என் மலர்tooltip icon

    செய்திகள்

    லா லிகா கால்பந்து: ரியல் மாட்ரிட்டை 2-1 வீழ்த்தி அதிர்ச்சியளித்தது ஜிரோனா
    X

    லா லிகா கால்பந்து: ரியல் மாட்ரிட்டை 2-1 வீழ்த்தி அதிர்ச்சியளித்தது ஜிரோனா

    லா லிகா கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த ரியல் மாட்ரிட் அணியை 2-1 என வீழ்த்தி ஜிரோனா அதிர்ச்சி அளித்துள்ளது.
    ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான 2017-18 சீசன் ‘லா லிகா’ லீக் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் முன்னணி அணியான ரியல் மாட்ரிட், கேட்டலோனியாவில் அமைந்துள்ள ஜிரோனா அணியை எதிர்கொண்டது.



    அரசியல் நெருக்கடிக்கிடையே ஜிரோனா அணி களம் இறங்கியது. ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் நோக்கி அடித்த பந்தை ஜிரோனா கோல் கீப்பர் தடுத்தார். பந்து அவரது கையில் பட்டு திரும்பியது. அதை இஸ்கோ அருமையான வகையில் கோலாக மாற்றினார். இதனால் ரியல் மாட்ரிட் அணி 1-0 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. ஆகவே முதல் பாதி நேரத்தில் ரியல் மாட்ரிட் 1-0 என முன்னிலைப் பெற்றது.



    2-வது பாதி நேரத்தில் ஜிரோனா அணி வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 54-வது நிமிடத்தில் ஸ்டுயானி ஒரு கோலும், 58-வது நிமிடத்தில் போர்டு ஒரு கோலும் அடித்தனர். 4-வது நிமிடத்திற்குள் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்து ரியல் மாட்ரிட்டுக்கு அதிர்ச்சி அளித்தனர்.



    பின்னர் ரியல் மாட்ரிட் அணியால் பதில் கோல் அடிக்க இயலவில்லை. ஜிரோனா மேலும் கோல் அடிக்க முயற்சி செய்யாமல் தடுப்பு ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்தினர். இதனால் ரியல் மாட்ரிட் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் ஜிரோனா 2-1 என வெற்றி பெற்று ரியல் மாட்ரிட் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது.



    தற்போது வரை ரியல் மாட்ரிட் 10 போட்டிகளில் முடிவில் 20 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. பார்சிலோனா 10 ஆட்டத்தில் 28 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் இந்த சீசனில் இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது. 6 வெற்றியும், இரண்டு போட்டியை டிராவும் செய்துள்ளது.
    Next Story
    ×