என் மலர்

  செய்திகள்

  டோனி எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார் - துணை கேப்டன் ரோகித் சர்மா பேட்டி
  X

  டோனி எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார் - துணை கேப்டன் ரோகித் சர்மா பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய அணி வீரர்களுக்கு டோனி வழிகாட்டியாக இருக்கிறார் என்றும், உலக கோப்பை போட்டியில் அவர் முக்கிய பங்கு வகிப்பார் என்றும் இந்திய துணை கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். #RohitSharma #Dhoni #GuidingLight
  சிட்னி:

  டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி புதிய சரித்திரம் படைத்த இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுடன் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி சிட்னியில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு தொடங்குகிறது.

  டோனி, ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ் உள்ளிட்ட ஒரு நாள் போட்டி வீரர்கள் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய அணியுடன் இணைந்து தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

  இந்த நிலையில் இந்திய துணை கேப்டன் ரோகித் சர்மா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  களத்திலும், ஓய்வறையிலும் டோனி இருக்கும் போது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறார் என்பதை பல ஆண்டுகளாக நாங்கள் பார்த்து வருகிறோம். அவர் உடன் இருக்கும்போது, அணியில் உள்ள வீரர்களுக்கும் அமைதி வந்து விடும். அது மிகவும் முக்கியமானதாகும். இதே போல் விக்கெட் கீப்பிங் பணியை செய்வதால், யுக்திகளை வகுப்பதில் கேப்டனுக்கும் ஓரளவு உதவிகரமாக இருக்கிறார்.

  டோனி பல ஆண்டுகள் அணியை வழிநடத்தியதுடன், வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர். அதனால் அவர் அணியில் அங்கம் வகிக்கும் போது, எப்போதும் உதவியாக இருக்கிறார். சொல்லப்போனால் வீரர்களுக்கு வழிகாட்டும் ஒளியாக விளங்குகிறார். பேட்டிங்கில் பின்வரிசையில் ஆடும் போது, ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பது மிகவும் முக்கியம். இந்த வகையில் நிறைய ஆட்டங்களில் வெற்றியை தேடித்தந்துள்ளார். ஆட்டத்தின் போக்கு குறித்து அவரது தெளிவான சிந்தனையும், அறிவுரைகளும் அணிக்கு மிகவும் தேவையாகும்.

  மேலும் இளம் சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோருக்கும் டோனி பக்கபலமாக இருக்கிறார். அதாவது விக்கெட் கீப்பராக இருப்பதால் பேட்ஸ்மேன் எந்த மாதிரி ஆட முயற்சிக்கிறார் என்பதை முன்கூட்டியே கணித்து பவுலர்களுக்கு தெரியப்படுத்தி, அதற்கு ஏற்ப பந்து வீச வைக்கிறார்.

  குல்தீப் யாதவும், யுஸ்வேந்திர சாஹலும் 2017-ம் ஆண்டில் இருந்து இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்கள். வெளிநாட்டிலும் சிறப்பாக செயல்பட்டு உள்ளனர். அவர்களது அபார பந்து வீச்சுக்கு, டோனியின் வழிகாட்டுதலும் முக்கிய காரணம் என்பதில் சந்தேகமில்லை. கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் கூட அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பை டோனி அளிக்கிறார். உலக கோப்பை போட்டியிலும் அவர் முக்கிய பங்கு வகிப்பார் என்று நம்புகிறேன்.

  இந்த ஒரு நாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், கம்மின்ஸ் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது. அவர்கள் இல்லாவிட்டாலும் ஆஸ்திரேலிய அணி சவால் மிக்க அணியாகவே காணப்படுகிறது. இந்த பவுலர்கள் அதிகமான ஒரு நாள் போட்டிகளில் விளையாடியதில்லை. கடந்த முறை ஒரு நாள் போட்டித் தொடரில் இங்கு விளையாடிய போது இதே பவுலர்கள் ஆடவில்லை. அப்படி இருந்தும் அவர்கள் எங்களை 4-1 என்ற கணக்கில் தோற்கடித்தனர்.

  ஆஸ்திரேலிய அணியில் இன்னும் தரமான பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அதனால் அவர்களுக்கு நாங்கள் நெருக்கடி கொடுக்கும் வகையில் விளையாட வேண்டியது அவசியமாகும்.

  அணியின் நம்பிக்கை இப்போது உயர்ந்த நிலையில் உள்ளது. அதே உத்வேகத்தை ஒரு நாள் தொடரிலும் தொடர வேண்டும்.

  இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான (மே 30-ந்தேதி தொடங்குகிறது) இந்திய ஆடும் லெவன் அணியில் யார்-யார் இடம் பெறுவார்கள் என்று கேட்கிறீர்கள். அது பற்றி இப்போதே சொல்வது கடினம். உலக கோப்பைக்கு முன்பாக இன்னும் 13 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறோம். ஏறக்குறைய இதே அணிதான் உலக கோப்பையிலும் விளையாடும். அனேகமாக காயம் மற்றும் ஆட்டத்திறன் பாதிப்பு காரணமாக ஒரு சில மாற்றங்கள் இருக்கும். இப்போது ஆண்டு முழுவதும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதால் வீரர்களுக்கு காயம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. ஆனால் அணியில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என்று நான் கருதவில்லை. என்றாலும் ஒவ்வொரு வீரரின் ஆட்டத்திறன் அடிப்படையிலேயே அணியில் இடம் உறுதியாகும். அத்துடன் உலக கோப்பை அணியில் நிச்சயம் இடம் உண்டு என்று எந்த உத்தரவாதமும் கொடுக்க முடியாது.

  இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

  இதற்கிடையே இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வயிற்று கிருமி தொற்று காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் கடைசி இரு ஒரு நாள் போட்டிகளிலும் ஆடுவது சந்தேகம் தான். இதை கருத்தில் கொண்டு அந்த அணிக்கு ஆஷ்டன் டர்னர் கூடுதலாக அழைக்கப்பட்டு உள்ளார். பிக்பாஷ் கிரிக்கெட்டில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்காக பங்கேற்ற ஆஷ்டன் டர்னர் தனது கடைசி 3 ஆட்டங்களில் முறையே 43, 47, 60 ரன்கள் வீதம் எடுத்தார். #RohitSharma #Dhoni 
  Next Story
  ×