search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாதன் லயன் - விராட் கோலி
    X
    நாதன் லயன் - விராட் கோலி

    ரசிகர்கள் இன்றி டெஸ்ட் போட்டி நடந்தால் விராட் கோலி என்ன செய்வார்? நாதன் லயன் ஆவல்

    ரசிகர்கள் இன்றி டெஸ்ட் போட்டி நடந்தால் விராட் கோலியின் நடவடிக்கை எந்த மாதிரி இருக்கும் என்பதை காண ஆவலுடன் காத்திருப்பதாக ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    கொரோனா அச்சத்தால் கிரிக்கெட் போட்டிகளை ரசிகர்கள் இன்றி நடத்துவது குறித்து அவ்வப்போது ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ரசிகர்கள் பட்டாளம் இன்றி வெறிச்சோடிய மைதானங்களில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி எப்படி செயல்படுவார் என்று ஆஸ்திரேலிய முன்னணி சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனும், வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கும் விவாதத்தில் ஈடுபட்டனர். இந்த ஆண்டு இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அப்போது ரசிகர்கள் இன்றி போட்டியை நடத்த வேண்டிய சூழல் இருந்தால் களத்தில் ஆக்ரோஷமாக மல்லுகட்டும் கோலியின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு நாதன் லயன் பதில் அளித்து கூறியதாவது:-

    எந்த ஒரு சூழலுக்கும் தக்கபடி தன்னை திறம்பட மாற்றிக்கொள்ளக்கூடியவர் கோலி. ஆனால் ரசிகர்கள் இன்றி விளையாடும் பட்சத்தில், கோலி, காலி இருக்கைகளை நோக்கி எந்த மாதிரியான சைகைகளை காட்ட முயற்சிப்பார் என்பதை பார்க்கவே சுவாரஸ்யமாக, புதிய அனுபவமாக இருக்கும். இது கொஞ்சம் கடினமாகத் தான் இருக்கப்போகிறது. ஆனால் கோலி ஒரு சூப்பர் ஸ்டார். நாம் எத்தகைய சீதோஷ்ண நிலையில் விளையாடுகிறமோ அதற்கு ஏற்ப அவரால் மாற்றிக்கொள்ள இயலும்.

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். ஆஷஸ் போல் இதுவும் மிகப்பெரிய தொடர். கிரிக்கெட் உலகில் இந்தியா சக்திவாய்ந்த நாடாக விளங்குகிறது. அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வந்து விளையாட இருப்பது சிறப்பானதாக இருக்கும். ரசிகர்களுக்கு அனுமதியோ அல்லது காலி மைதானமோ அது பற்றி நான் கவலைப்படவில்லை.

    இந்திய அணியை மீண்டும் எதிர்கொள்ளும் வாய்ப்பு கனிய வேண்டும். அந்த உற்சாகத்துடன் காத்திருக்கிறேன். கடந்த முறை இந்திய அணி எங்களை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. ஆனால் தற்போது மிகவும் வலுவான அணியாக உள்ளோம்.

    இந்திய அணியை பார்க்கும் போது, புஜாராவை நாம் பெரிய அளவில் கண்டுகொள்வதில்லை. விராட் கோலி, ரஹானே போன்றவர்கள் பற்றி தான் அதிகம் பேசுகிறோம். ஆனால் புஜாரா ஒரு சுவர். இந்திய கிரிக்கெட்டின் புதிய சுவர் என்று அவரை வர்ணிப்பேன். கடந்த முறை அவரை அதிகமாக கண்டுகொள்ளாததால் நெருக்கடி இன்றி விளையாடி ஆஸ்திரேலிய தொடரில் (மொத்தம் 521 ரன்கள் குவித்தார்) பிரமாதப்படுத்தி விட்டார். ஆனால் இனி அவரது விக்கெட்டை வீழ்த்துவதில் கூடுதல் கவனம் செலுத்துவோம்.

    இவ்வாறு நாதன் லயன் கூறினார்.
    Next Story
    ×