search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெஸ்ட் கிரிக்கெட்
    X
    டெஸ்ட் கிரிக்கெட்

    வருங்காலத்தில் 4 நாள் டெஸ்ட் கிரிக்கெட்: ஐ.சி.சி. பரிசீலனை

    வருங்காலத்தில் 5 நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி என்பதை 4 நாள் கொண்டதாக முழுமையாக நடத்த ஐ.சி.சி. பரிசீலிக்க உள்ளது.
    மெல்போர்ன்:

    சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது 5 நாட்கள் கொண்டதாக நடத்தப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் அதை முழுமையாக 4 நாள் கொண்ட போட்டியாக மாற்றுவது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பரிசீலிக்க முன்வந்துள்ளது.

    உலக அளவிலான பெரிய போட்டிகளை அதிகமாக நடத்த ஐ.சி.சி. விரும்புகிறது. இதற்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய செல்வாக்குமிக்க கிரிக்கெட் வாரியங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆண்டுதோறும் ஐ.சி.சி. தொடர் அட்டவணையில் இடம் பிடித்தால், ஏற்கனவே ஒப்புக் கொண்ட இரு நாட்டு தொடர் பெருமளவில் பாதிக்கப்படும் என்று கூறி ஐ.சி.சி.யின் திட்டத்தை ஏற்க இந்தியா மறுத்து விட்டது. இதையடுத்து 2023-ல் இருந்து 2031-ம் ஆண்டு வரையிலான வருங்கால போட்டி அட்டவணையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நாளை 5-ல் இருந்து 4 ஆக குறைப்பது குறித்து ஐ.சி.சி-யின் கிரிக்கெட் கமிட்டி விரைவில் ஆலோசிக்க உள்ளது.

    4 நாள் டெஸ்ட் போட்டி என்பது ஒன்றும் புதிய யோசனை கிடையாது. பரீட்சார்த்த முயற்சியாக இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்து-அயர்லாந்து இடையே 4 நாள் டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டது. 2017-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே மோதிய போட்டியும் 4 நாள் கொண்டதாக இருந்தது. இவ்வாறு நடத்தப்படும் போது இந்த போட்டியை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    டெஸ்ட் கிரிக்கெட்


    2015-2023-ம் ஆண்டு வரையிலான போட்டி அட்டவணையில் எல்லா டெஸ்டுகளும் 4 நாள் கொண்டதாக நடத்தப்பட்டு இருந்தால், ஐ.சி.சி.க்கு மொத்தம் 335 நாட்கள் கூடுதலாக கிடைத்திருக்கும். மேலும் 4 நாள் போட்டியில் தினமும் 90 ஓவர் என்பதற்கு பதிலாக 98 ஓவர்கள் வீசப்பட வாய்ப்பு உள்ளது. அதனால் மொத்தத்தில் வெறும் 58 ஓவர்கள் தான் இழப்பு ஏற்படும். தற்போது பெரும்பாலான டெஸ்டுகள் 4 நாட்களுக்குள் முடிந்து விடுவதும் சுட்டிகாட்டப்படுகிறது.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைவர் கெவின் ராபர்ட்ஸ் கூறுகையில், ‘4 நாள் டெஸ்ட் போட்டியை நடத்துவது குறித்து நாங்கள் நிச்சயம் பரிசீலிப்போம். அதற்கு முன்பாக கடந்த 5-10 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகள் சராசரியாக எத்தனை நாட்கள் வரை நீடித்தது என்பதை பார்க்க வேண்டியது அவசியமாகும்.’ என்றார்.

    ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் கருத்து தெரிவிக்கும் போது, ‘ஆஷஸ் போட்டிகள் 4 நாட்கள் கொண்டதாக நடத்தப்பட்டால் முடிவு கிடைக்காமல் போகலாம். ஏனெனில் ஆஷஸ் தொடரில் ஒவ்வொரு டெஸ்டும் 5-வது நாளுக்கு நகர்ந்தது. மற்ற வடிவிலான போட்டியில் இருந்து டெஸ்ட் கிரிக்கெட் வித்தியாசப்படுவதே 5 நாள் என்பதில் தான். இது மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் கடினமானது. 4 நாள் முதல்தர போட்டியை விட 5 நாள் டெஸ்ட் தான் வீரர்களின் திறமையை வலுவாக சோதிக்கிறது. எனவே இது நீடிக்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.

    Next Story
    ×