search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய கோப்பை - வங்காளதேசத்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
    X

    ஆசிய கோப்பை - வங்காளதேசத்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

    ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் வங்காளதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. # #AsiaCup2018 #BANvIND #INDvBAN
    துபாய்:

    14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான், வங்காளதேச அணிகள் அடுத்த சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. தங்களது இரண்டு லீக்கிலும் தோல்வியை தழுவிய இலங்கை, ஹாங்காங் அணிகள் வெளியேறின.

    இந்நிலையில், சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்கியது. இதில் இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி முதலில்  பந்து வீச்சை தேர்வு செய்தது.  

    வங்காளதேசத்தின் தொடக்க ஆட்டக்காரர்களான லிட்டான் தாஸ், நுஸ்முல் ஹூசைன் ஆகியோர் 5.1 வது ஓவர்களுக்குள் தலா 7 ரன்களுடன் வெளியேறினர். இதனையடுத்து வங்காளதேச பேட்ஸ்மேன்கள் வலுவான கூட்டணியை அமைக்க இந்தியா அனுமதிக்கவில்லை.

    வங்காளதேசத்தின் முன்னணி வீரர்களை இந்திய பவுலர்கள் துல்லியமாக பந்து வீசி அவுட்டாக்கியதால் அந்த அணி 101 ரன்களை எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த மோர்டசாவும், மெஹிதி ஹசனும் பொறுப்புடன் ஆடினர். இந்த ஜோடியால் வங்காளதேசம் அணி 170 ரன்களை கடந்தது.



    இறுதியில், வங்காளதேசம் அணி 49.1 ஓவரில் 173 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக மெஹிதி ஹசன் 42 ரன்களும், மோர்டசா 26 ரன்களும் எடுத்தனர். இந்தியா சார்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    இதைத்தொடர்ந்து, இந்திய அணி சேசிங் செய்ய தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும்
    களமிறங்கினர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர்கள் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.

    அணியின் எண்ணிக்கை 61 இருந்த போது ஷகிப் அல் ஹசன் வீசிய பந்தில் தவான், எல்.பி.டபல்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் 47 பந்துகளில் ஒரு சிக்சர், 4 பவுண்டரிகள் உள்பட 40 ரன்களை குவித்தார். ராயுடு 13 ரன்களின் ரூபல் ஹூசய்ன் பந்தில் விக்கெட்கீப்பர் ரஹிமிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

    அடுத்து களமிறங்கிய தோனி 3 விக்கெட்டுக்கு ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார், இவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வங்காளதேச வீரர்களின் பந்துவீச்சை நாலா புறமும் சிதறடித்தனர்.

    இருப்பினும் வெற்றிக்கு 4 ரன்களே எஞ்சியிருந்த நிலையில் மோர்டாசா வீசிய பந்தை சிக்சருக்கு விரட்ட நினைத்தார் தோனி, ஆனால் அதை எல்லைக்கோட்டுக்கு அருகே இருந்த மிதுன் கேட்ச் பிடித்தார். இதனால், தோனி 33 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

    இறுதியில், இந்திய அணி 36.2 ஓவர்கள் முடிவில் 174 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 83 ரன்களுடனும் தினேஷ் கார்த்திக் ஒரு ரன்னுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். வங்காளதேச அணி தரப்பில் ஷகிப் அல் ஹசன், ரூபல் ஹூசைய்ன் மற்றும் மோர்டாசா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர். #AsiaCup2018 #BANvIND #INDvBAN
    Next Story
    ×