என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • கும்பகோணத்தில் சில நாட்கள் ஷுட்டிங் நடந்தது.
    • 2006 முதல் 2008 வரை 500 அத்தியாயங்களாக ஒளிபரப்பான இந்த தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது.

    எனது நீண்ட கால திரை உலகப் பயணம் எவ்வளவோ அனுபவங்களை கற்றுத் தந்துள்ளது. அதோடு சினிமாவின் பரிணாம வளர்ச்சியுடன் என்னையும் சேர்த்து வளர்த்தது.

    அதில் குறிப்பிடத்தக்கது சின்னத்திரை. நான் புகழின் உச்சத்தில் இருந்தபோதே சின்னத்திரையின் வளர்ச்சியும் உச்சம் பெற்றிருந்தது.

    அது நேரடியாக குடும்பங்கள், பெண்கள் என்று ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் புகுந்தது. எப்பவாவது சினிமா பார்த்தவர்கள் கூட எப்பவும் சின்னத்திரையை பார்க்கும் அளவுக்கு நிலைமை மாறியது.

    சின்னத்திரையில் வெளியாக தொடங்கிய தொடர்களும், நிகழ்ச்சிகளும் மக்களை ஈர்த்தது ஒவ்வொரு வீடும் திரை அரங்கம் போல் மாறியது.

    அப்போது சின்னத்திரையும் என்னை அழைத்தது. அந்த கால கட்டத்தில் சினிமாவில் வாய்ப்பை இழந்தவர்கள் தான் சின்னத்திரைக்கு செல்வார்கள் என்ற எண்ணம் இருந்தது.

    அது மட்டுமல்ல நெடுந்தொடர்கள் மக்களை வெகுவாக கவர்ந்திருந்த நேரம். இந்த நிலையில் முன்பின் தெரியாத துறைக்குள் காலடி வைப்பது சறுக்கிவிடுமா? இல்லை சாதிக்க முடியுமா? என்ற எண்ணம் மனதுக்குள் அலைமோதியது.

    ஆனால் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் 'லட்சுமி' என்ற தொடரை தயாரிப்பதற்கு என்னை அணுகியதும் லேசான தயக்கம் இருந்தாலும் அதையும் தான் ஒரு கை பார்த்து விடுவது என்று முடிவு செய்து ஒத்துக்கொண்டேன்.

    ஷுட்டிங் தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நேரம் கொடுத்தேன். பெரிய திரையிலேயே எதையும் சமாளித்த நமக்கு சின்னத்திரையா சவாலாக இருக்கப்போகிறது! என்ற நினைப்போடு தான் ஷுட்டிங் கிளம்பினேன்.

    சினிமாவுக்கும் இதற்கும் வித்தியாசம் என்னவென்றால் பெண்களை மையமாக வைத்தே காட்சி ஓடுவதால் பெரும்பாலும் எல்லா சீன்களிலும் நடிக்க வேண்டியிருந்தது. கஷ்டமாகவே இருந்தது. சினிமாவில் ஒரு ஷாட் எடுத்ததும் சிறிது ஓய்வு கிடைக்கும்.

    ஆனால் இங்கு தொடர்ந்து நடிக்க வேண்டியிருந்தது. ஓய்வே இல்லாமல் தொடர்ந்து நடித்ததால் மாலையில் மிகவும் களைப்பாகி விடுவேன். ஒரு கட்டத்தில் முடியவே முடியாது என்ற எண்ணம் வந்து விட்டது.

    அதன் பிறகு டைரக்டரிடம் சொல்லி இரண்டு மணி நேரம் குறைக்க சொன்னேன். அதன்படி தினமும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை ஷுட்டிங்கில் கலந்து கொள்வேன்.

    கும்பகோணத்தில் சில நாட்கள் ஷுட்டிங் நடந்தது. அதுவும் கோவில் பக்கத்தில் உள்ள வீட்டை ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

    ஷுட்டிங் வீட்டின் மேற்கூரையில் நடந்தது. சரியான வெயில் நேரம் மொட்டை மாடியில் நடந்தது. கோவில் பக்கம் என்றதால் காலில் செருப்பு அணியவும் முடியவில்லை.

    கொளுத்தும் வெயிலில் கால் கடுமையாக சுட்டது. என்னால் நடிக்க முடியவில்லை. துணை நடிகர்களுக்கு தரையில் போர்வைகளை விரித்து இருந்தார்கள். எனக்கும் அதுபோல் விரிக்க சொல்லி அதன் பிறகு தான் நடித்தேன்.

    ஏற்காடு மற்றும் ஒகேனக்கல் பகுதியிலும் வெளிப்புற ஷுட்டிங் நடந்தது. அருவி மிகவும் அழகாக இருந்தது. ஆனால் பார்த்து ரசிக்க முடியவில்லை.

    ஏனெனில் சினிமாவை விட ரசிகர்கள் தொல்லை அதிகமாக இருந்தது. மீனா... மீனா.. என்று குரல் எழுப்பியபடி ஏகப்பட்ட கூட்டம்.

     

    அதை விட சுவாரஸ்யம் என்னவென்றால் லட்சுமி தொடரில் லட்சுமி பாத்திரத்தில் நடித்ததால் ரசிகர்களும் என்னை லட்சுமி என்றே அழைக்க தொடங்கி விட்டார்கள்.

    எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அடப்பாவி 25 வருடத்துக்கும் மேலாக சினிமாவில் எவ்வளவோ கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறேன். அதில் மக்கள் மனதில் பதிந்ததை விட இந்த தொடரில் நடித்ததும் லட்சுமி என்ற பெயர் மக்கள் மனதில் எளிதாக பதிவானது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

    2006 முதல் 2008 வரை 500 அத்தியாயங்களாக ஒளிபரப்பான இந்த தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது.

    சினிமாவில் எனக்கென்று ஒரு இடத்தை பிடித்தது போல் சின்னத்திரையிலும் தனி முத்திரை பதிக்க முடிந்தது.

    'அழகுக்கு ஓரழகு!

    அவளுக்கு நூறழகு!

    அவள் முகம் காட்டினால்,

    புன்னகை பூட்டினால்....

    கண்ணுக்கு இமையழகு...'

    என்று தொடங்கும் முகப்பு பாடல் மற்றும் இசை தினமும் எங்கும் ஒலித்தது.

    பெரிய திரையில் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குத் தான் இந்த மாதிரி பாடல்கள் ஒலிக்கும். ஆனால் தொலைக்காட்சி தொடரில் 2 ஆண்டுகள் தொடர்ந்து ஒலித்து கொண்டே இருந்தது.

    ஒவ்வொரு வீட்டிலும் லட்சுமி வந்தாச்சு என்று உங்கள் மீனாவை ஒவ்வொரு நாளும் வரவேற்றார்கள்.

    இந்த வாய்ப்பு எத்தனை பேருக்கு கிடைக்கும்? ஒரே நேரத்தில் பெரிய திரை, சின்னத்திரை இரண்டிலுமே கலக்கியது, உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

    அடுத்து ஒரு முக்கியமான தகவலுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன் பை... பை...

    (தொடரும்...)

     

    இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தருமோ...

    முத்து படத்தில் ரஜினி சாரிடம் 'இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தருமோ...' என்று டயலாக் பேசுவேன். பல ஆண்டுகள் கழித்து சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் நான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன். அந்த போட்டியில் பங்கெடுத்த ஒரு குழந்தை என்னை பார்த்ததும் நான் பேசிய அந்த டயலாக்கை அற்புதமாக பேசி என்னிடமே 'உம்மா' கேட்டாள். உடனே மேடையிலேயே அந்த குழந்தையின் பட்டு கன்னத்தை தொட்டு நான் உம்மா கொடுத்து நெகிழ்ந்தேன். எப்படி வண்ணத்திரையும், சின்னத்திரையும் ஒன்றோடு ஒன்று இணைந்து ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்து கொண்டேன். கலைஞர்கள் எல்லா தளங்களிலும் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும்.

    • வீட்டின் வெளிப்புறம் உயரமான பகுதியில் எம தீபம் ஏற்றப்பட வேண்டும்.
    • கர்ப்பிணி பெண்கள் இதை கட்டாயம் ஏற்றக்கூடாது.

    தீபாவளிக்கு முதல் நாளில் எம தீபம் ஏற்றுவதை நம் மூதாதையர்கள் கடைப்பிடித்தனர். எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும், சொத்துகள் சேரும். முன்னோர்கள் ஆசி கிடைக்கும்.

    இத்தகைய சிறப்புடைய எம தீபத்தை தீபாவளிக்கு முந்தைய தினம் இரவு ஏற்ற வேண்டும் என்பது மரபாகும். குறிப்பாக திரயோதசி திதி நேரத்தில் அந்த தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பது ஐதீக விதியாகும்.

    இந்த ஆண்டு வருகிற வியாழக்கிழமை (31-ந் தேதி) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதன்படி பார்த்தால் முந்தைய தினமான 30-ந் தேதி இரவு எம தீபம் ஏற்றப்பட வேண்டும்.

    ஆனால் திரயோதசி திதி நேரம் அந்த சமயத்தில் இல்லை. அதாவது திரயோதசி திதி நேரம் நாளை (29-ந் தேதி) மதியம் 12.21 மணிக்குத் தொடங்கி 30-ந் தேதி மதியம் 2.21 மணிக்கு முடிந்து விடுகிறது.

    இதன் காரணமாக தீபாவளி பண்டிகைக்குரிய எம தீபத்தை திரயோதசி திதி இருக்கும் நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு ஏற்ற வேண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை மாலை 6 மணிக்கு வீட்டுக்கு வெளியே மறக்காமல் எம தீபம் ஏற்றுங்கள்.

     

    நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றலாம். தெற்கு திசையை நோக்கி வைக்க வேண்டும். வீட்டு வாசலில் வைக்கலாம். திறந்த வெளியில் தான் எம தீபம் ஏற்றவேண்டும். எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும், சொத்துகள் சேரும். அனைத்து வித தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே வரும்.

    எமன் சூரியனின் மகன். எமன் என்றதுமே எல்லோரும் அச்சப்படுவார்கள். அவர் இருக்கும் திசையான தெற்கு திசையை பார்த்தே பயப்படுவார்கள். ஆனால் அவர் எல்லோருக்கும் சமமானவர். அவருக்கு சிவபெருமான் கொடுத்த கடமை உயிரை எடுப்பது. அதில் அவர் எந்த பாரபட்சமும் பார்ப்பது இல்லை.

    அவருக்கு நன்றி சொன்னால் அவர் பாதுகாப்பில் இருக்கும் நமது முன்னோர்களை நன்றாக பார்த்துக்கொள்வார். மகாளய பட்ச காலத்தில் பூலோகத்துக்கு வரும் முன்னோர்களுக்கு திதி கொடுப்போம். அப்படி வந்த முன்னோர்கள் மீண்டும் திரும்பி செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது எம தீபம் மட்டுமே. இதனால் முன்னோர்கள் மட்டும் அல்லாமல் எமதர்மனும் மகிழ்ச்சி அடைவார். விபத்துகள், திடீர் மரணம் போன்றவை ஏற்படாது. நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழலாம்.

    எம தீபம் ஏற்றும் முறை குறித்து நமது சாஸ்திரங்கள் வழி வகைகள் ஏற்படுத்தி உள்ளது. இதோ அந்த வழி முறைகள்:-

    வீட்டின் வெளிப்புறம் உயரமான பகுதியில் எம தீபம் ஏற்றப்பட வேண்டும். எம தீபம் தெற்கு திசை நோக்கி எரிய வேண்டும். விளக்கேற்றிய பின் எம தீப சுலோகம் சொல்லி பிரார்த்தனை செய்ய வேண்டும். விளக்கேற்றிய பின்னர், முன்னோர்களை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்ய வேண்டும். மாதவிலக்கு பெண்கள் இந்த எம தீபம் ஏற்றுவதை தவிர்க்க வேண்டும். அவர்களுக்கு பதிலாக வீட்டில் இருக்கும் ஆண்கள் கூட ஏற்றலாம்.

    எம தீபம் ஏற்றி முன்னோர்களுக்கும் வழிகாட்டி உதவிட நமக்கு வாழ்நாள் முழுவதும் நல்ல பலன்களைத் தரும். முன்னோர் ஆசிகள் பெற எம தீபம் ஏற்றுவோம். ஓரு ஆத்மாவை உருவாக்குவதில் ஆத்மகாரகனான சூரியனும் அந்த ஆத்மாவின் ஆயுளை தீர்மானிப்பதில் சூரியனின் புத்திரர்கள் மற்றும் ஆயுள் காரகனான சனீஸ்வர பகவானும், அவருடைய அதிதேவதையான எமனும்தான் என பாரம்பரிய ஜோதிடம் கூறுகிறது.

    பரணி, மகம், சதயம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் எம தீபம் ஏற்றுவது சிறப்பு. பரணி நட்சத்திரத்திற்கு எமன் அதிபதி. மகம் நட்சத்திரத்திற்கு பித்ருக்களை அதிதேவதையாக கூறியுள்ளனர். ஆன்மீக நூல்களில் சதயத்திற்கு எமனை அதிதேவதையாக கூறப்பட்டுள்ளது.

    எம தீபம் குறிப்பாக துர்மரணம் அடைந்தவர்களுக்கு முக்கியமானது. எவரேனும் மரணமடைந்தால் மட்டுமே எம தீபம் ஏற்ற வேண்டும் என்று எண்ணக் கூடாது.

    எமனை அதிதேவதையாக கொண்ட சனீஸ்வர பகவான் லக்னத்தில் ஆட்சி உச்சம் பெற்றவர்கள், ஆயுள் ஸ்தானத்தில் சனீஸ்வர பகவான் நீசம் அல்லது பலம் இழந்தவர்கள் எம தீபம் ஏற்றவேண்டும். ஆயுள் ஸ்தானாதிபதி ருத்ரனை அதிதேவதையாக கொண்ட திருவாதிரை அல்லது ருத்ரனை அதிதேவதையாக கொண்டவர்கள் எம தீபம ஏற்றுவது சிறப்பு.

    அவரவர் வீட்டின் உயரமான பகுதியிலும் தெற்கு திசை நோக்கியும் எம தீபம் ஏற்றலாம். அனைத்து சனி பரிகார தலங்களிலும் அனைத்து சிவாலய சனீஸ்வரர் சன்னதிகளிலும் எம தீபம் ஏற்றலாம். எமனின் சகோதரியான யமுனை நதிக்கரையில் ஏற்றலாம். அனைத்து காலபைரவர் சன்னதிகளிலும் ஏற்றலாம்.

    எம தீபத்தை ஆலயங்களிலும் ஏற்றி வழிபடலாம். மயிலாடுதுறை அருகில் ஸ்ரீ வாஞ்சியத்தில் தனி சன்னதி பெற்ற எமதர்மராஜன் சன்னதி. தனது பக்தனான மார்கண்டேயனுக்கு அருள்புரிவதற்காக எமனை அழித்த திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சன்னதியில் தெற்கு நோக்கி தீபம் ஏற்றலாம். திருச்சி மண்ணச்சநல்லூர் அருகில் திருபைஞ்சிலி எனும் ஸ்ரீவனநாதர் ஆலயத்தில் உலகில் அழிக்கும் தொழில் தடையின்றி நடைபெற சாம்பலில் இருந்து எமனை மீண்டும் குழந்தையாக உருவாக்கிய எமன் சன்னதியில் ஏற்றலாம்.

    வட இந்தியாவில் இந்த எம தீப வழிபாடு கடைபிடிக்கப்படுவதால் தமிழகத்திலும் தற்போது இதை பலர் கடைபிடிக்க துவங்கி உள்ளனர்.

    பொதுவாக எம தீபத்தை மாலை 6 மணிக்கு மேல் தான் ஏற்றவேண்டும். எமனுக்கு உரிய இந்த தீபத்தை வீட்டிற்குள் ஏற்றவே கூடாது. வீட்டின் நிலை வாசலுக்கும் கேட்டிற்கும் உள்ள இடைப்பட்ட இடத்தில் இதை ஏற்றலாம். எம தீபமானது தெற்கு நோக்கி தான் ஏற்ற வேண்டும்.

    அதேசமயம் சாதாரண ஒரு அகல் விளக்கை கொண்டு இதை ஏற்றினால் போதுமானது. இந்த தீபம் ஏற்றுவதற்கு நல்லெண்ணெய் தவிர வேறு எதையும் பயன்படுத்தக் கூடாது. குறைந்தது 1 மணி நேரமாவது இந்த தீபம் எரிய வேண்டும்.

    எம தீபம் தரையில் இருந்து சற்று உயரமாக இருக்க வேண்டும். ஆகையால் கீழே கொஞ்சம் மணலோ அல்லது கல்லோ வைத்து ஏற்றலாம். எம தீபம் ஏற்ற பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தையும் திரும்பவும் வீட்டிற்குள் கொண்டு செல்லக்கூடாது.

    முதலில் ஒரு சிறிய மேடு போன்ற அமைப்பை உருவாக்கி அதில் அகல் விளக்கை வைத்து, அதை சுற்றி வாசனை மிகுந்த பூக்களை தூவ வேண்டும், பிறகு அதற்க்கு மேல் கோதுமையை தூவ வேண்டும்(கோதுமை மாவை தூவ கூடாது). அதற்க்கு மேல் மஞ்சளை தூவ வேண்டும். பிறகு தீபம் ஏற்றுவோர் விளக்கின் பின்புறம் இருந்து தான் இதை ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றும் சமயத்தில் வீட்டில் உள்ள யாரும் கட்டாயம் விளக்கின் முன்புறமாக இருக்கவே கூடாது. தீபம் ஏற்றுகையில் "ஓம் எம தர்ம ராஜாவே நமக" என்ற மந்திரத்தை கூறி ஏற்றலாம்.

    அதே சமயம் கர்ப்பிணி பெண்கள் இதை கட்டாயம் ஏற்றக்கூடாது. கைக்குழந்தை உள்ள வீடுகளிலும் இதை ஏற்றக்கூடாது.

    சிலரது வீட்டில் துர்மரண சம்பவங்கள் நிகழ்ந்திருக்கும். அப்படி துர்மரணம் அடைந்தவர்களின் ஆத்மாவை சாந்தி அடையச் செய்ய உதவுகிறது எம தீபம். அதோடு நமது முன்னோர்களால் நமக்கு ஏற்பட்டுள்ள சாபங்கள் அனைத்தும் இதன் மூலம் நிவர்த்தியாகும்.

    அதே போல எமதர்ம ராஜாவின் ஆசியை பெற முடியும். அதன் காரணமாக அந்த வீட்டில் உள்ளவர்களின் ஆயுள் கூடும், தர்ம நெறியில் வாழ வழி பிறக்கும். அதோடு துர்மரண சம்பவங்கள் அந்த வீட்டில் நிகழாது. பரணி, மகம், சதயம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் எம தீபம் ஏற்றுவதன் மூலம் அதிக பலன்களை பெற முடியும்.

    • அறிவைப் பெறுவதற்காகவே அன்றாடத் தேடல்களில் மனிதன் அலைந்து கொண்டிருக்கிறான்.
    • கல்வி வாய்ப்புக்களால் நாம் பெறுகிற அறிவு படிப்பறிவு ஆகும்.

    அனுபவ அறிவு குறித்துத் தெரிந்து கொள்ள ஆவலோடு காத்திருக்கும் அன்பு வாசகர்களே! வணக்கம்.

    வாழ்க்கையில் நமது செயல்களில் நாம் அடைவது வெற்றியோ தோல்வியோ அந்த அனுபவம் கொண்டுவந்து சேர்க்கும் படிப்பினைகள் மதிப்புமிக்கவை; இன்னும் சொல்லப்போனால் அனுபவங்களே ஒரு பொருளின், அல்லது ஒரு செயலின் அல்லது ஒரு மனிதரின் அல்லது ஓர் அமைப்பின் உண்மைத் தன்மைகளை உணர்வுபூர்வமாக உணர்ந்து கொள்ள உதவுபவை.

    அறிவைப் பெறுவதற்காகவே அன்றாடத் தேடல்களில் மனிதன் அலைந்து கொண்டிருக்கிறான். பணமாக இருந்தாலும் பொருளாக இருந்தாலும் மகிழ்வாக இருந்தாலும் வாழ்வாக இருந்தாலும் தான் தேடுவது எதுவோ அதுகுறித்த அறிவைப் பெற்றுக்கொள்வது தான் முதன்மைத் தேவையாக இருக்கிறது. எதைப்பற்றியும் அறிந்துகொள்வது அறிவு; அறிந்துகொள்ள மறுப்பதும் அறியாமல் இருப்பதும் அறிவற்ற செயல்; இது அறியாமை எனப்படும். அறியாமையில் மூழ்கிக் கிடப்பவரை உலகம் 'முட்டாள்' என்று பழித்து ஒதுக்கும்.

    ஒரு பொருண்மை குறித்த புரிதலை முதன்முதலாக நாம் அறிந்துகொள்ளும்போது நான் அதுகுறித்த அறிவைப் பெற்றவனாகவும் அறிவை உடையவனாகவும் ஆகிவிட்டேன் என்று பறைசாற்றி மகிழ்கிறோம். ஆனால் உண்மையில் இதுவரை காலமும் அந்தப் பொருண்மை குறித்து எதுவும் அறியாத முட்டாளாக நாம் இருந்திருக்கிறோம் என்பதல்லவா உண்மை?; இதற்காக நாம் வெட்கித் தலைகுனிய வேண்டாமா?. இங்கே ஒவ்வொரு அறிதலைப் புதிதாகப் பெறும்போதும், நாம் அத்துறையில் அறிவற்றவராக இதுவரை இருந்திருக்கிறோம் என்று தன்னடக்கத்தோடு ஒத்துக்கொள்ள வேண்டும்; அப்போதுதான் பெறுகிற அறிவு நம்மைத் தலைக்கனம் அற்றவராக உருவாக்கும்.

    படிப்பறிவு பட்டறிவு எனும் இருவகை நிலைகளிலும் மனிதர் அறிவைப் பெறுகின்ற வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றனர். கல்வி வாய்ப்புக்களால் நாம் பெறுகிற அறிவு படிப்பறிவு ஆகும். இது வயதுக்கேற்ற கல்வியறிவை தகுதிவாய்ந்த நிறுவனங்கள் வாயிலாக போதிப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பெறுகின்ற கல்விக்கு அடையாளமாகத் தேர்வுகள் நடத்தப்பட்டு, உரிய அறிவுத் துறைகளில் மதிப்பெண்களும் சான்றிதழ்களும் பட்டங்களும் வழங்கப்படுகின்றன. இவர் குறிப்பிட்ட அறிவுத்துறையில் அறிவாளர் என்பதற்கு அந்தச் சான்றிதழ்களே அடையாளம் காட்டிநிற்கின்றன. இது படித்துப் பெறுகிற படிப்பறிவினால் உண்டாகும் அறிவு.

    இன்னும்பலர் இருக்கிறார்கள். அவர்கள் வாழ்நாளில் கல்விநிறுவன நிழல்களில் மழை வெயிலுக்குக்கூட ஒண்டியிருக்க மாட்டார்கள்; இன்னும் சிலர் படிப்புகளை அரைகுறையாக நிறுத்திவிட்டுத் தொழில்களில் மும்முரமாக இறங்கி வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருப்பார்கள். இவர்களிடம் சென்று வாழ்வியலில் எதுகுறித்துக் கேட்டாலும் துல்லியமாகக் கருத்துக் கூறும் அறிவுத்திறத்தை இவர்கள் உடையவர்களாக இருப்பார்கள். படிப்புகளில் பொறியியல் மருத்துவம் முதலான அறிவியல் நுட்பத்துறை அறிவு வேண்டுமானால் இவர்களிடம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் சிரமப்படாமல் அதன் தன்மைகளைக் கூறிவிடுவதில் அனுபவஅறிவு உடையவர்கள் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். படித்த வக்கீல்களுக்கும் பிடிபடாத சில சட்ட நுட்பங்களும், மருத்தவர்களையே திண்டாட வைக்கும் சில நோய்க் காரணங்களையும் அனுபவ அறிவு வாயிலாகச் சொல்லிவிடக்கூடிய புத்திசாலிகளும் நம்மிடையே உண்டு.

    பெரிய பெரிய எம்ஆர் ஐ ஸ்கேன்களின் மூலமாகவும்கூடக் கண்டறிய முடியாத, கண்டறிந்தாலும் குணப்படுத்தச் சிரமப்படுகிற நோய்களை, நமது வீடுகளில் நாம் பயன்படுத்துகிற சுக்கு மிளகு திப்பிலி போன்ற மருந்துப் பொருள்கள் மூலமாகவும், நடந்து செல்லும்போது அன்றாடம் நம் கால்களில் மிதிபடுகிற துளசி, பச்சிலை, முடக்கத்தான் போன்ற மூலிகைச் செடிகள் வாயிலாகவும் குணப்படுத்தி விடுகிற அனுபவ அறிவு பலபேருக்கு இருக்கிறது.

    சுந்தர ஆவுடையப்பன்

    சுந்தர ஆவுடையப்பன்


    அனுபவ அறிவே சிறந்தது என்பதுபோல சில தருணங்களில் திகழ்ந்தாலும் ஏட்டுக்கல்வி சொல்லித் தருவதும் ஒருவகையில் கைதேர்ந்த அனுபவ அறிவாளிகளின் அறிவுச் சிந்தனைகளையே ஆகும். அதனைக் கற்றுத் தெளிவது என்பது வேறு; நடைமுறை வாழ்வில் பயன்படுத்திப் பயன்காண்பது என்பது வேறு. ஏட்டுக்கல்வியில் பெற்ற அறிவை அன்றாடப் பணிகளில் உபயோகப்படுத்தி வெற்றி காண்பதற்கு அறிவைத் தாண்டிய புத்திசாலித்தனம் தேவை. அந்தப் புத்திசாலித்தனத்தை அனுபவமே காலப்போக்கில் நமக்குக் கற்றுத்தரும்.

    எனக்குத் தெரிந்த ஒரு ஆலைஅதிபர்; படிப்பறிவு இல்லாதவர்; படிப்பறிவுள்ள சிலரை மேலாளராகப் போட்டு ஆலையைத் திறம்பட நடத்தி வந்தார். படித்தவர்களிடமிருந்து இவர் பெற்றுக்கொண்ட அறிவை விட இவரிடமிருந்து படித்த அலுவலர்கள் கற்றுக்கொண்ட அனுபவ அறிவே அதிகம். தன்னுடைய மகனிடம் ஆலை நிருவாகத்தை ஒப்படைப்பதற்குமுன் அந்தப் படிக்காத முதலாளி ஓர் அற்புதமான உபாயத்தைக் கடைப்பிடித்தார்.

    தன்னுடைய மகன் படிப்பில் காட்டிவரும் ஆர்வத்தை ஊக்குவிக்க, அவனைப் பொறியியல் படிக்கவைத்துப் பட்டதாரியாக்கினார். படிப்பு முடிந்ததும் நேரடியாக மகனை ஆலைக்கு அழைத்துவந்து தன்னுடைய முதலாளி இருக்கையில் அமர வைத்து விடவில்லை. தன்னுடைய ஆலையைப் போலவே கோயம்புத்தூரில் இயங்கிவரும் நண்பரின் ஆலை ஒன்றிற்குத் தொழிலாளியாக வேலைபார்க்க அனுப்பி வைத்தார். தானொரு பொறியியல் பட்டதாரி என்பதும், இன்னொரு ஆலை முதலாளியின் மகன் என்பதும் உடன் பணியாற்றும் தொழிலாளி எவருக்கும் தெரியக்கூடாது என்கிற நிபந்தனையோடு அனுப்பி வைக்கப்பட்டார். அதுமட்டுமல்ல, மகன் தொழிலாளியாக வேலைபார்க்கும் ஆலையின் முதலாளி எந்த வகையிலும் எந்தச் சலுகையும் மகனுக்குக் காட்டிவிடக் கூடாது என்கிற கூடுதல் நிபந்தனையோடும்.

    இரண்டாண்டுகள் அடுத்தவர் ஆலையில் சாதாரணத் தொழிலாளியாக அனுபவப்பாடம் கற்றுக்கொண்ட அந்த இளைஞர் தொழிலாளிகள் பக்கமிருக்கும் உழைப்பின் தன்மைகளை நன்கு புரிந்துகொண்டார். முதலாளிகளின் இடைவிடா ஊக்கமும் முயற்சியும் எப்படி ஆலைகளைத் திறம்படச் செயல்பட வைக்கிறது என்பதையும் உணர்ந்து கொண்டார். கல்விநிறுவனத்தில் கற்ற படிப்பறிவின் நுட்பம், ஆலையில் பெற்ற அனுபவ அறிவின் பாடம் இவ்விரண்டும் கைகோர்க்கத், தனது சொந்த ஆலையை உற்பத்தித் திறம்மிக்க மனிதநேய ஆலையாக அந்த இளைஞர் மாற்றிக் காட்டினார்.

    மனிதர்கள் அனைவருமே சமபங்கு மூளையுள்ளவர்களாகவே படைக்கப்படுகின்றனர். சிலர் பயன்படுத்தும் தன்மையினால் சிறந்த அறிவாளிகளாகப் புகழுடன் வாழ்கிறார்கள். 'அறிவு அற்றம் காக்கும் கருவி' என்பார் நமது வள்ளுவப்பேராசான். அறிவுடையார் ஆவது அறிவார் என்பது மட்டுமல்லாமல், இக்கட்டு நேருகின்ற தருணங்களிலெல்லாம் அவற்றிலிருந்து விடுபட்டு வெளியேற உதவும் கருவியாகவும் அறிவு காக்கிறது. இந்த அறிவென்னும் ஞானப்பண்பை நாம் அறிவாளர்களின் ஏடுகள் கொண்டும் கற்றுப்பெறலாம்; ஆழ்ந்த அனுபவங்கள் வழியாகவும் பெற்றுத் தேரலாம். அறிவைக் கூர்மைப் படுத்துவதும், ஆழ்ந்திருக்கும் நுட்பத்தை உணர வைப்பதுமான புத்திசாலித்தனம், தொடர் அனுபவப் பயிற்சியாலேயே கைவரும்.

    ஓர் அரசன், அறிவுக்கூர்மையோடு ஆட்சி நிருவாகம் பண்ணுவதில் கெட்டிக்காரர். ஆனால் அவருக்கு மகனாகப் பிறந்திருக்கும் ஒரே வாரிசோ அறிவுபெறுவதில் ஆர்வம் காட்டாத முட்டாளாகத் திகழ்ந்தார். நாட்டிலுள்ள சிறந்த குருமார்களையெல்லாம் அழைத்து, அவர்கள் விரும்புகிற சன்மானங்களையெல்லாம் அளித்துக் கல்விதரச் செய்தார். ஆனாலும் கல்வி என்பது அந்த இளவரசருக்கு வேப்பங்காயாகக் கசந்தது. இப்படியே போனால் மகனின் எதிர்காலமும் நாட்டின் எதிர்காலமும் சூனியமாகிப் போய்விடுமே என்று அரசர் வருந்தத் தொடங்கினார்.

    அரசரின் வருத்தத்தை அறிந்த மூத்த அமைச்சர் ஒரு யோசனையுடன் வந்தார். "அரசே! நமது அண்டை நாட்டில் ஒரு பல்கலைக்கழகம் இருக்கிறது. கல்விக்கும் கண்டிப்புக்கும் பெயர்போன பல்கலைக்கழகம். அங்கு குருகுலக் கல்வியாக ஓர் ஐந்தாண்டுப்படிப்பில் நமது இளவரசரைச் சேர்த்துவிட்டால், அவர் நல்லமுறையில் கல்விகற்றுத் திரும்புவது திண்ணம்" என்று கூறினார். மேலும் அந்தப் பல்கலைக்கழத்தில் படிப்புக்காகச் சேருபவர்கள், முழுப்படிப்பையும் படித்து முடித்த பிறகே வீடு திரும்ப வேண்டும்; என்பதையும் அமைச்சர் எடுத்துரைத்தார். இளவரசர் உடனடியாக அந்தப் பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டார்.

    ஐந்தாண்டுகள் கழிந்தன; இளவரசர் வெற்றிகரமாகப் படிப்பை முடித்து நாடு திரும்பினார். அரண்மனையில் கோலாகலமான வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த அரசர், உள்ளூர் அறிஞர் பெருமக்களெல்லாம் வந்திருந்து, தனது மகனின் கல்வியறிவு குறித்துப் பரிட்சித்துப் பார்க்கலாம் எனவும் அறிவித்திருந்தார். எல்லாரும் வந்தனர்; அறிஞர்களெல்லாம் பல்வேறு தளங்களில் அறிவு சார்ந்த கேள்விகளைக் கேட்டனர். அவர்களின் அத்தனை கேள்விகளுக்கும் வில்லிலிருந்து புறப்பட்டுவரும் அம்புபோல இளவரசர் பதிலளித்தார். அரசருக்குப் பெருமை பிடிபடவில்லை. நன்றியுணர்வோடு மூத்த அமைச்சரைப் பார்த்தார். இப்போது மூத்த அமைச்சர், இளவரசரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்." நான் எனது உள்ளங்கைக்குள் ஒருபொருளை மூடி வைத்திருக்கிறேன். என்னவென்று சொல்லுங்கள் இளவரசே!". அமைச்சர் தனது உள்ளங்கைக்குள் ஒரு மோதிரத்தை வைத்திருந்தார். இளவரசரும் நீங்கள் உள்ளங்கைக்குள் மறைத்து வைத்திருக்கும் பொருள் வட்டமானது; நடுவில் ஓட்டை இருக்கும்" என்றார். "ஆகா நெருங்கி வந்துவிட்டீர்கள்; பொருளின் பெயரைச் சொல்லுங்கள்" என்றார் அமைச்சர். நான் கற்ற கல்வி அடையாளம் தான் சொல்லும்; பொருளின் பெயரைச் சொல்லாது; இருந்தாலும் எனது சொந்த அறிவைப்பயன்படுத்திச் சொல்கிறேன், அது ஒரு வண்டியின் சக்கரம்" என்றார் இளவரசர்.

    அவ்வளவுதான். அவையே நொந்துபோனது; "உள்ளங்கைக்குள் வண்டிச்சக்கரமா?. இளவரசே! உங்கள் கல்வியறிவு அபாரம். ஏட்டுக்கல்வி சிறப்போ சிறப்பு; ஆனால் அனுபவக் கல்விதான் இன்னும் சீர்மைபெற வேண்டியிருக்கிறது" என்றார் அமைச்சர்.

    அனுபவம் என்றுமே சிறந்த ஆசான் தான்.

    தொடர்புக்கு 94431 90098

    • பெரிய குழுமத்தின் தலைவராக இருந்த அவர் ஒருநாள் அலுவலகத்திலிருந்து வெளியே வந்தார்.
    • தனது வாழ்நாள் முழுவதும் மிக எளிமையாக வாழ்ந்து வந்தார் அவர்.

    தலைமை: டாட்டா குழுமத்தின் தலைவரானவுடன் ரத்தன் டாட்டா தனது இயல்பை முதலில் காட்டினார்.

    ஜே.ஆர்.டி. டாட்டா அமர்ந்த இடத்தில் அவருக்கு இணையாகத் தம்மால் அமர்வது இயலாது என்று பணிவுடன் கூடிய அவர் "அவரது பெரிய காலணிகள் எங்கே எனது சிறிய கால்கள் எங்கே" என்று கூறினார்.

    நிர்வாக போர்டு கூட்டத்தில் அனைவரும் அமரும் போது தலைவரான இவர் சிறிது நேரம் தான் ஜே ஆர் டி டாட்டா அமர்ந்த அதே இருக்கையில் அமர்வார். பின்னர் அங்கிருந்து எழுந்து அடுத்த நாற்காலிக்குச் சென்று விடுவார். இதை 'மியூஸிகல் சேர் அமர்தல்' என்பார்கள் அனைவரும்!

    மிகப் பெரிய டாட்டா குழுமத்தின் தலைவராக இருந்தாலும் கூட தனக்கென விசேஷ சலுகை எதையும் விரும்பாதவர் டாட்டா.

    டாட்டா ஸ்டீலின் அலுவலகம் சிறியதாக இருந்த காரணத்தினால் மூத்த அதிகாரிகளுக்கான அறைகளும் சிறிதாகவே இருந்தன. அவருடன் பணியாற்றிய இரு அதிகாரிகளுக்கும் அவருக்கும் ஒரே பணியும் பொறுப்பும் தரப்பட்டது. அதிகாரிகள் அவரிடம் சற்று பெரிய காபின் ஒன்றை அமைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிய போது அவர் தனக்கென விசேஷ சலுகை எதுவும் கூடாது என்று கண்டிப்பாகக் கூறி அதே காபினில் பணியைத் தொடர்ந்தார்.

    தொழிலாளர்களின் நண்பர்:

    தொழிலாளர்கள் நோய்வாய்ப்படும் போதோ, ஒரு கஷ்ட சூழ்நிலையில் இருக்கும் போதோ, அந்தத் தொழிலாளியின் வீட்டிற்கு தானே நேரடியாகச் சென்று ஆறுதல் கூறி உதவிகளைச் செய்வது அவர் வழக்கம்.

    1984-ல் நடந்த பெரும் குழப்பத்தில் தங்கள் வாகனங்களை இழந்த சீக்கிய ஓட்டுநர்களுக்கு அவர் இலவசமாக வாகனங்களைத் தந்தார். இது யாருக்குமே தெரியாது. விளம்பரத்தை அவர் வெகுவாக விரும்பவில்லை.

    எளிமை: தனது வாழ்நாள் முழுவதும் மிக எளிமையாக வாழ்ந்து வந்தார் அவர். "வெற்றியாளர்களைக் கண்டு நான் பிரமிக்கிறேன். ஆனால் இரக்கமற்ற அநியாயமான வழியில் அவர்களின் வெற்றி அடையப்பட்டது என்றால் அவர்களைக் கண்டு என்னால் பிரமிக்கத்தான் முடியும். என்னால் அவர்களுக்கு மரியாதை கொடுக்க முடியாது." என்றார் அவர்.

    இந்தக் கொள்கையைக் கொண்ட ரத்தன் டாட்டா தனது வாழ்நாள் முழுவதும் நேர்மையான வழியைக் கடைப்பிடித்து வெற்றியை அடைந்தார் என்பதோடு பெற்ற வெற்றியால் தலைக்கனம் கொள்ளாது மிக எளிமையானவராக இருந்தார்.

    இதை நிரூபிக்கும் நூற்றுக்கணக்கான சம்பவங்களை அவருடன் கூட இருந்து பழகியோர் அனுபவித்திருக்கின்றனர். அவரது மறைவையொட்டி அவர்கள் ரத்தன் டாட்டா என்ற மாமனிதருடன் பழகிய சம்பவங்களை பற்றி நினைவு கூர்கின்றனர்.

    பெரிய குழுமத்தின் தலைவராக இருந்த அவர் ஒருநாள் அலுவலகத்திலிருந்து வெளியே வந்தார். அவரது நண்பர் ஒருவர் டாக்ஸியில் ஏறிக் கிளம்பிக் கொண்டிருந்தார். "எங்கே போகிறீர்கள்?" என்று கேட்டார் டாட்டா. தான் போகும் இடத்தை அவர் சொன்னவுடன், "நானும் அங்கே தான் போக வேண்டும், வரலாமா?" என்று கேட்டு விட்டு டாக்ஸியில் அவர் பக்கத்தில் அமர்ந்தார் டாட்டா.

    இதைப் பார்த்த நண்பர் விக்கித்து பிரமித்தார்.பிரம்மாண்டமான நிறுவனங்களின் தலைவர் சாதாரண டாக்ஸியில் தன் கூட பயணிப்பதா? அவரால் நம்பவே முடியவில்லை. ஆனால் டாட்டாவோ சகஜமாக சிரித்தவாறே அவருடன் பேசிக் கொண்டு வண்டியில் சென்றார்.

    விருதுக்குப் பெருமை தந்தவர்: வருடத்திற்கு ஒரு பெரிய விருதாவது டாட்டாவிற்கு வழங்கப்படும். விருதை வழங்கியவர்கள் அதைப் பெற்றவரை விட அப்படி வழங்கியதால் பெருமைப்பட்டார்கள்.

    ஒரு முறை இன்ஃபோஸிஸ் நிறுவனர் திரு நாராயணமூர்த்தி அவருக்கு வாழ்நாள் சாதனை விருதை அளித்தார். விருதை அளிப்பதற்கு முன்னர் அவர் காலில் விழுந்து அவரைக் கும்பிட்டு விட்டு வழங்கினார். இப்படிப்பட்ட அபாரமான மனிதரைத் தான் கண்டதே இல்லை என்றார் அவர்.

    ச.நாகராஜன்

    ச.நாகராஜன்

    பங்குதாரர்களுக்கு லாபம்: நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர், நிறுவியவரின் வாரிசு என்றாலும் கூட நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள ஷேர் ஹோல்டர்கள் எனப்படும் பங்குதாரர்களுக்கு அதிக லாபத்தைத் தர வேண்டும் என்பதில் அதிக முனைப்புள்ளவர் டாட்டா. இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சுவையான சம்பவத்தைக் கூறலாம்.

    2005-ம் ஆண்டு. ஜூலை மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் அவர்களின் அழைப்பிற்கிணங்க இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்க விஜயத்தை மேற்கொண்டார்.

    பிரதம மந்திரியின் இந்தப் பயணத்தையொட்டி அமெரிக்காவின் மிகப்பெரும் நிறுவனங்களில் பத்து நிறுவனங்களின் தலைவர்களும் இந்தியத் தொழில்துறையில் மிகப் பெரும் பத்து நிறுவனங்களின் தலைவர்களும் கூடிப் பேசி உலகத் தொழிலபதிர்களின் மன்றம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

    அமெரிக்காவின் பெரிய நிறுவனங்களான பெப்ஸி, ஜெராக்ஸ், ஹனிவெல்,ஜேபி.மார்கன், சேஸ் உள்ளிட்ட பத்து நிறுவனங்களின் தலைவர்கள் ஒரு புறமும், இந்திய அணியில் ரத்தன் டாட்டாவைத் தலைவராகக் கொண்டு முகேஷ் அம்பானி. கிரண் மஜும்தார், நந்தன் நீல்கேணி, அஷோக் கங்குலி உள்ளிட்ட பத்து நிறுவனங்களின் தலைவர்கள் மறுபுறமும் ஒருங்கே திரண்டனர்.

    அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் சுறுசுறுப்பானது. இந்திய தொழிலதிபர்கள் தங்குவதற்காக நல்ல ஹோட்டல் அறைகளை அது தேர்ந்தெடுத்தது. ரத்தன் டாட்டா தங்குவதற்காக வாஷிங்டன் டி.சி.யில் உள்ள மிகப் பெரும் நட்சத்திர ஹோட்டலான வில்லார்ட் இண்டர் காண்டினெண்டல் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆப்ரஹாம் லிங்கன் உள்ளிட்டோர் தங்கியதால் சரித்திர பிரசித்தி பெற்ற இடம் இது.

    இங்கு ரத்தன் டாட்டா தங்க இடம் ஏற்பாடு செய்யப்பட்டது. அவர் தனது சூட்கேஸை தானே எடுத்துக் கொண்டு வர, அறையில் நுழைந்து இந்திய தூதரகத்தினரைப் பார்த்து புன்சிரிப்புடன் ஜெய்ஹிந்த் என்றார். அனைவரின் நலனையும் விசாரித்தார்.

    மறுநாள் காலை அவரை உரிய இடத்திற்கு அழைத்துச் செல்ல பணியாளர்கள் சென்ற போது அவரை அவரது அறையில் காணோம். அவரது உடைமைகள், பெட்டிகள் எதையும் காணோம். கலவரம் அடைந்த அனைவரும் நேரடியாக நட்சத்திர விடுதியின் வரவேற்பாளரிடம் ஓடினர். திடுக்கிட்ட அவர்களது கவலையை வில்லார்டின் பொது மேலாளர் போக்கினார்.

    முதல் நாள் இரவு டாட்டா தங்களை அணுகி அந்த பிரமாண்டமான சூட் தனக்கு வேண்டாம் என்றும் ஒரு சிறிய சிங்கிள் அறை போதும் என்றும் கூறவே அவரது வேண்டுகோளுக்கிணங்கி ஒரு சிறிய அறை ஒதுக்கித் தரப்பட்டது என்று கூறினார்.

    அனைவரும் அந்த அறைக்கு விரைந்தனர். அங்கே புன்சிரிப்புடன் தயாராக இருந்தார் டாட்டா. ஏன் அப்படி அவர் அந்த சிறிய அறைக்கு மாறினார் என்று கேட்கப்பட்ட போது, அவர் கூறிய பதில் இது: "என்னால் ஏற்பட்ட அசௌகரியத்திற்கு மிகவும் வருந்துகிறேன். ஆனால் இந்த பிரம்மாண்டமான சூட்டிற்கு ஆகும் செலவை என்னால் நியாயப்படுத்த முடியாது. எனது கம்பெனியின் பங்குதாரர்களுக்கு பதில் சொல்ல வேண்டியவன் நான். எனக்கு இந்த ஆடம்பரச் செலவு ஆகாதே!".

    இந்த பதிலால் அனைவரும் பிரமித்தனர். அவரது உயரிய நேர்மை, சிக்கனம், எளிமை, நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு அதிக லாபத்தொகையைத் தர வேண்டும் என்னும் அவரது உறுதி ஆகிய அனைத்தையும் சுட்டிக் காட்டிய இந்த சம்பவம் அனைவர் மனதிலும் நல்ல ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

    இசை ரசனை: பிரபலமான பாகிஸ்தானிய பாடகர்களான ஜோஹப் ஹாஸனுக்கும் அவரது சகோதரிக்கும் ஒரு இன்ப அதிர்ச்சியைத் தந்தவர் டாட்டா.

    ஒரு நாள் அவர்கள் இல்லத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அவர்களைச் சந்திக்க ரத்தன் என்பவர் வரலாமா என்று. இன்று வேண்டாம் வெள்ளிக்கிழமை வரட்டும் என்றார் அவர்களது அம்மா.

    வெள்ளிக்கிழமை கம்பீரமான ஒருவர் அவர்கள் இல்லத்திற்கு வந்து எனக்கு ஒரு இசை ஆல்பத்தை நீங்கள் தயாரிக்க வேண்டும். நான் அதற்கான ஒப்பந்த ஆவணத்தை ஒருவரிடம் அனுப்புகிறேன். நன்றாகப் படித்துப் பாருங்கள். அம்மாவிடமும் கேட்டு சம்மதம் தெரிவியுங்கள்" என்றார் எளிமையாக அந்த மனிதர்.

    அவர் யார் என்று தெரியாத இளம் பாடகர்கள் மற்றவர்களிடம் ரத்தன் யார் என்று விசாரித்தனர். கிடைத்த பதில் அவர்களைத் தூக்கிவாரிப் போடச் செய்தது. வந்தவர் மாமனிதர் ரத்தன் டாட்டா!

    தாஜ்ஹோட்டலில் ஒரு விழாவில் சிபிஎஸ் இந்தியா என்ற டாடா குழும கம்பெனிக்காக இசை ஆல்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரே நாளில் உலகப் புகழ் பெற்று விட்டனர் பாகிஸ்தானிய பாடகர்கள்.

    அவர்களை ஒரு நாள் விருந்துக்கு அழைத்தார் டாட்டா. பெரிய மாளிகைக்குச் செல்லப் போகிறோம் என்று நினைத்து வந்த அவர்கள் இரண்டு பெட் ரூம் வீட்டில் எளிமையாக அவர் வசிப்பதைக் கண்டு வியந்தனர்.

    உலகிற்கு நட்சத்திர ஹோட்டலைத் தந்தவர் தனக்கெனத் தேர்ந்தெடுத்தது ஒரு சிறிய குடியிருப்புப் பகுதியையே.

    அவரது நகைச்சுவை:

    வாழ்வில் நகைச்சுவைக்குத் தனி இடம் கொடுத்தவர் அவர். அவரது புகழ் பெற்ற மொழிகளாகச் சொல்லப்பட்டதில் ஒன்று இது: "நான் சரியான முடிவுகளை எடுப்பதில் நம்பிக்கை கொண்டவன் அல்ல; நான் முடிவுகளை எடுப்பேன்; அவற்றைச் சரியானதாக ஆக்குவேன்."

    இதைப் பற்றி ஒரு பெண்மணி அவரிடம் பெரிய கூட்டத்தில் கேட்க அவர், " இது எனது வார்த்தைகளே அல்ல; இது நான் ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் படித்தவை தான்" என்றார். அரங்கமே குலுங்கி நகைத்தது. ஒளிவுமறைவின்று உள்ளதை உள்ளவாறு சொல்வார் அவர்.

    அவரது பொன்மொழிகளில் சில:

    நீங்கள் வேகமாக நடக்க விரும்பினால் தனியாக நடந்து செல்லுங்கள். நெடுந்தூரம் செல்ல வேண்டுமென்று விரும்பினால் மற்றவர்களுடன் சேர்ந்து நடந்து செல்லுங்கள்.

    இரும்பை எதாலும் அழிக்க முடியாது, ஆனால் அதன் துருவால் அதை அழிக்க முடியும். அதே போல ஒருவரை யாராலும் அழிக்க முடியாது, ஆனால் அவரது அணுகுமுறையும் மனக் கருத்துக்களும் அவரை அழிக்க முடியும்.

    டாட்டாவைப் பற்றி அவருடன் பழகியவர்கள் பல்வேறு விதமான அவரது பண்புகளை தங்களது பார்வையில் தெரிவித்துள்ளனர்; தெரிவித்து வருகின்றனர்.

    அவர் ஒரு மிகப்பெரும் தொழிலதிபர். பேச்சாளர்; நிர்வாகத்திறமை கொண்டவர்; அடித்தளத் தொழிலாளர்களுடன் பழகுபவர். விமானி. தேசபக்தர். இசைப்பிரியர். சமூக சேவை செய்பவர்; கொடையாளி; விளம்பரம் விரும்பாதவர். ஏராளமான விருதுகளைப் பெற்றவர். விலங்குகளின் நண்பர். சிறந்த மனிதாபிமானி. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

    தோன்றிற் புகழொடு தோன்றுக என்றார் திருவள்ளுவர்.

    புகழொடு தோன்றி புகழுக்கு ஒரு இலக்கணம் வகுத்தார் ரத்தன் டாட்டா. வாழ்வாங்கு வாழ்ந்தார் அவர்.

    அவரை எந்த இடத்தில் வைப்பது?

    இதற்கும் வள்ளுவரே பதில் சொல்கிறார்.

    "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

    தெய்வத்துள் வைக்கப் படும்"

    • அண்ணாச்சி வியாபாரத்தைக் கவனிக்கத் தொடங்கினார்.
    • சற்று நேரம் மவுனமாக இருந்து பாருங்கள். உங்கள் செவிகள் கூர்மையாகும்.

    'நாம் இன்று என்ன நிலையில் இருக்கின்றோமோ, அந்நிலையை நமக்கு அளித்தது நமது எண்ணங்கள்தான். நமது இன்றைய நிலை நமது எண்ணங்களால் ஆக்கப்பட்டிருக்கிறது.'

    -புத்த பகவான்

    அது ஒரு நீண்ட தெரு. அந்தத் தெருவின் எல்லையில் ஒரு பலசரக்குக் கடை. நிறைய வாடிக்கையாளர்கள். கடைக்கார அண்ணாச்சி மிகவும் கெட்டிக்காரர்.

    காலை ஆறு மணிக்குக் கடையைத் திறந்துவிடுவார். இரவு பத்து மணிவரை அதே உற்சாகமான உழைப்பு. அந்தக் கடையின் பக்கவாட்டில் உள்ள சுவரை ஒட்டி, நான்கு புறமும் கம்பு நட்டி தென்னங்கீற்றினால் கூரை வேயப்பட்ட ஒரு சிறிய குடில். அதில்தான், காலியான அட்டைப் பெட்டிகள் மற்றும் கடைக்குரிய சில பொருட்களைப் போட்டு வைத்திருப்பார் அண்ணாச்சி. அந்தப் பகுதியைச் சார்ந்த ஏழெட்டு இளைஞர்களுக்கு அந்தக் குடில்தான் சரணாலயம்.

    அவர்களில் பாதிபேர் கல்லூரிப் படிப்பை முடித்தவர்கள். மீதி நபர்கள் படிப்பைப் பாதியில் விட்டவர்கள். நாள்முழுக்க அவர்களின் பொழுதுபோக்கு அந்தக் குடிலில்தான்.

    காலை பத்து மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து வந்துவிடுவார்கள். ஒரே அரட்டைக் கச்சேரி. மதியம் ஒரு மணிக்குச் சாப்பிடச் செல்வார்கள். மீண்டும் மூன்று மணிக்கு வந்துவிட்டால், இரவு கடை மூடும் வரை அங்குதான். சிகரெட், முறுக்கு, சர்பத் என ஒவ்வொருவராக அடுத்தடுத்து வாங்கிக் கொண்டிருப்பார்கள். சம்பாதிக்காமலேயே பெற்றோரின் உழைப்பைச் சுரண்டும் ஊதாரிப் பிறவிகள்.

    கையில் காசில்லை என்றால், அண்ணாச்சியிடம் கடன்சொல்லி வாங்குவார்கள். அவர்கள் அங்கு வருவதும், நாள்முழுக்க உட்கார்ந்து அரட்டை அடிப்பதும் அண்ணாச்சிக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. தடுக்கவும் முடியவில்லை. அவ்வப்போது மறைமுகமாகச் சொல்வார். ஆனால் எடுபடாது.

    வாடிக்கையாளர்கள் அதிகம் வராத மத்தியான வேளைகளில், கடைக்கு வெளியே வந்து காற்றாட சிறிது நேரம் உட்கார்ந்திருப்பார். அவர் பேச வாய்திறந்தால், 'அறிவுரை வேண்டாம் சாமி' என்று அந்த இளைஞர்கள் தங்கள் காதுகளைப் பொத்திக் கொள்வார்கள்.

    அன்று வழக்கம்போல் இளவட்டங்களின் கூடுகை. அரட்டை. அண்ணாச்சிக்குச் சங்கடமாக இருந்தது.

    அப்போது அவர்களில் ஒருவன், 'அண்ணாச்சி, கிங்ஸ் ஒரு பாக்கெட் குடுங்க. இப்ப காசு இல்ல. கடன் கணக்குல எழுதிக்கோங்க' என்றான்.

    அந்நேரம் மளிகைப் பொருட்கள் வாங்க வந்த ஓர் இளம்பெண், தனக்கு வேண்டிய பொருட்களைப் பட்டியலிட அண்ணாச்சி விறுவிறு என்று எடுத்து வைத்தார்.

    அந்த இளைஞன் மீண்டும், 'அண்ணாச்சி கிங்ஸ் ஒரு பாக்கெட்' என்றான்.

    கவிஞர் தியாரூ

    கவிஞர் தியாரூ

    'ஏற்கனவே கடன் நிறைய இருக்கு' என்று சொல்லிவிட்டு, அந்தப் பெண் வாங்கிய பொருட்களுக்கான விலையை மடமடவென மனதிற்குள்ளேயே கணக்கிட்டு மொத்த தொகையைச் சொன்னார் அண்ணாச்சி.

    தன்னுடைய மானத்தை வாங்கிவிட்டாரே என்ற கோபம் அவனுக்கு. அந்தப் பெண்ணின் முன் அவரை அவமானப்படுத்திவிட எண்ணினான். கேலிச் சிரிப்புடன் கேட்டான்.

    'அண்ணாச்சி, மூணாம் வகுப்புக்கூட படிக்காமலேயே, இப்படி பட்பட்னு கணக்குப் போடுறீங்களே. எங்களை மாதிரி படிச்சி பட்டதாரி ஆகியிருந்தா இப்ப எப்படி இருப்பீங்க?'

    'உங்களை மாதிரி சிகரெட் கடன் வாங்கிட்டு இருப்பேன்' என்று நறுக்கென பதிலளித்தார் அண்ணாச்சி.

    அந்த இளைஞன் வெட்கத்தில் திக்குமுக்காடினான். பொருட்களை வாங்கிய அந்த இளம்பெண் 'க்ளுக்' என்று சிரித்தபடி சென்றாள். இளைஞர்கள் முகத்தில் ஈயாடவில்லை.

    அவர்கள்முன் அண்ணாச்சி கம்பீரமாக நின்றார். நக்கலாகக் கேள்வி கேட்ட அந்த இளைஞனின் தோளைச் செல்லமாகத் தட்டினார்.

    'தம்பி, நானும் உங்களை மாதிரி வாலிப வயசைக் கடந்து வந்தவன்தான். எங்க அய்யா ஒரு சாதாரண விவசாயி. நான் ரொம்ப படிக்கலேன்னாலும் பத்து வரை படிச்சிருக்கேன். அதுக்கு மேல படிக்க வசதியில்ல. ஆனா நான் சோர்ந்து போகல. விவசாயத்துல கவனம் செலுத்தினேன். ஒரு பொழுதையும் வீணடிக்காம கடினமா உழச்சேன். இப்ப எங்க கிராமத்துல எனக்குப் பத்துப் பதினைஞ்சி ஏக்கர் நிலம் இருக்கு. விவசாயம் நடக்குது.

    என் புள்ளைங்க படிப்புக்காக இந்த ஊருக்குக் குடிவந்தோம். மளிகைக்கடை ஆரம்பிச்சேன். நேர்மையான வியாபாரம். கவுரவமான வாழ்க்கை. பத்து பைசா யார்கிட்டேயும் கடன் வாங்கினதில்ல. காலத்தின் அருமையையும் நம்மோட நிலைமையையும் நாம உணர்ந்தாதான் வாழ்க்கையில் முன்னேற முடியும். தன்னை உணராதவனை இந்த உலகம் ஒதுக்கித் தள்ளிடும்' என்று சொல்லிவிட்டு, அண்ணாச்சி வியாபாரத்தைக் கவனிக்கத் தொடங்கினார்.

    அந்த இளைஞர்கள் எதுவும் பேசாமல், அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    தன்னை உணர்தலே வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகிறது. தன்னை உணர்ந்தவன், தன் பலம் பலவீனம் இரண்டையும் அறிவான். தன் கடமைகளை அறிவான். அவன்தான் காலத்தைப் பயன்படுத்திக் கொண்டு கரையேறுகிறான்.


    'தன்னை உணர்தல்' என்றால், ஞானியர்க்கு உரிய விஷயம் என்று சிலர் எண்ணிக் கொள்கிறார்கள். அப்படி ஒன்றும் அல்ல. நம்மைப் பற்றிய ஒரு தெளிவு. அவ்வளவுதான், தன்னை அறிதல்.

    இன்று பலரின் வாழ்வில் எப்போதும் போராட்டம். வாய்திறந்தால் சலிப்பான வார்த்தைகள். எதிர்மறையான சிந்தனைகள். அப்படி ஆகிவிடுமோ இப்படி ஆகிவிடுமோ என்ற பயம். காரணம் என்ன? அவர்கள் தங்களைத் தாங்களே புரிந்து கொள்ளவில்லை என்பதுதான்.

    லோன் கிடைக்கிறது என்பதற்காக இரண்டு கார்களை வாங்கி, வீட்டின்முன் நிறுத்துவதில் என்ன பெருமை. முதலில், அவற்றிற்கான தேவை இருக்க வேண்டும். கடனைச் செலுத்துவதற்குப் போதுமான வருமானம் வேண்டும். பராமரிப்பதற்கு வசதிகள் வேண்டும். எவ்வித சிந்தனையுமின்றித் தன்போக்கில் எதையாவது செய்கின்றவன் எப்போதுமே பிரச்சனைகளுக்குள் இருக்கின்றான்.

    சிலர் முடிவெட்ட சலூனுக்குப் போனால், வேலை முடிந்ததும் வீட்டிற்குத் திரும்ப மாட்டார்கள். ஒவ்வொரு பத்திரிகையையும் வரிவிடாமல் வாசிப்பார்கள். வருவோர் போவோரிடமெல்லாம் அரசியல் பேசுவார்கள். வீட்டிலிருந்து போன் வந்த பிறகுதான், 'அய்யோ, ஆபீசுக்கு கிளம்பணுமே' என்று தலைதெறிக்க ஓடுவார்கள். அவர்கள் காலத்தைப் பற்றிய உணர்வு இல்லாதவர்கள்.

    தம்மைப் பற்றிய தெளிவு இருப்பவர்களுக்குதான் கால நேரத்தைப் பற்றிய உணர்வு இருக்கும். வாழ்க்கையில் தோல்வியுற்றுத் துவண்டு கிடப்பவர்களிடம் பேசிப் பாருங்கள். எந்தவித பிரக்ஞையுமின்றி உளறிக் கொட்டுவார்கள்.

    தன்னை அறியாதவன் நாலு பேருக்கு ஆலோசனை சொல்லத் தொடங்கினால் எப்படி இருக்கும்! அப்படிச் சிலர் இருக்கிறார்கள். பிரச்சனை எழுகிற இடங்களில் 'ஆலோசனை சொல்கிறேன் பேர்வழி' என்று நுழைந்துவிடுவார்கள். வாய்க்கு வந்ததை எல்லாம் அள்ளித் தூவி, பிரச்சனையை நான்கு மடங்காக்கிய பின்னர்தான் கிளம்புவார்கள். அவர்களின் வாழ்க்கையைக் கொஞ்சம் உற்றுப் பார்த்தால் தெரியும். அவர்கள் ஒன்றிலுமே தேறாதவர்கள் என்கிற உண்மை.

    'ஆலோசனை' என்பது இன்று மிகப்பெரிய வியாபாரம். ஆளாளுக்குக் களத்தில் இறங்கிவிடுகிறார்கள். வேறு வேலை ஏதும் கிடைக்கவில்லையா, இதுதான் தொழில். ஆனால், அது எத்தனை ஆபத்தான விஷயம்!

    அடிப்படை ஞானம் அவசியம். நம்மை நாம் உணர்வதுதான் அடிப்படை ஞானம். அந்தத் தெளிவு நமக்கு இருக்குமெனில், அதுதான் மிகப்பெரிய பலம். ஆலோசனைக்காக யாரிடமும் போய் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது.

    நாம் என்ன நிலையில் இருக்கின்றோம் என்பதை, மற்றவர்கள் சொல்லி நாம் அறிவது அவமானம். அதற்கு இடம் கொடுத்துவிட்டால், அவர்கள் நம் தலைமீது ஏறி உட்கார்ந்துவிடுவார்கள். அந்த ஆபத்தைத் தவிர்ப்பதற்குதான் அடிப்படை ஞானம் நமக்கு அவசியமாகிறது.

    ஞானியர் யார்? வானத்தில் இருந்து வந்தவர்களா? இல்லை! நம்மைப்போல் இம்மண்ணில் பிறந்தவர்களே. ஆனால், தங்களை உணர்ந்தவர்கள். வாழ்வின் சூட்சுமங்களை அறிந்தவர்கள். அந்தத் தெளிவும் புரிதலும் இருக்குமெனில், நாமும் ஞானியர் அல்லவா!

    புகழ்மிக்க ஒரு ஜென் குரு போதித்துக் கொண்டிருந்தார். அவரின் சீடர்களும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்களும் அங்கு கூடியிருந்தனர். அவர்கள் அனைவரும் மிகுந்த கீழ்ப்படிதலுடன் அமர்ந்து, குருவின் போதனையைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

    ஒரு குறும்புக்காரன் திடீரென எழுந்து நின்றான். 'கிழவரே, உமக்கு மரியாதை கொடுப்பவர்கள் வேண்டுமானால், உங்கள் பேச்சுக்குக் கீழ்ப்படிந்து நடக்கலாம். ஆனால், மரியாதை என்றாலே என்னவென்று எனக்குத் தெரியாது. என்னை உங்களால் கீழ்ப்படிய வைக்க முடியுமா?' என்று திமிருடன் கேட்டான்.

    'முடியுமே! இப்படி அருகில் வாருங்கள், செய்து காட்டுகிறேன்' என்று நிதானமாகச் சொன்னார் குரு.

    அவன் எழுந்து அருகில் வந்தவுடன், 'இப்படி நேராக வாருங்கள்' என்றார். நேராக வந்தவுடன், 'இப்படி வலதுபுறம் வாருங்கள்' என்றார். அவன் வலதுபுறம் வந்ததும், 'இடதுபுறம் வாருங்கள், செய்து காட்ட வசதியாக இருக்கும்' என்றார்.

    அவன் இடதுபுறம் வந்ததும், 'நான் சொல்வதைக் கேட்டு அப்படியே கீழ்ப்படிந்து நடக்கிறீர்களே. நல்லது, போய் அமர்ந்து போதனையைக் கேளுங்கள்' என்றார் குரு.

    கூட்டம் கைகொட்டிச் சிரித்தது. அவன் தன்னை உணர்ந்தான். கர்வம் அழிந்தது.

    ஒழுக்கம் என்பது திணிக்கப்படுவதல்ல. அது ஒருவனின் தன்னுணர்வில் இருந்து எழுவது. அந்த விழிப்புணர்வுடன் செயல்படுகின்றவன், செய்வது எதுவோ அது சரியானதாகத்தான் இருக்கும். ஏனெனில், தன்னுணர்வோடு இருப்பவன் தவறு செய்ய மாட்டான்.

    சற்று நேரம் மவுனமாக இருந்து பாருங்கள். உங்கள் செவிகள் கூர்மையாகும். பார்வைகள் புதுவிடியல்போல் தெளிவாகும். தன்னுணர்வு பளிச்சிடும். உங்கள் வாழ்க்கை மேன்மையுறும்.

    • ஆட்டிசம் ஏற்படுவதற்கான காரணம் இதுதான் என்று உறுதியாகக் கூறுவது கடினம்.
    • ஆடுகளங்களில் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடும்போது மற்றவர்களை ஒத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    ஆட்டிசம் என்பதை மதியிறுக்கம் அல்லது புற உலகச் சிந்தனைக் குறைபாடு என்றும் கூறலாம். இது ஒரு மூளை நரம்பியல் தொடர்பான வளர்ச்சிக் குறைபாடாக இருந்தாலும், மனஅளவில் பல சிக்கல்களால் இக்குழந்தைகள் இடர்படுகிறார்கள்.

    இக்குறைபாடுள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் மன அழுத்தத்தால் துன்புறுகிறார்கள்.

    ஆட்டிசம் என்பது ஒரு குறைபாடுதான், நோயல்ல. ஆகவே, அந்தக் குறைபாட்டின் தன்மையிலிருந்து பாதித்தவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும்? என்பதைச் சிந்திக்க வேண்டும். ஆக இந்தப் பாதிப்பு ஏன் வருகிறது? அறிகுறிகள் என்ன? எப்படிக் கண்டறிவது? கவன முறைகள் என்ன? என்பது பற்றி இப்பகுதியில் பார்ப்போம்.

    ஆட்டிசம் ஏன் வருகிறது?

    ஆட்டிசம் ஏற்படுவதற்கான காரணம் இதுதான் என்று உறுதியாகக் கூறுவது கடினம். மரபணுக்களின் சீரற்ற நிலை, வளர்சிதை மாற்றக் குறைபாடு, சுற்றுச்சூழல் மாசு, காற்றில், மண்ணில் கலக்கும் நச்சு ரசாயனங்கள், கனிமங்கள், நெருங்கிய உறவுத் திருமணம், தாமதமான திருமணம், தாமதமான குழந்தைப்பேறு, கருவுற்ற பெண்களுக்கு ரூபெல்லா வைரஸ் தாக்கினால், தைராய்டு சிக்கல் இருந்தால் அல்லது போலிக் அமிலம் குறைவாக இருந்தால் குழந்தைக்கு இந்தக் குறைபாடு வரலாம்.

    பேறு காலத்தில் பெண்களின் மனஅழுத்தம், மது அருந்தும் பழக்கம், புகைபிடித்தல், வலிப்பு நோய் மாத்திரைகள் சாப்பிடுவது, மன நோய்க்கான மாத்திரைகளைச் சாப்பிடுவது, அலைபேசியைச் சிறுகுழந்தைகள் பயன்படுத்துவது போன்ற காரணிகளால் குழந்தையின் மூளை வளர்ச்சியில் மாறுதல்கள் ஏற்படுகின்றன. இதனால் ஆட்டிசம் வரக்கூடும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

    ஆட்டிசத்தின் அறிகுறிகள் என்ன?

    குழந்தை பிறந்து 10-லிருந்து 18 மாதங்களுக்குள்ளாகவே அறிகுறிகளைக் கண்டறிய முடியும். இந்தக் குறைபாட்டின் தீவிரத்தன்மை எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

    இக்குழந்தைகளுக்கு, மற்றவர்களோடு ஒப்பிடும்போது தெளிவுடன் பேசும் மற்றும் பழகும்திறன் குறைவாக இருக்கும். சில குழந்தைகள் பேசினாலும், மற்றவர்கள் புரிந்துகொள்ளும்படி, பேசத் தெரியாமல் இருக்கும்.

    பொதுவாகக் கண்களைப் பார்த்துப் பேசுவதைத் தவிர்ப்பார்கள்.

    பெரும்பாலும் தனிமை விரும்பிகளாக இருப்பார்கள்.

    ஒரே மாதிரியான செயல்களைத் திரும்பத் திரும்பச் செய்வார்கள்.

    சில செயல்களைச் சரியாகச் செய்ய முடிந்தாலும் சமூகப் புரிதல்கள் இல்லாமலிருப்பார்கள்.

    பயம், ஆபத்து போன்றவற்றை உணராமல் தாம் நினைத்தவற்றைச் செய்வார்கள்.

    காரணமின்றி அழுவது, சிரிப்பது, கைகளைத் தட்டுவது, குதிப்பது போன்று ஏதாவது வித்தியாசமான செயல்களில் ஈடுபடுவார்கள்.

    தேவையானவற்றை விரல் சுட்டிக் காட்டாமல், மற்றவரின் கைபிடித்து இழுத்துச் சென்று காட்டுவார்கள்.

    மின்விசிறி, ராட்டினம் போன்ற சுற்றும் பொருள்களின் மீது அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

    கண், மூக்கு, வாய், காது, சருமம் ஆகிய புலன்களின் உணர்வுகளில் மாறுபாடு இருக்கும். இந்தப் புலன்களின் தூண்டுதல் அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சிலருக்கு இருக்கலாம். தேவையில்லாமல் சில சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்லும் பழக்கம் இவர்களிடம் அதிகம் காணமுடியும்.

    இந்த மேற்கூறிய அறிகுறிகள் குழந்தையிடம் தெரிந்தால் போகப்போகச் சரியாகிவிடும் என்று பெற்றோர் எண்ணிவிடக் கூடாது. அதேவேளையில் இவற்றில் சில அறிகுறிகளை மட்டும் வைத்துக்கொண்டு குழந்தைக்கு, ஆட்டிசம் உள்ளது என்று கணித்துவிடவும் கூடாது.

    இதில் சில அறிகுறிகள் இருந்து, குழந்தையின் இயல்பான திறமைகள் பாதிக்கப்படுகின்றன என்றால் மட்டுமே, அந்தக் குழந்தைக்கு ஆட்டிசம் இருக்க வாய்ப்புள்ளது. இப்படி இருந்தால் குழந்தையை 3 வயதுக்கு முன்னரே மூளை நரம்பியல் மற்றும் மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று ஆலோசனையைப் பெறுவது நல்லது.

     

    மரு.அ.வேணி MD., DM(Neuro), 75980-01010, 80564-01010.

    மரு.அ.வேணி MD., DM(Neuro), 75980-01010, 80564-01010.

    ஆட்டிசத்தைக் கண்டறிவது எப்படி?

    ஆட்டிசத்தைக் கண்டறிய இதற்கென்று தனிப்பட்ட மருத்துவப் பரிசோதனைகள் ஏதும் இல்லை. பெற்றோர், ஆசிரியர், உறவினர், குழந்தைகள் நலமருத்துவர், மூளை நரம்பியல் நிபுணர், மனநல மருத்துவர் போன்றவர்களே இந்தக் குறைபாட்டைக் கண்டறிந்து சொல்ல முடியும். நரம்பியல் தொடர்பான ஆட்டிசக் குறைபாடுகளை சி.டி ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் என்ன குறைபாட்டினால் ஆட்டிசம் ஏற்பட்டது என்பதைக் கண்டறியலாம்.

    ஆட்டிசம் குழந்தைகளுக்கான சிகிச்சை முறைகள்:

    ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் குறைபாட்டின் விரைவுத்தன்மை ஒவ்வொருவருக்கும் வேறுபடும். எனவே, அவர்களுக்கு உள்ள குறைபாடு என்ன? என்பதைக் கண்டறிந்து அதற்கேற்றவாறு சிகிச்சை மற்றும் பயிற்சிகள் அளிக்க வேண்டும். அவர்களின் அதிகப்படியான துறுதுறுப்புத் தன்மையைக் குறைப்பதற்கான மாத்திரைகள் உள்ளன. அதேபோல் அவர்களுக்கென்று சில பயிற்சி முறைகளும் உள்ளன.

    ஆக்குபேஷனல் தெரபி: பல் தேய்த்தல், குளித்தல், சாப்பிடுதல், தூக்கம் போன்ற தினசரிப் பழக்கவழக்கங்களை ஒழுங்குபடுத்தப் பயிற்சிகள் தர வேண்டும். இவைகளைச் சிறு வயதிலேயே குழந்தைகளுக்குப் பயிற்றுவிப்பதன் மூலம் மற்றவர்களைப் போல் தாமாக இயங்க முடியும்.

    பேச்சுப் பயிற்சி: மொழி மற்றும் பேச்சுப் பயிற்சிகளைச் சிறுவயதிலேயே தொடங்கிவிட வேண்டும். பெற்றோர்கள் குழந்தைக்குப் புரியும் விதமாக நிறையவே பேச வேண்டும்.

    உளவியல் சார்ந்த பயிற்சிகள்: குழந்தைகளுக்கு உடலளவில் மட்டுமல்லாமல், மனத்தளவிலும் நெகிழ்வுத்தன்மை, மற்றவர்களோடு பழகும்முறை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.

    கல்விக்கான பயிற்சிகள்: ஐ.ஈ.பி முறை ஆட்டிசக் குழந்தைகளுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும். அதாவது, கல்வித் திட்டத்தை, ஒரு குழந்தை கற்றுக்கொள்ளும் திறன், அதை வெளிப்படுத்தும் திறன் உட்பட, பலவற்றை ஆராய்ந்து அதற்குத் தகுந்தாற்போல் வடிவமைத்துக் கொடுப்பதே ஐ.ஈ.பி ஆகும். இதற்கென்று சிறப்புப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் சேர்த்துக் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும்.பள்ளிக்கு நடந்தே செல்வது நல்லது.

    ஆடுகளங்களில் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடும்போது மற்றவர்களை ஒத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட வாய்ப்புள்ளது. நினைவுத்திறன், முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றை வளர்த்துக் கொள்வதற்கும் பயிற்சிகள் அளிக்க வேண்டும்.

    பயிற்சி வகுப்புகளில் கற்றுக் கொடுக்கப்படுபவைகள் மட்டும் குழந்தையிடம் மாற்றத்தைக் கொண்டு வந்துவிடுமா? எனில் அது உறுதி இல்லை. வீட்டில் இருக்கும் மற்ற நேரங்களில் பல பெற்றோர்கள் எதுவுமே செய்யாமல் விட்டுவிடுகின்றனர். இதன் காரணமாகத்தான் குழந்தையிடம் முன்னேற்றம் ஏற்படுவது நீள்கிறது.

    குழந்தைகளின் பெற்றோர் பயிற்சியாளர்களிடம் முறைகள் அறிந்து, வீட்டில் செய்யவேண்டிய பயிற்சிகளைக் கட்டாயம் செய்ய வேண்டும். வீட்டு வேலை செய்வதற்கு வயதுக்கேற்ப, பயிற்றுவிக்க வேண்டும். இந்த அனைத்துப் பயிற்சிகளையும் குழந்தை சரியான முறையில் பெறுவதற்குத் தாயின் பங்கு மட்டுமல்லாமல், குடும்பத்தில் உள்ள அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. தொடர்ந்து பயிற்சிகள் கொடுப்பதன் மூலம், சீரான நிலைக்குக் கொண்டு வர முடியும்.

    பள்ளியோ, பயிற்சி வகுப்புகளோ குழந்தைகளுக்குத் தேவையான அனைத்தையும் முழுமையாகக் கற்றுக் கொடுத்துவிட முடியாது. பெற்றோரின் பங்கே முதன்மையானது என்பதை, ஆட்டிசக் குழந்தைகளின் பெற்றோர்கள் உணரவேண்டும். என்னதான் ஆட்டிசத்திற்கு என்று மாத்திரைகள் பல இருந்தாலும் அன்பும், அரவணைப்புமே இதற்கான மருந்துகள். இந்தக் குழந்தைகளுடன் அன்போடு நெருங்கிப் பழகும்போதுதான், அவர்கள் நம்மை நெருங்கி வருவார்கள். எனவே, இவர்களோடு நாம் அதிக நேரம் செலவழிக்க வேண்டும்; பூங்கா, கோயில், கடற்கரை, பொருட்காட்சி போன்ற வெளி இடங்களுக்கு அடிக்கடி அழைத்துச் செல்ல வேண்டும். நீச்சல், மிதிவண்டி ஓட்டுதல், யோகா, நடனம் போன்ற பயிற்சிகளை ஆட்டிசக் குழந்தைகளுக்கு அளிக்கும்போது அவர்களின் உடல் திறனை அதிகப்படுத்துவதுடன், தத்தம் வேலைகளைத் தாமே செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையும் வளர்கிறது.

    • நம்மிடம் இருக்கும் தீய பழக்கங்களுக்கும் சேர்த்தே முழுக்குப் போடுகிறோம்.
    • தீபாவளியன்று கங்கை எல்லா நீர்நிலைகளிலும் பிரவேசிக்கிறாள் என்பது ஐதீகம்.

    தீபாவளி நம் நாட்டில் மட்டுமல்ல, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, வங்க தேசம் உள்ளிட்ட இன்னும் பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. வாழ்க்கையின் இருளை நீக்கி ஒளியைத் தோற்றுவிக்கும் பண்டிகை என இப்பண்டிகை போற்றப் படுகிறது.

    பூமாதேவியின் மகனாகப் பிறந்தவன் நரகாசுரன். அவன் பிரம்மாவை நோக்கிக் கடுமையான தவம் செய்தான். அவன்முன் தோன்றிய பிரம்மா என்ன வரம் வேண்டும் என்று வினவினார். இறப்பில்லாத தன்மையைக் கேட்டான் அவன்.

    இறப்பில்லாதிருத்தல் என்பது கடவுள் நிலை அல்லவா? மனிதர்களுக்கு அப்படி வரம் தரும் மரபில்லை என்று கண்டிப்பாய்ச் சொன்னார் பிரம்மா.

    யோசித்த நரகாசுரன் தன் தாயாலன்றிப் பிறரால் மரணம் நேரக் கூடாது என சாமர்த்தியமாக வரம் வாங்கிக் கொண்டான். எந்தத் தாயும் தன் மகனைக் கொல்ல மாட்டாள் என்பதே அவன் அப்படி வரம் கேட்கக் காரணம்.

    அதன்பின் ஆணவம் கொண்டு நரகாசுரன் செய்த அடாத செயல்களால் மண்ணுலகும் விண்ணுலகும் தவித்தன. தேவர்களின் அன்னையாகக் கருதப்படும் அதிதியின் காது வளையங்களைக் கவர்ந்தான் அவன். எண்ணற்ற பெண்களைச் சிறைப் பிடித்தான்.

    `அல்லவரை அழித்து நல்லவரைக் காக்கும்` கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்து உலகைக் காக்க முடிவு செய்தார்.

    பார்த்தசாரதியான அவருக்கு அவர் மனைவி சத்தியபாமா சாரதியாக இருந்து தேரோட்டினாள். தேரில் இருந்தபடியே நரகாசுரனுடன் யுத்தம் செய்யலானார் கிருஷ்ணர். உண்மையில் சத்தியபாமா நரகாசுரனின் தாயான பூமாதேவியின் அம்சமே ஆவாள்.

    யுத்தத்தின் ஒரு கட்டத்தில் சத்தியபாமாவைத் தேரைவிட்டு இறங்கச் செய்த கிருஷ்ணர், அவளைத் தன் அடிமை போல நடிக்கச் சொன்னார். பின்னர் அவளைச் சாட்டையால் அடித்து நடனமாடச் சொன்னார். சத்தியபாமா துடிதுடித்து நடனமாடத் தொடங்கினாள். எல்லாம் நடிப்புத்தான்.

    திருப்பூர் கிருஷ்ணன்

    திருப்பூர் கிருஷ்ணன்

    இதெல்லாம் கள்ளக் கண்ணனின் திட்டமிட்ட நாடகம் என்பதை நரகாசுரன் அறியவில்லை. தான் செய்த கொடும் செயல்களின் பொருட்டுத் தனக்கும் சாட்டையடி கிடைக்கும் என எண்ணி அவன் உடல் அச்சத்தில் வியர்த்தது.

    என்றாலும் சுதாரித்துக் கொண்டு கண்ணன்மேல் அம்பெய்தான். சத்தியபாமா ஓடோடி வந்து கணவன் முன் நின்று அந்த அம்பைத் தான் வாங்கிக் கொண்டாள். தன் நெஞ்சில் தைத்த அம்பைக் கையால் எடுத்து அதே அம்பால் நரகாசுரனைக் கொன்றாள்.

    இறக்கும் தறுவாயில் தான் செய்த கொடுமைகளை எண்ணிப் பார்த்தது நரகாசுரன் மனம். அவன் மனச்சாட்சி விழித்துக் கொள்ள அவன் உள்ளம் வருந்தியது.

    தன் செயல்களால் இருள் சூழ்ந்த பூமி, தான் காலமானபின் ஒளி பெற வேண்டும் என விழைந்தது அவனது திருந்திய நெஞ்சம்.

    தான் இறந்த தினம் வெளிச்ச விழாவாக எதிர்காலத்தில் அறியப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தவாறே அவன் மரணத்தைத் தழுவினான்.

    நரகாசுரனை வதம் செய்த கிருஷ்ணர் நரகாசுரனால் சிறைப்பிடிக்கப்பட்ட அத்தனை பெண்களையும் விடுதலை செய்தார். அதிதியின் காது வளையங்களையும் மீட்டு தேவர்களிடம் ஒப்படைத்தார்.

    நரகாசுரன் வேண்டியவாறே இன்றளவும் அவன் வதம் செய்யப்பட்ட தீபாவளி தினம் ஒளி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் தீபங்கள் ஏற்றியும் தென்னிந்தியாவில் மத்தாப்புகள் கொளுத்தியும் தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள் மக்கள்.


    நரகாசுரனை அதிகாலையில் வதம் செய்த கண்ணன், அதன்பின் எண்ணெய் தேய்த்துத் தலைமுழுகினான். அந்த மரபிலேயே தீபாவளி நன்னாளன்று நாம் எண்ணெய் தேய்த்துத் தலை முழுகுகிறோம். நம்மிடம் இருக்கும் தீய பழக்கங்களுக்கும் சேர்த்தே முழுக்குப் போடுகிறோம்.

    ராமன் பதினான்கு ஆண்டு வனவாசம் முடிந்து ராவணனை வதம் செய்த வெற்றிப் பெருமிதத்தோடு மனைவி சீதாதேவி, தம்பி லட்சுமணன் ஆகியோரோடு அயோத்திக்குத் திரும்பினான்.

    ராமன் திரும்பவும் அயோத்தி வந்தபோது மக்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. தங்கள் இல்லங்களில் எல்லாம் தீபங்களை ஏற்றி வைத்து மன்னன் ராமபிரானை மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள் மக்கள். ராமன் அயோத்திக்குத் திரும்பிய அந்த நாளே தீபாவளி என்கிறது ஒரு ராமாயணக் கதை.

    பாவங்களைப் போக்குவது கங்கை நதி. தீபாவளியன்று கங்கை எல்லா நீர்நிலைகளிலும் பிரவேசிக்கிறாள் என்பது ஐதீகம். எனவே எல்லா நீரும் கங்கையாக மாறுகின்றன. அதனால்தான் தீபாவளியன்று கங்காஸ்நானம் ஆயிற்றா என விசாரித்துக் கொள்கிறோம்.

    சிவபெருமான் தன் தலையில் குடிகொண்டுள்ள கங்கை பாவத்தைப் போக்குகிறாள் என்பதை மக்கள் எந்த அளவு நம்புகிறார்கள் என்று பரிசோதிக்க விரும்பினார்.

    சிவனும் பார்வதியும் கங்கைக் கரையில் கிழவராகவும் கிழவியாகவும் உருமாறி அமர்ந்து கொண்டார்கள். உடல் நடுக்கத்தோடு கிழவி மடியில் படுத்திருந்தார் அந்தக் கிழவர்.

    பார்ப்பவர்களெல்லாம் கிழவரின் உடல் நடுங்குவதைப் பார்த்துப் பரிதவித்தார்கள். கிழவரை எழுப்பி அமரவைக்க எத்தனித்தார்கள்.

    கிழவி குறுக்கே புகுந்து தடுத்தாள். பாவமே செய்யாதவர்தான் அவரைத் தொடமுடியும் என்றும் அல்லாதவர் தொட்டால் கிழவரின் நடுக்கம் அவரை விட்டு விலகி, தொட்டவரை ஒட்டிக் கொள்ளும் என்றும் அவள் எச்சரித்தாள்.

    பாவமே செய்யாதவர் யார்? எல்லோரும் அச்சத்தோடு செய்வதறியாது நின்றபோது, அங்கே வந்தான் ஓர் விறகு வெட்டி. நிபந்தனையை அறிந்துகொண்ட அவன், சடாரென கங்கையில் ஒரு முழுக்குப் போட்டுவிட்டு வந்து கிழவரைத் தொட்டுத் தூக்கி அமரவைத்தான்.

    நீ பாவமே செய்ததில்லையா என மக்கள் வியப்போடு வினவினார்கள். `செய்திருக்கலாம். ஆனால் இப்போது கங்கையில் நான் முழுகி எழுந்தேனே? கங்கை நான் இதுவரை செய்த பாவம் அனைத்தையும் போக்கியிருக்குமே!` என்று பதில் சொன்னான் அவன்.

    பரமசிவனும் பார்வதியும் அவனுக்குக் காட்சி தந்தார்கள். `உன்னைப் போல் தீவிர நம்பிக்கை கொண்டவர்களிடம் கங்கையின் சக்தி வேலை செய்யும். நம்பிக்கை அற்றவர்களின் பாவத்தைக் கங்கையாலும் போக்க முடியாது` என்றார்கள் அவர்கள்.

    தீபாவளியன்று நாம் கங்கா நீராடல் செய்கிறோம். நம் வீட்டிலுள்ள தண்ணீரே கங்கையாக மாறுகிறது. நம் பாவங்கள் தொலையும் என்ற நம்பிக்கையோடு முழுக்குப் போட்டால்தான் பாவங்கள் போகும். எந்த உணர்வுமில்லாமல் நீராடினால் பாவம் தொலையாது. அது அர்த்தமற்ற ஒரு வெற்றுச் சடங்காக மட்டுமே இருக்கும்.

    சிவபெருமானுடன் இணைபிரியாமல் இருக்க விரும்பினாள் பார்வதி தேவி. அந்தப் பிரார்த்தனையோடு அவள் கவுரி விரதம் இருந்தாள். கவுரி விரதம் நிறைவுற்ற நாளில் சிவன் பார்வதியைத் தன்னில் பாதியாக ஏற்றுக்கொண்டு அர்த்தநாரீஸ்வரர் ஆனார்.

    அர்த்தநாரீஸ்வரக் கோலத்தைச் சிவன் ஏற்ற நன்னாளே தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது எனவும் ஒரு கதை உண்டு. சிவன் ஜோதி வடிவானவன் என்பதால் அவன் பெண்மைக்குச் சமபங்கு உண்டு என்பதை நிலைநாட்டிச் சிறப்புச் சேர்த்த தீபாவளி நாளில் ஜோதியைத் தரும் தீபங்கள் ஏற்றப்படுகின்றன.

    புத்த மதத்தினரும் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். தீபாவளிக் கொண்டாட்டத்தை தீபதான உற்சவம் என்கிறார்கள் அவர்கள். போதி மரத்தடியில் ஞானமடைந்த புத்தர் எப்போது மறுபடித் தங்கள் நாட்டிற்கு வருவார் என புத்தரின் தந்தை சுத்தோதனரும் மக்களும் காத்துக் கொண்டிருந்தார்கள். அவருக்கு அழைப்பு விடுத்தார்கள்.

    அவர் தன் சீடர்களோடு மறுபடி கபிலவஸ்து நாட்டிற்கு விஜயம் செய்தார். அப்போது எல்லோர் இல்லங்களிலும் விளக்கேற்றி அவரை வரவேற்றார்கள். விளக்கேற்றும் வசதியில்லாத ஏழைகளுக்குச் செல்வந்தர்கள் விளக்கையும் எண்ணெயையும் தானமாக வழங்கினார்கள். இந்த நன்னாளையே தீபாவளி என புத்த மதம் போற்றுகிறது. தீபங்கள் தானமாகத் தரப்படும் இந்நாள் தீபதான உற்சவம் எனப்படுகிறது.

    மிகப் பழங்காலத்திலேயே தீபாவளி கொண்டாடப்பட்டு வந்தது என்பதற்குச் சான்றாக தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. சாளுக்கிய, பல்லவ, மராட்டிய மன்னர்கள் கூட தீபாவளியைக் கொண்டாடியதற்கான சான்றுகள் உள்ளன. தீபாவளி இந்துக்களின் பண்டிகையாக மட்டுமல்லாமல் மதம் கடந்த ஒரு பொதுப் பண்டிகையாகவே கொண்டாடப் பட்டு வந்துள்ளது.

    தமிழகத்தில் நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் ஆலயங்களில் தீபாவளி விழா கொண்டாடப்பட்டதற்கான சான்றுகள் திருப்பதி திருமலைக் கல்வெட்டுகளில் உள்ளன.

    திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் தஞ்சை மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கரால் தேர்த் திருவிழாவின்போது வாண வேடிக்கையுடன் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப் பட்டதை அங்குள்ள மிகப் பழைய சுவரோவியங்கள் மூலம் அறிய முடிகிறது.

    பொங்கல் தமிழ் நாட்டிலும் ஓணம் கேரள நாட்டிலும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தகைய மாநிலம் சார்ந்த பண்டிகைகளை அந்தந்தப் பிரதேசம் தவிர்த்து இந்தியா ழுழுவதும் கொண்டாடுவதில்லை. ஆனால் தீபாவளி இதற்கு விதிவிலக்கு. இது இந்தியா முழுவதும் பெரும் கோலாகலமாக எல்லா இடங்களிலும் கொண்டாடப் படுகிறது.

    மன்னர் காலத்தில் தீபாவளி நாளில் அறிஞர்களுக்குப் பரிசுகள் வழங்கும் வழக்கம் இருந்திருக்கிறது. ஜனநாயக நாட்டில் எல்லோரும் இந்நாட்டு மன்னர். எனவே தீபாவளி இனாம் வழங்கும் வழக்கமாக அது தொடர்கிறது.

    பத்திரிகைகள் தீபாவளியை ஒட்டி தீபாவளி மலர்கள் வெளியிடுகின்றன. தீபாவளிச் சிறப்பு வெளியீடுகளைக் கொண்டு வருகின்றன. இத்தகைய பெருமையைப் பத்திரிகைகள் பெரும்பாலும் மற்ற பண்டிகைகளுக்குத் தருவதில்லை.

    பக்தர்கள் நரகாசுரனை வதம் செய்த கண்ணனை மலர்களால் பூஜிக்கிறார்கள் என்றால் பத்திரிகைகளோ கண்ணனை தீபாவளி மலர்களால் பூஜிக்கின்றன.

    தீபாவளி நாளன்று நம்பிக்கையோடு நீராடி, பாவங்களைப் போக்கிக் கொண்டு, கண்ணனை வழிபட்டுப் பயனடைவோம்.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

    • திவ்யா, “தெரியும்மா... அப்பாவ பத்தி, அண்ணன பத்தி எல்லாம்‌ தெரியும்.
    • வீட்டுக்குள்‌ இருந்து கொண்டே, உங்களுக்கு கடிதம்‌ அனுப்புவது வேடிக்கையா தான்‌ இருக்கிறது.

    ஹோட்டலில் டிபன் சாப்பிட்டு முடித்துவிட்டு காரில் சென்று கொண்டிருந்தனர். டேவிட் நண்பர்கள் பின்னால் காரில் வர, முன்னால் டேவிட் ஓட்ட, அருகில் அப்பா அமர்ந்திருக்க, பின் சீட்டில் அம்மா தோளில் சாய்ந்தபடி திவ்யா, "எங்கம்மா போறோம்? எதுவுமே சொல்லாம கூட்டிட்டு போறீங்க..."- என கேட்க..

    திரும்பிப் பார்த்து, சின்ன புன்னகையுடன் அப்பா... "சஸ்பென்ஸ்... ஏ ராஜேஸ்வரி... தயவு செய்து அவகிட்ட அதை நீ சொல்லிராத.." என சொல்ல அம்மாவும், "ஆமாண்டி... அப்பாவும், நானும் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கோம்..." எனக் கூற சின்ன சிரிப்புடன் அதை ஆமோதித்த திவ்யா, சற்று நினைவுகளை பின்னோக்கி செலுத்தினாள்.

    "என்னடி... சொல்ற?- கிச்சனில் சமையல் செய்துகொண்டிருந்த அம்மா அதிர்ந்தாள்" அம்மா... நான் டேவிட்னு ஒரு கிறிஸ்டியன் பையன லவ் பண்றேன்..." எனஅம்மாவிடம் சொல்லவும், அவள் அதிர்ந்ததும் திவ்யா எதிர்பார்த்த ஒன்றுதான்!

    திவ்யா மட்டுமல்ல. எந்த பெண்ணும் அவள் அம்மாவிடம் 'நான் ஒரு பையனை லவ் பண்ணுகிறேன்' என்று சொன்னால், அந்த அம்மா இப்படித்தான் ரியாக்ஷன் பண்ணுவார்கள் என்பது திவ்யாவுக்கு தெரியும் என்பதால் அம்மாவின் அதிர்ச்சியை அவள் கண்டு கொள்ளாமல், காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தாள்.

    ஏண்டி இவ்ளோ பெரிய விஷயத்தை சாதாரண மா சொல்லீட்டு நீ பாட்டுக்கு காய வெட்டிட்டு இருக்க... உங்க அப்பாவுக்கு தெரிஞ்சது... என்னையும் உன்னையும் வெட்டி போட்டுருவாரு!" எனக் கூற...

    "அது தெரிந்ததால் தானே நான் உன்கிட்ட சொல்றேன்... நீ பக்குவமா அப்பா கிட்ட எடுத்து சொல்லி எனக்கும் அந்த டேவிடுக்கும் கல்யாணம் முடிச்சு வச்சிரு" எனக் கூற...


    "எடு செருப்பே...நானே இன்னும் அதிர்ச்சியில் இருந்து வெளியே வராம இருக்கேண்டி... இப்படி தலையில கல்ல போட்டுட்டு இதை வேற உங்க அப்பா கிட்ட நான் சொல்லனுமாக்கும்..."- தொண்டை கரகரக்க அழுகை வர, அம்மா சமையலை, அப்படியே நிறுத்திவிட்டு கிச்சன்ல இருந்து வெளியேறினாள்.

    பின்னாடியே வந்த திவ்யா, "அப்பாவும் அண்ணனும் தான் எதற்கெடுத்தாலும் டென்ஷன் ஆவார்கள் என்றால்... நீயும் ஏண்மா டென்ஷன் ஆகுற? கொஞ்சம் புரிஞ்சுக்கோ..." எனக் கூற..

    "என்னடி புரிஞ்சுகிறது... அதுவும் உங்க அப்பாவும், உன் கோவக்கார அண்ணனும், இந்து மதத்துல அப்படி ஒரு முனைப்பாக உள்ளவங்க... அவங்க கிட்ட போயி இந்த மாதிரி... உங்க பொண்ணு ஒரு கிறிஸ்டின் பையன லவ் பண்றாளாம் ..அவனை தான் கல்யாணம் முடிப்பாளாம்னு சொன்னால்...என்ன செய்ய போறாங்களோ..." - என கூறி சோபாவில் தளர்ந்து அமர்ந்தாள் அம்மா.

    திவ்யா, "தெரியும்மா... அப்பாவ பத்தி, அண்ணன பத்தி எல்லாம் தெரியும். அதான், முதல்ல உன் கிட்ட சொன்னேன் . உனக்கு நான் ஒரு கிறிஸ்டின் பையன கல்யாணம் பண்றதுல்ல உடன்பாடா... இல்லையா. அதை சொல்லு முதல்ல..." என கேட்க ,அம்மா வெறித்த பார்வை பார்த்தாள்.

    திவ்யாவும் 'அம்மா என்ன சொல்ல போகிறாள்' என்று ஆர்வமாகவே பார்க்க, ஒருகணம் கண்மூடி நிதானித்த திவ்யாவின் அம்மா நிமிர்ந்து, "இங்க பாருடி.. எனக்கு நீ உனக்கு பிடிச்ச கல்யாணம் பண்ணிக்க எந்த பிரச்சனையும் இல்லை... ஆனால் உங்க அப்பா உன்னோட இந்த முடிவுக்கு உடன்பாடுன்னு சொல்லணும். அவருக்கு உடன்பாடில்லை என்றால், அவர எதிர்த்து எல்லாம் என்னால உனக்கு சப்போர்ட் பண்ண முடியாதுமா.." என சொல்ல,

    ஒரு மெலிதான சிரிப்பை உதிர்த்த திவ்யா, "உனக்கு உடன்பாடுதான,! அது போதும்… அப்பாவை எப்படி கரெக்ட் பண்ணனும்னு எனக்கு தெரியும்! அத நான் பாத்துக்குறேன்… எனக்காக ஒரு வாரம் அப்பா கிட்ட இத பத்தி நீ வாயவே திறக்காத... சரியான நாளா பார்த்து நானே அப்பா கிட்ட சொல்லிக்கிறேன்..." என கூறினாள், திவ்யா.

    அவளது கையை ஆதரவாக பிடித்துக் கொண்டஅம்மா, திவ்யாவை பார்த்து உங்க அப்பா ஒத்துக்க போற ஆளுன்னு எனக்கு நம்பிக்கை இல்லடி. அப்படியே அவரு ஒத்துக்கொண்டார் என்றால் கூட உங்க அண்ணன் ஒத்துக்க மாட்டான்டி... அவன் ஒத்துக்கவே மாட்டான் ! எனக்கு நல்லாவே தெரியும்... என அம்மா பதற,

    "எனக்கு அவன பத்தி கவலையே கிடையாது. அரசியல், கட்சி, ஆன்மீகம் அப்படின்னு திரிகிறவங்க கிட்ட எதை சொல்லியும் உணர வைக்க முடியாது... ஆனால் நீங்கள் ரெண்டு பேரும் சப்போர்ட் பண்ணா இந்த கல்யாணத்தை, நான் விரும்பின டேவிட்டோட நடத்திடுவேன்...' என திவ்யா தீர்க்கமாக சொல்ல, ஒரு பெருமூச்சுடன் அவளையே பார்த்தால் திவ்யாவின் அம்மா மரகதம்.

    அந்த ஒரு வாரமும் அப்பாவும் வழக்கம் போல வேலை விஷயமா வெளியே போறது, வீட்டுக்கு வந்து சாப்பிடுவது, ரெஸ்ட் எடுக்கிறது, என இருக்காரே தவிர, திவ்யாவோட கேஷுவலா பேசுற மாதிரி எதுவும் பேசவே இல்லை.

    திவ்யாவுக்கு மெதுவா அம்மா மேல ஒரு சந்தேகம்! எனக்கு தெரியாம ஒரு வேலை அப்பாட்ட சொல்லி இருப்பாளோ? ஒரு நாள் அதையும் அம்மாவிடம் கேட்டாள்."என் லவ் மேட்டரை பற்றி அப்பா கிட்ட ஏதாவது சொன்னியா...?" என அவள் கேட்டதும்,


    "போடி இவளே... நான்தான் அதை நீயே உங்க அப்பாகிட்டபேசிக்கோ. அவருக்கு ஓகேன்னா எனக்கு ஓகே ன்னு சொல்லிட்டன் இல்ல!"- என கூறி அம்மா முகத்தை திருப்பிய படி போக,

    "அம்மா நான் உன் பொண்ணு. எங்கிட்டேயே போட்டு வாங்குறியா. நான் சொன்ன அன்னைக்கே, உனக்கு என் லவ்வுக்கு ஓகேன்னு தெரியும்டி... '- என மனசுக்குள் சிரித்தபடி சொல்லிக் கொண்ட திவ்யா, அப்பாவிடம் எப்படி சொல்வது என யோசித்துக் கொண்டிருந்த போது தான், எதிர்பாராத விதமாக அவள் அண்ணன் பெருமாள் குறுக்கே வந்தான்.

    அன்று ஞாயிற்றுக்கிழமை. வழக்கம் போல கட்சி வேலை, நண்பர்கள் சந்திப்பு என்று சுற்றிக் கொண்டிருக்கும் பெருமாள், அன்று அதிசயமாக வீட்டில் இருந்தான். அப்பா காலை கோவிலுக்கு போயிட்டு வந்தவுடன், சாப்பிடும் பொழுது மெதுவாய் ஆரம்பித்தான்.

    "அப்பா... நம்ம திவ்யாவுக்கு கல்யாண வயசு வந்து ரொம்ப நாள் ஆகுது. மாப்பிள்ளை ஏதாவது பார்த்து இருக்கீங்களா... இல்ல மனசுல ஏதாவது சொந்தத்தில் முடிக்கலாம்னு இருக்கீங்களா...?"என கேட்க, திவ்யாவுக்கு பகீர் என்றது.

    "இவன் எதுக்கு திடீர்னு நம்ம கல்யாணத்த பத்தி பேசுறான். ஒருவேளை நான் டேவிட்டை லவ் பண்றது தெரிஞ்சு போச்சா...?"- என சற்று சந்தேக பார்வையுடன் அவனை பார்க்க,பெருமாள், இயல்பாக, இட்லியை போட்டு வாயில் தள்ளிய படி அப்பாவை பார்த்து பேசிக் கொண்டிருந்தான்.

    "இல்லடா... நான் கூட அது தான் யோசிச்சிட்டு இருந்தேன். நீ கரெக்டா கேட்டுட்ட! நீயும் உன் சைட்ல யாராவது நல்ல மாப்பிள்ளை இருந்தா சொல்லு... ஆனா கட்சி காரங்க மட்டும் வேண்டாம். குறிப்பா இந்துவா இருக்கணும்! நம்ம ஆட்களா இருந்தால் சந்தோஷம்..." - அப்பா அண்ணனிடம் சொல்லிகிட்டு இருக்க, என் மனசு என்கிட்ட சொல்ல ஆரம்பிச்சது." சுத்தம் திவ்யா... நீ உங்க அப்பா கிட்ட உன் காதலை சொல்லி ஓகே வாங்கின மாதிரிதான்! திவ்யா வசமா சிக்குனடி..."-மனசு எச்சரிச்சு முடிக்கும் முன், அப்பாவின் குரல் குறுக்கிட்டது.

    "என்ன திவ்யா? உனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கலாம் இல்ல? உனக்கு ஓகே தானே?" அப்பா சட்டென்று கேட்க, ஓகே அப்பா! நீங்க எந்த மாப்ள பார்த்தாலும் எனக்கு ஓகே"- என அப்போதைக்கு சொல்லி வைத்தாலும், உள்ளுக்குள் ஒரு உதறல் இருக்கத்தான் செய்தது.

    "அவகிட்ட என்னப்பா பெர்மிஷன் கேட்டுட்டு இருக்கீங்க... இதுவரைக்கும் என்ன படிக்கணும்? என்ன வேலை பார்க்கணும்? எல்லாமே நாமதான்பா டிசைன் பண்ணோம்..மாப்பிளை மட்டும் அவ பார்த்துருவாளா என்ன? நாம என்ன அவளுக்கு ஏத்த மாதிரி மாப்பிள்ளை பார்க்காம விட்டுறுவோமா என்ன...?"என சொன்னவன், அவள் பக்கம் திரும்பி, "திவ்யா... நான் சொல்றது ரைட் தானே?" என கேட்க அவள் மவுனமாய் இருக்க,

    " என்ன திவ்யா அமைதியா இருக்க? விருப்பம் இல்லையா?" - என கேட்க இல்லண்ணே "நீங்க எந்த மாப்ள பார்த்து சொன்னாலும் எனக்கு ஓகே தான்..." என சொல்லிவிட்டு... சரி, நான் கை கழுவிட்டு படுக்க போறேன்... என்று எந்திரிக்க,

    "பொம்பள பிள்ளைடா அவ... வெக்கமா இருக்காதா? கல்யாண பேச்சை ஆரம்பித்தாலே... பொம்பள பிள்ளைகளுக்கு வெட்கம் தானா வந்துரும்!"- அப்பா ஏதோ எங்கேயோ பேசுவது போல அவள் காதில் கேட்க, கையை கழுவி விட்டு பெட் ரூமுக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள் திவ்யா.

    அடுத்த நாள் காலை பெருமாள் வழக்கம் போல சீக்கிரமே எழுந்து, வாக்கிங் முடித்துவிட்டு, வேக வேகமாக கிளம்பி, பைக் எடுத்துக் கொண்டு வெளியே சென்றான். கோவில் சென்று வந்து, நிதானமாக சாப்பிட்டு முடித்து, ஹாலில் சோபாவில் அமர்ந்த போது தான் திவ்யாவின் அப்பா கவனித்தார்.

    டீப்பாயில் ஒரு கடிதம் நான்காக மடித்து வைக்கப்பட்டு, அதன் மீது டிவியின் ரிமோட், அந்த கடிதம் பறந்து விடாமல் இருப்பதற்காக வைக்கப் பட்டிருப்பதை பார்த்ததும் உள்ளுக்குள் ஏதோ ஒரு உணர்வு!

    'அந்த கடிதம் தனக்குத்தான்! 'என உள் உணர்வு உணர்த்த, மெதுவாய் ரிமோட்டை தள்ளி வைத்து விட்டு, அந்தக் கடிதத்தை எடுத்து பிரித்துப் படித்தார்.

    அன்புள்ள அப்பா! நேற்று நீங்கள் எனக்கு கல்யாணம் முடிப்பதை பற்றி அன்புடன் பேசிக் கொண்டிருந்தது சந்தோஷமான ஒரு விஷயம் தான்! ஆனால், நான் வளர்ந்தது முதல் இன்று படித்து முடித்து வேலையில் இருக்கும் வரைக்கும் உங்களுடன் கலந்து ஆலோசனை கேட்டு தான் எதையுமே முடிவெடுத்திருக்கிறேன்.

    இப்பொழுதும் அதே போல ஒரு முடிவை எடுக்க உங்களிடம் அனுமதி கேட்டு தான் இந்த கடிதம்.

    வீட்டுக்குள் இருந்து கொண்டே, உங்களுக்கு கடிதம் அனுப்புவது வேடிக்கையா தான் இருக்கிறது. இருப்பினும், இதுபோல விஷயங்களை உங்களிடம் நேரில் பேச எனக்கு தைரியம் இல்லை என்பதை விட, கடிதம் இன்னும் சவுகரியம் என்பதற்காக தான்.

    அப்பா, நான் வேறு மதத்தை சேர்ந்த, அதாவது ஒரு கிறிஸ்தவரை காதலிக்கிறேன். அவரது பெயர் டேவிட். ஒரு தங்கை. அந்த தங்கை உங்களுக்கு தெரியும். ஆமாப்பா என் பிரண்ட் மேரிதான். நம் வீட்டிற்கு பலமுறை வந்திருக்கிறாள். நானும் பலமுறை அவ வீட்டுக்கு போயிருக்கிறேன். அவ அண்ணன்தான் டேவிட். நல்ல வேலையில் இருக்கிறான். எனக்கும் நல்ல பழக்கம். நிச்சயமாக என்னை கல்யாணம் முடித்தால் சந்தோஷமாக வைத்துக் கொள்வான். அதுல எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் வீட்டில் கல்யாணத்துக்கு பரிபூரண சம்மதம்! ஆனால்,' ஒரு கிறிஸ்தவ பையனை நீங்கள் மருமகனாக ஏற்றுக் கொள்வீர்களா?- என்பது அவர்கள் வீட்டில் மட்டும் இல்ல, எனக்கும் ஒரு நெருடல் இருக்கத்தான் செய்கிறது!

    'நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள் என்றால் என் வாழ்க்கையில் நான் சந்தோஷமான கல்யாண பந்தத்துக்குள் நுழைகிறேன் என்று நினைத்துக் கொள்வேன். இல்லை, உங்களுக்கு சம்மதம் இல்லை என்றால், சம்மதிக்க வைக்க முயற்சி செய்வதை தவிர, ஒருபோதும் உங்களை எதிர்த்து நான் டேவிட்டை கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன்!'

    உங்கள் அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். மேரியும், தன் அண்ணன் நம் வீட்டில் மருமகனாக வருவதற்கு உங்கள் அனுமதியை கேட்டு, காத்துக் கொண்டிருக்கிறாள்அனுமதி தருவீர்களா?

    தருவீர்கள் என்று நம்பிக்கையில் காத்துக் கொண்டிருக்கிறேன்.

    உங்கள் அன்பு மகள்,

    திவ்யா.

    (தந்தை சம்மதித்தாரா... அடுத்த வாரம் பார்ப்போம்...)

    E-Mail: director.a.venkatesh@gmail.com

    7299535353

    • கர்ம வினைகளால் படாத பாடுபடும் மக்களுக்கு புனித நர்மதை நதி ஒரு வரப்பிரசாதம் ஆவாள்.
    • நர்மதா என்ற பெயரை உச்சரித்தாலும், கேட்டாலும், பாவங்கள் அனைத்தும் தொலைந்து விடும்.

    உலகத்தில் உள்ள எல்லா தேசங்களிலும் நம் பாரத தேசம் மட்டுமே புண்ணிய பூமி என்றும் "தபோ பூமி" என்றும் அழைக்கப்படுகிறது. இதற்குக் காரணம் பஞ்சபூத தத்துவங்களை உள்ளடக்கிய இயற்கையின் அனைத்து வடிவங்களையும் நாம் வணங்கி போற்றுகின்றோம்.

    பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மாபெரும் ரிஷிகள், மகான்கள், சித்தர்கள் மற்றும் ஆத்ம ஞானிகளும், நம் தேசத்தில் ஓடும் புண்ணிய நதிகளை கண்டறிந்து அவற்றின் மகிமையை எல்லோருக்கும் எடுத்து கூறினர்.

    பொதுவாக புனிதமான நதி என்று நாம் கங்கை நதியை வணங்குகிறோம். ஆனால், வருடத்திற்கு ஒருமுறை கங்கை நதியே, ஒரு கரிய பசுவின் உருவில், நர்மதா நதியை தேடிச்சென்று நீராடி, வெண்மை நிறத்தைப்பெற்று, தன் பாவங்களை போக்கிக் கொள்வதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    தினந்தோறும் மக்கள் நீராடுவதால், பாவச்சுமை அதிகரித்து, அதை தாங்க முடியாமல் கங்கை, ஈசனை வேண்டினாள்.

    சர்வேஸ்வரனும், புனித நர்மதா நதியில் நீராடி பாவச்சுமையிலிருந்து விடுபடுமாறு வரம் அருளினார். ஆகையால் புனித கங்கை நதிக்கும் பாப விமோசனம் அளித்தவள், புனித நர்மதை நதியாவாள்.

    கர்ம வினைகளால் படாத பாடுபடும் மக்களுக்கு புனித நர்மதை நதி ஒரு வரப்பிரசாதம் ஆவாள். நவகிரகங்களின் பாதிப்பால் ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படும் சகல விதமான திருப்புமுனைகளையும், அவருக்கு சாதகமாக நடத்திக் கொடுக்கும் உன்னதமான இரகசிய பணியை நர்மதா தேவி செய்து வருகிறாள்.

    மிகப் பழமையான ரிக் வேதத்தில் போற்றப்படும் சரஸ்வதி நதியில் தொடர்ந்து மூன்று நாட்கள் நீராடினாலும், புனிதமான யமுனை நதியில் ஏழு நாட்களும் மற்றும் புனித கங்கை நதியில் ஒரு முறையும் நீராடினாலும் ஆத்மா புனிதமடையும்.

    ஆனால் புனித நர்மதை நதியை ஒருமுறை தரிசனம் செய்தால் போதும் நம் உடல், மனம், ஆத்மா அனைத்தும் தூய்மை அடைந்து, கர்மவினை அனைத்தும் நீங்கப்பெற்று முக்தியை அளிக்கவல்ல ஆற்றல் உடையவள் என்று ஸ்கந்தபுராணத்தில் நர்மதை நதியின் மகத்துவம் கூறப்பட்டுள்ளது.

    அதனால் தான் நர்மதை நதியை முக்தி தாயினி, மோக்ஷ பிரதாயினி, தீர்த்தங்களின் அரசி என்றும் போற்றுகின்றனர். நர்மதை என்ற சொல்லுக்கு நலன்களை அள்ளித்தருபவள் என்று பொருள். நம் தேசத்தில் பல புண்ணிய நதிகள் ஓடினாலும் நர்மதா நதிக்கு மட்டும் அனைத்து புராணங்களிலும் மிகச் சிறப்பான இடம் அளிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு என்ன காரணம்? கிரிவலம் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். முதன்முதலாக "நதி வலம்" என்ற சொல் நர்மதா நதிக்கு மட்டுமே பொருந்தக்கூடியது. ஏனெனில் நர்மதா நதியைச் சுற்றி வலம் வந்து வணங்குவதை "நர்மதா பரிக்ரமா" என்று அழைக்கின்றனர்.

    முதன்முதலாக மாபெரும் ரிஷியான மார்க்கண்டேய மகரிஷி, நர்மதை நதியை வலம் வந்தார் என்று மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது. ஈசனின் கருணையால் இறவா வரம் பெற்றவர் மார்க்கண்டேய ரிஷி ஆவார்.

    ஒருமுறை நர்மதா நதியை சுற்றி நடந்து முழுமையாக வலம் வருவதற்கு, 3 ஆண்டுகள் 3 மாதங்கள் 13 நாட்கள் ஆகும். சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதியை கடந்து, இத்தகைய கடினமான முயற்சியில் ஏற்படும் பல்வேறு இடையூறுகளைத்தாண்டி, மாபெரும் சித்தர்களும், மகான்களும், யோகீஸ்வரர்களும் நர்மதா நதியை சுற்றி வலம் வந்து வணங்கியுள்ளனர்.

    ஏறக்குறைய 6 ஆயிரம் ஸ்லோகங்கள், நர்மதா நதியை மட்டும் போற்றுகின்றன. இதற்கும் ஒரு முக்கியமான காரணம் உண்டு. பல யுகங்களை தாண்டி இப்போது நாம் கலியுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு யுகத்திலும் தோன்றும் பல ஆறுகள், அந்த யுகம் முடிவடைந்த உடன் மறைந்து விடுகிறது. ஆனால் நர்மதா ஆறு மட்டும், எல்லா யுகங்களையும் கடந்து, ஏழு கல்ப காலங்களை கடந்து, இன்றளவும் நம்மை வாழ்வித்துக் கொண்டிருக்கிறது.

    மகாபாரதத்தில், பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தின்போது, நர்மதா நதிக்கரையில் மறைந்து வசித்தனர். அச்சமயம் அவர்கள், நதிக்கரையில் ஆசிரமம் அமைத்து தவம் செய்து கொண்டிருந்த, மார்க்கண்டேய ரிஷியை சந்தித்தனர். அவரிடம் நர்மதா நதியின் மகிமையை எடுத்துக் கூறுமாறு கேட்டுக் கொண்டனர்.

    அப்போது மார்க்கண்டேரிஷி, நர்மதா நதியின் மகத்துவத்தை யாராலும் முழுமையாக எடுத்துக் கூற முடியாது என்றும் நர்மதா என்ற பெயரை உச்சரித்தாலும், கேட்டாலும், பாவங்கள் அனைத்தும் தொலைந்து விடும் என்றார்.

    மேலும் நர்மதையை நினைத்து வேண்டுவோருக்கு கால சர்ப்ப தோஷம் பீடிக்காது மற்றும் நாகங்களால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்ற செய்தியும் கிருஷ்ண யஜுர்வேத சம்ஹிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

     

    இப்புனித நதிக்கரையில் தான், ஆதிசங்கரர் தன் குருவின் தரிசனத்தை பெற்றார். ஐந்தாம் நூற்றாண்டில் கேரள மாநிலத்தில் காலடி என்ற சிறிய கிராமத்தில் ஆதிசங்கரர் அவதரித்தார்.

    அவர் தனது எட்டு வயதில் வீட்டை விட்டு, ஆபத் சன்னியாசம் ஏற்று, ஓம்காரேஷ்வர் என்ற ஜோதிர்லிங்க ஸ்தலத்திற்கு (மத்திய பிரதேசம்) கால்நடையாக நடந்து தன் குருவை தேடிச் சென்றார்.

    அங்கு புனித நர்மதை நதிக்கரையில் அமைந்த ஒரு குகையில், ஆதிசங்கரர் தன் குருவின் தரிசனம் பெற்றார். அச்சமயம் அவருடைய குரு கோவிந்த பகவத் பாதர் தியானத்தில் இருந்தார்.

    திடீரென்று நர்மதா நதியில் வெள்ளப்பெருக்கு எடுத்தது. நதிநீர் குகைக்குள் நுழைந்தால் தன் குருவின் தியானம் தடைபடும். ஆகையால் மிக வேகமாக ஓடி வந்த நர்மதை நதி முழுவதையும் தன் சிறிய கமண்டலத்திற்குள் அடக்கி வைத்து மிகப்பெரிய அற்புதத்தை நிகழ்த்தினார். ஜகத்குருவின் கோரிக்கையை ஏற்ற நர்மதை நதி அவருடைய கமண்டலத்திற்குள் சென்று அமர்ந்து கொண்டது. வெள்ளம் தணிந்தவுடன் மீண்டும் கமண்டலத்திலிருந்து நர்மதை நதியை விடுவித்தார்.

    தன் குருவை தரிசிக்க உதவிய, நர்மதை நதிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, நர்மதா அஷ்டகம் என்ற பெயரில் எட்டு ஸ்லோகங்களை அருளினார். ஐந்தாம் நூற்றாண்டில் ஜகத்குரு அருளிய நர்மதா அஷ்டகத்தை இன்றும் நர்மதை நதிக்கரையில் பாடி தினமும் ஆரத்தி எடுத்துவருகின்றனர்.

     

    பூஜ்ய ஸ்ரீ ரமாதேவி, 81449 28666

    பூஜ்ய ஸ்ரீ ரமாதேவி, 81449 28666

    நர்மதை பற்றிய நூல்:

    இத்தகைய சிறப்புகளை கொண்ட புனித நதியான நர்மதையைப் பற்றி பூஜ்ய ஸ்ரீ ரமாதேவி புத்தகம் எழுதியுள்ளார். அதில் பல அற்புத தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

    ஆதிசங்கரர் தனது குருவின் தரிசனம் பெற்ற குகையைப்பற்றிய தகவல், பல நூற்றாண்டுகளாக எவராலும் அறியப்படாமல் இருந்தது. முதன்முதலாக, காஞ்சி பெரியவரின் கருணையால், நாகராஜ சர்மா என்பவர், இக்குகையை கண்டறிந்தார். அதுபற்றிய தகவல் இடம்பெற்றுள்ளது.

    ஆதி சங்கரர், இந்நதிக்கரையில் அமர்ந்து கொண்டு, நம் தேசத்தின் அனைத்து வழிபாடுகளையும் இணைத்து ஒருமுகப்படுத்தினார்.

    எல்லா உயிர்களிலும் இறைவன் நீக்கமற நிறைந்து இருக்கிறார் என்ற அத்வைத தத்துவத்தை ஐந்தாம் நூற்றாண்டில், ஆதிசங்கரர் பகிரங்கமாக அறிவித்தார். இதுபோன்று பல அரிய தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

    இந்நூலில் புனித நர்மதை நதிக்கரையில் வாழ்ந்து சமாதி அடைந்த பல சித்தர்களை பற்றியும் நாம் அறிந்து கொள்ள முடியும்.

    இதற்கு என்ன தலைப்பு வைப்பது என்று சிந்தனையோடு இருந்த, நூலாசிரியரின் கனவில் ஆதிசங்கர தோன்றி, "நமாமி தேவி நர்மதே" என்ற தலைப்பை அருளியுள்ளார். இந்த புத்தகத்தை விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெளியிட்டார்.

    தற்போது இந்நூலின் இரண்டாம் பதிப்பு வந்துள்ளது. இதன் வெளியீட்டு விழா, அக்டோபர் 26 ம் தேதி, சனிக்கிழமை காலை 9 மணிக்கு, சென்னை தி.நகர் வாணி மஹாலில் நடக்கிறது.

    இதில் நர்மதா நதிக்கரையில் வசிக்கும், ஸ்ரீ சமானந்த கிரி ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீ பூமானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் கலந்து கொள்கின்றனர்.

    இதையொட்டி காலை 9 மணிக்கு, புனித நர்மதா லிங்கத்திற்கு ஆயிரம் ருத்திராட்சங்களால் சிறப்பு பூஜை செய்யப்பட உள்ளது.

    இதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ருத்ராட்சம், ஓம்காரேஷ்வரில் இருந்து கொண்டுவரப்பட்ட கர்மவினைகளை மாற்றும் நர்மதை நதியின் புனித நீர் வழங்கப்படுகிறது. மேலும் அன்னதானத்துடன் இப்புனித நூலும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    • தைராய்டு என்பதை சாதாரண பிரச்சனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
    • தைராய்டு சுரப்பி என்பது ஒவ்வொருவரின் கழுத்திலும் பட்டாம்பூச்சி போன்ற வடிவத்தில் இணைக்கப்பட்ட 2 மடல்களை கொண்டுள்ளது.

    குழந்தையின்மை சிகிச்சையில் தைராய்டு என்பது மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. என்னிடம் சிகிச்சை பெற வரும் பெரும்பாலான பெண்கள், தைராய்டு தொடர்பான கேள்வியையே கேட்கிறார்கள். தைராய்டு பாதிப்பு இருக்கிற பெண்கள் கருத்தரிக்க முடியுமா என்பதுதான் அவர்களது கேள்வி. கிட்டத்தட்ட மூன்றில் ஒருவர் இந்த கேள்வியை கேட்கிறார்கள்.

    என்னிடம் சிகிச்சைக்கு வரும் பெண்களுக்கு பரிசோதனை செய்து விட்டு தைராய்டு பிரச்சனை இருக்கிறது என்று சொன்னால் அவர்களது முகமே வாடிப் போய்விடும். அவர்கள் தைராய்டு என்பதை மிகப்பெரிய பிரச்சனை என்று நினைத்து கவலைப்படுகிறார்கள்.

    தைராய்டு பிரச்சனையால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

    குழந்தையின்மையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தைராய்டு பிரச்சனை இருக்கும் நிலையில், அதை முழுமையாக கட்டுப்படுத்தினால் அவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும். அதனால் பின் விளைவுகள் எதுவும் ஏற்படாது.

    அதே நேரத்தில் தைராய்டு என்பதை சாதாரண பிரச்சனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனென்றால் தைராய்டு ஹார்மோன் நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்களின் வளர்சிதை மாற்றத்துக்கான அடிப்படையான பல விஷயங்களை கவனிக்கிறது.

     

    குறிப்பாக, குழந்தை பேறு என்று எடுத்துக்கொண்டால் கருமுட்டைகள், விந்தணுக்கள், கர்ப்பப்பை ஆகிய அனைத்தும் சீராக செயல்பட வேண்டும். ஒரு பெண் கர்ப்பம் தரிக்கின்றபோது உருவாகிற நஞ்சு, குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான சில ஊட்டச்சத்துக்கள் ஆகிய அனைத்துமே சீராக இருக்க வேண்டும். ஆனால் தைராய்டு பிரச்சனை இருந்தால் கர்ப்பம் மட்டுமல்ல, ஆரோக்கியமாக குழந்தை பேறு பெறுவது வரைக்கும் அந்த பெண்ணுக்கு பலவிதமான வளர்ச்சிதை மாற்ற பிரச்சனைகள் வரலாம்.

    எனவே கர்ப்ப காலகட்டத்தில் கண்டிப்பாக தைராய்டு என்பது ஒவ்வொரு செல்களின் வளர்சிதை மாற்றத்துக்கும் அத்தியாவசியமான ஒன்றாகும். இந்த தைராய்டு குறைவதால் பல நேரங்களில் குழந்தையின்மை பிரச்சனை ஏற்படலாம். மேலும் குழந்தை பேறு ஏற்படும் போது, கர்ப்ப காலத்தில் வரும் பிரச்சனைகளான கருச்சிதைவு, குறை பிரசவம், குறைபாடுள்ள குழந்தை பிறக்கலாம்.

    கர்ப்ப காலத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளான ரத்த சர்க்கரை அளவு குறைதல், வயிற்றில் குழந்தை இறப்பு, குழந்தையின் வளர்ச்சி குறைபாடுகள், பெண்களுக்கு உடல் எடை கூடுவதால் பிரச்சனை ஏற்படும் ரத்த அழுத்தம், உப்பு சத்து ஆகிய அனைத்துமே தைராய்டு பிரச்சனை இருக்கிற பெண்களுக்கு அதிகம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

    குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட பெண்கள் எவ்வளவு பேருக்கு இந்த தைராய்டு பிரச்சனை இருக்கும்? தைராய்டு பிரச்சனை குழந்தையின்மைக்கு வழி வகுக்குமா?

    பொதுவாக குழந்தையின்மையால் பாதிக்கப்படுகிற 15 சதவீதம் பெண்களில், கிட்டத்தட்ட 6 முதல் 22 சதவீதம் வரையிலான பெண்களுக்கு தைராய்டு பிரச்சனை இருக்கும். தைராய்டு பிரச்சனை இருக்கும் பெண்களில் கிட்டத்தட்ட 60 முதல் 65 சதவீதம் பெண்களுக்கு குழந்தையின்மை ஏற்படும். ஒருவேளை அவர்கள் கருத்தரித்தால் கருச்சிதைவு, குறை பிரசவம் ஆகிய பிரச்சனைகளால் பாதிக்கப்படுவார்கள்.

    எனவே குழந்தையின்மை சிகிச்சையில் தைராய்டு ஹார்மோன் பரிசோதனை என்பது மிக முக்கியமான ஒன்றாகும். குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களும் கர்ப்ப காலத்தில் கண்டிப்பாக தைராய்டு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தைராய்டு தாக்கம் அனைத்து செல்களையும் பாதிப்பதால் கண்டிப்பாக குழந்தை பேறுக்கு தைராய்டு பரிசோதனை மிக முக்கியமானதாகும்.

    தைராய்டு சுரப்பி என்பது ஒவ்வொருவரின் கழுத்திலும் பட்டாம்பூச்சி போன்ற வடிவத்தில் இணைக்கப்பட்ட 2 மடல்களை கொண்டுள்ளது. அந்த தைராய்டு சுரப்பியில் இருந்துதான் தைராய்டு ஹார்மோன் சுரக்கிறது. இந்த தைராய்டு ஹார்மோன் நமது உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகளில் பங்கு வகிக்கிறது. இந்த ஹார்மோன் சினைப்பையிலும் செயல்பாடுகளை ஊக்குவித்து கருமுட்டைகள் முதிர்ச்சி அடைவதற்கு உதவுகிறது.

    கருமுட்டைகளின் மேல் கிரானுலோசா என்ற செல் இருக்கும். அந்த கிரானுலோசா செல்கள்தான் கருமுட்டையின் வளர்ச்சிக்கு முக்கியமான பங்கை வகிக்கிறது. அதன் மூலமாகத்தான் அனைத்து ஹார்மோன்களும் அந்த கருமுட்டையின் செயல்பாடுகளை ஊக்குவித்து முட்டையின் வளர்ச்சி, முட்டையின் முதிர்ச்சி ஆகிய எல்லாவற்றுக்கும் அடிப்படையாக அமைகிறது.

    இதற்காக கிரானுலோசா செல்கள் மற்றும் கருமுட்டையை சுற்றியுள்ள அனைத்து செல்களிலும் தைராய்டு ஏற்பி காணப்படும். இந்த தைராய்டு ஏற்பியானது அந்தந்த செல்களில், அதனுடைய செயல்பாடுகளை ஊக்குவித்து அந்த கருமுட்டைகளை நன்றாக வளர்ச்சி அடைய வைக்கும் பணிகளை செய்கிறது.

    எனவே தைராய்டு குறைவாக இருக்கும் பெண்களுக்கு கருமுட்டைகளை சுற்றியுள்ள செல்களில் இருக்கும் தைராய்டு ஏற்பியில் சரியான செயல்பாடு இருக்காது. இதனால் கருமுட்டைகளின் வளர்ச்சி, முதிர்ச்சி ஆகியவை சீராக அமையாது.

    தைராய்டு பரிசோதனையை கண்டிப்பாக செய்ய வேண்டுமா? அதை எப்படி கணக்கிடுவது?

    குழந்தையின்மை சிகிச்சைக்கு வரும் பெண்கள் கண்டிப்பாக தைராய்டு பரிசோதனை செய்ய வேண்டும். இந்த தைராய்டு பரிசோதனையில் உங்களுக்கு இருக்கும் தைராய்டு அளவானது டி.எஸ்.எச். (தைராய்டு தூண்டுதல் ஹார்மோன்) என்ற வகையில் கணக்கிடப்படுகிறது. இந்த டி.எஸ்.எச். அளவானது குறிப்பாக எல்லா பெண்களுக்கும் 3.5 ஆக இருக்கிறது. இது சரியான அளவுதான் என்பார்கள்.

    ஆனால் குழந்தையின்மை சிகிச்சைக்கு வரும் பெண்களுக்கு இந்த அளவை விட கொஞ்சம் குறைவாகத்தான் உயர் நிலையை கணக்கிடுவோம். ஏனென்றால் டி.எஸ்.எச். அளவானது 3 முதல் 3.5 வரை இருக்கும் பெண்களுக்கு கூட இந்த குறைபாடுகளால் கருமுட்டைகளின் தரம், கருமுட்டைகளின் கருத்தரிக்கும் தன்மை ஆகியவை குறைவாகிறது.

    குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட பெண்களில் தைராய்டு பிரச்சனை உள்ள 20 சதவீதம் பெண்களுக்கு தைராய்டு அளவு குறைவாக இருப்பதை இந்த வகையில் தான் நாம் கண்டுபிடிக்க முடியும்.

    கருமுட்டை வளர்ச்சிக்கான ஹார்மோன்களில் ஒன்றான கோனோ டோட்ரோபின் மூளையில் உள்ள ஹைப்போதலாமசில் இருந்து சுரக்கிறது. இந்த ஹார்மோனும் தைராய்டு பிரச்சனை ஏற்படுவதில் முக்கியமான பங்கை வகிக்கிறது. ஏனென்றால் இதில் இருந்து வருகிற ஹார்மோன் மூளையில் உள்ள தைராய்டின் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் போது தைராய்டு ஹார்மோன் அளவு குறைகிறது.

     

    டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிசிச்சை நிபுணர், செல்:72999 74701

    டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிசிச்சை நிபுணர், செல்:72999 74701

    தைராய்டு அளவு குறைவானால் தானியங்கி முறையில் தைராய்டு அளவை சரி செய்வதற்காக நமது மூளையில் இருந்து ஒரு சிக்னல் வரும். இதை தைரோட்ரோபின் ரிலீசிங் ஹார்மோன் என்று சொல்வோம். இந்த தைரோட்ரோபின் ரிலீசிங் ஹார்மோன் ஹைபோதலாமசில் செயல்பட்டு தைராய்டு சிமுலேட்டிவ் ஹார்மோனை சுரக்கும். அதோடு சேர்த்து புரோலாக்டின் என்ற ஹார்மோனையும் அதிகரிக்கும்.

    இந்த புரோலாக்டின் ஹார்மோன் அதிகமாகும்போது, அதுவும் முட்டையின் வளர்ச்சிக்கு பாதகமாக அமைகிறது. தைராய்டு குறைவாக இருக்கும் நிலையில், புரோலாக்டின் ஹார்மோன் அதிகமாகும் போது, மறைமுகமாக இது கோனோ டோட்ரோபின் ஹார்மோன் சுரப்பை பாதிக்கிறது.

    இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குழந்தை பேறு பெறுவதில் பலவிதமான சிக்கல்கள் ஏற்படுகிறது. இதனால் குறிப்பாக கரு முட்டைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். கருமுட்டைகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டால் மாதவிலக்கு தள்ளித் தள்ளி வரும். சில பெண்களுக்கு மாதவிலக்கு வரவே வராது. சில நேரங்களில் மாதவிலக்கு அதிகமாக போகும்.

    இந்த மாதிரியான பலவித குறைபாடுகளால் கருமுட்டைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். கருமுட்டைகள் சரியாக வளரவில்லை என்றால் குழந்தையின்மை பிரச்சனை ஏற்படும். சில நேரங்களில் முட்டைகளில் கரு உருவானால் கூட இந்த குறைபாடுகளால் கருவின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டு கருச்சிதைவு, குறைபாடுள்ள குழந்தை மற்றும் குறைவான எடை கொண்ட குழந்தை பிறக்கும்.

    குழந்தையின்மை சிகிச்சைக்காக வரும் பெண்களுக்கு தைராய்டு பாதிப்புகளை சரி செய்வதற்கும், அவர்கள் ஆரோக்கியமான குழந்தை பெற்றெடுப்பதற்கும் வழிமுறைகள் உள்ளன. அவை என்னென்ன என்பது பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

    • வெளிநாட்டிற்கு கொண்டு செல்லும் ஏர் கார்கோ பில் தொகை மட்டும் ₹32,000 வந்தது.
    • காசு பணம் கொடுத்து வாங்குறதுல ஒருக்காலும் அம்மாவோட பாசமும், அம்மாவோட கைப்பக்குவமும், அம்மா சமையல் ருசியும் இருக்காதும்மோன்னு என்னோட மவ அடிக்கடி சொல்லுவா..

    மகன்களுக்காக சிவகாசி நண்பனிடம் ஆன்லைனில் ஆர்டர் செய்த பட்டாசை வாங்க நெல்லை ஜங்ஷனுக்கு சென்றிருந்தேன்.

    பட்டாசு டெலிவரி எடுக்கும் லாரி புக்கிங் ஆபீஸ் அருகில் உள்ள தனியார் கொரியர் ஆபீசில் திரண்டிருந்த வழக்கத்திற்கு மாறான மக்கள் கூட்டம் லேசான வியப்பை தந்தது.

    கூட்டத்தில் பெரும்பாலானோர் அறுபதை நெருங்கி கொண்டிருந்த தலைமுறையினராக இருந்தனர்.

    கொரியர் ஆபீஸ் அருகில் உள்ள ஜெராக்ஸ் கடையில் விற்பனையாகும் முதியோர் உதவித்தொகை விண்ணப்பத்தை வாங்க வந்தவர்களாக இருப்பார்களோ என நினைத்த என் நினைப்பை சட்டென்று மாற்றிக் கொள்ள வைத்தது அவர்களின் தோரணையும், அங்கு நடந்து கொண்டிருந்த செயல்களும்.

    கூட்டத்தில் இருந்த அத்தனை பேரும் எனது ஊரின் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த மத்திய, உயர்தர நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆவார்கள்.

    கூட்டத்தில் பெரும்பாலானோர் அனைவரும் தாங்கள் கொண்டு வந்த அட்டைப் பெட்டி பார்சலோடு வரிசையில் காத்துக் கொண்டிருந்தனர்.

    சிலர் கொரியர் ஆபீசில் வாங்கிய அட்டைப்பெட்டியில் தாங்கள் கொண்டு வந்த அட்டைப் பெட்டியில் பொருட்களை அடுக்கி வைத்துக்கொண்டு பாதுகாப்பிற்காக மெலிதான பிளாஸ்டிக் பேப்பரால் அட்டைப்பெட்டியை பொதிந்து கொண்டிருந்தனர்.

    "அண்ணாச்சியோட பலசரக்கு கடையில மளிகை சாமான் வாங்கிட்டு வரும்போது காலி அட்டைப்பெட்டிய வாங்கிட்டு வாங்கன்னு சொன்னேன்..

    வீட்டில வைச்சு பார்சல் பண்ணிட்டு வந்திருந்தா பார்சலோட எடைய போட்டதும் அட்ரஸ எழுதி பணத்த கட்டிட்டு போயிருக்கலாம்.

    நான் சொல்லுறத என்னைக்கு தான் நீங்க கேட்டிருக்கிய. இங்க வந்து அறக்க பறக்க வாங்கிட்டு வந்த பொருட்கள ஏனோ தானோன்னு வைச்சு அடுக்க வேண்டியதா இருக்கு.." என ஒரு நடுத்தர வயது பெண்மணி தனது கணவரோடு பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது வயது அறுபதை கடந்த பெரியவர் சற்று சங்கோஜத்தோடு என்னிடம் நெருங்கி வந்து தம்பி! என அழைத்தார்.

    இந்த அட்டைப் பெட்டியில் இந்த பொருட்களை எல்லாம் கொஞ்சம் அடுக்கி வைச்சு பார்சல் பண்ணி தந்துடுவீங்களா.! என கேட்டார்.

    அந்த பெரியவர் கொண்டு வந்த அட்டைப்பெட்டியில் ஒவ்வொரு பொருட்களாக அடுக்கத் துவங்கினேன்.

    ஜவுளிக்கடை கட்டைப் பையில் அடுக்கி வைத்திருந்த பட்டுச்சேலையையும், மெல்லிய ரோஸ் மற்றும் கிரே வண்ணத்தில் இருந்த பட்டு வேட்டிச் சட்டையை முதலில் வைத்து மீதமுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக அட்டைப் பெட்டியில் அடுக்கி வைக்கத் துவங்கினேன்.

     

    நடுத்தர அளவிலான காற்று புகாத பிளாஸ்டிக் கண்டெய்னர்களில் அதிரசம், அச்சு முறுக்கு, கைச்சுற்று முறுக்கு, முந்திரிக்கொத்து, பலகாரம், இட்லிப் பொடி, பருப்புப் பொடி, நார்த்தங்காய் ஊறுகாய், மோர் வத்தல் என நிறைய தின்பண்டங்களும், வறுத்து அரைத்த சாம்பார் பொடி, வத்தல் பொடி, மீன் குழம்பு பொடி வகையறாக்கள் போன்றவை இருந்தன.

    அதனுடன் சுடிதார், டி சர்ட் என வீட்டில் உடுத்தும் கேசுவல் டைப் உடைகளும் இருந்தன.

    தின்பண்டங்கள், துணி என கொண்டு வந்த அத்தனை பொருட்களையும் அடுக்கி வைத்து அட்டைப் பெட்டியை சுற்றி டேப் ஒட்டி பிளாஸ்டிக் பேப்பரால் பொதிந்து அதன் மீதும் டேப் ஒட்டி முடித்தேன்.

    அமெரிக்க தேச கலிபோர்னியா மாகாணத்திற்கு செல்லும் விலாசம் அது. யாருக்கு அனுப்புறீங்க இந்த பார்சலை என தெரிந்து கொள்ளலாமா? என அந்த பெண்மணியிடம் கேட்டேன்.

    என்னோட மகளுக்கு தான் அனுப்புறோம் தம்பி இந்த பார்சலை. மக, மருமொவன் ரெண்டு பேரும் அமெரிக்காவில் இருக்குதாவ! அவங்களுக்கு தான் அனுப்புறோம் தம்பி! என்ற தகவலை அந்த பெண்மணி சொன்னார்.

    அட்டைப் பெட்டியின் எடை கிட்டத்தட்ட 15 கிலோ அளவு இருக்கும்.

    வெளிநாட்டிற்கு கொண்டு செல்லும் ஏர் கார்கோ பில் தொகை மட்டும் ₹32,000 வந்தது.

    அட்டைப் பெட்டியில் இருக்கும் பட்டுப்புடவை மற்றும் அதிரச பண்ட வகையறாக்களின் மதிப்பு கிட்டத்தட்ட 25,000 ரூபாய்க்கு மேல் வரவே வராது.

    "சுண்டக்கா கால் பணம் சுமைக்கூலி முக்கால் பணம்" என்பதைப் போல 25,000 ரூபாய் பொருட்களை 32,000 ரூபாய் கொடுத்து வெளிநாட்டுக்கு அனுப்புகிறார்களே...

    ரொம்பச் சிக்கனமாக பார்த்து பார்த்துச் செலவு பண்ணும் முந்தைய தலைமுறையினரான அவர்களைப் பார்த்து மனதில் எழுந்த சந்தேகத்தை மெதுவாகக் கேட்டேன்.

    அம்மா!!! நம்ம நாட்டுக்காரங்க நிறைய பேர் இப்போ வெளிநாடுகளில் வேலை செய்வதால் வெளிநாட்டில் உள்ள ஷாப்பிங் மால்களில் எல்லாம் நம்மூரு ஊறுகாயில் இருந்து பொன்னி அரிசி, காய்கறி, சக்தி மசாலா பொடி, தின்பண்டங்கள் வகை என எல்லா பொருட்களுமே கிடைக்குது.

    பார்சலில் இருக்கும் பொருட்களின் விலையை விட அனுப்புற செலவு அதிகமாக இருக்குதே..

    இந்த பொருட்களை அங்கேயே வாங்கிக்க சொல்ல வேண்டியது தானே. ரெட்டை செலவு பண்ணி இங்கேயிருந்து அனுப்பணுமா? என அந்த தம்பதியரை பார்த்துக் கேட்டேன்.

    சற்று நேரம் அந்த பார்சலை உற்றுப் பார்த்து கொண்டிருந்த அந்த பெண்மணி மெதுவாக என்னைப் பார்த்து பேசத் துவங்கினார்கள்.

    மூணு அக்கா, நாலு அண்ணன்களோடு பெரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு ஒரு மகனும் ஒரு மகளும் தான் பிள்ளைங்க தம்பி.

    பள்ளிப் படிப்பை முடிச்சிட்டு பிள்ளைங்க ரெண்டு பேரும் கோயம்புத்தூர் என்ஜினியரிங் கல்லூரியில் தான் படிச்சாங்க.

    சனி, ஞாயிறு விடுமுறைன்னா மத்த புள்ளைங்க மாதிரி ஹாஸ்டலில் தங்காம என்னோட மக வெள்ளிக்கிழமை சாயங்காலம் பஸ்ஸ புடிச்சு இங்கே வந்துடுவா.

    சனி, ஞாயிறு முழுசும் வீட்டில் இருந்து படிக்குறத படிச்சிகிட்டு எழுதறத எழுதிக்கிட்டு மறுபடியும் அறக்கப் பறக்க ஓடுவா. ஒரு தடவை பஸ் லேட்டாயிடுச்சுன்னு சனிக்கிழமை காலையில பதினோரு மணிக்கு வீட்டுக்கு வந்தா.

    பசி தாங்காம காலையில ஆறு மணிக்கு நான் சுட்டு பாத்திரத்தில் வைச்சு லேசா காஞ்சி போயிருந்த இட்லிய வேக வேகமா சாப்பிட்டா.

    நேரமாயிடுச்சுல்லா மக்கா!! வரும் வழியில ஏதாவது ஓட்டலில் சாப்பிட்டு வந்திருக்கலாம் தானேன்னு கேட்டேன்.

    யம்மோ! நான் சனி, ஞாயிறு லீவுல இங்க வரதுக்கு காரணமே உன்னோட கையால நீ சமைக்குறத சாப்பிட தான்.

    ஆயிரம் சொல்லு ஒன்னோட கைப்பக்குவமும், ஒன்னோட சமையல் ருசியும் எந்த ஓட்டல் சாப்பாட்டிலும் கிடைக்காதுன்னு சொல்லுவா எம் புள்ள!

    அவ அப்படி சொல்லுறத கேக்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கும் எனக்கு. அந்த ரெண்டு நாளும் எம்புள்ளைகளுக்கு புடிச்சதை பாத்து பாத்து சமைச்சு கொடுப்பேன்.

    படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்கும், நல்ல சம்பளம் கிடைக்கும், சீக்கிரம் முன்னேறி டலாமுன்னு இப்போ உள்ள புள்ளைங்க கண் காணாத தேசத்தில போய் வேலை பாக்குதுங்க.

    நல்ல நாளு, பண்டிகை நடக்கும்போது புள்ளைங்களுக்கு கொடுக்காம பண்டம் பலகாரத்தை ஆக்கி பெத்தவங்க எங்களாலும் இங்கிருந்து தனியா சாப்பிட முடியல.

    ஆக்குன பலகாரத்தை பிச்சி வாயில ஒரு துண்டு வைக்கும் போதே எம்மவளுக்கு இது பிடிக்குமே! புள்ள சாப்பிட்டாளோன்னு நெனைப்பு மனசுல வரும் போதே வாய்க்குள்ள இருக்குற பலகாரம் தொண்டைக்குள்ள இறங்காது.

    காசு, பணம் இருந்தா விரும்பியத வாங்கி வாய்க்கு ருசியா சாப்பிட்டு வயித்த நிறைச்சுக்கலாமுன்னு சொல்லுறவன் முட்டாப் பயலுவம்மோ.

    காசு பணம் கொடுத்து வாங்குறதுல ஒருக்காலும் அம்மாவோட பாசமும், அம்மாவோட கைப்பக்குவமும், அம்மா சமையல் ருசியும் இது எல்லாத்துக்கும் மேலா எங்கம்மையோட வாசமும் ஒருக்காலும் இருக்காதும்மோன்னு என்னோட மவ அடிக்கடி சொல்லுவா..

    அதான் தீபாவளிக்கு புள்ளைங்க சாப்பிடட்டுமேன்னு பலகாரம் செய்து அனுப்பி வைக்க வந்தோம் என சொல்லி பார்சலை அனுப்பி விட்டு பில்லை போட்டோ எடுத்து வாட்ஸ் அப்பில் தனது மகளுக்கு அனுப்பினார்கள்.

    அனுப்பி விட்டு இப்போ அங்கே ராத்திரி தம்பி. புள்ள தூங்கிட்டு இருப்பா. மெசேஜை முழிச்சதும் பார்த்துட்டு போன் பண்ணுவா என சொல்லி விட்டு பேசுவதை மேலும் தொடர்ந்தார்.

    பொருட்களோட விலையை விட பார்சல் அனுப்புற விலை அதிகம் தான். ஆனா தீபாவளி பண்டிகை நாளுல எம்புள்ள எங்கையால செஞ்ச பலகாரத்தையும், நான் எடுத்து கொடுத்த துணிய உடுத்துகிட்டு சந்தோசமா தீபாவளிய பண்டிகையை கொண்டாடுவதை வீடியோ காலில் பாக்கும்போது இந்த பார்சல் அனுப்புன பணம் பெருசா தெரியாது தம்பி.

     

    சுரேஸ்வரன் அய்யாப்பழம், (சில்வண்டு)

    சுரேஸ்வரன் அய்யாப்பழம், (சில்வண்டு)

    ரொம்ப நன்றி தம்பி... கடவுளா பார்த்து உன்ன அனுப்பி வச்சிருக்காரு . நீ வரலைன்னா ரொம்ப சிரமப்பட்டு இருப்போம்... போயிட்டு வாறோம்!! என என்னிடம் சொல்லி விட்டு புறப்பட்டுச் சென்றார்கள்.

    சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம், வேலூர், நாகர்கோவில் என தமிழகம் முழுவதும் இந்த சூழல் தான். வெளிநாடுகளில் வசிக்கும் தங்கள் பிள்ளைகள், பேரன் பேத்திகளுக்கு தீபாவளி துணிமணி, பண்டம் பார்சல்களை கொரியர் சென்டர்களில் வரிசையில் காத்துக் கிடந்து அனுப்பிய வண்ணம் உள்ளனர் பெற்றோர்.

    தீபாவளி இந்தியாவுல தான் பண்டிகையா கொண்டாடுறதா நாம நினைச்சுகிட்டு இருக்கோம். தீபாவளி உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு யுனிவர்சல் பண்டிகை.

    நேபாளம், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிஜி போன்ற நாடுகளிலும் தீபாவளியை பொது விடுமுறை தினமாக அறிவிச்சு தீபாவளியை உற்சாகமாக கொண்டாடுறாங்க. அதனால் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, அரேபியா, ஐரோப்பியா என தொலைதூர நாடுகளில் இருக்கும் பிள்ளைகளுக்கு இங்குள்ள பெற்றோர்கள் பாசத்துடன் அனுப்பும் இந்த புத்தாடையும் பண்டமும், அவர்களுக்கு தீபாவளியை சொந்த ஊரில் கொண்டாடுவது போன்ற சந்தோசத்தை ஏற்படுத்தும்.

    பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் தீபாவளி பண்டம் செய்து கொடுத்த மனநிறைவு உண்டாகும்.

    பெற்றோர்- பிள்ளைகள் இடையே கண்டம் கடந்தும் பயணிக்கும் இந்த பாச உணர்வு தமிழர்களின் வாழ்வியல் கலாசாரத்தை பறைசாற்றி நிற்கிறது.

    தொடர்புக்கு,

    isuresh669@gmail.com

    • செவ்வாய் பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு 45 நாட்களுக்கு ஒருமுறை இடப்பெயர்ச்சி செய்வார்.
    • நிலம், வீடு, வாகனங்கள் போன்றவற்றை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.

    சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே

    குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ

    மங்களச் செவ்வாய் மலரடி போற்றி

    அங்காரகனே அவதிகள் நீக்கு

    விண்வெளியில் பூமிக்கு அடுத்துள்ள கிரகம், செவ்வாய். மண்ணாசையை குறிக்கும் கிரகம். ஜீவராசிகள் உயிர் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை செவ்வாயில் இருப்பதால் இதற்கு 'பூமிக்காரகன்' என்ற பெயரும் உண்டு. இதன் பிற பெயர்கள், சேய், அங்காரகன், குஜன் என்பதாகும். கிரகங்களில் மிகக் கடினமான உறுதியான, வலிமையான உஷ்ணமான கிரகம் செவ்வாய். ஜோதிட சாஸ்திரத்தில் சகோதரர்கள் நிலை பற்றிக் கூறுவதால் சகோதரகாரகன்' என்ற பெயரும் உண்டு. சகோதரம், வீரம், வெட்டுக்காயம், தீக்காயம், விபத்தில் ரத்தம் அதிகமாக உடம்பில் இருந்து வெளியேறுதல், எதிரிகள், காம இச்சை, கெட்ட பெயர் எடுத்தல், மழை பெய்யாமல் போகுதல், விளையாட்டு கலை, போர்க்கலை போன்றவை செவ்வாயின் காரத்துவம். செவ்வாய்க்கு 4, 7, 8 ஆகிய பார்வைகள் உண்டு.

    2, 4, 7, 8, 12 ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் உண்டு.. சுய ஜாதகத்தில் செவ்வாய் வலிமை பெற்றவர்கள், தைரியம், நிர்வாகத் திறன், முரட்டுத்தனம், பிடிவாதம், கோபம், அதீத காம உணர்வு, போட்டி மனப்பான்மை மிக்கவர்களாக இருப்பார்கள். அத்துடன் அரசியல், மத்திய அரசுப்பணியாளர், சீருடைப் பணியாளர்கள், ராணுவம், விளையாட்டு வீரர், தற்காப்பு கலையில் ஆர்வம், கட்டுமஸ்தான உடல்வாகு உள்ளவராகவும் இருப்பர். செவ்வாய் பலம் பெற்றவர்களுக்கே, வீடு மற்றும் வாகன யோகம் சிறப்பாக அமையும். ஜாதகரின் சகோதரர்கள் நல்ல உயர்ந்த நிலையில், ஆரோக்கியமானவர்களாக இருப்பார்கள். சகோதரர்களுடன் நட்புறவு ஏற்படும். அதே வேளையில் ஜாதகர் பெண்ணாக இருந்தால், அவரது கணவர் உயர்ந்த நிலையில் இருப்பார்.

    செவ்வாய் பெயர்ச்சி விபரம்:

    இத்தகைய சிறப்பு மிகுந்த செவ்வாய் பகவான் 20.10.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு சென்று உள்ளார். கடக ராசி செவ்வாய் பகவானின் நீச்ச வீடு. கடக ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய் பகவான் 7.12 2024 அன்று கடக ராசியில் வக்ரமடை கிறார். 27.1.2025 அன்று வக்ர கதியில் மீண்டும் மிதுன ராசிக்கு செல்கிறார். மிதுன ராசியில் 24.2.2025-ல் வக்ர நிவர்த்தியாகிறார்.

    3.4.2025 மிதுனத்தில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி யாகி நீசமடைகிறார். 7.6.2025 அன்று கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார். கடக ராசியில் செவ்வாய் பகவான் சஞ்சரிக்கும் காலங்களில் தனது 8ம் பார்வையால் மார்ச் 29 வரை சனி பகவானை பார்க்கிறார். செவ்வாய் கடகத்தில் நீசமடைவது சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதே நேரத்தில் சில நேரங்களில் நீச பங்கமடைவார்.

    செவ்வாய் பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு 45 நாட்களுக்கு ஒருமுறை இடப்பெயர்ச்சி செய்வார். ஆனால் தற்போது மிதுனம் மற்றும் கடக ராசியில் வக்ர மற்றும் நேர்கதியால் சுமார் ஏழரை மாத காலம் சஞ்சாரம் செய்வதால் 12 ராசியினருக்கும் உண்டாகும் பலன்களைப் பார்க்கலாம்.

    மேஷம்:

    மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் ராசிக்கு 4-ம் வீட்டில் நீசமடைந்து வக்ர கதியில் 3-ம்மிடம் சென்று மீண்டும் 4-ம்மிடத்தில் நீசமடைகிறார். நிலம், வீடு, வாகனங்கள் போன்றவற்றை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். பொருளாதார நிலை மேம்படும். அலுவலகத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். . ஜாதகர் மற்றும் தாயின் உடல்நிலையை சீராக பராமரிக்க வேண்டும். வம்பு, வழக்கை ஒத்தி வைக்கவும். யாருக்கும் ஜாமின் போடக்கூடாது. முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளவும்.

    பரிகாரம்

    ஸ்ரீ சரபேஸ்வரரை வழிபடவும்.

    ரிஷபம்

    ரிஷப ராசிக்கு 7, 12-ம் அதிபதியான செவ்வாய் ராசிக்கு 3ல் நீசமடைந்து வக்ர கதியில் 2-ம்மிடம் செல்கிறார். மீண்டும் நேர்கதியில் 3-ம்மிடத்தில் நீசமாகிறார். இடப்பெயர்ச்சி உண்டாகும். ஞாபகசக்தி, மனோதிடம் குறையும். வாழ்க்கைத்துணை மற்றும் சகோதர சகோதரிகளை, அண்டை அயலாரை அனுசரித்து செல்ல வேண்டும். மறைமுக வருமானம் கிடைக்கும் வீடு, வாகனம், நிலம் வாங்க ஏற்ற கால கட்டம். திருமண வாழ்க்கை, காதல் வாழ்க்கையிலும் பிரச்சனைகள் ஏற்படலாம்.

    பரிகாரம்

    ஸ்ரீ துர்க்கையை வழிபடவும்.

    மிதுனம்

    மிதுன ராசிக்கு 6, 11ம்- அதிபதி செவ்வாய் தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தில் நீசமடைகிறார். பின் வக்ர கதியில் ராசிக்குள் நுழைந்து நேர்கதியில் மீண்டும் நீசமாகிறார்.

    தேவையற்ற பேச்சுக்களை குறையுங்கள். எப்படியாவது வருமானம் குவியும். வரவிற்கு ஏற்ற செலவு உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். பங்குச் சந்தை முதலீட்டையும், புதிய தொழில் முயற்சிகளையும் தவிர்க்கவும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த வேண்டும்.

    பரிகாரம்

    ஸ்ரீ லட்சமி நரசிம்மரை வழிபடவும்.

    கடகம்

    கடக ராசியில் 5,10-ம் அதிபதி செவ்வாய் ராசியில் நீசமடைகிறார். வக்ர கதியில் 12-ம் சென்று மீண்டும் நேர்கதியில் ராசிக்குள் நுழைகிறார். வேலைப்பளு கூடும். முக்கிய பதவியில், நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும். தொழிலில் அகலக்கால் வைக்கக்கூடாது. அஷ்டமச் சனியின் காலம் என்பதால் வார்த்தையால் பேசுவதை விட வாழ்ந்து காட்டுவதே சிறப்பு. குடும்ப உறுப்பினர்களிடமும், அலுவலகத்திலும் கோபமான பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள்.

    பரிகாரம்

    முருகனுக்கு செவ்வாய் கிழமை பால் அபிசேகம் செய்து வழிபடவும்.

    சிம்மம்

    ராசிக்கு 12-ம்மிடமான விரய ஸ்தானத்தில் சிம்ம ராசிக்கு 4, 9-ம் அதிபதியான செவ்வாய் பகவான் நீசம் பெறுகிறார். பின் வக்ர கதியில் லாப ஸ்தானம் சென்று மீண்டும் நீசமடைகிறார். நம்மால் நேற்றை சரிசெய்ய முடியாது ஆனால் நாளையை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் வாழ வேண்டும்.

    விரைய செலவுகள் அதிகரிக்கும். சுப விரைய செலவுகளாக மாற்றிக் கொள்ளுங்கள். உடல் நலப்பிரச்சனைகளுக்கு உரிய வைத்தியம் செய்ய வேண்டும். சொத்து வாங்குவது விற்பதை தவிர்க்க வேண்டும்.

    பரிகாரம்

    சுவாமிமலை முருகனை வழிபடவும்.

    கன்னி

    கன்னி நாசிக்கு 3, 8-ம் அதிபதியான செவ்வாய் லாப ஸ்தானத்தில் நீசமடைகிறார். மீண்டும் 10-ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் வக்ர கதியில் சென்று லாப ஸ்தானத்தில் நேர்கதியில் நீசமாகிறார்.வம்பு, வழக்குகள் வெற்றியாகும். ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பயம் விலகும்.

    தீமைகள் விலகி நன்மைகள் அதிகம் நடைபெறும். கை மறதியாக வைத்த பொருட்கள், காணாமல் போன பொருட்கள் கிடைக்கும்.தொழில் முன்னேற்றம், லாபம் மகிழ்ச்சி தரும். திருமணத் தடை அகலும். புதிய முயற்சிகள் பலிக்கும்.

    பரிகாரம்

    வீரபத்திரரை வழிபடவும்.

    துலாம்

    துலாம் ராசிக்கு 2, 7-ம் அதிபதி செவ்வாய் 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தில் நீசமாகிறார். வக்ர கதியில் பாக்கிய ஸ்தானம் சென்று மீண்டும் நீசமாகிறார். பேசும் பேச்சுக்களில் கவனம் தேவை.

    தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். புதிய கூட்டுத் தொழில் துவங்குவதை தவிர்க்கவும். திருமண முயற்சி இழுபறியாகும். தம்பதிகள் விட்டுக்கொடுத்து செல்லவும். புத்திர பிராப்தம் சித்திக்கும்.

    பரிகாரம்

    தினமும் கந்த சஷ்டி கவசம் கேட்கவும்.

    விருச்சிகம்

    விருச்சிக ராசி அதிபதி மற்றும் 6ம் அதிபதியான செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் நீசமாகிறார். ஆன்மீக நாட்டம் அதிகமாகும். வெளியூர், வெளிநாட்டு வேலை முயற்சி கைகூடும். அறுவை சிகிச்சை வெற்றி தரும். தைரியம் கூடும்.

    அதிர்ஷ்டத்தை அதிகம் நம்புவீர்கள். உடல் நலப்பிரச்சனைகள் தீரும். தந்தையை அனுசரித்து செல்ல வேண்டும். கடன் பிரச்சனை குறையும். புதிய வேலை கிடைக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகமாகும். இன்சூரன்ஸ் முதிர்வு தொகை கிடைக்கும்.

    பரிகாரம்

    பழநி முருகனை வழிபடவும்.

    தனுசு

    தனுசு ராசிக்கு 5,12-ம் அதிபதியான செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் நீசமாகிறார். வக்ர கதியில் 7-ம்மிடம் சென்று நேர் கதியில் மீண்டும் அஷ்டம ஸ்தானத்தில் நீசமாகிறார். செயற்கை கருத்தரிப்பு முறையை தவிர்க்கவும். வெளியூர் பயணம் நன்மையை தராது. காதல் திருமணம் வம்பு, வழக்கில் முடியும். கையிருப்பு குறையும். பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகமாகும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    குழந்தைகளை சொந்த பொறுப்பில் கண்காணிக்கவும்.

    பரிகாரம்

    தினமும் சிவபுராணம் படிக்கவும்.

     

    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி, செல்: 98652 20406

    'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406

    மகரம்

    மகர ராசிக்கு 4, 11-ம் அதிபதி செவ்வாய். ராசிக்கு 7-ல் நீசமாகி 6-ம்மிடத்திற்கு வக்ர கதியில் சென்று மீண்டும் 7-ம் மிடத்தில் நீசமாகிறார்.

    வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு மகிழ்ச்சியை பெற முடியாது. அமைதியின்மை இருக்கலாம். வேலையில் மாற்றம் ஏற்படலாம். பணம் ஈட்ட கூடுதல் முயற்சிகளை எடுக்க வேண்டும். பணம், நகை போன்ற விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வையுங்கள். போட்டி தேர்வில் வெற்றி உண்டு. சிலருக்கு மறு விவாகம் நடக்கும். கடன் பெற்று சொத்துகள் வாங்கும் முயற்சி பலிக்கும்.

    பரிகாரம்

    ஸ்ரீ பிரத்யங்கரா தேவியை வழிபடவும்.

    கும்பம்

    கும்ப ராசிக்கு 3, 10-ம் அதிபதியான செவ்வாய் பகவான் ராசிக்கு 6-ல் நீசம் பெற்று வக்ர கதியில் 5-ம்மிடம் சென்று மீண்டும் 6ம்மிடத்தில் நீசமாகிறார்.

    செலவுகள் அதிகரிக்கும் என்பதால் சிக்கனமாக இருக்கவும். தம்பதியர் இடையே ஒற்றுமை உணர்வுகள் அதிகரிக்கும். கடன், நோய் நிவர்த்தி உண்டு. கால்நடை வளர்ப்பு, ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்பவர்கள் அதிக பலன்களைப் பெறுவார்கள். பங்குச் சந்தையில் லாபம் காணலாம்.

    புதிய உத்தியோகம் மாற வாய்ப்பு உள்ளது. பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும்.

    பரிகாரம்

    குலதெய்வ வழிபாடு மேன்மை தரும்.

    மீனம்

    மீன ராசிக்கு 2, 9ம் அதிபதியான செவ்வாய் ராசிக்கு 5ல் நீசம் வக்ரம் என 4, 5ம் இடங்களில் சஞ்சாரம் செய்கிறார்.வீடு, நிலம், வண்டி வாகனம் வாங்கலாம். ஒருமுறைக்கு இருமுறை தெளிவாக விசாரித்து வாங்குவது நல்லது.பேசும் பேச்சில் நிதானமும் கவனமும் தேவை.

    பேச்சில் கோபம் வேண்டாம். வேலையில் திடீர் பதவி உயர்வு கிடைக்கும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்கவும். குடும்ப உறுப்பினர்களுடனும் நல்ல ஒற்றுமை இருக்கும். சிலர் ஆன்மீக பயணம், வெளிநாட்டு பயணம் செல்லலாம்.

    பரிகாரம்

    திருச்செந்தூர் முருகனை வழிபடவும்.

    இந்த செவ்வாயின் நீச, வக்ர காலங்களில் செவ்வாய்க்கிழமை சிவப்பு துவரை தானம் செய்ய வேண்டும். தினமும் கந்த சஷ்டி கவசம் கேட்க வேண்டும் அல்லது பாராயணம் செய்தல் வேண்டும். செவ்வாய் தசை காலங்களில் சிரமம் மிகுதியாக இருந்தால் ரத்த தானம் செய்ய வேண்டும். பூமி மற்றும் உடன் பிறந்தவர்களால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு, சிவப்பு நிற பசுவை தானம் வழங்க வேண்டும். கும்பகோணம் வைத்தீஸ்வரன் ஆலயம் சென்று வழிபட்டு வரலாம்.

    ×