search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் சாஹல் முன்னேற்றம்
    X

    பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் சாஹல் முன்னேற்றம்

    ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய வீரர் யுஸ்வேந்திர சாஹல் முதல்முறையாக டாப்-10 இடத்திற்குள் நுழைந்துள்ளார். #YuzvendraChahal
    துபாய்:

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து ஒரு நாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.

    இதன்படி பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3 சதம் உள்பட 453 ரன்கள் குவித்து சாதனை படைத்த விராட் கோலி கூடுதலாக 15 புள்ளிகள் பெற்று தனது தரவரிசை புள்ளி எண்ணிக்கையை 899 ஆக உயர்த்தியுள்ளார். இதே தொடரில் 2 சதம் உள்பட 389 ரன்கள் சேர்த்த, இந்திய துணை கேப்டன் ரோகித் சர்மா 29 புள்ளிகளை கூடுதலாக சேகரித்து மொத்தம் 871 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் தொடருகிறார். இது அவரது அதிகபட்ச புள்ளி எண்ணிக்கை ஆகும். இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 3-வது இடமும் (807 புள்ளி), ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 4-வது இடமும் (803 புள்ளி), பாகிஸ்தானின் பாபர் அசாம் 5-வது இடமும் (798 புள்ளி) வகிக்கிறார்கள்.

    வெஸ்ட்இண்டீஸ் தொடரில் ஒரு அரைசதம் கூட அடிக்காத மற்றொரு இந்திய வீரர் ஷிகர் தவான் 4 இடங்கள் சரிந்து 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அதே சமயம் அம்பத்தி ராயுடு 72-வது இடத்தில் இருந்து 48-வது இடத்துக்கு வந்துள்ளார். விக்கெட் கீப்பர் டோனி 21-வது இடத்தில் இருக்கிறார்.

    இந்தியாவுக்கு எதிரான போட்டியில் கணிசமான ரன்கள் திரட்டிய வெஸ்ட் இண்டீஸ் இளம் வீரர்கள் ஷாய் ஹோப், ஹெட்மயர் ஏற்றம் கண்டுள்ளனர். இந்த தொடரில் 250 ரன்கள் எடுத்த ஷாய் ஹோப் 22 இடங்கள் எகிறி 25-வது இடத்தை பிடித்துள்ளார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேனின் சிறந்த தரவரிசை இது தான். சதம் உள்பட 259 ரன்கள் சேர்த்த ஹெட்மயர் 31 இடங்கள் முன்னேறி 26-வது இடத்தை பிடித்துள்ளார்.

    பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 841 புள்ளிகளுடன் ‘நம்பர் ஒன்’ ஆக வலம் வருகிறார். 2-வது இடத்தில் ஆப்கானிஸ்தானின் ரஷித்கானும் (788 புள்ளி), 3-வது இடத்தில் இந்தியாவின் குல்தீப் யாதவும் (723 புள்ளி) உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் 3 ஆட்டத்தில் ஆடி 5 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 3 இடங்கள் உயர்ந்து 8-வது இடத்தை (683 புள்ளி) பிடித்துள்ளார். சாஹல் டாப்-10 இடத்திற்குள் நுழைவது இதுவே முதல் முறையாகும். ரவீந்திர ஜடேஜா 16 இடங்கள் அதிகரித்து 25-வது இடத்தை பெற்றுள்ளார்.

    ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் முதலிடத்தில் இங்கிலாந்தும் (126 புள்ளி), 2-வது இடத்தில் இந்தியாவும் (121 புள்ளி) தொடருகின்றன. 3 முதல் 6-வது இடங்களில் முறையே நியூசிலாந்து (112 புள்ளி), தென்ஆப்பிரிக்கா (110 புள்ளி), பாகிஸ்தான் (101 புள்ளி), ஆஸ்திரேலியா (100 புள்ளி) ஆகிய அணிகள் உள்ளன. #YuzvendraChahal
    Next Story
    ×