search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: பெர்த் தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா?
    X

    3-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: பெர்த் தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா?

    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் மெல்போர்னில் நாளை காலை 5 மணிக்கு தொடங்குகிறது. #AUSvIND #BoxingDayTest
    மெல்போர்ன்:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் 1-1 என முடிந்தது. தற்போது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன் வித்தியாசத்திலும் பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    3-வது டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு மெல்போர்ன் நகரில் தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இப்போட்டி ‘பாக்சிங் டே டெஸ்ட்’ என்று அழைக்கப்படுகிறது. முதல் டெஸ்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 2-வது டெஸ்டில் அந்த உத்வேகத்தை தொடர தவறி விட்டது.

    2-வது போட்டியில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து மீண்டு இந்தியா பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.



    கடந்த 2 டெஸ்ட்டில் இந்தியாவின் தொடக்க ஜோடியான முரளி விஜய் - லோகேஷ் ராகுல் ஆட்டம் மோசமாக இருந்தது. நல்ல தொடக்கம் கொடுக்க தவறினர். ராகுல் பெர்த் டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் ‘க்ளீன் போல்டு’ ஆனார்.

    இதற்கிடையே நாளை தொடங்கும் 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 11 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முரளி விஜய், லோகேஷ் ராகுல் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் பெர்த்தில் விளையாடிய உமேஷ் யாதவும் நீக்கப்பட்டுள்ளார்.

    மயாங்க் அகர்வால், ரோகித், ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் மயாங்க் அகர்வால் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைக்கிறார். மேலும் பேட்டிங்கில் விராட் கோலி, புஜாரா, ரகானே, ரி‌ஷப் பந்த் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். காயத்தில் இருந்து குணம் அடைந்துள்ள ரோகித் சர்மா 6-வது வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ஆல் ரவுண்டர் ஹர்த்திக் பாண்டியாவிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. காயத்தில் இருந்து அஸ்வின் இன்னும் குணம் அடையாததால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. வேகப்பந்து வீச்சில் முகமது ஷமி, பும்ரா, இஷாந்த் சர்மா ஆகியோர் உள்ளனர்.

    டிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் ஆரோன் பிஞ்ச், கவாஜா, ஷான் மார்ஷ், டிராவிஸ் ஹெட், மார்கஸ் ஹாரிஸ் போன்ற பேட்ஸ்மேன்கள் உள்ளனர். வேகப்பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க், ஹசில்வுட், பேட் கம்மின்ஸ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். மேலும் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியில் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் நீக்கப்பட்டு ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் சேர்க்கப்பட்டுள்ளார்.



    இந்த டெஸ்டில் வெற்றி பெற்று பெற்றால் தொடரை இழக்க வாய்ப்பில்லை என்பதால், இரு அணிகளும் வெற்றி பெற முயற்சிக்கும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

    3-வது டெஸ்டில் விளையாடும் அணி விவரம் வருமாறு:-

    இந்தியா: விராட் கோலி (கேப்டன்), மயாங்க் அகர்வால், விஹாரி, புஜாரா, ரகானே, ரோகித் சர்மா, ரி‌ஷப் பந்த், பும்ரா, இஷாந்த் சர்மா.

    ஆஸ்திரேலியா: டிம் பெய்ன் (கேப்டன்), ஆரோன் பிஞ்ச், மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஹசில்வுட்.
    Next Story
    ×