என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனவரி 27, 28-ல் ஐ.பி.எல் வீரர்கள் ஏலம் - பி.சி.சி.ஐ அறிவிப்பு
    X

    ஜனவரி 27, 28-ல் ஐ.பி.எல் வீரர்கள் ஏலம் - பி.சி.சி.ஐ அறிவிப்பு

    2018 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் ஜனவரி 27 மற்றும் 28-ம் தேதிகளில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்அறிவித்துள்ளது.
    மும்பை:

    உலகம் முழுக்க பிரபலமான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலகின் முன்னனி நட்சத்திர வீரர்களும் பங்கு பெறும் இந்த தொடரானது, பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாதது.

    2018-ம் ஆண்டுக்கான 11-வது சீசன் ஐ.பி.எல் தொடர் வரும் ஏப்ரல் மாதம் கோலாகலமாக தொடங்க இருக்கிறது. இத்தொடரில், பங்கேற்கும் அணிகளில் விளையாட இருக்கும் வீரர்களுக்கான ஏலம் வரும் ஜனவரி 27 மற்றும் 28-ம் தேதிகளில் பெங்களூரில் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை பி.சி.சி.ஐ இன்று வெளியிட்டுள்ளது.

    இரண்டு நாட்கள் நடைபெறும் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 60 கோடிக்கு வீரர்களை ஏலத்தில் எடுக்க வேண்டியிருக்கும். அதே நேரத்தில் அதிகபட்சமாக 80 கோடி ரூபாய் செலவழித்து 25 பேர் கொண்ட அணியை ஏலத்தில் எடுக்கலாம். இந்த தொகை கடந்த ஆண்டு 66 கோடி ரூபாயிலிருந்து 80 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.



    தற்போதைய நிலையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் வீரர்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. எனவே, முன்னனி அணிகள், அவ்வகை வீரர்களை விலை அதிகமாகக் கொடுத்து ஏலம் எடுக்க தயாராகவே உள்ளனர். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊழல் புகாரில் தடை செய்யப்பட்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் ரீ-எண்ட்ரி கொடுக்க இருப்பதால், இந்தாண்டிற்கான ஐ.பி.எல். ஏலத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

    இந்த ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு அணியினரும் அதிகபட்சமாக தற்போதைய அணியிலிருந்து ஐந்து வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம். தக்கவைத்து கொள்ளும் வீரர்கள் பட்டியலை வருகிற 8-ம் தேதிக்குள் பி.சி.சி.ஐ.யிடம் சமர்பிக்க வேண்டும். அதன்பின் 18-ம் தேதி ஏலத்தில் பங்குபெறும் வீரர்களின் பட்டியல் வெளியிடப்படும் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.
    Next Story
    ×