என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி!
- நம்மிடம் இருக்கும் தீய பழக்கங்களுக்கும் சேர்த்தே முழுக்குப் போடுகிறோம்.
- தீபாவளியன்று கங்கை எல்லா நீர்நிலைகளிலும் பிரவேசிக்கிறாள் என்பது ஐதீகம்.
தீபாவளி நம் நாட்டில் மட்டுமல்ல, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, வங்க தேசம் உள்ளிட்ட இன்னும் பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. வாழ்க்கையின் இருளை நீக்கி ஒளியைத் தோற்றுவிக்கும் பண்டிகை என இப்பண்டிகை போற்றப் படுகிறது.
பூமாதேவியின் மகனாகப் பிறந்தவன் நரகாசுரன். அவன் பிரம்மாவை நோக்கிக் கடுமையான தவம் செய்தான். அவன்முன் தோன்றிய பிரம்மா என்ன வரம் வேண்டும் என்று வினவினார். இறப்பில்லாத தன்மையைக் கேட்டான் அவன்.
இறப்பில்லாதிருத்தல் என்பது கடவுள் நிலை அல்லவா? மனிதர்களுக்கு அப்படி வரம் தரும் மரபில்லை என்று கண்டிப்பாய்ச் சொன்னார் பிரம்மா.
யோசித்த நரகாசுரன் தன் தாயாலன்றிப் பிறரால் மரணம் நேரக் கூடாது என சாமர்த்தியமாக வரம் வாங்கிக் கொண்டான். எந்தத் தாயும் தன் மகனைக் கொல்ல மாட்டாள் என்பதே அவன் அப்படி வரம் கேட்கக் காரணம்.
அதன்பின் ஆணவம் கொண்டு நரகாசுரன் செய்த அடாத செயல்களால் மண்ணுலகும் விண்ணுலகும் தவித்தன. தேவர்களின் அன்னையாகக் கருதப்படும் அதிதியின் காது வளையங்களைக் கவர்ந்தான் அவன். எண்ணற்ற பெண்களைச் சிறைப் பிடித்தான்.
`அல்லவரை அழித்து நல்லவரைக் காக்கும்` கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்து உலகைக் காக்க முடிவு செய்தார்.
பார்த்தசாரதியான அவருக்கு அவர் மனைவி சத்தியபாமா சாரதியாக இருந்து தேரோட்டினாள். தேரில் இருந்தபடியே நரகாசுரனுடன் யுத்தம் செய்யலானார் கிருஷ்ணர். உண்மையில் சத்தியபாமா நரகாசுரனின் தாயான பூமாதேவியின் அம்சமே ஆவாள்.
யுத்தத்தின் ஒரு கட்டத்தில் சத்தியபாமாவைத் தேரைவிட்டு இறங்கச் செய்த கிருஷ்ணர், அவளைத் தன் அடிமை போல நடிக்கச் சொன்னார். பின்னர் அவளைச் சாட்டையால் அடித்து நடனமாடச் சொன்னார். சத்தியபாமா துடிதுடித்து நடனமாடத் தொடங்கினாள். எல்லாம் நடிப்புத்தான்.
திருப்பூர் கிருஷ்ணன்
இதெல்லாம் கள்ளக் கண்ணனின் திட்டமிட்ட நாடகம் என்பதை நரகாசுரன் அறியவில்லை. தான் செய்த கொடும் செயல்களின் பொருட்டுத் தனக்கும் சாட்டையடி கிடைக்கும் என எண்ணி அவன் உடல் அச்சத்தில் வியர்த்தது.
என்றாலும் சுதாரித்துக் கொண்டு கண்ணன்மேல் அம்பெய்தான். சத்தியபாமா ஓடோடி வந்து கணவன் முன் நின்று அந்த அம்பைத் தான் வாங்கிக் கொண்டாள். தன் நெஞ்சில் தைத்த அம்பைக் கையால் எடுத்து அதே அம்பால் நரகாசுரனைக் கொன்றாள்.
இறக்கும் தறுவாயில் தான் செய்த கொடுமைகளை எண்ணிப் பார்த்தது நரகாசுரன் மனம். அவன் மனச்சாட்சி விழித்துக் கொள்ள அவன் உள்ளம் வருந்தியது.
தன் செயல்களால் இருள் சூழ்ந்த பூமி, தான் காலமானபின் ஒளி பெற வேண்டும் என விழைந்தது அவனது திருந்திய நெஞ்சம்.
தான் இறந்த தினம் வெளிச்ச விழாவாக எதிர்காலத்தில் அறியப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தவாறே அவன் மரணத்தைத் தழுவினான்.
நரகாசுரனை வதம் செய்த கிருஷ்ணர் நரகாசுரனால் சிறைப்பிடிக்கப்பட்ட அத்தனை பெண்களையும் விடுதலை செய்தார். அதிதியின் காது வளையங்களையும் மீட்டு தேவர்களிடம் ஒப்படைத்தார்.
நரகாசுரன் வேண்டியவாறே இன்றளவும் அவன் வதம் செய்யப்பட்ட தீபாவளி தினம் ஒளி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் தீபங்கள் ஏற்றியும் தென்னிந்தியாவில் மத்தாப்புகள் கொளுத்தியும் தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள் மக்கள்.
நரகாசுரனை அதிகாலையில் வதம் செய்த கண்ணன், அதன்பின் எண்ணெய் தேய்த்துத் தலைமுழுகினான். அந்த மரபிலேயே தீபாவளி நன்னாளன்று நாம் எண்ணெய் தேய்த்துத் தலை முழுகுகிறோம். நம்மிடம் இருக்கும் தீய பழக்கங்களுக்கும் சேர்த்தே முழுக்குப் போடுகிறோம்.
ராமன் பதினான்கு ஆண்டு வனவாசம் முடிந்து ராவணனை வதம் செய்த வெற்றிப் பெருமிதத்தோடு மனைவி சீதாதேவி, தம்பி லட்சுமணன் ஆகியோரோடு அயோத்திக்குத் திரும்பினான்.
ராமன் திரும்பவும் அயோத்தி வந்தபோது மக்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. தங்கள் இல்லங்களில் எல்லாம் தீபங்களை ஏற்றி வைத்து மன்னன் ராமபிரானை மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள் மக்கள். ராமன் அயோத்திக்குத் திரும்பிய அந்த நாளே தீபாவளி என்கிறது ஒரு ராமாயணக் கதை.
பாவங்களைப் போக்குவது கங்கை நதி. தீபாவளியன்று கங்கை எல்லா நீர்நிலைகளிலும் பிரவேசிக்கிறாள் என்பது ஐதீகம். எனவே எல்லா நீரும் கங்கையாக மாறுகின்றன. அதனால்தான் தீபாவளியன்று கங்காஸ்நானம் ஆயிற்றா என விசாரித்துக் கொள்கிறோம்.
சிவபெருமான் தன் தலையில் குடிகொண்டுள்ள கங்கை பாவத்தைப் போக்குகிறாள் என்பதை மக்கள் எந்த அளவு நம்புகிறார்கள் என்று பரிசோதிக்க விரும்பினார்.
சிவனும் பார்வதியும் கங்கைக் கரையில் கிழவராகவும் கிழவியாகவும் உருமாறி அமர்ந்து கொண்டார்கள். உடல் நடுக்கத்தோடு கிழவி மடியில் படுத்திருந்தார் அந்தக் கிழவர்.
பார்ப்பவர்களெல்லாம் கிழவரின் உடல் நடுங்குவதைப் பார்த்துப் பரிதவித்தார்கள். கிழவரை எழுப்பி அமரவைக்க எத்தனித்தார்கள்.
கிழவி குறுக்கே புகுந்து தடுத்தாள். பாவமே செய்யாதவர்தான் அவரைத் தொடமுடியும் என்றும் அல்லாதவர் தொட்டால் கிழவரின் நடுக்கம் அவரை விட்டு விலகி, தொட்டவரை ஒட்டிக் கொள்ளும் என்றும் அவள் எச்சரித்தாள்.
பாவமே செய்யாதவர் யார்? எல்லோரும் அச்சத்தோடு செய்வதறியாது நின்றபோது, அங்கே வந்தான் ஓர் விறகு வெட்டி. நிபந்தனையை அறிந்துகொண்ட அவன், சடாரென கங்கையில் ஒரு முழுக்குப் போட்டுவிட்டு வந்து கிழவரைத் தொட்டுத் தூக்கி அமரவைத்தான்.
நீ பாவமே செய்ததில்லையா என மக்கள் வியப்போடு வினவினார்கள். `செய்திருக்கலாம். ஆனால் இப்போது கங்கையில் நான் முழுகி எழுந்தேனே? கங்கை நான் இதுவரை செய்த பாவம் அனைத்தையும் போக்கியிருக்குமே!` என்று பதில் சொன்னான் அவன்.
பரமசிவனும் பார்வதியும் அவனுக்குக் காட்சி தந்தார்கள். `உன்னைப் போல் தீவிர நம்பிக்கை கொண்டவர்களிடம் கங்கையின் சக்தி வேலை செய்யும். நம்பிக்கை அற்றவர்களின் பாவத்தைக் கங்கையாலும் போக்க முடியாது` என்றார்கள் அவர்கள்.
தீபாவளியன்று நாம் கங்கா நீராடல் செய்கிறோம். நம் வீட்டிலுள்ள தண்ணீரே கங்கையாக மாறுகிறது. நம் பாவங்கள் தொலையும் என்ற நம்பிக்கையோடு முழுக்குப் போட்டால்தான் பாவங்கள் போகும். எந்த உணர்வுமில்லாமல் நீராடினால் பாவம் தொலையாது. அது அர்த்தமற்ற ஒரு வெற்றுச் சடங்காக மட்டுமே இருக்கும்.
சிவபெருமானுடன் இணைபிரியாமல் இருக்க விரும்பினாள் பார்வதி தேவி. அந்தப் பிரார்த்தனையோடு அவள் கவுரி விரதம் இருந்தாள். கவுரி விரதம் நிறைவுற்ற நாளில் சிவன் பார்வதியைத் தன்னில் பாதியாக ஏற்றுக்கொண்டு அர்த்தநாரீஸ்வரர் ஆனார்.
அர்த்தநாரீஸ்வரக் கோலத்தைச் சிவன் ஏற்ற நன்னாளே தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது எனவும் ஒரு கதை உண்டு. சிவன் ஜோதி வடிவானவன் என்பதால் அவன் பெண்மைக்குச் சமபங்கு உண்டு என்பதை நிலைநாட்டிச் சிறப்புச் சேர்த்த தீபாவளி நாளில் ஜோதியைத் தரும் தீபங்கள் ஏற்றப்படுகின்றன.
புத்த மதத்தினரும் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். தீபாவளிக் கொண்டாட்டத்தை தீபதான உற்சவம் என்கிறார்கள் அவர்கள். போதி மரத்தடியில் ஞானமடைந்த புத்தர் எப்போது மறுபடித் தங்கள் நாட்டிற்கு வருவார் என புத்தரின் தந்தை சுத்தோதனரும் மக்களும் காத்துக் கொண்டிருந்தார்கள். அவருக்கு அழைப்பு விடுத்தார்கள்.
அவர் தன் சீடர்களோடு மறுபடி கபிலவஸ்து நாட்டிற்கு விஜயம் செய்தார். அப்போது எல்லோர் இல்லங்களிலும் விளக்கேற்றி அவரை வரவேற்றார்கள். விளக்கேற்றும் வசதியில்லாத ஏழைகளுக்குச் செல்வந்தர்கள் விளக்கையும் எண்ணெயையும் தானமாக வழங்கினார்கள். இந்த நன்னாளையே தீபாவளி என புத்த மதம் போற்றுகிறது. தீபங்கள் தானமாகத் தரப்படும் இந்நாள் தீபதான உற்சவம் எனப்படுகிறது.
மிகப் பழங்காலத்திலேயே தீபாவளி கொண்டாடப்பட்டு வந்தது என்பதற்குச் சான்றாக தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. சாளுக்கிய, பல்லவ, மராட்டிய மன்னர்கள் கூட தீபாவளியைக் கொண்டாடியதற்கான சான்றுகள் உள்ளன. தீபாவளி இந்துக்களின் பண்டிகையாக மட்டுமல்லாமல் மதம் கடந்த ஒரு பொதுப் பண்டிகையாகவே கொண்டாடப் பட்டு வந்துள்ளது.
தமிழகத்தில் நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் ஆலயங்களில் தீபாவளி விழா கொண்டாடப்பட்டதற்கான சான்றுகள் திருப்பதி திருமலைக் கல்வெட்டுகளில் உள்ளன.
திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் தஞ்சை மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கரால் தேர்த் திருவிழாவின்போது வாண வேடிக்கையுடன் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப் பட்டதை அங்குள்ள மிகப் பழைய சுவரோவியங்கள் மூலம் அறிய முடிகிறது.
பொங்கல் தமிழ் நாட்டிலும் ஓணம் கேரள நாட்டிலும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தகைய மாநிலம் சார்ந்த பண்டிகைகளை அந்தந்தப் பிரதேசம் தவிர்த்து இந்தியா ழுழுவதும் கொண்டாடுவதில்லை. ஆனால் தீபாவளி இதற்கு விதிவிலக்கு. இது இந்தியா முழுவதும் பெரும் கோலாகலமாக எல்லா இடங்களிலும் கொண்டாடப் படுகிறது.
மன்னர் காலத்தில் தீபாவளி நாளில் அறிஞர்களுக்குப் பரிசுகள் வழங்கும் வழக்கம் இருந்திருக்கிறது. ஜனநாயக நாட்டில் எல்லோரும் இந்நாட்டு மன்னர். எனவே தீபாவளி இனாம் வழங்கும் வழக்கமாக அது தொடர்கிறது.
பத்திரிகைகள் தீபாவளியை ஒட்டி தீபாவளி மலர்கள் வெளியிடுகின்றன. தீபாவளிச் சிறப்பு வெளியீடுகளைக் கொண்டு வருகின்றன. இத்தகைய பெருமையைப் பத்திரிகைகள் பெரும்பாலும் மற்ற பண்டிகைகளுக்குத் தருவதில்லை.
பக்தர்கள் நரகாசுரனை வதம் செய்த கண்ணனை மலர்களால் பூஜிக்கிறார்கள் என்றால் பத்திரிகைகளோ கண்ணனை தீபாவளி மலர்களால் பூஜிக்கின்றன.
தீபாவளி நாளன்று நம்பிக்கையோடு நீராடி, பாவங்களைப் போக்கிக் கொண்டு, கண்ணனை வழிபட்டுப் பயனடைவோம்.
தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com






