search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக கோப்பை கிரிக்கெட் - இங்கிலாந்தை விட இந்தியா மோதும் ஆட்டத்துக்கு டிக்கெட் விலை அதிகம்
    X

    உலக கோப்பை கிரிக்கெட் - இங்கிலாந்தை விட இந்தியா மோதும் ஆட்டத்துக்கு டிக்கெட் விலை அதிகம்

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விலை இங்கிலாந்தை விட இந்தியா மோதும் ஆட்டத்துக்கு தான் அதிகம் வசூலிக்கப்படுகிறது. #WorldCup2019
    லண்டன்:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது.

    கடைசியாக 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடந்தது. இதில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் பெற்றது.

    12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதிவரை இங்கிலாந்தில் நடக்கிறது.

    இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

    1992-ம் ஆண்டை போல இந்த உலக கோப்பையில் ஆட்ட முறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 1 முறை ரவுண்டு ராபின் முறையில் மோதும், ஒவ்வொரு அணிக்கும் 9 லீக் ஆட்டம் இருக்கும்.

    ‘லீக்‘ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

    விராட்கோலி தலைமையிலான இந்திய அணி மோதும் ஆட்டத்தை காண ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் உள்ளனர். அதன் காரணமாக இந்தியா மோதும் ஆட்டத்தின் டிக்கெட் விலையும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்து மோதும் ஆட்டத்தை விட இந்தியா விளையாடும் போட்டிக்கு டிக்கெட் விலை கூடுதலாக இருக்கிறது.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஜூன் 5-ந்தேதி தென் ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. சவுத்தம்டனில் நடைபெறும் இந்தப் போட்டிக்கு ஹோட்டல் பாக்சுக்கு ஒரு டிக்கெட்டின் விலை ரூ.63,500 ஆகும். இதோடு வாட் வரியும் கூடுதலாகும்.

    இதே மைதானத்தில் இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் மோதும் ஆட்டத்துக்கு ஹோட்டல் பாக்சின் டிக்கெட் விலை ரூ.54,418 + வாட்வரி ஆகும். கிட்டத்தட்ட ரூ.10 ஆயிரம் வரை இந்தியா மோதும் போட்டிக்கு கூடுதல் விலையாகும்.

    இந்த ஸ்டேடியத்தில் உள்ள ரூப்டாப் ஹோமர் ஸ்டாண்டில் இந்தியா மோதும் ஆட்டத்துக்கு டிக்கெட் விலை ரூ.31 ஆயிரம் ஆகும். இங்கிலாந்து மோதும் போட்டிக்கு இதே டிக்கெட் விலை ரூ.27,159 ஆகும்.

    அதே போல இந்தியா- இலங்கை அணிகள் லீட்ஸ் மைதானத்தில் மோதும் ஆட்டத்துக்கும் டிக்கெட் விலை அதிகமாகும். ஹாஸ் பிட்டாலிடி பாக்ஸ் டிக்கெட் விலை ரூ.45 ஆயிரமும், இதே மைதானத்தில் இங்கிலாந்து மோதும் போட்டியின் ஹாஸ் பிட்டாலிடி பாக்ஸ் விலை ரூ.31 ஆயிரமாகும்.

    இந்தியா- பாகிஸ்தான் (ஜூன் 16) மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன. இந்திய அணி மோதும் மற்ற ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் பெரும்பாலும் விற்றுவிட்டன. 2 சதவீத டிக்கெட்டுகள் எஞ்சியுள்ளன. #WorldCup2019
    Next Story
    ×