search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாஷிங்டன் சுந்தர்
    X
    வாஷிங்டன் சுந்தர்

    இப்படி கோட்டை விட்டால், எவ்வளவு ரன் குவித்தாலும் போதாது: விராட் கோலி வேதனை

    வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பந்த் கேட்ச்களை கோட்டை விட்டதுதான் தோல்விக்கு காரணம் என விராட் கோலி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. திருவனந்தபுரத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்தது.

    171 ரன் இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி பின்னர் ஆடியது. அந்த அணி இந்த இலக்கை 9 பந்து எஞ்சி இருந்த நிலையில் மிக எளிதாக எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் 18.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு அந்த அணி பதிலடி கொடுத்தது.

    இந்திய அணியின் பீல்டிங் நேற்று மிகவும் மோசமாக இருந்தது. 3 கேட்சுகளை வீரர்கள் நழுவ விட்டனர்.

    சிம்மன்ஸ் 6 ரன்னில் இருந்த போது வாஷிங்டன் சுந்தர் எளிதான கேட்சை தவற விட்டார். லிவிஸ் 16 ரன்னில் இருந்த போது ரி‌ஷப் பண்ட் கடினமான கேட்சையும் நழுவ விட்டார். ஒரே ஓவரில் (5-வது) இந்த தவறு நடந்தது. நிக்கோலஸ் பூரன் 18 ரன்னில் இருந்த போது ஷ்ரேயாஸ் அய்யர் கேட்ச் வாய்ப்பை வீணடித்தார்.

    வீரர்களின் மோசமான பீல்டிங்கால் கேப்டன் விராட் கோலி கடும் அதிருப்தி அடைந்தார். தோல்வி குறித்து அவர் கூறியதாவது:-

    இது மாதிரியான மோசமான பீல்டிங் இருக்கும்போது வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்க இயலாது. நாங்கள் 15 ரன் கூடுதலாக எடுத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எடுத்திருந்தாலும் போதுமானதாக இருந்திருக்காது. மிகப்பெரிய ஸ்கோர் குவித்து இருந்தாலும் மோசமான பீல்டிங்கால் ஒன்றும் செய்ய முடியாது.

    எங்களது பந்து வீச்சு நன்றாக இருந்தது. 4 ஓவர்களில் போதுமான நெருக்கடியை கொடுத்தோம். ஒரே ஓவரில் 2 கேட்சை தவறவிட்டோம். அந்த ஓவரில் 2 விக்கெட் கைப்பற்றி இருந்தால் வெஸ்ட் இண்டீஸ்க்கு நெருக்கடி கொடுத்திருப்போம்.

    இந்த மோசமான பீல்டிங் தோல்விக்கு காரணமாக அமைந்தது. ஒவ்வொருவரும் பீல்டிங்கில் முன்னேற்றம் காண்பது அவசியமாகும். புத்திசாலித்தனமான பீல்டிங் தேவை.

    முதல் 16 ஓவர் வரை எங்களது பேட்டிங் சிறப்பாகவே இருந்தது. 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்து இருந்தோம். கடைசி 4 ஓவர்களில் 40 முதல் 45 ரன்கள் வரை எதிரபார்த்தேன். ஆனால் 30 ரன்கள் வரையே எடுக்க முடிந்தது.

    ஷிவம் டுபேயின் சிறப்பான ஆட்டத்தால்தான் 170 ரன்னை தொட முடிந்தது. கடைசி 4 ஓவர்களில் ரன் குவிக்க முடியாத அளவுக்கு வெஸ்ட் இண்டீஸ் நேர்த்தியாக பந்து வீசியது.

    ரிஷப் பந்த்

    ஆடுகளத்தை எங்களை விட அவர்கள்தான் சரியாக கணித்து சிறப்பாக செயல்பட்டனர். எல்லா வகையிலும் அபாரமாக விளங்கினார்கள். வெஸ்ட்  இண்டீஸ் வெற்றி பெறுவதற்கு தகுதியான அணியாகும். மும்பையில் அடுத்து நடைபெறும் ஆட்டம் வாழ்வா? சாவா? போராட்டம் ஆகும்.

    இவ்வாறு வீராட் கோலி கூறினார்.

    இந்த வெற்றி மூலம் மூன்று போட்டி கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. ஐதராபாத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் வருகிற 11-ந்தேதி (புதன்கிழமை) மும்பையில் நடக்கிறது.
    Next Story
    ×