search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நான் வின்டேஜ் ஒயின் மாதிரி: 35 வயதிலும் கலக்கும் டோனி சொல்கிறார்
    X

    நான் வின்டேஜ் ஒயின் மாதிரி: 35 வயதிலும் கலக்கும் டோனி சொல்கிறார்

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக 79 பந்தில் 78 ரன்கள் குவித்ததன் மூலம் தன்னை வின்டேஜ் ஒயின்-ஆக கருதுகிறார் டோனி.
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் களம் இறங்கியது. தொடக்க வீரர் தவான் 2 ரன்னிலும், அடுத்து வந்த கேப்டன் கோலி 11 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

    இந்தியா 26.2 ஓவரில் 100 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்திருந்தது. 4-வது விக்கெட்டுக்கு ரகானேவுடன் விக்கெட் கீப்பரும் முன்னாள் கேப்டனும் ஆன டோனி களம் இறங்கினார்.

    அதிக நேரம் களத்தில் நிற்பதற்கு கிடைத்த வாய்ப்பை டோனி சரியாக பயன்படுத்திக் கொண்டார். கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் இருந்து 79 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 78 ரன்கள் சேர்த்தார். இவரது ஆட்டத்தால் இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 158 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கடந்த சில மாதங்களாகவே சரியாக பேட்டிங் செய்ய முடியவில்லை, அவருக்கு வயதாகிவிட்டது என டோனி மீது விமர்சனம் இருந்தது. இந்த நிலையில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.



    78 ரன்கள் குவித்த டோனி ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். போட்டி முடிந்த பின்னர், இந்த வயதிலும் சிறப்பாக விளையாடுவது குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது, அப்போது ‘‘என்னுடைய ஆட்டம் வின்டேஜ் ஒயின் போன்றது’’ என்றார்.

    மேலும், நேற்றைய ஆட்டம் குறித்து டோனி மேலும் கூறுகையில் ‘‘நம்முடைய டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதனால், இந்த வாய்ப்பை பயன்படுத்தி அதிக ரன்கள் குவித்ததை சிறந்ததாக நினைக்கிறேன்.

    இது ஒரு வழக்கமான ஆடுகளம் என்றுதான் நினைக்கிறேன். பலவிதமான பவுன்ஸ் மற்றும் வேகமும் இருந்தது. இதுபோன்ற சமயத்தில் பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்துவது முக்கியம். என்னுடைய மனதில் 250 ரன்கள் எடுப்போம் என்ற நம்பிக்கை இருந்தது. கேதர் ஜாதவ் என்னுடன் இணைந்து சிறப்பாக விளையாடினார். இதனால் அந்த ஸ்கோரை எடுத்தோம். இந்த ஸ்கோர் பந்து வீச்சாளர்களுக்கு போதுமானதாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், நமது பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக பந்து வீசினார்கள்’’ என்றார்.
    Next Story
    ×