search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்- இந்தியாவிற்கு 194 ரன்கள் வெற்றி இலக்கு
    X

    எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்- இந்தியாவிற்கு 194 ரன்கள் வெற்றி இலக்கு

    இசாந்த் ஷர்மா 5 விக்கெட் அள்ளியதால் 180 ரன்னில் சுருண்ட இங்கிலாந்து, இந்தியாவின் வெற்றிக்கு 194 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 287 ரன்களில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, விராட் கோலியின் அபார சதத்தால் 274 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. 13 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்ற நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது.

    நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 1 விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜென்னிங்ஸ் உடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். ஜோ ரூட் 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து தாவித் மலன் ஜென்னிங்ஸ் உடன் ஜோடி சேர்ந்தார். ஜென்னிங்ஸ் 8 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் வெளியேறினார். முதல் மூன்று விக்கெட்டுக்களையும் அஸ்வின் சாய்க்க இங்கிலாந்து 39 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்தது.

    அதன்பின் இஷாந்த் ஷர்மா பந்து வீசினார். இவரது பந்து வீச்சில் அனல் பறந்தது. தாவித் மலனை 20 ரன்னில் வெளியேற்றினார். மதிய உணவு இடைவேளைக்கு சற்றுமுன் பேர்ஸ்டோவை 28 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸை 6 ரன்னிலும் ஒரே ஓவரில் வெளியேற்றினார். அப்போது இங்கிலாந்து 30.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்திருந்தது. அத்துடன் 3-வது நாள் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது. அப்போது பட்லர் ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தார்.

    மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. பட்லர் உடன் சாம் குர்ரான் ஜோடி சேர்ந்தார். முதல் பந்தில் சாம் குர்ரான் ஒரு எடுத்தார். அடுத்த பந்தில் பட்லர் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.



    இங்கிலாந்து 87 ரன்களுக்குள் 7 விக்கெட்டை இழந்து திணறியது. இதனால் 100 ரன்னுக்குள் ஆல்அவுட் ஆகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சாம் குர்ரான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் நேர்த்தியாக இந்திய பந்து வீச்சை எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தார். இஷாந்த் சர்மா பந்தில் இமாலய சிக்சர் விளாசி 54 பந்தில் அரைசதம் அடித்தார்.



    இவரது ஆட்டத்தில் இங்கிலாந்து ஸ்கோர் 200 ரன்னை நோக்கிச் சென்றது. அந்த வேளையில் இஷாந்த் சர்மா பந்தில் பிராட் ஆட்டமிழந்தார். பிராட்டை வீழ்த்தி ஐந்து விக்கெட்டை பதிவு செய்தார் இஷாந்த் ஷர்மா. அடுத்த ஓவரில் குர்ரான் 65 பந்தில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க இங்கிலாந்து 180 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    முதல் இன்னிங்சில் 13 ரன்கள் அதிகம் பெற்றிருந்ததால், ஒட்டுமொத்தமாக இந்தியாவை விட 193 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 194 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

    2-வது இன்னிங்சில் இஷாந்த் ஷர்மா 5 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
    Next Story
    ×