என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- ரஜினிக்கு உதவிய நடிகை ஸ்ரீபிரியா!
- படப்பிடிப்பு நடந்த இடம் போர்க்களம் போல மாறி விட்டது.
- ரஜினிக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
ரஜினிக்கு இன்று வரை ஒரு ஏக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. அது தன் சிறு வயதில் தனக்குக் கிடைக்காமல் போன தாய்ப் பாசம் பற்றியதாகும். அதனால்தான் அவர் தன் அண்ணியை தாயாகப் போற்றி வணங்கினார்.
தமிழ் சினிமாவில் நடித்து புகழ் பெற்ற காலத்திலும் கூட அவர் தாய்ப் பாசத்துக்கு ஏங்கியது உண்டு. அந்த ஏக்கத்தை நிவர்த்தி செய்யும் வகையில் ரெஜினா வின்சென்ட் அவர்களின் நட்பு ரஜினிக்கு அமைந்திருந்தது.
ரெஜினாவை அவர் எப்போதும் வாய் நிறைய "அம்மா.... அம்மா...." என்று அழைத்து தாய்ப்பாச ஏக்கத்தை தீர்த்தார். இந்த சூழலில்தான் ரஜினிக்கு, "அன்னை ஓர் ஆலயம்" பட வாய்ப்பு வந்தது. 1978-ல் ரஜினிக்கு சினிமாவில் நடிக்க அட்வான்ஸ் கொடுத்த ஏ.வி.எம். செட்டியாரும், சாண்டோ சின்னப்பா தேவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர்.
அவர்கள் மரணத்துக்கு ரஜினியின் ராசியே காரணம் என்று சில கயவர்கள் மனசாட்சி இல்லாமல் திரை உலகில் அவதூறு பரப்பி இருந்தனர். இது ரஜினி மனதை மிகவும் வேதனைப்படுத்தியது. அதிலும் சாண்டோ சின்னப்பா தேவர் மிகவும் ஆர்வத்துடன் ரஜினியை வைத்து தயாரித்த 'தாய் மீது சத்தியம்' படம் திரைக்கு வரும் முன்பே அவர் மரணம் அடைந்தது, ரஜினியை மேலும் கவலைக்கு உள்ளாக்கி இருந்தது.
எனவே ரஜினி தாமாக முன் வந்து தேவர் பிலிம்சைத் தொடர்பு கொண்டு, "தேவருக்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். எனவே எப்போது நீங்கள் அழைத்தாலும் படத்தில் நடிக்க தயார்" என்று உறுதி அளித்தார். அந்த சமயத்தில் அரசியலில் தீவிரமாக இருந்த எம்.ஜி.ஆரும், சாண்டோ சின்னப்பா தேவர் பெயரை நிலை நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், இந்தியில் வெற்றிகரமாக ஓடிய "மா" படத்தை "அன்னை ஓர் ஆலயம்" என்ற பெயரில் தயாரிக்க உதவினார்.
இந்த படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட போது ரஜினி நல்ல நிலையில்தான் இருந்தார். ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய போது ரஜினி உடல் நலமும், மன நலமும் அதிகம் பாதிக்கப்பட்டு விட்டார். அதற்காக படப்பிடிப்பை நீண்ட நாட்களுக்கு நிறுத்தி வைக்க முடியாத நிலையில் தேவர் பிலிம்ஸ் இருந்தது.
எனவே டாக்டர் செரியனிடம் படக்குழுவினர் பேசினார்கள். ரஜினியை படப்பிடிப்புக்கு அனுப்புங்கள் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு டாக்டர் செரியன், "ரஜினி பூரண குணம் அடையவில்லை. அவரை நடிக்க அனுமதிக்க முடியாது" என்றார்.
படக்குழுவினர் அவரிடம் கெஞ்சினார்கள். "ரஜினியை நாங்கள் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறோம். முதுமலை காட்டுப் பகுதியில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் நாங்கள் சென்னைக்கு அழைத்து வந்து விடுகிறோம்" என்றனர். உடனே டாக்டர் செரியன் போனில் ரெஜினாவை தொடர்பு கொண்டு பேசினார்.
ரஜினியை, "அன்னை ஓர் ஆலயம்" படப் பிடிப்புக்காக முதுமலை காட்டுக்கு அனுப்பலாமா? என்று அவர்கள் இருவரும் விவாதித்தனர். அப்போது ரஜினி "எனக்கு பயமாக இருக்கிறது. நான் அங்கெல்லாம் போக மாட்டேன்" என்றார். அவரை ரெஜினா சமரசம் செய்தார்.
"இதோ பார்...நான் அம்மா இல்லையா... அம்மான்னா கடவுள் மாதிரினு நீ சொல்லுவியே... நான் சொல்கிறேன். தைரியமாகப் போ... நல்லதே நடக்கும்" என்று ரெஜினா உற்சாகம் கொடுத்தார். அதைக் கேட்டு சமரசம் ஆன ரஜினி முதுமலையில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சம்மதித்தார்.
முதுமலை காட்டுக்குள் யானைகள் வசிப்பிடம் பகுதியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. முதலில் ரஜினி நன்கு ஒத்துழைத்தார். ஆனால் தாய்ப் பாசத்துடன் தொடர்புடைய காட்சிகள் படமாக்கப்பட்ட போது ரஜினியின் மன நலத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன.
தாய் யானையிடம் இருந்து குட்டி யானையைப் பிரிக்கும் காட்சிகளில் நடித்தப் போது ரஜினி தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதார். அது போல, "அம்மா நீ சுமந்த பிள்ளை..." என்ற பாடல் காட்சிகளைப் பட மாக்கிய போதும் ரஜினி கதறி, கதறி அழுதார். தாய்ப்பாசம் நினைவுக்கு வந்து அவர் படப்பிடிப்பு என்பதையும் மறந்து கண்ணீர் விட்டார். படப்பிடிப்பு குழுவினர் அதைக் கண்டு நெகிழ்ச்சியில் உறைந்து போய் விட்டனர்.
அந்த காட்சிகளில் நடித்தப் போது ரஜினி மது அருந்தி இருக்கவில்லை. அந்த பாடல் காட்சிகள் முடிந்து, மற்ற காட்சிகள் பட மாக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, உடன் நடித்த ஒரு மூத்த நடிகர் ஏதோ சொல்லி இருக்கிறார். அது ரஜினிக்கு பிடிக்கவில்லை. கோபத்தில் அவர் கண்கள் சிவந்தது.
அடுத்த வினாடி அவர் சித்தம் கலங்கியது. அந்த நடிகரையும், படப்பிடிப்புக் குழுவினரையும் ரஜினி விரட்டி, விரட்டி அடித்தார். அவரை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. படப்பிடிப்பு நடந்த இடம் போர்க்களம் போல மாறி விட்டது.
கதாநாயகி ஸ்ரீபிரியாவும் மற்றவர்களும் ரஜினியை சமரசம் செய்து ஆசுவாசப்படுத்தி தூங்க வைத்தனர். மறுநாள் ரஜினி ஒரு சிறுத்தையுடன் சண்டை போடுவது போன்ற காட்சியை படமாக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காக வாய் தைக்கப்பட்ட, கால் நகங்கள் அகற்றப்பட்ட ஒரு பெரிய சிறுத்தை கொண்டு வரப்பட்டது. இரண்டு பேர் சேர்ந்துதான் அந்த சிறுத்தையை தூக்க முடியும். அவ்வளவு எடை கொண்டதாக அந்த சிறுத்தை இருந்தது. ஆனால் ரஜினி அந்த சிறுத்தையை தனி நபராக அலாக்காக தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்து விட்டார்.
பயந்து போன படக்குழுவினர் அவரிடம் "டூப்" போட்டு அந்த சண்டை காட்சியை எடுத்து விடலாம் என்றனர். ஆனால் தொழிலில் மிகுந்த பக்தி கொண்ட ரஜினி அதை ஏற்கவில்லை. நானே நடிக்கிறேன் என்று நடித்தார்.
சிறுத்தையுடன் சண்டை போடும் போது அவருக்கு திடீரென கோபம் வந்து விட்டது. அவ்வளவுதான் அந்த சிறுத்தை வாலைப் பிடித்து கட....கட....வென சுற்றி அதை அப்படியே தூக்கி வீசினார். ரஜினி சாதாரணமாக வீசுவது போல இருந்தது. ஆனால் அந்த சிறுத்தை வெகு தூரத்தில் போய் விழுந்து அலறியது. இதைக் கண்டு ஒட்டு மொத்த படக்குழுவும் அதிர்ச்சி அடைந்தது.
அந்த படத்தின் எடிட்டராக இருந்த பாலுராவ் தொடக்க காலத்தில் இருந்தே ரஜினியிடம் பழகி வருபவர். அவர்,ரஜினியிடம் "என்னப்பா... இது" என்றார். அதற்கு ரஜினி.... "என்ன... என்ன..... நான் எதுவும் செய்யவில்லையே..." என்று அப்பாவியாக கேட்டார்.
அப்போது ரஜினியைப் பார்த்து அனைவருக்கும் கண்ணீரும், இரக்கமும் வந்தது. எவ்வளவு பெரிய நடிகர் இப்படி ஆகி விட்டாரே என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர். இதையெல்லாம் கேட்டு நடிகை ஸ்ரீபிரியா மிகவும் வருத்தப்பட்டார்.
ரஜினியை இப்படியே விட்டால், அவரை குணப்படுத்தி மீட்பது கஷ்டம் என்பது ஸ்ரீ பிரியாவுக்கு மட்டுமே முதல் முதலில் தெள்ளத் தெளிவாகப் புரிந்தது. சென்னை திரும்பியதும் அவர் டைரக்டர் பாலச்சந்தரை சந்தித்துப் பேசினார். ரஜினி முழுமையாக குணமாகவில்லை. அவரை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று கண்ணீர் விட்டார்.
ஸ்ரீபிரியா சொன்ன தகவல்களைக் கேட்ட டைரக்டர் பாலச்சந்தருக்கு ரஜினியின் அபாய நிலை புரிந்தது. உடனே அவர் இதுபற்றி நடிகர்கள் நம்பியார், மேஜர் சுந்தரராஜன், நாகேஷ், சிவக்குமார், ஜெய்சங்கர் ஆகியோரிடம் கலந்து பேசி ஆலோசனை நடத்தினார். ரஜினிக்கு உடனடியாக சிகிச்சை அளித்தால் தான் அவரை பழைய நிலைக்கு கொண்டுவர முடியும் என்று அனைவரும் முடிவு செய்தனர்.
இதையடுத்து ரஜினியை வலுக்கட்டாயமாக அழைத்து சென்று டைரக்டர் பாலச்சந்தர் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். ரஜினி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தகவலை வெளியில் யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டனர். டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் ரஜினி 15 நாட்கள் இருந்தார்.
டாக்டர் செரியனின் கண்காணிப்பில் ரஜினி 15 நாட்களும் எந்தவித சிந்தனையும் இல்லாமல் நன்றாக தூங்கி ஓய்வு எடுத்தார். அதன் பலனாக ரஜினி குணம் அடைந்தார்.
80 சதவீதம் அளவுக்கு அவர் தன் இயல்பு நிலைக்கு திரும்பி இருந்தார். இது டைரக்டர் பாலச்சந்தர் மற்றும் தமிழ்த் திரை உலக மூத்த நடிகர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. ரஜினியை தக்க சமயத்தில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க வைத்து, அவரை குணப்படுத்த காரணமாக, அடித்தளமாக இருந்தது நடிகை ஸ்ரீபிரியா என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் தொடர்ச்சியாக "அன்னை ஓர் ஆலயம்" படப்பிடிப்புகள் முடிந்து 19.10.1979 அன்று படம் வெளியானது. படம் வெற்றிகரமாக ஓடியது. அந்த படத்தில் இளையராஜா இசையில் இடம் பெற்ற "அப்பனே... அப்பனே... பிள்ளையாரப்பனே..." பாடல் சூப்பர் ஹிட் பாடலாக மாறியது. ரஜினிக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
அவர் உடல் நலமும், மன நலமும் பாதிக்கப்பட்ட காலக்கட்டத்தில் எடுக்கப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றதால் ரஜினி இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தார். இந்த படம் தமிழ்நாடு முழுவதும் சிறுவர், சிறுமிகளின் பார்வையை ரஜினி பக்கம் திரும்பச் செய்திருந்தது.
அதாவது ரஜினிக்கு இளம் ரசிகர்களிடம் மட்டுமின்றி சிறுவர்களிடமும் ஏகோபித்த ஆதரவை "அன்னை ஓர் ஆலயம்" படம் உருவாக்கியது. ரஜினியின் கலைப் பயணத்தில் இது மிக முக்கியமான மாற்றமாகும்.
ஆனால் இந்த படத்தில் ரஜினி நடித்து கொண்டிருந்தபோது, "ஆறில் இருந்து அறுபது வரை" படத்திலும் ரஜினி நடித்துக் கொண்டிருந்தார். அந்த படத்தை இயக்கிய எஸ்.பி.முத்துராமனை ரஜினி ஒரு வழி செய்து விட்டார். ரஜினியிடம் சிக்கி எஸ்.பி.முத்துராமன் பட்ட கஷ்டங்களை இனி வரும் நாட்களில் பார்க்கலாம்.






