search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோகித் சர்மா
    X
    ரோகித் சர்மா

    ரோகித் சர்மாவால் மட்டுமே இரட்டை சதம் அடிக்க முடியும்- பிராட் ஹாக்

    20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மாவால் மட்டுமே இரட்டை சதம் அடிக்க முடியும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறியுள்ளார்.
    சிட்னி:

    20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடிப்பது என்பது எளிதான காரியம் அல்ல. இதுவரை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பல வீரர்கள் இரட்டை சதம் அடித்து உள்ளனர். ஆனால் 20 ஓவர் கிரிக்கெட்டில் எந்த வீரராலும் இரட்டைசதம் அடிக்க முடியவில்லை.

    ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிரஞ்ச், கடந்த 2018-ம் ஆண்டில் நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 76 பந்துகளில் 172 ரன்கள் எடுத்த போதிலும் அவரால் இரட்டை சதத்தை எட்டமுடியவில்லை. அதேபோல் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 66 பந்துகளில் 175 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்தார். ஆனால் அவரால் இரட்டை சதத்தை தொடமுடியவில்லை.

    இந்த நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடிக்க போகும் வீரர் யார், அவர் எந்த நாட்டை சேர்ந்தவராக இருப்பார்? என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக்கிடம் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பினர்.

    பிராட் ஹாக்

    அதற்கு பதில் அளித்த பிராட் ஹாக், ‘என்னை பொறுத்தவரை தற்போதையை வீரர்களில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடிக்கும் தகுதி படைத்த வீரர் இந்தியாவின் ரோகித் சர்மா மட்டும் தான். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சிறந்த ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார். எல்லா நேரங்களிலும் பெரிய ஷாட்டுகள் அடிப்பதில் வல்லவராக இருக்கிறார். பலவிதமான ஷாட்டுகள் மூலம் மைதானத்தின் எல்லா புறங்களிலும் சிக்சர், பவுண்டரிகளை விளாசுகிறார்’ என்று தெரிவித்துள்ளார்.

    இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா கடந்த 2017-ம் ஆண்டு இந்தூரில் நடந்த இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அதிகபட்சமாக 118 ரன்கள் குவித்தார். அவர் இதுவரை 108 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 2,773 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 சதங்களும், 21 அரைசதங்களும் அடங்கும். அதேபோல் ஒருநாள் போட்டியில் தனிநபர் அதிகபட்சமாக கடந்த 2014-ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 264 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.

    Next Story
    ×