search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பையுடன் பெங்களூரு புல்ஸ் கேப்டன் ரோகித் குமார் (இடது), குஜராத் கேப்டன் சுனில் குமார்.
    X
    கோப்பையுடன் பெங்களூரு புல்ஸ் கேப்டன் ரோகித் குமார் (இடது), குஜராத் கேப்டன் சுனில் குமார்.

    புரோ கபடியில் கோப்பையை வெல்லப்போவது யார்?: குஜராத்-பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை

    புரோ கபடி லீக் இறுதிப்போட்டியில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்- பெங்களூரு புல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. #ProKabaddiLeague
    மும்பை:

    6-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி தொடங்கியது. 12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் பெங்களூரு புல்ஸ், குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணிகள் இறுதி சுற்றை எட்டின. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையே மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பையில் இன்று இரவு அரங்கேறுகிறது.

    ரோகித் குமார் தலைமையிலான பெங்களூரு புல்ஸ் அணி லீக் சுற்றில் 13 வெற்றி, 7 தோல்வி, 2 டையுடன் தனது பிரிவில் (பி) முதலிடம் பிடித்ததுடன், முதலாவது தகுதி சுற்றில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்சை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. சுனில் குமார் தலைமையிலான குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி லீக்கில் 17 வெற்றி, 3 தோல்வி, 2 டையுடன் தனது பிரிவில் (ஏ) முதலிடத்தை பெற்றது. பின்னர் முதலாவது தகுதி சுற்றில் பெங்களூரு புல்சிடம் தோல்வி அடைந்தாலும், 2-வது தகுதி சுற்றில் உ.பி.யோத்தாவை சாய்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    இவ்விரு அணிகளும் முந்தைய சீசனில் ஒரு முறை இறுதிப்போட்டிக்கு வந்திருந்தாலும் அதில் தோற்று இருந்தன. அதனால் தற்போது முதல் முறையாக கோப்பையை வெல்வதில் இரு அணியினரும் வரிந்து கட்டி நிற்பார்கள். சமபலம் பொருந்திய அணிகள் என்பதால் ஆட்டத்தில் நிச்சயம் அனல் பறக்கும்.

    இந்த சீசனில் இரு அணிகளும் 2 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் லீக் ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. முதலாவது தகுதி சுற்றில் பெங்களூரு புல்ஸ் அணி வெற்றி பெற்றது.

    இறுதிப்போட்டி குறித்து குஜராத் கேப்டன் சுனில் குமார் கூறுகையில் ‘இந்த சீசன் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். முதல்முறையாக கேப்டனாகி அணியை இறுதிப்போட்டிக்கு கொண்டு சென்றுள்ளேன். தொடர் முழுவதும் ஒருங்கிணைந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய நாங்கள், கோப்பையை வெல்ல ஆவலாக இருக்கிறோம். பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் நாங்கள் சில தவறுகளை இழைத்து விட்டோம். அந்த தவறு மீண்டும் நடக்காமல் பார்த்து கொள்வோம்’ என்றார்.

    பெங்களூரு புல்ஸ் கேப்டன் ரோகித் குமார் அளித்த பேட்டியில், ‘எங்கள் அணி நல்ல நிலையில் உள்ளது. இந்த அருமையான வாய்ப்பை நாங்கள் நழுவ விடமாட்டோம். இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கும் எங்களுடைய நோக்கம் கோப்பையை வெல்வது தான். எங்களது ரைடை வலுப்படுத்துவதிலும், டேக்கிள்சை பலப்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த சீசன் முழுவதும் சிறப்பாக விளையாடினோம். இறுதிப்போட்டியிலும் நிச்சயமாக எதிரணிக்கு கடும் சவாலாக விளங்குவோம்’ என்றார்.

    இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.8 கோடியாகும். இதில் கோப்பையை வெல்லும் அணி ரூ.3 கோடியையும், 2-வது இடத்தை பிடிக்கும் அணி ரூ.1.80 கோடியையும் பரிசாக பெறும்.

    இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.  #ProKabaddiLeague
    Next Story
    ×