search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் 2019: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி
    X

    ஐபிஎல் 2019: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தி 4-வது வெற்றியை ருசித்தது. #IPL2019 #KXIPvSRH

    12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழையும்.

    இந்த நிலையில் மொகாலியில் நேற்று இரவு நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்- ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதின. பஞ்சாப் அணியில் ஆன்ட்ரூ டை, முருகன் அஸ்வின் நீக்கப்பட்டு முஜீப் ரகுமான், அங்கித் ராஜ்பூத் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். ஐதராபாத் அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.





    ‘டாஸ்’ ஜெயித்த பஞ்சாப் அணி கேப்டன் ஆர்.அஸ்வின் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், பேர்ஸ்டோ ஆகியோர் களம் இறங்கினார்கள். பஞ்சாப் அணியினர் தொடக்கத்தில் சிறப்பான பந்து வீச்சு மற்றும் நேர்த்தியான பீல்டிங் மூலம் எதிரணிக்கு நெருக்கடி அளித்து ரன் வேகத்தை கட்டுப்படுத்தினார்கள். 2-வது ஓவரில் முஜீப் ரகுமான் பந்து வீச்சில் பேர்ஸ்டோ (1 ரன்) கேப்டன் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    அடுத்து களம் கண்ட விஜய் சங்கர் 2-வது ஓவரின் கடைசி பந்தில் முதல் பவுண்டரியை விரட்டினார். பவர்பிளேயில் (முதல் 6 ஓவரில்) ஐதராபாத் அணி ஒரு விக்கெட்டுக்கு 27 ரன்னே எடுத்து இருந்தது. 10 ஓவர்களில் அந்த அணி 50 ரன்னை தொட்டது. அணியின் ஸ்கோர் 56 ரன்னாக இருந்த போது விஜய் சங்கர் (26 ரன், 27 பந்துகளில் 2 பவுண்டரியுடன்) அஸ்வின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுலிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். அடுத்து களம் இறங்கிய முகமது நபி 7 பந்துகளில் 12 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வினால் ரன்-அவுட் செய்யப்பட்டார்.

    அடுத்து மனிஷ் பாண்டே, தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னருடன் ஜோடி சேர்ந்தார். ஒரு புறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் டேவிட் வார்னர் நிலைத்து நின்று அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டார். 15.3 ஓவர்களில் அந்த அணி 100 ரன்னை எட்டியது. டேவிட் வார்னர் 49 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். இந்த சீசனில் அவர் அடித்த 4-வது அரைசதம் இதுவாகும், மனிஷ் பாண்டே 15 பந்துகளில் 2 பவுண்டயுடன் 19 ரன் சேர்த்து முகமது ஷமி பந்து வீச்சில் மாற்று ஆட்டக்காரர் கருண் நாயரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கடைசி ஓவரில் களம் இறங்கிய தீபக் ஹூடா அதிரடியாக மட்டையை சுழற்றினார்.

    நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 62 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 70 ரன்னும், தீபக் ஹூடா 3 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 14 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பஞ்சாப் அணி தரப்பில் முஜீப் ரகுமான், முகமது ஷமி, ஆர்.அஸ்வின் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

    பின்னர் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் (16 ரன், 14 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) ரஷித் கான் பந்து வீச்சில் தீபக் ஹூடாவிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றம் அளித்தார். அப்போது அணியின் ஸ்கோர் 18 ரன்னாக இருந்தது. 2-வது விக்கெட்டுக்கு மயங்க் அகர்வால், தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுலுடன் இணைந்தார். இருவரும் அடித்து ஆடி அணியை வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தனர். 13 ஓவர்களில் அந்த அணி 100 ரன்னை கடந்தது. லோகேஷ் ராகுல் 34 பந்திலும், மயங்க் அகர்வால் 40 பந்திலும் அரைசதத்தை எட்டினார்கள்.

    அணியின் ஸ்கோர் 132 ரன்னாக உயர்ந்த போது மயங்க் அகர்வால் (55 ரன், 43 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன்) சந்தீப் ஷர்மா பந்து வீச்சில் விஜய் சங்கரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். 2-வது விக்கெட்டுக்கு மயங்க் அகர்வால்-லோகேஷ் ராகுல் இணை 114 ரன்கள் சேர்த்தது. அடுத்து வந்த டேவிட் மில்லர் (1 ரன்), மன்தீப் சிங் (2 ரன்) ஆகியோர் வந்த வேகத்திலேயே ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். 19.5 ஓவர்களில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லோகேஷ் ராகுல் 53 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 71 ரன்னும், சாம் குர்ரன் 3 பந்துகளில் 5 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பஞ்சாப் அணி வீரர் லோகேஷ் ராகுல் ஆட்டநாயகன் விருது பெற்றார். 6-வது ஆட்டத்தில் ஆடிய பஞ்சாப் அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். ஐதராபாத் அணிக்கு இது 3-வது தோல்வியாகும்.


    Next Story
    ×