search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக பேட்மிண்டன் போட்டி: கால்இறுதியில் சாய்னா, சிந்து, பிரனீத்
    X

    உலக பேட்மிண்டன் போட்டி: கால்இறுதியில் சாய்னா, சிந்து, பிரனீத்

    உலக பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா, சிந்து, பிரனீத் உள்ளிட்டோர் கால்இறுதிக்கு முன்னேறினர். மற்றொரு முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்தார். #WorldBadmintonChampionships2018
    நான்ஜிங்:

    24-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் நான்ஜின் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை சாய்னா நேவால், 4-ம் நிலை வீராங்கனையான ராட்சனோக் இன்டானோனை (தாய்லாந்து) சந்தித்தார். ஆக்ரோஷமாக ஆடிய சாய்னா தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியதுடன் முதல் செட்டை 22 நிமிடங்களில் வசப்படுத்தினார்.

    இரண்டாவது செட்டிலும் ஆரம்பத்தில் சாய்னாவின் கை ஓங்கி நின்றாலும், அதன் பிறகு முன்னாள் சாம்பியனான இன்டானோன் சரிவை சமாளித்தார். ஒரு கேம் 32 ஷாட் வரை நீடித்ததால், ரசிகர்கள் பரவசமடைந்தனர். 19-19 என்று சமனுக்கு கொண்டு வந்த இன்டானோன் அதன் பிறகு, பந்தை வெளியிலும், வலையிலும் அடுத்தடுத்து அடித்து தவறிழைத்தார். இதனால் 2-வது செட்டும் சாய்னாவின் வசம் ஆனது.

    47 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் சாய்னா 21-16, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்குள் நுழைந்தார். சாய்னா அடுத்து ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரினுடன் (ஸ்பெயின்) மல்லுகட்ட இருக்கிறார்.

    மற்றொரு ஆட்டத்தில் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய புயல் பி.வி.சிந்து 21-10, 21-18 என்ற நேர் செட்டில் சுங் ஜி யென்னை (தென்கொரியா) சாய்த்தார். இதில் 2-வது செட்டில் சிந்து ஒரு கட்டத்தில் 11-13 என்று பின்தங்கி இருந்த போதிலும் எழுச்சி பெற்று எதிராளியை அடக்கினார்.

    42 நிமிடங்களில் வெற்றியை சுவைத்த சிந்து கால்இறுதியில் நடப்பு சாம்பியன் ஜப்பானின் நஜோமி ஒகுஹராவுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறார். இவரிடம் தான் கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சிந்து இறுதி ஆட்டத்தில் நீண்ட ‘யுத்தம்’ நடத்தி தோற்று இருந்தார். அதற்கு வட்டியும் முதலுமாக பதிலடி கொடுக்க சரியான சந்தர்ப்பம் சிந்துவுக்கு கனிந்துள்ளது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21-13, 21-11 என்ற நேர் செட்டில் ஹான்ஸ் கிறிஸ்டியனை (டென்மார்க்) விரட்டியடித்தார். சாய் பிரனீத் கால்இறுதியில் ஜப்பானின் கென்டோ மோமோட்டாவை சந்திக்கிறார். அதே சமயம் 6-ம் நிலை வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த் 18-21, 18-21 என்ற நேர் செட்டில் மலேசியாவின் டாரன் லீவ்விடம் வீழ்ந்தார். இதே போல் 5 முறை உலக சாம்பியனான சீனாவின் லின் டானும் 3-வது சுற்றை தாண்டவில்லை. அவரை சக நாட்டவர் ஷி யுகி 21-15, 21-9 என்ற நேர் செட்டில் பந்தாடினார்.

    கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கி ரெட்டி- அஸ்வினி பொன்னப்பா ஜோடி 20-22, 21-14, 21-6 என்ற செட் கணக்கில் மலேசியாவின் கோ சூன் ஹியாட்- ஷிவோன் ஜெமி இணையை வீழ்த்தி கால்இறுதியை எட்டியது. #WorldBadmintonChampionships2018
    Next Story
    ×