என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மகத்துவம் நிறைந்த புனித நர்மதை
    X

    மகத்துவம் நிறைந்த புனித நர்மதை

    • கர்ம வினைகளால் படாத பாடுபடும் மக்களுக்கு புனித நர்மதை நதி ஒரு வரப்பிரசாதம் ஆவாள்.
    • நர்மதா என்ற பெயரை உச்சரித்தாலும், கேட்டாலும், பாவங்கள் அனைத்தும் தொலைந்து விடும்.

    உலகத்தில் உள்ள எல்லா தேசங்களிலும் நம் பாரத தேசம் மட்டுமே புண்ணிய பூமி என்றும் "தபோ பூமி" என்றும் அழைக்கப்படுகிறது. இதற்குக் காரணம் பஞ்சபூத தத்துவங்களை உள்ளடக்கிய இயற்கையின் அனைத்து வடிவங்களையும் நாம் வணங்கி போற்றுகின்றோம்.

    பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மாபெரும் ரிஷிகள், மகான்கள், சித்தர்கள் மற்றும் ஆத்ம ஞானிகளும், நம் தேசத்தில் ஓடும் புண்ணிய நதிகளை கண்டறிந்து அவற்றின் மகிமையை எல்லோருக்கும் எடுத்து கூறினர்.

    பொதுவாக புனிதமான நதி என்று நாம் கங்கை நதியை வணங்குகிறோம். ஆனால், வருடத்திற்கு ஒருமுறை கங்கை நதியே, ஒரு கரிய பசுவின் உருவில், நர்மதா நதியை தேடிச்சென்று நீராடி, வெண்மை நிறத்தைப்பெற்று, தன் பாவங்களை போக்கிக் கொள்வதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    தினந்தோறும் மக்கள் நீராடுவதால், பாவச்சுமை அதிகரித்து, அதை தாங்க முடியாமல் கங்கை, ஈசனை வேண்டினாள்.

    சர்வேஸ்வரனும், புனித நர்மதா நதியில் நீராடி பாவச்சுமையிலிருந்து விடுபடுமாறு வரம் அருளினார். ஆகையால் புனித கங்கை நதிக்கும் பாப விமோசனம் அளித்தவள், புனித நர்மதை நதியாவாள்.

    கர்ம வினைகளால் படாத பாடுபடும் மக்களுக்கு புனித நர்மதை நதி ஒரு வரப்பிரசாதம் ஆவாள். நவகிரகங்களின் பாதிப்பால் ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படும் சகல விதமான திருப்புமுனைகளையும், அவருக்கு சாதகமாக நடத்திக் கொடுக்கும் உன்னதமான இரகசிய பணியை நர்மதா தேவி செய்து வருகிறாள்.

    மிகப் பழமையான ரிக் வேதத்தில் போற்றப்படும் சரஸ்வதி நதியில் தொடர்ந்து மூன்று நாட்கள் நீராடினாலும், புனிதமான யமுனை நதியில் ஏழு நாட்களும் மற்றும் புனித கங்கை நதியில் ஒரு முறையும் நீராடினாலும் ஆத்மா புனிதமடையும்.

    ஆனால் புனித நர்மதை நதியை ஒருமுறை தரிசனம் செய்தால் போதும் நம் உடல், மனம், ஆத்மா அனைத்தும் தூய்மை அடைந்து, கர்மவினை அனைத்தும் நீங்கப்பெற்று முக்தியை அளிக்கவல்ல ஆற்றல் உடையவள் என்று ஸ்கந்தபுராணத்தில் நர்மதை நதியின் மகத்துவம் கூறப்பட்டுள்ளது.

    அதனால் தான் நர்மதை நதியை முக்தி தாயினி, மோக்ஷ பிரதாயினி, தீர்த்தங்களின் அரசி என்றும் போற்றுகின்றனர். நர்மதை என்ற சொல்லுக்கு நலன்களை அள்ளித்தருபவள் என்று பொருள். நம் தேசத்தில் பல புண்ணிய நதிகள் ஓடினாலும் நர்மதா நதிக்கு மட்டும் அனைத்து புராணங்களிலும் மிகச் சிறப்பான இடம் அளிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு என்ன காரணம்? கிரிவலம் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். முதன்முதலாக "நதி வலம்" என்ற சொல் நர்மதா நதிக்கு மட்டுமே பொருந்தக்கூடியது. ஏனெனில் நர்மதா நதியைச் சுற்றி வலம் வந்து வணங்குவதை "நர்மதா பரிக்ரமா" என்று அழைக்கின்றனர்.

    முதன்முதலாக மாபெரும் ரிஷியான மார்க்கண்டேய மகரிஷி, நர்மதை நதியை வலம் வந்தார் என்று மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது. ஈசனின் கருணையால் இறவா வரம் பெற்றவர் மார்க்கண்டேய ரிஷி ஆவார்.

    ஒருமுறை நர்மதா நதியை சுற்றி நடந்து முழுமையாக வலம் வருவதற்கு, 3 ஆண்டுகள் 3 மாதங்கள் 13 நாட்கள் ஆகும். சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதியை கடந்து, இத்தகைய கடினமான முயற்சியில் ஏற்படும் பல்வேறு இடையூறுகளைத்தாண்டி, மாபெரும் சித்தர்களும், மகான்களும், யோகீஸ்வரர்களும் நர்மதா நதியை சுற்றி வலம் வந்து வணங்கியுள்ளனர்.

    ஏறக்குறைய 6 ஆயிரம் ஸ்லோகங்கள், நர்மதா நதியை மட்டும் போற்றுகின்றன. இதற்கும் ஒரு முக்கியமான காரணம் உண்டு. பல யுகங்களை தாண்டி இப்போது நாம் கலியுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு யுகத்திலும் தோன்றும் பல ஆறுகள், அந்த யுகம் முடிவடைந்த உடன் மறைந்து விடுகிறது. ஆனால் நர்மதா ஆறு மட்டும், எல்லா யுகங்களையும் கடந்து, ஏழு கல்ப காலங்களை கடந்து, இன்றளவும் நம்மை வாழ்வித்துக் கொண்டிருக்கிறது.

    மகாபாரதத்தில், பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தின்போது, நர்மதா நதிக்கரையில் மறைந்து வசித்தனர். அச்சமயம் அவர்கள், நதிக்கரையில் ஆசிரமம் அமைத்து தவம் செய்து கொண்டிருந்த, மார்க்கண்டேய ரிஷியை சந்தித்தனர். அவரிடம் நர்மதா நதியின் மகிமையை எடுத்துக் கூறுமாறு கேட்டுக் கொண்டனர்.

    அப்போது மார்க்கண்டேரிஷி, நர்மதா நதியின் மகத்துவத்தை யாராலும் முழுமையாக எடுத்துக் கூற முடியாது என்றும் நர்மதா என்ற பெயரை உச்சரித்தாலும், கேட்டாலும், பாவங்கள் அனைத்தும் தொலைந்து விடும் என்றார்.

    மேலும் நர்மதையை நினைத்து வேண்டுவோருக்கு கால சர்ப்ப தோஷம் பீடிக்காது மற்றும் நாகங்களால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்ற செய்தியும் கிருஷ்ண யஜுர்வேத சம்ஹிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இப்புனித நதிக்கரையில் தான், ஆதிசங்கரர் தன் குருவின் தரிசனத்தை பெற்றார். ஐந்தாம் நூற்றாண்டில் கேரள மாநிலத்தில் காலடி என்ற சிறிய கிராமத்தில் ஆதிசங்கரர் அவதரித்தார்.

    அவர் தனது எட்டு வயதில் வீட்டை விட்டு, ஆபத் சன்னியாசம் ஏற்று, ஓம்காரேஷ்வர் என்ற ஜோதிர்லிங்க ஸ்தலத்திற்கு (மத்திய பிரதேசம்) கால்நடையாக நடந்து தன் குருவை தேடிச் சென்றார்.

    அங்கு புனித நர்மதை நதிக்கரையில் அமைந்த ஒரு குகையில், ஆதிசங்கரர் தன் குருவின் தரிசனம் பெற்றார். அச்சமயம் அவருடைய குரு கோவிந்த பகவத் பாதர் தியானத்தில் இருந்தார்.

    திடீரென்று நர்மதா நதியில் வெள்ளப்பெருக்கு எடுத்தது. நதிநீர் குகைக்குள் நுழைந்தால் தன் குருவின் தியானம் தடைபடும். ஆகையால் மிக வேகமாக ஓடி வந்த நர்மதை நதி முழுவதையும் தன் சிறிய கமண்டலத்திற்குள் அடக்கி வைத்து மிகப்பெரிய அற்புதத்தை நிகழ்த்தினார். ஜகத்குருவின் கோரிக்கையை ஏற்ற நர்மதை நதி அவருடைய கமண்டலத்திற்குள் சென்று அமர்ந்து கொண்டது. வெள்ளம் தணிந்தவுடன் மீண்டும் கமண்டலத்திலிருந்து நர்மதை நதியை விடுவித்தார்.

    தன் குருவை தரிசிக்க உதவிய, நர்மதை நதிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, நர்மதா அஷ்டகம் என்ற பெயரில் எட்டு ஸ்லோகங்களை அருளினார். ஐந்தாம் நூற்றாண்டில் ஜகத்குரு அருளிய நர்மதா அஷ்டகத்தை இன்றும் நர்மதை நதிக்கரையில் பாடி தினமும் ஆரத்தி எடுத்துவருகின்றனர்.

    பூஜ்ய ஸ்ரீ ரமாதேவி, 81449 28666

    நர்மதை பற்றிய நூல்:

    இத்தகைய சிறப்புகளை கொண்ட புனித நதியான நர்மதையைப் பற்றி பூஜ்ய ஸ்ரீ ரமாதேவி புத்தகம் எழுதியுள்ளார். அதில் பல அற்புத தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

    ஆதிசங்கரர் தனது குருவின் தரிசனம் பெற்ற குகையைப்பற்றிய தகவல், பல நூற்றாண்டுகளாக எவராலும் அறியப்படாமல் இருந்தது. முதன்முதலாக, காஞ்சி பெரியவரின் கருணையால், நாகராஜ சர்மா என்பவர், இக்குகையை கண்டறிந்தார். அதுபற்றிய தகவல் இடம்பெற்றுள்ளது.

    ஆதி சங்கரர், இந்நதிக்கரையில் அமர்ந்து கொண்டு, நம் தேசத்தின் அனைத்து வழிபாடுகளையும் இணைத்து ஒருமுகப்படுத்தினார்.

    எல்லா உயிர்களிலும் இறைவன் நீக்கமற நிறைந்து இருக்கிறார் என்ற அத்வைத தத்துவத்தை ஐந்தாம் நூற்றாண்டில், ஆதிசங்கரர் பகிரங்கமாக அறிவித்தார். இதுபோன்று பல அரிய தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

    இந்நூலில் புனித நர்மதை நதிக்கரையில் வாழ்ந்து சமாதி அடைந்த பல சித்தர்களை பற்றியும் நாம் அறிந்து கொள்ள முடியும்.

    இதற்கு என்ன தலைப்பு வைப்பது என்று சிந்தனையோடு இருந்த, நூலாசிரியரின் கனவில் ஆதிசங்கர தோன்றி, "நமாமி தேவி நர்மதே" என்ற தலைப்பை அருளியுள்ளார். இந்த புத்தகத்தை விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெளியிட்டார்.

    தற்போது இந்நூலின் இரண்டாம் பதிப்பு வந்துள்ளது. இதன் வெளியீட்டு விழா, அக்டோபர் 26 ம் தேதி, சனிக்கிழமை காலை 9 மணிக்கு, சென்னை தி.நகர் வாணி மஹாலில் நடக்கிறது.

    இதில் நர்மதா நதிக்கரையில் வசிக்கும், ஸ்ரீ சமானந்த கிரி ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீ பூமானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் கலந்து கொள்கின்றனர்.

    இதையொட்டி காலை 9 மணிக்கு, புனித நர்மதா லிங்கத்திற்கு ஆயிரம் ருத்திராட்சங்களால் சிறப்பு பூஜை செய்யப்பட உள்ளது.

    இதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ருத்ராட்சம், ஓம்காரேஷ்வரில் இருந்து கொண்டுவரப்பட்ட கர்மவினைகளை மாற்றும் நர்மதை நதியின் புனித நீர் வழங்கப்படுகிறது. மேலும் அன்னதானத்துடன் இப்புனித நூலும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    Next Story
    ×