search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பும்ரா
    X
    பும்ரா

    அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேனா?: அப்படி நினைத்தால் தவறு என்கிறார் பும்ரா

    மலிங்காவிடம் இருந்துதான் யார்க்கர் பந்து வீச்சு முறையை கற்றுக் கொண்டேன் என்று பலர் நினைக்கிறார்கள். அது தவறு என்கிறார் பும்ரா.
    கிரிக்கெட்டில் பந்தை த்ரோ செய்வது போன்ற ஆக்சனுடன் பந்து வீசக் கூடியவர் லசித் மலிங்கா. தொடக்க காலத்தில் சராசரியாக 140 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசும் வல்லமை படைத்த அவர், அதே நேரத்தில் துல்லியமான யார்க்கர் பந்து வீச்சாலும் எதிரணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தக் கூடியவர்.

    ஒரு ஓவரில் ஆறு பந்துகளையும் யார்க்கராக வீசும் திறமை அவரிடம் உண்டு. 140 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசும் அவர், திடீரென 110 கி.மீட்டர் என வேகத்தையும் குறைத்தும், ஸ்லோ-ஒன் பந்தை வீசுவதிலும் வல்லவர். அவரது கை ஆக்சனை பார்த்து வேரியேசனை கண்டுபிடிக்க முடியாது. இதனால் முதன்மை பேட்ஸ்மேன்களில் இருந்து கடைசி நிலை பேட்ஸ்மேன்கள் வரை பயப்படுவார்கள்.

    அவருக்குப் பின் தற்போது பும்ரா உலகின் தலைசிறந்த யார்க்கர் பந்து வீச்சாளராக உள்ளார். மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் உச்சத்தில் இருக்கும்போது பும்ரா அந்த அணியின் புதுமுக வீரராக அறிமுகம் ஆனார்.

    இதனால் மலிங்காவிடம் இருந்துதான் பும்ரா யார்க்கர் பந்து வீச்சு முறையை கற்றுக் கொண்டார் என பெரும்பாலான ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

    ஆனால், அது தவறானது என பும்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பும்ரா கூறுகையில் ‘‘நான் மலிங்காவிடம் இருந்து யார்க்கர் பந்து வீச்சு முறையை கற்றுக் கொண்டேன் என்று ஏராளமான ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது உண்மையல்ல.

    அவர் போட்டியின்போது ஏதும் எனக்கு கற்றுக்தரவில்லை. அவரிடம் இருந்து மனநிலையை எப்படி வைத்திருக்க வேண்டும் என்று கற்றுக் கொண்டேன். மாறுபட்ட சூழ்நிலைகளை எப்படி கையாள வேண்டும், கோபப்படாமல் இருப்பது எப்படி, பேட்ஸ்மேன்களுக்கு எதிராக எப்படி திட்டம் தீட்ட வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன்.

    மலிங்கா, பும்ரா

    நான் வெளியில் சென்று விளையாடாமல் இருக்கும்போது டிவி-யில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருப்பேன். நான் எப்போதும் பந்து வீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்துவது, வேகமாக பந்து வீசுவது, க்ளீன் போல்டு போன்றவற்றை விரும்புவேன். நானும் அதை போன்று வீச வேண்டும் என்று விரும்புவேன். என்னுடைய மனதில் நான் பிரெட் லீ, அவரை போன்று பந்து வீச வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். அவர் போன்று பந்து வீசியிருக்கிறேன். என்னுடைய ஹீரோவிடம் இருந்து காப்பி அடித்திருக்கிறேன்’’ என்றார்.
    Next Story
    ×