search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிபா தலைவர்
    X
    பிபா தலைவர்

    அவசரப்பட்டு கால்பந்து லீக் போட்டிகளை தொடங்க வேண்டாம் - பிபா தலைவர் வேண்டுகோள்

    கொரோனா வைரசின் தாக்கம் முழுமையாக சீராகும் முன்பே அவசரப்பட்டு கால்பந்து லீக் போட்டிகளை தொடங்கி விட வேண்டாம் என்று ‘பிபா’ தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    ஷூரிச்:

    உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசின் கோரத்தாண்டவம் விளையாட்டுத் துறையையே புரட்டி போட்டுவிட்டது. 2-3 மாதங்களுக்கு எந்த போட்டிகளும் கிடையாது என்ற நிலைமை உருவாகி உள்ளது. கால்பந்து விளையாட்டில் குறிப்பிட்ட நாடுகளில் நடத்தப்படும் லீக் போட்டிகளின் மூலம் ஆயிரக்கணக்கான கோடிகள் புரளும். இதில் ஸ்பெயினில் நடக்கும் லா லிகா, இங்கிலாந்தின் பிரிமீயர் லீக், ஜெர்மனியில் அரங்கேறும் பன்டெஸ்லிகா, இத்தாலியின் லிகா சிரி ஏ லீக், ஜெர்மனியின் லிகு-1 போன்ற கால்பந்து தொடர்கள் மிகவும் பிரபலமானது. கொரோனா அச்சத்தால் இந்த போட்டிகள் எல்லாம் பாதியில் நிற்கின்றன. இதனால் சம்பந்தப்பட்ட நாட்டு கால்பந்து சம்மேளனங்கள் மிகப்பெரிய நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. உலக கோப்பைக்கான கால்பந்து தகுதி சுற்று போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

    கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வந்தாலும் போட்டியை எப்போது தொடங்குவது என்று ஒரு பக்கம் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். லா லிகா, பன்டெஸ்லிகா போட்டிகளை மே மாத இறுதியில் தொடங்கலாம் என்று அந்த நாட்டு கால்பந்து சம்மேளனங்கள் யோசனையில் உள்ளன.

    இந்த நிலையில் கால்பந்து லீக் போட்டிகளை அவசரப்பட்டு தொடங்குவது ஆபத்தாகி விடும் என்று சர்வதேச கால்பந்து சம்மேளன (பிபா) தலைவர் கியானி இன்பான்டினோ எச்சரித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ‘நாங்கள் நடத்தும் கால்பந்து போட்டிகளில் உடல் ஆரோக்கியம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கு தான் முதலில் முக்கியத்துவம் அளிக்கிறோம். மனித உயிரை விட விளையாட்டு பெரிது கிடையாது. அது தான் எங்களது முன்னுரிமை, நோக்கம். கிளப் போட்டிகளை நடத்துபவர்களையும் இதை பின்பற்றும்படி அறிவுறுத்துகிறோம். அதை நான் எவ்வளவு வலியுறுத்தி சொன்னாலும் போதாது. எந்த ஒரு ஆட்டம் அல்லது லீக் போட்டிகளுக்காக மனித உயிரை ஆபத்தில் சிக்க வைப்பது சரியானது கிடையாது. ஒவ்வொருவரின் மனதிலும் இந்த விஷயம் தெளிவாக இருக்க வேண்டும்.

    நிலைமை 100 சதவீதம் பாதுகாப்பாக இல்லாதபட்சத்தில் போட்டிகளை மறுபடியும் தொடங்கினால் அது மிகவும் பொறுப்பற்ற செயலாகி விடும். இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். ரிஸ்க் எடுப்பதை விட காத்திருப்பதே நல்லது’ என்றார்.

    Next Story
    ×