search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலியின் சர்ச்சைக்குரிய கருத்து- இந்திய கிரிக்கெட் வாரியம் அதிருப்தி
    X

    விராட் கோலியின் சர்ச்சைக்குரிய கருத்து- இந்திய கிரிக்கெட் வாரியம் அதிருப்தி

    இந்திய பேட்ஸ்மேன்களை பிடிக்காதவர்கள் இந்தியாவில் இருக்க வேண்டாம். வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிய விராட் கோலியின் மீது இந்திய கிரிக்கெட் வாரியம் அதிருப்தியில் உள்ளது.
    இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தன்னுடைய பிறந்த நாளன்று இணையதளவாசிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது விராட் கோலியின் பேட்டிங்கை விட, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பேட் செய்வதுதான் எனக்கு பிடிக்கும் என ரசிகர் ஒருவர் பதிவிட்டிருந்தார். இதற்கு காட்டமாக பதிலளித்த விராட் கோலி, இந்த கருத்தை கூறிய ரசிகர் இந்தியாவில் வசிப்பதை விட, நாட்டை விட்டு வெளியேறி வேறு எங்காவது வசிக்கலாம் என பதிலளித்திருந்தார்.

    இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், நெட்டிசன்கள் பலரும் விராட் கோலிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் அப்துல் பாஷித், "இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் கோலி, வெளிநாட்டு கால்பந்து அணிக்கு ஆதரவு அளிக்கிறார். கோலி கூறிய கூற்றுப்படி பார்த்தால், கோலி நாட்டை விட்டுத் துரத்தி ஸ்பெயின் அல்லது ஜெர்மனிக்கு அனுப்ப வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    மற்றொரு ரசிகர், "கடந்த 2008-ம் ஆண்டில் எனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் ஹெர்ஸ்லே கிப்ஸ் என்று கோலி கூறினார். அப்படியென்றால், கோலியைத் தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி விடலாமா?" என கேள்வியெழுப்பியுள்ளார்.

    இந்நிலையில் கோலி கருத்தால் இந்திய கிரிக்கெட் வாரியம் அதிருப்தியடைந்துள்ளது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அனிருத் சவுத்ரி கூறுகையில்,

    ‘‘கிரிக்கெட் வாரியம் ரசிகர்களை மதிக்கிறது. அவர்களின் தேர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். நான் சுனில் கவாஸ்கர் பேட்டிங்கை ரசிப்பேன். அதோடு விவியன் ரிச்சர்ட்ஸ், கிரீனிட்ஜ், டெஸ்மாண்ட் ஹெய்ன்ஸ் ஆடுவதையும் ரசிப்பேன். சச்சின், சேவாக்கை போலவே மார்க் வாக், பிரையன் லாரா உட்பட பலரின் ஆட்டங்களை ரசிப்பேன். நாடு மற்றும் அரசியலைக் கடந்தது சிறப்பான கிரிக்கெட்டை மதிக்கும் பண்பு வேண்டும் என நினைக்கிறேன்’’ என தெரிவித்துள்ளார்.



    மேலும் மற்றொரு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ரசிகர்களை வெளிநாட்டுக்கு செல்ல சொல்லும் விராட் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், பூமா போன்ற நிறுவனங்கள் நூறு கோடி ரூபாய்க்கு அவரிடம் ஒப்பந்தம் செய்ய விரும்பாது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருமானம் வீழ்ச்சி அடையும். அது வீரர்களின் ஊதியத்தையும் பாதிக்கும். இப்படி கூறியிருப்பதன் மூலம் தனது ஒப்பந்தத்தையும் கோலி மீறியிருக்கிறார். விராட் சிறந்த வீரர், சிறந்த மனிதராகவும் மாற முயற்சிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×