவது:-

    இந்திய கிரிக்கெட் அணியில் நிறைய திறமையான வீரர்கள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு நீண்ட காலம் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் பேட்டிங்கில் 5-வது மற்றும் 6-வது இடம் குறித்து பேசுகையில், அந்த இடத்துக்கு யார் களம் இறங்குவார்கள் என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. 5-வது இடத்தில் லோகேஷ் ராகுல் விளையாடுகிறார். ஆனால் டோனிக்கு மாற்று வீரராக கருதப்படும் ரிஷாப் பண்ட் தண்ணீர் கொடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறார். ரிஷாப் பண்ட் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை தவற விட்டு இருக்கிறார் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. இருப்பினும் அவர் அணியில் தொடர்ந்து நீடிக்கிறார் என்றால் 22 வயதிலேயே அவரிடம் இருக்கும் திறமையை பார்க்கின்றனர்.

    ஒரு வீரராக விராட்கோலிக்கு எந்தவித அங்கீகாரமும் தேவையில்லை. பேட்டிங் சாதனைகளே அவரை பற்றிய முழுமையான கதையையும் சொல்லும். வீரராக விராட்கோலி வியப்பூட்டும் வகையில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். கேப்டன் பதவியை பொறுத்தமட்டில் அவர் இன்னும் முன்னேற்றம் காண வேண்டியது இருக்கிறது என்று நான் கருதுகிறேன். அவர் சற்று உணர்ச்சிவசப்படக்கூடிய கேப்டன் என்று என்னால் சொல்ல முடியும்.

    1990 மற்றும் 2000-ம் களில் இருந்த ஆஸ்திரேலிய அணிக்கும், தற்போதைய இந்திய அணிக்குமான வித்தியாசம் ரொம்ப அதிகமானதாகும். அந்த அணியோடு தற்போதைய இந்திய அணியை ஒப்பிடமுடியாது. அந்த காலக்கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக 3 முறை உலக கோப்பையை வென்றது. 1996-ம் ஆண்டு உலக கோப்பையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அத்துடன் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்து ஆதிக்கம் செலுத்தியது. அந்த நிலையை தற்போதைய இந்திய அணியால் எட்ட முடியாது என்று சொல்ல முடியாது. ஆனால் அணியின் கலவை மிகவும் முக்கியமானதாகும். குழப்பம் இல்லாமல் சிறந்த வீரர்களை தேர்வு செய்ய வேண்டியதும் அவசியமானதாகும்.

    இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை (0-3) இழந்தபிறகு இந்திய அணி கேப்டன் விராட்கோலி, ‘நாங்கள் இந்த ஆண்டில் 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிக்கு தான் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். அதனால் ஒருநாள் போட்டி முடிவை பெரிதாக எடுத்து கொள்ள வேண்டியதில்லை’ என்று சொன்னதை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த தொடரை வென்று விட்டு அப்படி சொல்லி இருந்தால் அது வித்தியாசமானதாக இருந்து இருக்கும். தோல்வி கண்ட பிறகு இதுபோல் சாக்கு போக்கு சொல்லுவது தவறானதாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×