search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காமன்வெல்த் விளையாட்டு போட்டி: இந்திய அணியில் 227 வீரர்-வீராங்கனைகள்
    X

    காமன்வெல்த் விளையாட்டு போட்டி: இந்திய அணியில் 227 வீரர்-வீராங்கனைகள்

    காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் 227 வீரர்-வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.
    புதுடெல்லி:

    21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ்ட் நகரில் வருகிற ஏப்ரல் 4-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது.

    இந்த போட்டிக்கான இந்திய அணி வீரர்-வீராங்கனைகளுக்கு ‘கிட்ஸ்’ (விளையாட்டு உபரகரணங்கள்) வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடந்தது. இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு அதன் தலைவர் நரிந்தர் பத்ரா தலைமை தாங்கினார். மத்திய விளையாட்டு துறை மந்திரி ராஜ்யவர்தன்சிங் ரத்தோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

    இந்தியாவின் முன்னணி வீரர்-வீராங்கனைகள் பிரனாய் (பேட்மிண்டன்), ராணி ராம்பால், ரூபிந்தர் பால்சிங், சவிதா புனியா, மன்பிரீத்சிங் (4 பேரும் ஆக்கி), ஜிதுராய் (துப்பாக்கி சுடுதல்), தீபா கர்மாகர் (ஜிம்னாஸ்டிக்ஸ்), மெகுலி கோஷ் (துப்பாக்கி சுடுதல்) உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

    விழாவில், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பத்ரா பேசுகையில், ‘கோல்டுகோஸ்டில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 227 பேர் கொண்ட வலுவான இந்திய அணி களம் இறங்குகிறது. இதில் 123 வீரர்களும், 104 வீராங்கனைகளும் அடங்குவார்கள். அதிகபட்சமாக தடகள போட்டியில் 37 பேரும், அதற்கு அடுத்தபடியாக ஆக்கி போட்டியில் 36 பேரும் கலந்து கொள்கிறார்கள். கடைசியாக 2014-ம் ஆண்டில் கிளாஸ்கோவில் (ஸ்காட்லாந்து) நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா 64 பதக்கங்கள் வென்றது. இந்த முறை நமது அணியின் பதக்க எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று நம்புகிறோம்’ என்று தெரிவித்தார்.

    மத்திய விளையாட்டு துறை மந்திரியும், 2004-ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் வெள்ளிப்பதக்கம் வென்றவருமான ராஜ்யவர்தன்சிங் ரத்தோர் அளித்த பேட்டியில், ‘இந்த ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதல் இடம் பெறவில்லை. 2022-ம் ஆண்டுக்கான போட்டியில் இருந்தும் துப்பாக்கி சுடுதல் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் காமன்வெல்த் விளையாட்டு பெடரேஷனுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதலை மீண்டும் சேர்க்க வேண்டும் என வற்புறுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார். ‘காமன்வெல்த் பெடரேஷனின் அடுத்த கூட்டத்தில் துப்பாக்கி சுடுதல் நீக்கம் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்புவதுடன் மீண்டும் அந்த போட்டியை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா கூறினார். 
    Next Story
    ×