search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட்கோலி
    X
    விராட்கோலி

    இந்திய கிரிக்கெட்டுக்கு இந்த ஆண்டு சிறப்பானது- விராட்கோலி மகிழ்ச்சி

    2019-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டுக்கு சிறந்த ஆண்டுகளில் ஒன்றாக அமைந்துள்ளது என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

    கட்டாக்:

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று கட்டாக்கில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 315 ரன் குவித்தது. நிக்கோலஸ் பூரன் 81 ரன்னும், போல்லார்ட் 74 ரன்னும், ஷாய் ஹோப் 42 ரன்னும் எடுத்தனர்.

    பின்னர் 316 ரன் இலக்கை நோக்கி விளையாடி இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா (63), லோகேஷ் ராகுல் (77) ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 122 ரன் சேர்த்தனர். அதன்பின் வந்த ஸ்ரேயாஸ் அய்யர் (7), ரிஷ்ப்பண்ட் (7), கேதர் ஜாதவ் (9) ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆனதால் நெருக்கடி ஏற்பட்டது.

    ஆனாலும் கேப்டன் விராட் கோலி நிலைத்து நின்று விளையாடினார். அவருக்கு ரவீந்திர ஜடேஜா உறுதுணையாக இருந்தார். கோலி 85 ரன்னில் அவுட் ஆனார். அப்போது வெற்றிக்கு 30 ரன் தேவைப்பட்டது.

    அதன்பின் ஜடேஜா- ‌ஷர்துல் தாகூர் ஜோடி அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தது. இந்திய அணி 48.4 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 316 ரன் எடுத்தது.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்று இருந்தன. ஏற்கனவே 20 ஓவர் போட்டி தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    வெற்றி குறித்து இந்திய கேப்டன் கோலி கூறியதாவது:-

    இதுபோன்ற பரபரப்பான ஆட்டங்களை பலமுறை சந்தித்து இருக்கிறோம். அதுபோன்ற சூழ்நிலையில் சிறிய சிறிய பார்ட்னர்ஷிப் தேவை. கடைசி கட்டத்துக்கு சென்று ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பது அற்புமானது.

    உண்மையிலேயே நான் அவுட் ஆனபோது பதட்டம் அடைந்தேன். ஆனால் அப்போது ஜடேஜாவை பார்த்த போது அவர் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தார். அவரும், ‌ஷர்துல்தாகூரும் 3 ஓவரில் ஆட்டத்தை மாற்றி விட்டார்கள். வெளியில் அமர்ந்து கொண்டு ஆட்டத்தை பார்ப்பது மிகவும் கடினமானது.

    2019-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டுக்கு சிறந்த ஆண்டுகளில் ஒன்றாக அமைந்தது. உலக கோப்பை அரை இறுதியின் கடைசி 30 நிமிடங்களை தவிர இந்த ஆண்டு சிறப்பு வாய்ந்ததாக இருந்தது.

    ஐ.ஐ.சி. கோப்பையை நாங்கள் கைப்பற்ற தொடர்ந்து முயற்சிப்போம். அதை தவிர்த்து நாங்கள் திருப்திகரமாக விளையாடி இருக்கிறோம். எந்த மைதானத்திலும் எதிர் அணியை ஆல்அவுட் செய்யும் வேகப்பந்து வீச்சாளர்களை பெற்று இருக்கிறோம்.

    அதேபோல் இந்திய மண்ணில் சுழற்பந்து வீச்சாளர்கள் பெரிய சாதனைகளை செய்து உள்ளனர்.

    வெளிநாடுகளிலும் தொடர்களை எங்களால் வெல்ல முடியும் என்பதை உணர்ந்து இருக்கிறோம். நெருக்கடியான சூழ்நிலையில் மக்கள் எப்படி உணர்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை நாங்கள் ஆட்டத்தின் மூலம் வெளியே கொண்டு வருகிறோம்.

    அதை மக்கள் ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இளம் வீரர்கள் இன்னும் சில ஆண்டுகளில் அதை பின்பற்றி முன்னேறுவார்கள்.

    இவ்வாறு கோலி கூறினார்.

    வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக இந்திய அணி தொடர்ச்சியாக 10-வது முறையாக ஒருநாள் போட்டி தொடரை கைப்பற்றியது.

    Next Story
    ×