என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • தொலையாத சூட்கேஸ்க்கு, பொய்யான புகார் எழுத போன அவர்கள் கண்கள் இந்த நால்வரின் மேலேயே இருந்தது.
    • டேவிட் மற்றும் நண்பர்கள், மேரி அதிர்ச்சியில் உறைந்தார்கள். போன் ஸ்பீக்கரில் இருந்ததால், மேரி கேட்டாள்.

    வேட்டைக்காரன் பங்களா...

    உள்ளே நுழைந்த டேவிட் மற்றும் நண்பர்கள் அதிர்ந்ததுக்கு காரணம், உள்ளே யாரும் இல்லை. ஆனால், சற்று முன்னர்தான் அந்த இடத்தை காலி செய்ததற்கான அறிகுறிகள் அங்கே தென்பட்டன. சாப்பிட்ட இலைகள், பார்சல் கவர்கள், சிகரெட் துண்டுகள், பழைய சேர், திவ்யாவை கட்டி வெச்சுருந்த கயிறு, இப்படி ஒவ்வொன்றாக பார்த்த டேவிட் கண்களில் சட்டென்று பட்டது ஜன்னலோரம் வைக்கப்பட்டிருந்த துண்டுப் பேப்பரும், அதன் மேலே சின்னதாய் தெரித்த ஒரு பொருளும். ஓடிச்சென்று, அதை எடுத்து பார்த்தான். ஜிமிக்கி! தன் பாக்கெட்டில், ஏற்கனவே காட்டுக்குள் திவ்யாவை தேடும் போது எடுத்து வைத்திருந்த ஜிமிக்கியை எடுத்து, இரண்டையும் அருகருகே வைத்து பார்த்தான். அவன் கண்களில் தண்ணீர் முட்டிக் கொண்டு வர தொண்டை வரள, அந்த ஜிமிக்கிகளையே பார்த்தபடி நின்றான். திவ்யா... என் திவ்யா... இப்படி உன்னை பறி கொடுத்துவிட்டு தேடி தேடி அலையிறேனே... இதோ... ஒரு பத்து நிமிஷம் முன்னாடி வந்திருந்தா... பார்த்து இருப்பேனே... யார் உன்னை இப்படி பண்றாங்கன்னு தெரியலை.. நீ என் கையில கிடச்சபிறகு அவனை நான் விடமாட்டேன். மனசுக்குள் கோபம், துக்கம், இயலாமை மூன்றும் கலந்துகட்டி, டேவிட்டுக்குள் சுழன்றது.

    "மாப்ளே... லட்டர்ல என்னடா எழுதி இருக்கு?" அப்போதுதான், தன் நினைவுக்கு வந்த டேவிட், தன் நண்பர்களுக்கும், மேரிக்கும் கேட்கும்படி, வாய்விட்டு படித்தான்.

    "புதுமாப்பிள்ளை டேவிட்!

    உன் பொண்டாட்டிய தேடி, நீ இங்க வரேன்னு தெரியும். அதான் அவளோட நான் ஜஸ்ட் எஸ்கேப்! இனி என் அடுத்தடுத்த 'மூவ்'ல நீ ஆடிப் போயிடுவ! வரட்டா!! இப்ப உனக்கு உன் மாமன் கிட்ட இருந்து ஒரு போன் வரும். பேசு. நாம விளையாட்ட தொடரலாம் - நல்லவன்".

    அவசரமாக எழுதியது அந்த லட்டரின் கிறுக்கல் எழுத்துகளில் பிரதிபலித்தது. டேவிட்டின் போன் அடித்தது. எடுத்து பார்த்தான். அந்த நல்லவன் சொன்ன மாதிரியே அவன் மாமா ரங்கராஜன்தான் அழைத்தார். ஸ்பீக்கரில் போட்டு "மாமா" என்றான்.

    "டேவிட்டு... அந்தபாவிப்பய ஒரு பார்சல்ல திவ்யா தாலிய ரெண்டா வெட்டி அனுப்பி வச்சுருக்கான்..."

    டேவிட் மற்றும் நண்பர்கள், மேரி அதிர்ச்சியில் உறைந்தார்கள். போன் ஸ்பீக்கரில் இருந்ததால், மேரி கேட்டாள்.

    "மாமா... பார்சல் எப்படி மாமா போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கிற உங்க கைக்கு வந்துச்சு.?"

    "அது வந்து.. இங்க ரெண்டு பேரு...". அவர் சொல்லிமுடிக்கும் முன்பே போன் கட் ஆகியது. போலிஸ் ஸ்டேசனில், அந்த தடியன்,, "பெரிசு... போன் பேசினா.. மேட்டர் என்னவோ அத மட்டும்தான் சொல்லணும். புரியுதா...? சரி... சரி.. எல்லாரும் அவங்க... அவங்க போனை சுவிட்ச் ஆப் பண்ணி கொடுங்க.."

     

    வேறு வழியின்றி, 'திவ்யாவுக்கு வேறு ஏதாவது ஆகிவிடக்கூடாதே' என்ற பயத்தில், நால்வரும் தங்களது போன்களை, ஆப் பண்ணி, அந்த இருவரிடமும் தந்தனர்.

    ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு, தன் பாக்கெட்டில் சொருகினான் அந்த இருவரில் ஒருத்தன். போலீஸ் ஸ்டேஷனில், ஒருபுறம் இப்படி ஒரு விசயம் நடந்து கொண்டு இருப்பது தெரியாத ஏட்டு, அவர் இருந்த இருக்கையில் இருந்து குரல் கொடுத்தார்.

    "யாருப்பா அந்த ரெண்டு பேரு? சூட்கேஸ் காணோம்னு வந்தது..?"

    "நாங்கதான் ஐயா...! - அப்பாவியாய் நடித்தபடி இருவரும் சொல்ல, "வாங்கய்யா...வந்து புகார் எழுதி தாங்க...!"

    தொலையாத சூட்கேஸ்க்கு, பொய்யான புகார் எழுத போன அவர்கள் கண்கள் இந்த நால்வரின் மேலேயே இருந்தது.

    "பேசிக்கிட்டு இருக்கும்போதே போன் கட் ஆகிடுச்சு.. மறுபடியும் போட்டா, ஸ்விட்ச் ஆப்னு வருதே..."

    குழப்பத்தில் இருந்த டேவிட் சொல்ல, "ஒருவேளை சிக்னல் பிராபளமா இருக்கும்..." செந்தில் சமாதானப்படுத்தினான்.

    "ஆனா... பார்சல் எப்படி போலீஸ் ஸ்டேஷன் வந்துச்சுன்னு கேட்டப்போ, இங்க ரெண்டு பேரு...ன்னு உங்க அப்பா ஏதோ சொல்ல வரும்போது, லைன் கட் ஆயிடுச்சே. அப்போ ஸ்டேஷனுக்கு, அந்த நல்லவனோட ஆட்கள் ரெண்டு பேரு வந்திருக்காங்க..." மேரி யூகித்தாள்.

    "எக்ஸாக்ட்லி... டேவிட்டு... அவங்க யாரோ பப்ளிக் மாதிரி ஸ்டேஷனுக்கு வந்திருக்கணும். அதான் அங்க இருக்கிறது போலீசுக்கு சந்தேகம் வரல.."

    தியாகு சொல்ல, நெல்சன் குறுக்கிட்டான்.

    "வேணும்னா... நாம ரெண்டு பேரு, திரும்பவும் ஸ்டேஷன் போலாமா?"

    "வேண்டாம்... எங்க அப்பா எக்ஸ் மிலிட்டரி. தைரியசாலி... சமாளிச்சுக்குவாரு. முதல்ல எனக்கு ஒரு டவுட்!"

    "என்னது...?"- கோரசாய் கேட்டார்கள்.

    "நாம திவ்யாவை தேடி, இங்க வரப்போறது ஏற்கனவே அந்த நல்லவனுக்கு தெரிஞ்சு இருக்கு. அதைத்தான் இந்த லட்டர்ல மென்ஷன் பண்ணி இருக்கு. அப்போ அந்த நல்லவனுக்கு தகவல் தர்றது, நம்ம நடவடிக்கைகள் தெரிஞ்ச ஒரு ஆளு! யாரு அவன்...?"

    அனைவரும் யோசித்தனர்.

    "நமக்கு தகவல் தந்தது கான்ஸ்டபிள் மணி... நாம இங்க வரப்போறது அவரை தவிர அம்மா, அப்பா, மாமா, அத்தை, நீங்க நாலு பேரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.. அப்புறம் எப்படி நல்லவனுக்கு தகவல் போயிருக்கும்..."

    இயக்குநர் A. ெவங்கடேஷ்


     

    "ஒருவேளை மாமா பெருமாளுக்கு சொல்லி, பெருமாள் நல்லவனுக்கு சொல்லி... இடத்தை மாத்த சொல்லிட்டு... நம்ம கூடவே சேர்ந்து திவ்யாவை தேடுற மாதிரி நடிக்கிறானோ...?"

    டேவிட் கேட்க, அனைவரும் உறைந்தனர்...

    "முதல்ல பெருமாளுக்கு மாமா தகவல் கொடுத்தாங்களான்னு, ஒரு போன் போட்டு கேளு..

    மேரி டேவிட்டை அவசரப்படுத்தினாள், டேவிட் போன் போட 'சுவிட்ச் ஃஆப்' என வர, மற்ற மூவரின் நம்பருக்கும் போன் போட, 'சுவிட்ச் ஆப்' என்றே வந்தது.

    "நாலு பேரு போனுமே சுவிட்ச் ஆப்!"

    டேவிட்டின் பதட்டமான குரல் 'ஏதோ தப்பு நடந்திருக்கு' என்று எச்சரிக்க, மேரி, "நான் வேணா ஸ்டேஷன் போயி என்னன்னு பாக்கட்டா.. இப்படி மொத்தமா எல்லாரோட போணும் ஆப் ஆகி இருக்குனா சம்திங் ராங்க்.."

    "தனியா போய்டுவியா..."

    "பயப்படாதீங்க… நான் நாம வந்த வண்டிய இங்க விட்டுட்டு, ஒரு ஆட்டோ அல்லது காரை புடுச்சு, ஸ்டேஷனுக்கு போயிட்டு, அவங்களையும் கூட்டிட்டு நீங்க எங்க இருக்கீங்களோ அங்கையே வந்துடுறேன்.. நீங்க மட்டும் உங்க நடவடிக்கைகளை எனக்கு அப்பப்போ போன் பண்ணியோ, வாட்ஸ்-அப்லேயோ அப்டேட் பண்ணிக்கிட்டு இருங்க.."

    "சரி.. ஜாக்கிரதையா போ…"

    டேவிட் அனுமதித்த, அடுத்த நிமிடம் புயல் வேகத்தில் கிளம்பி சென்றாள் மேரி. அவள் போனதும் மீண்டும் அந்த வேட்டைக்காரன் பங்களாவுக்குள் நுழைந்த டேவிட்.. "டேய்.. இங்கே இருக்கிற ஒவ்வொரு இடத்தையும் இன்ச் இன்ச்சா அலசுங்க.. நிச்சயமா ஏதாவது ஒரு 'க்ளூ' கிடைக்கும்..!"

    அலச ஆரம்பித்தார்கள்.

    பண்ணையார்பட்டி.

    தன்னுடைய விசாரணையில் எந்த உருப்படியான தகவலும் கிடைக்காமல் தளர்வாக ஜீப்பில் ஏறும் சமயம், அந்த நான்கு கார்கள் வரிசையாக வந்து நின்றன. முதல் காரிலிருந்து பெருமாள் அவனது ஆட்களும், மற்ற காரிலிருந்து, கட்சிக்காரர்களும் இறங்கினர். ஒரு கணம் இன்ஸ்பெக்டர் அழகர் பதறிவிட்டார்.

    "என்ன பெருமாள்.. கூட்டமா வந்து இருக்கீங்க…" அவரது குரலில் கடுமை ஏறியது.

    "சார்.. எஸ்.பி - கிட்ட சொல்லிட்டு தான் நாங்களும் திவ்யாவ தேடுற வேலையில் இறங்கலாம்னு வந்து இருக்கோம்...''

    "ஒ.. போலீஸ் எங்களால முடியாதத.. நீங்க பு... புலனாய்வு செஞ்சு, அந்த கிட்நாபர்களை புடிச்சு, உங்க தங்கச்சிய மீட்டு எடுத்துருவீங்களா..?" - அழகர் கோபத்தை காட்டாமல், நார்மலாய் பேசுவது போல் பேசினார்.

    அதை அறிந்து கொண்ட பெருமாள் பதிலுக்கு சற்றும் சளைக்கா, "காக்கி கூட விசாரணையில, எங்கையாவது பாக்கி விட வாய்ப்பு இருக்குன்னுதான், வெள்ளை வேட்டிகள் எல்லாம் ஒண்ணா கூடி வந்திருக்கோம் அழகர் சார்…" என்று சொல்லிமுடிக்கவும், " சரி.. நான் இப்ப என்ன பண்ணனும். சொல்லுங்க பெருமாள்?" அழகர் கேட்டார்.

    "இந்த பண்ணையார்பட்டி கிராமத்துல விசாரிச்சீங்களே என்ன சார் முன்னேற்றம்?" 'ஒண்ணும் இல்ல.. புதுசா யாரையும் ஊருக்குள்ள பாக்கலை. வித்தியாசமா எந்த காரும் போகலைன்னுதான் எல்லாவனும் சொல்றான்... வேணும்னா நீங்க கூட்டமா மறுபடியும் விசாரிச்சு பாருங்க…"

    "தேவையில்லாம எந்த ஈகோவும் பாக்காம நான் சொல்றத கேட்குறீங்களா.." பெருமாள் கேட்டான்.

    "சொல்லுங்க... அதையும் கேட்குறேன்...!" அலட்சியமாய் சொன்னபடி, சிகரெட்டை பற்ற வைத்தார் அழகர்.

    "சார்.. திவ்யாவுக்கு கடத்துனவனால உயிருக்கு எத்த சேதமும் வராது. அவன் பேச்சிலே அது தெரியுது.. இதுவரைக்கும் அவன் பணம் எதுவும் கேட்கல…"

    "சரி... மேல சொல்லுங்க..."

    "ஆனா, அவன் என்ன நோக்கத்துக்காக அவளை கடத்துனான்னு இதுவரைக்கும் தெரியல. இதுல ஒருத்தன் இல்ல.. ஒரு கும்பலே பின்னாடி இருக்கும்னு எனக்கு தோணுது..."

    "எனக்கு ஒண்ணு தோணுது...சொல்லட்டா..."சற்று நக்கலாய் கேட்டார் அழகர்.

    (தொடரும்)  E-Mail: director.a.venkatesh@gmail.com / வாட்ஸப்: 7299535353

    • திருப்புகழ் பாடல்களை முதன் முறையாகப் படிக்கின்றவர்களுக்கு அதில் உள்ள வார்த்தைகள் சற்று சிரமமாகத் தோன்றும்.
    • இரவில் தூங்க செல்வதற்கு முன் இந்த பாடலை பாடுவது சிறப்பு.

    முருகன் என்றதும் நினைவுக்கு வருபவர் அருணகிரிநாதர். அந்த அளவுக்கு முருகன் மேல் பற்று கொண்டவர். அவரால் பாடப்படாத முருகன் தலங்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு, முருகன் குடிகொண்டுள்ள தலங்கள் எல்லாவற்றைப் பற்றியும் பாடி உள்ளார்.

    முருகன் மீது இவர் பாடிய பாடல்களே "திருப்புகழ்" எனப்படுகிறது. திருப்புகழ் 1,324 பாடல்களைக் கொண்டது. "திருப்புகழைப் பாடப்பாட வாய் மணக்கும்" என்று சிறப்பித்து சொல்வார்கள்.

    திருப்புகழ் பாடல்கள் எல்லாமே சந்தங்களோடும் தாளங்களோடும் அமைந்தவையாகும். மொத்தம் 859 சந்தங்கள் திருப்புகழில் உள்ளதாக இசை வல்லுநர்கள் ஆராய்ந்துள்ளனர்.

    அருணகிரி நாதர், முருகனிடத்தில் தன்னைப் பூரணமாக அர்ப்பணித்து, தெய்வீக நெறியில் நின்று, முருகனின் அருள் பெற்று அந்த ஆனந்த அனுபவத்தை இசை வடிவத்திலே பாடியவர்.

    திருப்புகழின் மூலம், முருகனின் பெருமையையும் சிறப்பையும், ஏன் அவனை நாட வேண்டும் என்பதற்கான காரணங்களையும், அவனை நாடுவதனால் மனிதர்களுக்கு கிடைக்கும் அருளையும், அமைதியையும் இந்தப் பாடல்களில் எடுத்துரைக்கின்றார்.

    அதில் விநாயகர் துதியாக 5 பாடல்கள் தனியாகவும், திருப்பரங்குன்றத்தைப் பற்றி 15 பாடல்களும், திருச்செந்தூர் பற்றி 84 பாடல்களும், திருஆவினன்குடி பற்றி 95 பாடல்களும் உள்ளன.

    திருப்புகழ் பாடல்களை முதன் முறையாகப் படிக்கின்றவர்களுக்கு அதில் உள்ள வார்த்தைகள் சற்று சிரமமாகத் தோன்றும். ஆனால் சரியானபடி வார்த்தைகளைப் பிரித்துப் படித்தால், பாடல்களில் உள்ள ஆழமானதும், நுட்பமானதும் ஆகிய பொருள் விளங்கும். அதன் பிறகு திரும்ப திரும்ப படிக்கத் தோன்றும்.

    திருச்செந்தூரில் முருகனை நேரில் கண்ட அனுபவத்தை அருணகிரிநாதர் தனது பாடல்களில் எழுதி, அந்த பேரின்பத்தை அனைத்து முருகன் அடியார்களும் பெற வழிகாட்டி உள்ளார். ஒவ்வொரு திருப்புகழும் ஒவ்வொரு பலனை தரக் கூடியதாகும். நம்முடைய தேவைக்கு ஏற்ற திருப்புகழை தொடர்ந்து படித்து வந்தால் முருகப் பெருமானின் அருளால் நம்முடைய குறை தீரும்.

    அருணகிரிநாதர் அருளிய திருச்செந்தூர் தலத்திற்குரிய திருப்புகழின் 62-வது பாடலான இந்த பாடலை தினமும் மனதார பாடி வந்தால் நிச்சயம் முருகன் கனவில் வந்து காட்சி தருவார். இரவில் தூங்க செல்வதற்கு முன் இந்த பாடலை பாடுவது சிறப்பு.

    தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்

    தண்கழல்சி லம்புடன் கொஞ்சவேநின்

    தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்

    சந்தொடம ணைந்துநின் றன்புபோலக்

    கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்

    கஞ்சமலர் செங்கையுஞ் சிந்துவேலும்

    கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்

    கண்குளிர என்றன்முன் சந்தியாவோ

    புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும்

    பொங்கியெழ வெங்களங் கொண்டபோது

    பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்

    புண்டரிகர் தந்தையுஞ் சிந்தைகூரக்

    கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்

    கொஞ்சிநட னங்கொளுங் கந்தவேளே

    கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங்

    கும்பமுநி கும்பிடுந் தம்பிரானே.

    விளக்கம்:

    தண்டையும், வெண்டையும், கிண்கிணி, சிலம்பு போன்ற பலவிதமான காதணிகள் ஒலிக்க உன்னுடைய தந்தையாகிய சிவபெருமானை வலம் வந்து அவரை அணைத்து அன்பு செய்தது போல் ஆறுமுகங்கள், பன்னிரு கண்கள், கொடியும், வேலும் கொண்டு என் கண்முன் வந்து தோன்றுவாயா? அனைத்து உலகங்களும் மகிழ்ச்சியில் நிறைய பெருமாளும், சிவனும் மகிழ் போர்களத்தில் நடன பாதங்களை திருச்செந்தூரில் காட்டியவனே, கந்தனே, வள்ளியின் மனம் கவர்ந்தவனே, அகத்தியர் வணங்கும் தலைவரே என் முன்னே வர வேண்டும்.

    இதை தினமும் பாடி, சொல்லி வந்தால் நிச்சயமாக முருகன் உங்கள் கனவிலும் வர வாய்ப்புள்ளது.

    திருச்செந்தூர் திருப்புகழ் மிக மிக சக்தி வாய்ந்தது. இதில் "விறல் மாரனைந்து" எனும் திருப்புகழை தினமும் 6 தடவை பாராயணம் செய்து வந்தால் உடனே தடைகள் விலகி திருமணம் கைகூடி நடைபெறும். திருமுருக கிருபானந்த வாரியார் அறிவுறுத்தலின் பேரில் ஏராளமானவர்கள் தினமும் திருச்செந்தூர் திருப்புகழைப் பாராயணம் செய்து நல்ல வரன் பெற்று கல்யாணம் செய்துள்ளனர்.

    சிறப்புமிகு அந்த திருப்புகழ் இதோ...

    விறல் மாரனைந்து மலர்வாளி சிந்த

    மிகவானி லிருந்து - வெயில் காய

    மிதவாடை வந்து தழல்போல வொன்ற

    வினைமாதர் தந்தம் வசை கூற

    குன்றி லுறைபேதை கொண்ட

    கொடி தான துன்ப -மயில்தீர

    குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து

    குறை தீர வந்து குறுகாயோ

    மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து

    வழிபாடு தந்த மதியாளா

    மலைமாவு சிந்த அலைவேலை அஞ்ச

    வடிவேலெ றிந்த அதிதீரா

    அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு

    மடியாரி டைஞ்சல் களைவோனே

    அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து

    அலைவாயு கந்த பெருமாளே!

    குழந்தை பாக்கியம் பெற விரும்புபவர்கள் கீழ்க்கண்ட திருச்செந்தூர் திருப்புகழை தினமும் பாராயணம் செய்ய வேண்டும். இது சக்தி வாய்ந்தது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனத்தெளிவாக தன்னம்பிக்கையுடன் இதை பாராயணம் செய்தால் நிச்சயம் முருகன் அருளால் உங்களுக்கு மகப்பேறு உண்டாகும். இதோ அந்த திருப்புகழ்.....

    வாரியார் கருங்கன் மடமாதர்

    மகவாசை தொந்த மதுவாகி

    இருபோது நைந்து மெலியாதே

    இருதாளி னன்பு தருவாயே!

    பரிபால னஞ்செய் தருள்வோனே

    பரமேசு ரன்ற னருள்பாலா

    அரிகேச வன்றன் மருகோனே

    அலைவா யமர்ந்த பெருமாளே!

    ஒரு மனிதனுக்கு நல்ல மனைவி அமைவதும், ஒரு பெண்ணுக்கு உயர்ந்த கணவன் அமைவதும் இறைவன் திருவருளேயாகும் எனவே முருகப் பெருமானைத் திருப்புகழால் போற்றி வழிபட்டு இனிய இல்லற வாழ்வு பெற்றிட வழி காட்டுகிறார் அருணகிரியார்.

    திருச்செந்தூர் திருப்புகழ் ஒன்றில் வள்ளியம்மைக்கு திருமண மாலை தந்து குறையைத் தீர்த்தது போல் தனக்கும் (இந்த ஜீவாத்மாவுக்கும்) மாலை தந்து குறையை நீக்க வேண்டும் என்று வேண்டுகிறார்.

    இதோ அந்த திருப்புகழ் பாடல்

    நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே

    நீவந்த வாழ்வைகண் டதனாலே

    மால்கொண்ட பேதைக்குள் மணம்நாறும்

    மார்தங்கு தாரைத்தந் தருள்வாயே

    வேல்கொண்டு வேலைப்பண் டெறிவோனே

    வீரங்கொள் சூரர்க்குங் குலகாலா

    நாலந்த வேதத்தின் பொருளோனே

    நான்என்று மார்தட்டும் பெருமாளே.

    இத்திருப்புகழ் அடியார்களின் இடுக்கண் நீக்கும் மந்திரத்திருப்புகழ்' என்று குகத்திரு வாரியார் சுவாமிகள் குறிப்பிடுவார். செந்தூர் முருகனைத் தரிசிப்பதுடன், மேற்காணும் திருப்புகழ் பாடலை அனுதினமும் பாடி அவரை வழிபட்டால், மணமாலை விரைவில் தோள்சேரும்.

    தண்டேனுண்டே வண்டார் வஞ்சேர்

    தண்டார் மஞ்சுக் குழல்மானார்

    தம்பா லன்பார் நெஞ்சே கொண்டே

    சம்பா வஞ்சொற் றடிநாயேன்

    மண்டோ யந்தீ மென்கால் விண்டோய்

    வண்கா யம்பொய்க்குடில்வேறாய்

    வன்கா னம்போ யண்டா முன்பே

    வந்தே நின்பொற் கழல்தாராய்

    கொண்டா டும்போர் கொண்டா டுஞ்சூர்

    கொன்றாய் வென்றிக் குமரேசா

    கொங்கார் வண்டார் பண்பா டுஞ்சீர்

    குன்றா மன்றற் கிரியோனே

    கண்டா கும்பா லுண்டா யண்டார்

    கண்டா கந்தப் புயவேளே

    கந்தா மைந்தா ரந்தோள் மைந்தா

    கந்தா செந்திற் பெருமாளே!

    இந்த பாடலின் பொருள் வருமாறு:-

    திருச்செந்தூர் செந்தில் குமரா சூரபத்மனை போரிலே வென்று அவனை வீழ்த்தினாய். அவன் தன்னை எவர் ஒருவர் புகழ்வார்களோ அவர்களுக்கு ஆதரவாக இருப்பான். தேனீக்கள் எவ்வாறு தேனை உறிஞ்சி மலர்களில் சேர்க்கின்றனவோ அதுபோல நம்முடைய ஆத்மாவை சுத்தம் செய்து நாம் புண்ணியத்தைச் சேர்க்க வேண்டும். மனிதர்களாகிய நாம் இந்த மனித உடம்பை நமக்குத் தந்த இறைவனுக்கு நன்றி செலுத்தவேண்டும்.

    முருகா! உன்னுடைய நாமத்தை உச்சரிப்ப தால் நான் முழுமையான பாக்கியத்தை அடைகிறேன். உன் நாமத்தைச் சொல்வதற்கு என்றே எனக்கு நாவைப்படைத்துள்ளாய் . குமரா! இந்நாவு எந்தப் பாவத்தையும் செய்யாதபடி என்னைக் காக்க வேண்டும்.

    இவ்வாறு அருணகிரி நாதர் திருச்செந்தூர் தலத்தில் பாடிய திருப்புகழ் பாடல்களில் பல அருமையான தகவல்களை வெளியிட்டுள்ளார். திருச்செந்தூர் முருகன் அருளால் அவர் ஸ்ரீவில்லிபுத்தூராரை வெற்றிக்கொண்ட ஒரு நிகழ்வும் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு திருச்செந்தூரில் நடைபெற்றது.

    அருணகிரிநாதரை பாட வைத்து திருச்செந்தூர் முருகன் கொடுத்த அந்த வெற்றி நிகழ்ச்சி பற்றி அடுத்த வாரம் காணலாம்.

    • இந்தியாவை பொறுத்தவரை மும்மொழி கட்டாயமில்லை என்று தமிழ்நாடு உள்பட சில மாநிலங்கள் கூறியது.
    • இந்தியை நாடு முழுவதும் கட்டாய மொழியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

    மும்மொழி கொள்கையை ஒரு போதும் ஏற்க போவதில்லை. இதற்காக மத்திய அரசு ரூ.2,152 கோடியை நிறுத்தி வைத்திருந்தாலும் சரி. ஏன், பத்தாயிரம் கோடி தருவதாக இருந்தாலும் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்ட வட்டமாக கூறி உள்ளார்.

    பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு ஆர்வம் காட்டினாலும் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்து வதை ஏற்கவில்லை. அதற்கு காரணம் மும்மொழி கொள்கையை அது வலியுறுத்துகிறது என்பதால்தான்.

    இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் எழுதிய கடிதத்தில் மொழியை வைத்து அரசியல் வேண்டாம். அரசியலமைப்பு சட்டத்துடன் ஒத்துப் போக வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    மும்மொழி கொள்கை பற்றி அரசியலமைப்பு சட்டத்தில் எங்கே கூறப்பட்டு உள்ளது என்று மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.

    இப்படி மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே நெருடலை ஏற்படுத்தி இருக்கும் இந்த விவகாரத்தின் தொடக்கப்புள்ளி ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பே வைக்கப்பட்டது.

    நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஒவ்வொரு துறையும் புதிதாக கட்டமைக்கப்பட்டது. அப்போது இந்தியாவை போல் பன்மொழி பேசும் பெல்ஜியம், சுவிட்சர்லாந்து போன்ற சில நாடுகளை மேற்கோள் காட்டி பல்கலைக் கழக மானிய குழுவானது மும்மொழி திட்டத்தை தயாரித்தது. அதில் தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகியவை கட்டாயமாக்கப்பட்டது.

    ஆனால் இந்தியாவை பொறுத்தவரை மும்மொழி கட்டாயமில்லை என்று தமிழ்நாடு உள்பட சில மாநிலங்கள் கூறியது.

    இந்தியை பொறுத்தவரை சிறுபான்மை மொழியாக இருந்தாலும் மாநிலங்கள் கூட்டாட்சி செயல்பாடுகளில் பங்கேற்க கூடிய வகையில் இந்தியை கட்டாயமாக கொண்டு வர இந்தி ஆணையம் பரிந்துரை செய்து இருந்தது. ஆனால் அதை இந்தி பேசாத மாநிலங்கள் ஏற்கவில்லை.

    கடந்த 2020-ல் புதிய தேசிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டது. இதில் ஆரம்பத்தில் வகுக்கப்பட்ட மும்மொழி கொள்கையை தக்க வைத்து கொண்டது.

    ஆனால் ஒரே ஒரு வேறுபாடு. அப்போது இந்தியை நாடு முழுவதும் கட்டாய மொழியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால் இப்போது இந்தியை கட்டாய மொழியாக வைக்கவில்லை. அவ்வளவு தான் வேறுபாடு.

    இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி, ஆங்கிலம் மற்றும் ஏதாவது ஒரு மொழியை கற்பிக்க வேண்டும். அதில் தென்னிந்திய மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இருந்தது.

    புதிய கல்வி கொள்கை 2020-ன்படி எந்த மாநிலத்தின் மீதும் எந்த குறிப்பிட்ட மொழியும் திணிக்கப்பட மாட்டாது. குழந்தைகள் கற்றுக் கொள்ளும் மொழிகள் அவர்கள் விருப்பம் சார்ந்ததாக இருக்க வேண்டும்.

     

    அந்த மூன்று மொழிகளில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும். இதன் பொருள் மாநிலத்தின் இரு மொழிகளையும் தாண்டி இந்திய மொழிகளில் கூடுதலாக ஒரு மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறது.

    தாய்மொழியுடன் ஆங்கிலத்தையும் கட்டாயமாக்கும் அதே வேளையில் விருப்ப பாடமாக சமஸ்கிருதத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உ ள்ளது.

    தமிழ்நாட்டில் இந்த கொள்கைக்கு எதிர்ப்பு உருவாக காரணம் நீண்ட காலமாக இங்கு இந்தி திணிப்பை மாநில அரசும், பல்வேறு கட்சிகளும் எதிர்த்து வருகின்றன.

    1937-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ராஜாஜி பள்ளிகளில் இந்தியை கட்டாய பாடமாக கொண்டு வந்த போது நீதிக் கட்சி அதை கடுமையாக எதிர்த்தது.

    அப்போது நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தாளமுத்து, நடராஜன் ஆகிய இரண்டு வாலிபர்கள் உயிர் இழந்தனர். அவர்கள் இருவரும் இந்தி எதிர்ப்பு இயக்கத்தின் சின்னங்களாகவும் மாறிவிட்டார்கள். இந்த போராட்டம் காரணமாக ராஜாஜி பதவியை துறக்க வேண்டியதாயிற்று. அதன் பிறகு ஆங்கிலேய அரசு அந்த உத்தரவை வாபஸ் பெற்றது.

    1965-ம் ஆண்டில் நாடு முழுவதும் அலுவல் மொழியாக இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கான காலக்கெடு நெருங்கிய போது மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தின் போது தீக்குளிப்பு, போலீஸ் துப்பாக்கி சூடு ஆகியவற்றால் சுமார் 70 பேர் உயிர் இழந்தார்கள்.

    இந்த நிலையில் 1967-ம் ஆண்டு அதிகாரப்பூர்வ மொழி திருத்தச் சட்டம் மற்றும் அதிகாரப் பூர்வமான மொழி குறித்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மும்மொழியின் ஒரு பகுதியாக இந்தி மொழி கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தியது.

    இதை அப்போது முதல்வராக இருந்த அண்ணா எதிர்த்தார். சட்டமன்றத்தில் மும்மொழி கொள்கையை ரத்து செய்ய வேண்டும். பள்ளி பாடங்களில் இருந்து இந்தியை நீக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அப்போது முதல்வராக இருந்த அண்ணா 'வெளி உலகத்துடன் எங்களை இணைக்க ஆங்கிலம் இருக்கும் போது அதுவே இந்தியாவுக்குள்ளும் இணைப்பு மொழியாக இருக்க வல்லது' என்றார்.

    அப்போது இந்தி எதிர்ப்பு போராட்டமும் தீவிரமாக நடந்த நிலையில் இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை இந்தியுடன், ஆங்கிலமும் இணை அலுவல் மொழியாக தொடரும் என்று மத்திய அரசு வாக்குறுதி அளித்தது. அதை தொடர்ந்து இந்தி எதிர்ப்பு போராட்டமும் முடிவுக்கு வந்தது.

    சட்ட சபையில் அண்ணா தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்து தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளை மட்டுமே கற்பிக்கும் இருமொழி கொள்கையை தமிழக அரசு உறுதியாக பின்பற்றி வருகிறது.

    ஆளும் தி.மு.க. மற்றும் பிரதான எதிர்கட்சியான அ.தி.மு.க. உள்ளிட்ட முக்கிய எதிர்கட்சிகள் தொடர்ந்து இரு மொழி கொள்கையை வலியுறுத்துவதோடு அதில் எந்த திருத்தம் கொண்டு வருவதையும் எதிர்த்து வருகிறது.

    2019-ல் கஸ்தூரிரெங்கன் கமிட்டி பரிந்துரை கட்டாய இந்தி கற்றல் என்ற பிரிவை தேசிய கல்வி கொள்கையில் இருந்து நீக்குவதற்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

    மும்மொழி கொள்கையை தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் எதிர்ப்பதற்கு காரணம் பின்வாசல் வழியாக இது இந்தியை திணிக்கும் முயற்சி என்று கருதுகிறார்கள்.

    மும்மொழி திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறையில் இந்தியை கற்பிப்பது தவிர்க்க முடியாததாகி விட்டது என்று கருதுகிறார்கள்.

    இந்தி பேசாத மாநிலங்களில் கூடுதல் நிதி ஒதுக்கி இந்தி மொழியை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதையும் சுட்டி காட்டுகிறார்கள். அதே நேரம் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தென்னிந்திய மொழிகள் கற்பிக்கப்படுவதை உறுதி செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள்.

    கல்வித் துறையில் முக்கிய அளவீடுகளில் பல மாநிலங்களை விட தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது. அதே நேரம் 3-வது மொழியை கற்பிப்பதில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் கல்விக்கான விரிவான திட்டமான சமக்ர சிக்ஷாவிற்கான நிதியை தடம் புரண்டு செல்ல அனுமதித்து விடக் கூடாது.

    மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் மற்றும் நடைமுறை சமரச முயற்சிகள் மட்டுமே இதற்கு சாத்தியமான தீர்வை தரும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

    • மனிதர்களுக்காகத் தான் ஆன்மிகமே தவிர ஆன்மிகத்திற்காக மனிதர்கள் அல்ல.
    • உண்மையிலேயே சேலை தேவைப்படுகிற ஓர் ஏழைப் பெண்ணுக்கும் சேலை வாங்கித் தருவோம் என்ற எண்ணம் ஏன் நம்மில் பலருக்குத் தோன்றுவதில்லை?

    எது உண்மையான ஆன்மிகம் என்ற கேள்வி அடிக்கடி எழுப்பப்படுகிறது. சடங்குகளும் சம்பிரதாயங்களும் விரதங்களும் நோன்புகளும் முக்கியம்தான். மனத்தைச் செம்மைப்படுத்த அவையெல்லாம் உதவக்கூடும்தான்.

    என்றாலும் அவற்றை விட முக்கியமானது ஒன்று உண்டு. அதுதான் மனிதாபிமானம். சக மனிதர்மேல் அன்பு கொண்டு வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துவதே உண்மையான ஆன்மிகம்.

    இந்த உண்மையை உயர்நிலை ஆன்மிகவாதிகளின் வாழ்வில் இடம் பெற்றிருக்கும் சம்பவங்கள் நமக்குப் புலப்படுத்துகின்றன.

    மகாசுவாமிகள் வாழ்க்கையில் ஒரு நிகழ்ச்சி. பரமாச்சாரியாரின் தரிசனத்திற்காக நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் எங்கோ தொலைதூரத்திலிருந்து காஞ்சிபுரம் வந்திருந்தார்கள்.

    ஆனால் என்ன சிக்கல் என்றால், அவர்கள் பரமாச்சாரியாரை தரிசிக்க வந்த அந்த நாள், பரமாச்சாரியாரின் மவுன விரத நாள். பொதுவாக தாம் மவுன விரதம் இருக்கும் நாளில் அவர் கண்டிப்பாக யாருடனும் எதுவும் பேச மாட்டார்.

    எனினும் மாணவர்கள் தரிசனத்திற்கு வந்திருக்கும் விவரத்தை அவருக்குத் தெரிவிக்காமல் இருப்பது சரியல்லவே? அவ்விவரம் அவரிடம் சொல்லப்பட்டது. வந்திருந்த மாணவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதும் தெரிவிக்கப்பட்டது.

    அடுத்த கணம் தயக்கமே இல்லாமல், `அழைத்து வாருங்கள் அத்தனை மாணவர்களையும்!` எனக் கணீரென்று குரல் கொடுத்தார் பரமாச்சாரியார்!

    தம்மை தரிசிக்க வந்த மாணவர்களிடம் அதிக நேரம் எடுத்துக்கொண்டு ஒவ்வொருவரிடமும் தனித்தனியே அன்பாகப் பேசி அவர்கள் அனைவருக்கும் பிரசாதம் கொடுத்து அனுப்பிவைத்தார்.

    மடத்திலிருந்த சிப்பந்திகள் திகைத்தார்கள். யாருக்காகவும் துறக்காத மவுனத்தை அன்று அவர் அந்தக் குறிப்பிட்ட மாணவர்களுக்காகத் துறந்தது ஏன் எனக் கேட்டார்கள். பரமாச்சாரியார் கனிவோடு பதில் சொன்னார்:

    `வந்திருந்த மாணவர்கள் அனைவரும் பார்வையற்றோர் பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்கள். அவர்களுக்கு தரிசனம் என்பது கண்ணால் பார்ப்பதல்ல. காதால் கேட்பது. அவர்களிடம் பேசி அவர்களை சந்தோஷப்படுத்துவதை விட என் மவுன விரதம் முக்கியமல்ல!`

    அனைவரும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒரு கருத்தைப் பரமாச்சாரியார் அன்று அவ்விதம் தெரிவித்தார். மனிதர்களுக்காகத் தான் ஆன்மிகமே தவிர ஆன்மிகத்திற்காக மனிதர்கள் அல்ல, மனிதநேயமே மிக உயர்ந்த ஆன்மிக நெறி என்பதைத் தம் நடவடிக்கையால் மிக அழகாக போதித்துவிட்டார் மகாசுவாமிகள்!

     

    ராமலிங்க வள்ளலார் மாபெரும் சித்தர் ஆயிற்றே? பற்பல அற்புதங்களை நிகழ்த்திய மெய்ஞ்ஞானி அல்லவா அவர்?

    அவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது ஓர் அன்பர் குறுக்கிட்டு அவரிடம் ஓர் இரும்புக் கம்பியைக் கொடுத்தார். அதைத் தங்கமாக்கித் தருமாறு வேண்டினார்.

    வள்ளலார் அவரைப் பார்த்துக் கலகலவென்று நகைத்தார். அவர் இரும்புக் கம்பியின் ஒரு முனையைப் பிடிக்க வள்ளலார் இன்னொரு முனையைப் பிடித்தார்.

    அடுத்த கணம் நடந்தது அந்த அற்புதம்! வள்ளலார் தொட்ட இடத்திலிருந்து பாதிக் கம்பி உடனே தங்கமாக மாறி ஒளி வீசத் தொடங்கியது. ஆச்சரியத்தில் ஆழ்ந்தார் அந்த அன்பர்.

    பின் அந்த இரும்புக் கம்பியை மாற்றிப் பிடித்தார் வள்ளலார். என்ன வியப்பு! உடன் மீதிப் பகுதியும் பொன்னாக மாறியது. இப்போது முழு இரும்புக் கம்பியுமே தங்கக் கம்பியாய் மாறியிருந்தது.

    ஆனால் அதற்குப் பிறகு நடந்த நிகழ்ச்சி தான் வந்தவரை திகைப்பில் ஆழ்த்தியது. இந்தத் தங்கத்தால் என்ன பயன், இந்தத் தங்கம் இறைநிலையை அடைய உதவுமா என்று சொல்லி, தங்கக் கம்பியை அருகேயிருந்த கிணற்றில் வீசிவிட்டுச் சலனமே இல்லாமல் தொடர்ந்து நடந்தார் வள்ளல் பெருமான்.

    காமினி - காஞ்சனம் (காமம் - தங்கம்) இரண்டு ஆசைகளையும் துறந்துவிடுங்கள் எனத் தன் பேச்சுக்களில் தொடர்ந்து முழங்கி வந்தார் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர். பணத்தை ஒரு கையிலும் மண்ணை ஒரு கையிலும் வைத்துக்கொண்டு பணம் மண், மண் பணம் என்று மறுபடி மறுபடி சொல்லி இரண்டையுமே கங்கையில் தூக்கிப் போட்டவர் அல்லவா பொருட்பற்று அறவே இல்லாதிருந்த பரமஹம்சர்!

    ராமலிங்க வள்ளலாரும் ராமகிருஷ்ண பரமஹம்சரும் போதித்த தங்கமான கருத்தை நாம் பின்பற்றுகிறோமா? தங்கத்தின் மேலும் பொருளின் மேலும் உள்ள ஆசையைப் படிப்படியாகக் குறைத்துக் கொண்டு அத்தகைய ஆசைகளிலிருந்து மீள்வதுதான் ஆன்மிக முன்னேற்றத்துக்கான வழி என்பதைப் புரிந்துகொள்கிறோமா?

    சுமங்கலிப் பிரார்த்தனை என்றொரு சடங்கு பல குடும்பங்களில் நடக்கிறது. அப்போது அத்தைக்கும் நாத்தனாருக்கும் இவர்களைப் போன்ற உறவினர்களுக்கும் சேலை வாங்கித் தரும் சம்பிரதாயம் உள்ளது. அந்த வழக்கம் நல்லதுதான். அது குடும்பத்தின் நல்லுறவுக்குப் பயன்படும். எனவே அதைச் செய்ய வேண்டியதுதான். ஆனால் அன்று உண்மையிலேயே சேலை தேவைப்படுகிற ஓர் ஏழைப் பெண்ணுக்கும் சேலை வாங்கித் தருவோம் என்ற எண்ணம் ஏன் நம்மில் பலருக்குத் தோன்றுவதில்லை?

    தேவைப்படுகிறவர்களுக்குச் சேலை கொடுங்கள் என்பதுதானே திரெளபதிக்குச் சேலை கொடுத்த கண்ணன் போதிக்கும் உபதேசம்?

    மானங்காக்கப் புடவை கொடுத்த கடவுளை வழிபடும் தேசத்தில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பெண்கள் மானபங்கப் படுத்தப்படுகிறார்கள். பெண்கள் மீதான பாலியல் வன்முறை அதிகரித்து வருகிறது.

    வழிபடுவது ஒன்று, வாழ்க்கை நெறி இன்னொன்றா? அப்படியானால் அந்த வழிபாட்டின் பயன்தான் என்ன?

    மதுரையில் ஓர் ஏழைத் தமிழ்ப் பெண் கிழிந்த ஒற்றைச் சேலையோடு உடலை மறைக்கப்பட்ட சிரமத்தைப் பார்த்தார் மகாத்மா காந்தி. எல்லா இந்தியர்களுக்கும் ஆடை கிடைக்கும்வரை நான் மேலாடை தரிக்கப் போவதில்லை என முடிவெடுத்தார்.

    அவருடையது ஆன்மிகமா? இல்லை நம்முடையது ஆன்மிகமா என்பதை நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.

    ராவண வதம் முடிந்து புஷ்பக விமானத்தில் அயோத்திக்குப் போகும் தருணத்தில், பரத்வாஜ மகரிஷியின் கோரிக்கையை ஏற்று அவர் ஆசிரமத்தில் சிறிது நேரம் தங்கினான் ராமபிரான்.

    ராமனுக்கும் ராமனோடு வந்துள்ள அத்தனை பேருக்கும் விருந்தளிப்பதாகச் சொன்னார் பரத்வாஜர். அவர் குரலில் சற்றே கர்வத்தின் சாயல்!

    அதை உணர்ந்த ராமன் அவர்மேல் பரிவு கொண்டான். செருக்கில்லாது வாழ்வதே உண்மையான ஆன்மிக வாழ்வு என்பதை அவருக்கு உணர்த்த விரும்பினான்.

    தன் தவச் சக்தியால் அனைவருக்கும் உணவு அளிக்க வாழை இலைகளை பரத்வாஜர் உண்டாக்கினார். எல்லோருக்கும் வாழை இலைகள் வந்து சேர்ந்தன. ஆனால் அனுமனுக்கு வாழை இலை வந்து சேரவில்லை.

    எத்தனையோ முயன்றும் ஆஞ்சநேயனுக்கான வாழையிலையை அவரால் கொண்டுவர இயலவில்லை. கர்வத்தின் காரணமாக அவர் தவச்சக்தி ஓர் எல்லையில் நின்று விட்டது!

    இது ராமன் தனக்களித்த படிப்பினை என உணர்ந்துகொண்ட முனிவர், ராமனைக் கையெடுத்துக் கும்பிட்டு நிலைமையைச் சீராக்க வேண்டினார்.

    ராமன் தனக்கான வாழையிலையில், அனுமனைத் தன் எதிரே அமரச் சொன்னான். வானர இனத்து அனுமனோடு ஒரே இலையில் விருந்துண்டான் ராமன்.

    அப்போது ராமன் மோதிர விரலால் வாழையிலை நடுவே கிழித்த கோடுதான் பின்னால் வாழையிலைக் காம்பாயிற்று என்கிறது அபூர்வ ராமாயணக் கதை.

    தனக்கு உதவிய அணிலின் முதுகில் தடவி அணிலுக்கு மூன்று கோடுகளை அளித்துப் பெருமை சேர்த்த ராமன் இப்போது வாழையிலைக்கு நடுக்காம்பு கொடுத்து அனுமனுக்கும் பெருமை சேர்த்து விட்டான்.

    தன் பக்தனான விலங்கினத்தைச் சேர்ந்த அனுமனோடு ஒரே இலையில் சாப்பிடுவதில் ஷத்திரிய குலத்தைச் சேர்ந்த ராமனுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. வேடன் குகனையும் சகோதரனாக்கிக் கொண்ட மனம் அல்லவா ராமன் மனம்?

    நாம் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நந்தனைப் போற்றுவோம். வேடன் கண்ணப்பனைக் கொண்டாடுவோம். வள்ளிக் குறத்தியை வழிபடுவோம். ஆனால் தேநீர்க் கடைகளில் தனி அலுமினிய தம்ளர் கலாசாரத்தை மட்டும் விட்டுவிட மாட்டோம் என்றால் அது எப்படிச் சரியான ஆன்மீகமாகும்?

     

    திருப்பூர் கிருஷ்ணன்

    பெண் தெய்வமான கலைவாணியைக் கல்விக் கடவுளாய்த் துதிப்போம். ஆனால் பெண்களுக்குக் கல்வி உரிமையை மறுப்போம் என்றால் அது எப்படிச் சரியாகும்?

    மகாகவி பாரதியாரே சகோதரி நிவேதிதையின் அறிவுரைக்குப் பின் தானே மனம் மாறினார்? `கண்கள் இரண்டினில் ஒன்றைக் குத்திக் காட்சி கெடுத்திடலாமோ? பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதமை அற்றிடும் காணீர்!` என்று அவர் பாடியது நிவேதிதையைச் சந்தித்த பின் தானே?

    தனிமனித ஒழுக்கமும் சமுதாய ஒழுக்கமுமே ஆன்மிகத்தின் அடிப்படை என்ற எண்ணம் மக்களிடையே உறுதிப்பட வேண்டியது அவசியம்.

    தான் வாங்குகிற லஞ்சப் பணத்தில் ஒரு பங்கைக் கோயில் உண்டியலில் போட்டுக் குற்ற உணர்ச்சிக்கு வடிகால் தேடுவது ஆன்மிகம் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். லஞ்சம் வாங்கலாகாது என்று உணர்த்தாத ஆன்மிகம், உண்மையான ஆன்மிகமாக எப்படி இருக்க முடியும்?

    தனிமனித, சமூக ஒழுக்கங்களை வலியுறுத்துகிற, மனிதாபிமானத்தைக் கொண்டாடுகிற, தீண்டாமையை எதிர்க்கிற, அனைவரையும் சமம் என்று கருதுகிற ஆன்மிகமே இன்றைய தேவை.

    அத்தகைய ஆன்மிகம் நாட்டில் என்றைக்குத் தழைக்கும் என எல்லாத் தெய்வங்களும் ஆலயங்களில் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தெய்வங்களை மகிழ்ச்சி அடையச் செய்ய வேண்டியது நம் பொறுப்பு என்பதை நாம் உணர்ந்தால் உண்மையான ஆன்மிகம் தழைக்கும்.

    தொடர்புக்கு,

    thiruppurkrishnan@gmail.com

    • ஒழுக்கம். கடன் வாங்காமல் திட்டமிட்டுக் குடும்பத்தை நடத்துவதும் ஒழுக்கம்தான்.
    • நண்பனின் சிரிப்பு, பேச்சு, மேனரிசம் எல்லாம் அலையலையாய் என் நெஞ்சில் மோதி அடித்தன.

    'ஒழுக்கம் என்னும் அஸ்திவாரத்தின் மீது தான், இன்பம் என்னும் மாளிகை அமைக்கப்பட வேண்டும்'.

    -செஸ்டர் பீல்ட்

    எந்தத் தீய பழக்கத்தையும் மிக எளிதாகக் கற்றுக் கொள்ளலாம். ஆனால், அதை அவ்வளவு எளிதாக விட முடியாது. ஏனெனில், அது நம் மனதை வெகு சுலபமாக அடிமைப்படுத்திவிடும்.

    தீய பழக்கங்கள் நம் உடலுக்குக் கேடு விளைவிக்கும் என்பது நமக்குத் தெரியாதா என்ன! எனினும், அவற்றைப் பழகிப் பார்க்க மனம் ஆசைப்படுகின்றது.

    காரணம், அவற்றின் கவர்ச்சி. மறைக்கப்படுவது எதுவோ, தடுக்கப்படுவது எதுவோ, அதன் மீதுதான் ஆசை அதிகமாகிறது. ஏன், எதற்கு என்ற கேள்விகளுக்கே அங்கு இடமில்லை. எதையும் அனுபவித்தறிவதில் ஏற்படுகின்ற ஆர்வம் அலாதியானது.

    தெரியாததைத் தெரிந்து கொள்ளும்போது தான் அறிவு விருத்தியாகும். சைக்கிள் ஓட்டிப் பழகும்போது, அதுதான் மிகப்பெரிய ஞானக்கலையாகத் தெரிகிறது. பார்க்கின்ற சைக்கிளை எல்லாம் ஓட்டிப் பார்க்க ஆசை எழுகிறது.

    பாடங்களை அன்றன்று படித்து முடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டவன், ஒருபோதும் அதை விடுவதில்லை. அந்தப் பழக்கம் தேர்வுகளை அவனுக்குச் சுலபமாக்குவது மட்டுமன்றி, அவனுக்குள் ஓர் ஒழுங்குமுறையையும் உருவாக்கிவிடுகிறது. அது அவனை உயர்த்துகிறது.

    குறித்த நேரத்தில் அலுவலகத்தில் இருப்பது ஒருவகை ஒழுக்கம். லஞ்சம் வாங்காமல் தன் கடமைகளைச் செய்வது மிகச்சிறந்த ஒழுக்கம். கடன் வாங்காமல் திட்டமிட்டுக் குடும்பத்தை நடத்துவதும் ஒழுக்கம்தான். இவை அனைத்தும் பழக்கத்தில் வருபவை. நல்லவற்றைச் செய்வதற்கு ஒருவன் தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டால் போதும்; நல்லவனாய் இருப்பதைப் பற்றி அவன் சிந்திக்க வேண்டிய அவசியமே இல்லை.

    சிலர் இருக்கிறார்கள். தினந்தோறும் அலுவலகத்திற்கு அரைமணி நேரம் பிந்திதான் செல்வார்கள். அங்கே போய் மேலாளரிடம் தலையைச் சொரிந்து கொண்டு நிற்பார்கள். சிலருக்கு, லஞ்சம் வாங்காமல் எந்த வேலையும் செய்ய முடியாது. இப்படி ஒழுக்கக்கேடான பழக்க வழக்கங்கள் நிறைய உண்டு. ஒன்றைப் பழகிக் கொண்டபின், அது வழக்கமாகிவிடுகிறது.

    நல்லவை, தீயவை - இவையே மனித வாழ்வின் இருவேறு நிலைகளைத் தீர்மானிக்கின்றன. நல்ல பழக்க வழக்கங்கள் நமக்கு நற்பெயரைத் தருகின்றன; ஆரோக்கியத்தையும் தருகின்றன. நல்லவற்றின் மூலம்தான் வாழ்க்கை உயர்வு பெறுகின்றது.

    தவறான தொடர்புகளும் தாறுமாறான செயற்பாடுகளும் ஒரு மனிதனின் வாழ்வைத் தலைகீழாய்ப் புரட்டிப் போட்டுவிடும். அதனால்தான், ஆரோக்கியத்திலும் வாழ்வின் நகர்விலும் பின்தங்கிக் கொண்டிருப்பவனைப் பார்ப்பவர்கள், 'அவனுடைய பழக்க வழக்கம் சரியில்ல' என்கிறார்கள். அது உண்மையும்கூட!

    நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, ஓர் இலக்கிய நண்பன் எனக்குக் கிடைத்தான். நாங்கள் இருவரும் வெவ்வேறு பாடப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். எனினும், இலக்கிய ஆர்வம் எங்களை இணைத்தது.

    அந்த நண்பனின் வீட்டு மொட்டை மாடியில், கலைக்குடில் என்று ஓர் அமைப்பை ஏற்படுத்தியிருந்தோம். தென்னங்கீற்றுகளால் கூரை வேய்ந்த குளிர்ச்சியான ஓர் அறை. பெரும்பாலான மாலைப் பொழுதுகள் அங்குதான் செலவிடுவோம். என் இலக்கிய நண்பனுக்கு நன்கு பழக்கமான மற்றொரு நண்பனும் அங்கு அவ்வப்போது வருவான். அவன் வேறொரு கல்லூரியில் பி.காம் படித்துக் கொண்டிருந்தான்.

    அவன் நகைச்சுவை உணர்வு மிக்கவன். சிரிக்கச் சிரிக்கப் பேசுவான். அவனை 'நகைச்சுவை நண்பா' என்றுதான் நான் அழைப்பேன். வரும்போது கடுகடுப்பாக 'உம்' என்று வருவான். வந்து உட்கார்ந்து, ஒரு சிகரெட்டை முழுவதுமாக இழுத்து முடித்ததும், கலகல என்று பேசத் தொடங்குவான். நகைச்சுவை ததும்பத் ததும்பப் பேசுவான். வெடிச்சிரிப்பாய்ச் சிரிப்பான். சில நிமிடங்களில் பட்டென்று அமைதியாகிவிடுவான். பின்னர் கிளம்பிவிடுவான்.

    அவனுடைய நடவடிக்கைகள் வேடிக்கையாகவும், சில சமயங்களில் விநோதமாகவும் இருக்கும். அவனைப் பற்றி என் இலக்கிய நண்பனிடம் விசாரித்தேன்.

    'அவன் ஸ்மோக் பண்றது சாதாரண சிகரெட் இல்ல. அதில் வேறொரு விஷயம் இருக்கு. அதைப்பற்றி அவனிடமே கேள்' என்றான்.

    அதன்பின் நான்கைந்து நாட்கள் நான் அங்கு செல்லவில்லை. பின்னொரு மாலைப் பொழுதில் கலைக்குடிலுக்குச் சென்றேன். அமெரிக்கக் கவிஞன் வால்ட் விட்மனின் 'புல்லின் இலைகள்' (லீவ்ஸ் ஆப் கிராஸ்) என்ற நூல் பற்றி சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, அந்த நகைச்சுவை நண்பன் விறுவிறு என்று வந்தான்.

    மோடாவில் உட்கார்ந்ததும், தனது சட்டைப் பையிலிருந்து ஒரு சின்னஞ்சிறு பொட்டலத்தை எடுத்து, அதிலிருந்த ஏதோ ஒன்றைத் தனது இடது உள்ளங்கையில் கொட்டி, வலது கையினால் நன்றாகக் கசக்கினான். பின்னர், அதில் விலக்க வேண்டியவற்றைப் பொறுக்கினான். அதன்பின், சிகரெட்டிலுள்ள புகையிலையை வெளியே தள்ளிவிட்டு, உள்ளங்கையிலிருந்த துகள்களை வெகு லாவகமாக சிகரெட்டிற்குள் ஏற்றினான். ரசித்துப் புகைக்கத் தொடங்கினான். அவன் முகத்தில் புன்னகை மலர்ந்தது. அரட்டை அமர்க்களம் ஆரம்பமானது.

    எனக்குப் புரிந்துவிட்டது. எனினும், அவனிடம் கேட்டேன். 'இது என்னது?' 'கஞ்சா' என்றான்.

    'இந்தப் பழக்கம் உனக்கு எப்படி...?'

    'ஆராய்ச்சி எதுக்கு... எப்படியோ பழகிட்டேன். இந்த சுகமே தனி. இது ஒரு தேவமூலிகை' என்றான்.

    'இது ரொம்ப ஆபத்தானதுன்னு சொல்றாங்களே'.

    'அளவுக்கு அதிகமானா எதுவும் ஆபத்துதான். காபி, டீ, சர்க்கரை, சோறு எல்லாமே கேடுதான். ஆனா ஒரு புதுமையான சுகத்தை இதுமூலம் நான் அனுபவிக்கிறேன்' என்று சொல்லி, புகையை ரசித்து உள்ளிழுத்தான். முழுவதுமாக இழுத்து தீர்த்தபின், சற்று நேரத்தில் எழுந்து சென்றுவிட்டான்.நாட்கள் நகர்ந்தன.

    கவிஞர் தியாரூ, 9940056332

     

    கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர், ஊரிலிருந்து நான் சென்னை வந்துவிட்டேன். மாதங்கள் வருடங்கள் எனக் காலம் ஓடியது. திருமணமாகி சென்னையில் செட்டில் ஆனபின், வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை குடும்பத்துடன் ஊருக்குச் சென்று வருவேன். ஆனால், பழைய நண்பர்களைச் சந்திக்கச் செல்வது அரிதாகிப் போனது.

    அப்படி ஒருமுறை ஊருக்குச் சென்றிருந்தபோது, என் இலக்கிய நண்பனைக் காணச் சென்றேன். வருடங்கள் கழித்துப் பார்த்த நெகிழ்ச்சியில், என்னை ஆரத்தழுவிக் கொண்டான். கடந்த காலத்தின் நினைவுகளைப் பேசிப் பேசிக் களித்தோம். நகைச்சுவை நண்பனைப் பற்றிய நினைவு வர, ஆவலுடன் விசாரித்தேன். இலக்கிய நண்பனின் முகத்தில் வருத்தம் படர்ந்தது.

    'உடம்புக்கு முடியல. படுத்த படுக்கையா இருக்கிறான்' என்றான். என் மனம் கவலையில் ஆழ்ந்தது.

    'என்னாச்சு' என்றேன் பதற்றத்துடன்.

    'முழுக்க முழுக்க கஞ்சா, பெத்தடின் ஊசி மருந்து, போதை மாத்திரைக்கு அடிமை ஆயிட்டான். யார் சொல்லியும் கேட்கல. இப்ப பல ஹெல்த் இஷ்யூஸ். எப்ப என்ன ஆகும்னு சொல்ல முடியாது' என்றான்.

    'பார்க்க வேண்டும்' என்றேன். அழைத்துச் சென்றான்.

    அந்த வீட்டின் ஒரு சிறிய அறையில், ஒடுக்கமான கட்டிலில் முடங்கிக் கிடந்தான் அவன். தேகம் துரும்புபோல் இளைத்திருந்தது. முகம் மொத் மொத்தென்று விகாரமாக இருந்தது. வீங்கியிருந்த கால்களின் வெடிப்புகளிலிருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது.

    பக்கத்தில் போய் அமர்ந்தேன். அவனால் பேச முடியவில்லை. கைகளைத் தொட்டேன். அவை ஜீவனற்றுக் கிடந்தன. எனக்கு மனது தாங்கவில்லை. கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அந்த அறையை விட்டெழுந்து ஹாலுக்கு வந்தேன். அவனுடைய அப்பா, கண்களை மூடிக்கொண்டு ஈஸி சேரில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். நான் அருகில் செல்ல, கண்களை மெல்லத் திறந்தார்.

    'ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணலாமே' என்றேன்.

    'வேஸ்ட். எந்தப் பிரயோஜனமும் இல்ல. பெத்து வளர்த்தவங்களுக்குக் கண்ணீர்தான் மிச்சம். அவன் போகப் போறான்' என்று சொல்லிவிட்டு, விரக்தியுடன் மீண்டும் கண்களை மூடிக் கொண்டார்.

    நானும் என் இலக்கிய நண்பனும் கனத்த இதயத்தோடு வெளியே வந்தோம். அந்த நண்பனின் சிரிப்பு, பேச்சு, மேனரிசம் எல்லாம் அலையலையாய் என் நெஞ்சில் மோதி அடித்தன.

    கஞ்சா, அபின், ஹெராயின், கோகைன் போன்ற கொடிய போதைப்பொருட்கள் இன்று பரவலாகப் புழக்கத்தில் உள்ளன என்னும் செய்தி, பேரதிர்ச்சியையும் பெருங்கவலையையும் நமக்கு ஏற்படுத்துகின்றன. மனித சமூகத்தின் வேர் அறுபடாமல் பாதுகாக்கப்படுவதற்கு, இன்றைய இளைஞர்கள் மட்டுமன்றி எல்லோருமே பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

    போதைப் பொருட்கள் மாயாஜால வித்தைகளை மனதுக்குள் நிகழ்த்துகின்றன. நிஜத்தில் சாத்தியமில்லாத மாய உலகில் மிதக்கச் செய்கின்றன.

    விபரீத சிந்தனைகளைத் தூண்டுகின்றன. தன்னைத் தானே மறக்கின்ற அளவிற்கு ஒருவித பரவச நிலையில் மனதை ஆழ்த்துகின்றன. முடிவில், அதல பாதாளத்தில் தள்ளிவிடுகின்றன.

    போதைப் பொருட்களுக்கு எதிரான எத்தனையோ சட்ட திட்டங்கள் நாட்டில் உள்ளன. ஆனால், சட்ட திட்டங்களால் மட்டுமே சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது. ஒவ்வொரு குடும்பமும் பொறுப்புணர்வுடன் செயல்பட்டால்தான் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.

    பெற்றோர் தங்கள் குழந்தைகளின் மனதில் நல்ல நல்ல விஷயங்களை ஒவ்வொரு நாளும் விதைத்துக்கொண்டே இருக்க வேண்டும். போதைப் பொருட்களின் அபாயத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஆரம்பத்திலேயே ஏற்படுத்திவிட வேண்டும். ஆணோ பெண்ணோ, இருபாலர்க்கும் ஒழுக்கம் அவசியம். எனவே, அவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

    பிள்ளைகளிடம் அன்பு காட்டுவது எவ்வளவு முக்கியமோ, அதேபோல், அவர்களைக் கனிவுடன் கண்காணிப்பதும் மிக முக்கியம். குறிப்பாக, தீய நட்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சீரான வளர்ப்புதான் சிறந்த வாழ்க்கையை உருவாக்கும்.

    எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மிகக் கவனமாகக் கையாள வேண்டும். ஆரோக்கியமான வாழ்வின் அழகையும், அது தருகின்ற உன்னதமான இன்பங்களையும் பிள்ளைகளின் மனதில் பதியச் செய்ய வேண்டும். வாழ்க்கை ஓர் நெடிய பயணம். இந்தப் பயணம் இனிதாகவும் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டுமெனில், பாதை செம்மையானதாக இருக்க வேண்டும்.

    • “என்ன சார்... பார்த்தா வயசானவங்களா தெரியுது. நீங்க எத பறிகொடுத்தீங்க...”
    • ‘தங்களை சுற்றி என்ன நடக்கிறது என தெரியாமல் விக்கித்து நின்றனர் லிசாவும், தேவசகாயமும்.

    "அழகர்... எஸ்.பி. பேசுறேன்!"

    "ஐயா... சொல்லுங்கய்யா..."

    "என்னய்யா திவ்யான்னு பொண்ணை உன் ஜூரிஸ்டிக்ஸன்ல வெச்சு காணோம்னு அவங்க அண்ணன் பெருமாள் வந்திருக்காரு... கேர்லஸ்ஸா டீல் பண்றியாய்யா?"

    "இல்லீங்கய்யா... இப்பக்கூட ஒரு லீட் கிடைச்சு பண்ணையார்பட்டியில தான் விசாரணையில இருக்கேன் ஐயா..."

    "எனக்கு இன்னிக்குள்ள அந்த பொண்ணை பத்தின பாசிட்டிங் ரிப்போர்ட் வரணும்..."

    "சரிங்கய்யா..."

    போனை கட் பண்ணின எஸ்.பி. பெருமாளிடம், "பெருமாள்... அழகர் பண்ணையார்பட்டியில என்கொய்ரில இருக்காரு... எப்படியும் இன்னிக்குள்ள பாசிட்டிவ் நியூஸ் வந்துரும்!" என கூற, சற்று பதட்டமாவே பெருமாள், "சார் நானும் என் ஆட்களோட அந்த ஏரியாவுக்கு போய் தேடலாம்னு இருக்கேன்..."

    "அப்போ போலீஸ்மேல இன்னும் உங்களுக்கு நம்பிக்கை வரலை... அப்படித்தானே?"

    "அப்படி இல்ல சார்... நாங்க தேடுறதுல உங்களுக்கு ஏதும் பிரச்சினையா?"

    "நோ இஷ்யூ... தாராளமா நீங்களும் களம் இறங்கித் தேடுங்க... பட்... போலீஸ்க்கோ, பப்ளிக்குக்கோ தொந்தரவா இருக்கக்கூடாது. ஏன்னா... நீங்க அரசியல்வாதிங்க... அதுக்கு சொல்றேன்..."

    "நீங்க சொன்ன மாதிரி தொந்தரவு வராம பார்த்துக்கிறேன் சார்... நன்றி!"

    "ம்... புகார் மனுல உங்க கான்டாக்ட் நம்பர் இருக்குல்ல..."

    "இருக்கு சார்..."

    "சரி... ஏதாச்சும் அர்ஜன்டுனா, கால் பண்றோம்.. போயிட்டு வாங்க...!"

    கை கூப்பி, அனுப்பி வைத்தார்.

    போலீஸ் ஸ்டேஷன்.

    "அப்படி போய் உக்காருங்கய்யா... இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. எல்லாம் வந்ததும் உங்க சூட்கேஸ் பஸ் ஸ்டாண்டுல காணாம போன கம்பளைண்ட் வாங்கிக்கிறேன்..."

    அந்த இருவரையும் ஏட்டு, எரிச்சலுடன் அமர சொல்ல, அவர்கள் பெஞ்சில் அமர்ந்தனர்.

    "ம்... பஸ் ஸ்டாண்ட்ல சூட்கேச எவனோ அடிச்சுட்டான்னு கம்ப்ளயிண்ட் குடுக்க வந்தா... இப்படி காக்க வெக்குறாங்களே மச்சான்..." அந்த இருவரில் ஒருவன் சலித்தபடியே, மற்றொருவனிடம் சொல்லிவிட்டு பார்த்தான்.

    எதிர் பெஞ்சில் திவ்யா மற்றும் டேவிட்டின் அப்பா ரங்கராஜன், அம்மா ராஜேஸ்வரி, தேவசகாயம், லிசா அமர்ந்து இருப்பதை பார்த்தனர்.

    "என்ன சார்... பார்த்தா வயசானவங்களா தெரியுது. நீங்க எத பறிகொடுத்தீங்க..."

    "எங்க பொண்ணை!" - ரங்கராஜன் சொல்ல அவர்கள் மவுனமாகி இவர்களையே பார்த்தனர்.

    முருகநத்தம்.

    இடது புறம் அம்புக்குறி போட்ட அந்த ரோட்டில் தன் வண்டியை லாவகமாக செலுத்தினான் டேவிட். எதிரே ஒருவர் சைக்கிளில் வர, அவரை கை காண்பித்து நிறுத்தினான். கைக்கிளை நிறுத்தியவர், காருக்குள் எட்டிப்பார்த்தபடி கேட்டார்.

    "என்னாங்க...?"

    "நீங்க முருக நத்தமா...?"

    "ஆமா... ஏன்?"

    "வித்தியாசமா இந்தப் பக்கமா கார் எதாவது போனத பார்த்தீங்க...?"

    "இல்லீங்கோ... ஆனா... வேட்டக்காரன் பங்களாவுல ஒரு காரு நின்னுச்சு. அப்புறம் போயிடுச்சு. அப்பாவியாய் சொன்னார் அந்த மனிதர்."

    "வேட்டைக்காரன் பங்களாவா?"

    "ஆமா தம்பி... பிரிட்டிஸ்காரன் காலத்துல அவங்க முருகநத்தம் காட்டுல வேட்டைக்கு போவாங்க... அப்ப ரெஸ்ட் எடுக்க கட்டுன பங்களா... இப்போ சிதிலமாகி கிடக்கு!"

    "அங்கத்தான் அந்த கார பார்த்தீங்களா...?"

    "நன்றிங்க ஐயா...!"

    என கூறிவிட்டு, அவர்கள் காரை கிளப்பி செல்ல, கிராமத்துக்காரர் குழப்பமாய் சைக்கிளை ஓட்டியபடி எதிர்திசையில் சென்றார்.

     

    இயக்குநர் A.வெங்கடேஷ்

    போலீஸ் ஸ்டேஷன்.

    "ஐயா... இந்த லெட்டரையும், பாக்சையும் பிடிங்க! "

    போலீஸ் ஸ்டேஷன் ஏட்டையாவுக்கு தெரியாமல், சூட்கேசை பறிகொடுத்ததாக வந்ததில் ஒருவர் ரங்கராஜனிடம் நீட்டினான்.

    "என்ன இது...?" ரங்கராஜன் கேட்டார்.

    "உங்க பொண்ணு சம்பந்தபட்டது உள்ள இருக்கு. சத்தம் போடாம பிரிச்சு பாருங்க.. போலீஸ் ஸ்டேஷனில், சூட்கேஸ் காணாமல் போனதாக கூறி, அவர்கள் பக்கத்தில் வந்து அமர்ந்த இருவரில் ஒருவன் அந்த லெட்டரையும், பாக்சையும் கொடுக்க, மொத்த குடும்பமும் அதிர்ந்தது அல்லவா!

    "நாங்க.. அந்த ஜன்னலுக்கு வெளியே நிக்கிறோம்: பாக்சை திறந்து பார்த்துட்டு வாங்க.. இருவரும் எழுந்து போய் ஸ்டேஷன் வெளிப்புறம் நின்று இவர்களேயே பார்த்து கொண்டு நின்றனர். ரங்கராஜன் கடிதத்தை பிரித்தார்.

    "பெண்ணை பெற்ற அப்பனே!

    உன் பெண் சம்பந்தப்பட்டது, அந்த சின்ன பாக்சில் உள்ளது. முதல்ல.. நீ பாரு! அப்புறம் பெருமாளுக்கு காட்டு. உன் மருமகன் டேவிட், திவ்யாவை தேடி கிளம்பி வந்திருக்கான் இல்லியா... அவன்கிட்ட நேரில் நான் பேசிக்கொள்கிறேன்.

    விளையாட்டு தொடரும்."

    அன்பில்லாத - நல்லவன்!

    லெட்டரை படித்துவிட்டு, நடுங்கும் விரல்களால் அந்தப் பெட்டியை பிரிக்க, ராஜேஸ்வரி, லிசா, தேவசகாயம் பதட்டத்துடன் பார்த்து கொண்டிருக்க...

    அதேநேரம் ஒரு சிகரெட்டை கோபமாக உறிஞ்சி, புகையை வெளியிட்ட, இன்ஸ்பெக்டர் அழகர், "அந்த பெருமாள், எஸ்.பி. ஆபீஸ்ல போயி புகார் கொடுத்தா, அவன் தங்கச்சி திவ்யாவ மேஜை டிராயர்ல இருந்து எஸ்.பி எடுத்து குடுத்துடுவாரா. நாமதான கண்டுபிடிக்கணும். அது தெரியாம லூசுப்பய மாதிரி எஸ்.பி. ஆபிசுக்கு போயிருக்கான்..."

    என கடுப்பாய் பேசிவிட்டு, சிகரெட்டை உறிஞ்சி தூக்கி வீசியவர், பக்கத்தில் அவரையே பார்த்துக் கொண்டிருந்த கான்ஸ்டபிள் மணியை பார்த்தார்.

    "என்னய்யா... 'வாட்ஸ் - அப்ல அந்த திவ்யாவோட புருஷன், டேவிட்டுக்கு, நீ மெசேஜ் அனுப்பினியே... அவன் இந்நேரம் முருக நத்தம் 'போயிருப்பான்ல...!"

    கான்ஸ்டபிள் மணி அதிர்ந்தார்.

    என்னடா இது. யாருக்கும் தெரியாம தானே மெசேஜ் அனுப்பினேன். இந்த ஆளுக்கு எப்படி தெரிஞ்சது.? குழப்பமாய் அழகரை பார்த்தார் கான்ஸ்டபிள் மணி. "என்ன பாக்குறே... நீ பானையில் இருக்கிற சோறுதான்... நான் அந்த சோற்றையே பொங்க வைக்கிறவன்டா...!"

    மணி பதட்டமாய் பார்த்தான்.

    "பயப்படாத... நம்ம டிபார்ட்மெண்ட்ல 'ஐந்தாம் படை' களை ஆயிரம் தடவ பார்த்தவன் நான். ஆமா... இந்நேரம் உன் மெசேஜ்ஜை பார்த்த ஹீரோ' ஸ்பாட்டுக்கு போயிருப்பான் இல்ல...?"

    முருக நத்தம்...

    'உய்' என்ற காத்தைத்தவிர, ஒரு வண்டு கூட அங்க இல்ல. வெறும் மரங்களும், வெட்கையும் மட்டுமே டேவிட் மற்றும் அவன் நண்பர்களுக்கு தெரிய, அந்த காட்டுக்கு நடுவே தெரிந்த சிதிலமான அந்தகால கட்டிடமான 'வேட்டைக்காரன் பங்களா' கண்ணில் பட்டது. வேகமாக அந்த பங்களாவை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். வயிற்றுக்குள் பயமும், நினைவுக்குள் திவ்யா முகமும் வந்து போக 'கடவுளே... திவ்யாவுக்கு எதுவும் ஆகியிருக்க கூடாது...' வேண்டியபடி பங்களாவை அடைந்த டேவிட், நண்பர்களை தாண்டி வேகமாய் ஓடிச்சென்று அந்த பங்களாவின், அந்த இத்துப்போன பழைய கதவை ஓங்கி மிதித்து திறந்தான். அரையிருட்டில், பங்களாவுக்குள் நுழைந்த டேவிட் அதிர்ந்தான்.

    போலீஸ் ஸ்டேஷன்...

    லிசா, தேவசகாயம், மனைவி ராஜேஸ்வரி மூவரும் பதட்டமாய் பார்க்க அந்த சின்ன பாக்சை திறந்த ரங்கராஜன் அதிர்ந்தார். உள்ளே இரண்டாக வெட்டப்பட்ட தாலி.

    டேவிட், திவ்யா கழுத்தில் கட்டிய தாலி.

    புதுமணம் இழக்காத அந்த தாலி அறுந்து இருப்பதை கண்டு அலறினாள் ராஜேஸ்வரி.

    "ஐயோ... படுபாவி, அவ தாலிய கட் பண்ணி அனுப்பி இருக்கானே... நல்லா இருப்பானா...

    மனுசனா.. இல்லை அவன் மனநிலை சரி இல்லாத சைக்கோவா...?'

    ராஜேஸ்வரி அலறும் போதே, ரங்கராஜன் தோளை தட்டிய அந்த இருவரில் ஒருவன், அவன் போனை நீட்டினான்.

    "தலைவர் பேசணுமாம்!"

    ரங்கராஜன் போனை வாங்க, போனை கொடுத்தவன் ராஜேஸ்வரியிடம், "இந்தாம்மா.. கத்தி கூச்சல்போட்டு போலீஸ் ஸ்டேஷனை உஷாராக்கி எங்களை மாட்டிவிட்ட, உன் பொண்ணு காலி! உணர்ச்சிவசப்பட்டு கத்தணும்னு தோணுசுனா உனக்குள்ள கத்திக்கோ...!" என ஒருவித மிரட்டும் தொனியில் சொல்ல அமைதியானாள் ராஜேஸ்வரி.

    'தங்களை சுற்றி என்ன நடக்கிறது என தெரியாமல் விக்கித்து நின்றனர் லிசாவும், தேவசகாயமும்.

    நடுங்கும் விரல்களால் போனை தன் காதில் வைத்தார் ரங்கராஜன்.

    என்ன திவ்யா அப்பா!... நாதான் பேசுறேன்.

    "தாலிய கட் பண்ணி அனுப்பினதும், தலை சுத்தி இருக்குமே... பெருமாளுக்கு தகவல் சொல்லிட்டு, ஸ்டேசன்லயே இருங்க. அடுத்து அடுத்து அதிர்ச்சிகள் காத்திருக்கு... வைக்கட்டா..

    "ஹலோ... ஹலோ... யார்ரா நீ... எதுக்கு இப்படி எல்லாம் பண்ற... சொல்லு... யார் நீ!"

    "நான் யாருன்னு சொல்லாம, தெரியாம, இந்த கதை முடியாது. போ... போயி... பெஞ்சுல உட்கார்ந்து வெயிட் பண்ணு.. மீண்டும் வரேன்... பை!"

    போன் துண்டிக்கப்பட்டது. போனை வாங்கியவன், "நாங்க உங்களை கவனிச்சுக் கிட்டு தான் இருப்போம்... அதுக்காகதான் சூட்கேஸ் காணோம்னு கம்ப்ளெயிண்ட் பண்ற மாதிரி ஸ்டேஷன்குள்ள வந்துருக்கோம்னு., புரியும்னு நினைக்கிறேன். இங்க பாரு...!"

    அவன் சட்டையை தூக்கி காட்ட இடுப்பில் மறைவாய் உட்கார்ந்து இருந்தது அந்த ரிவால்வர். ரங்கராஜன் மிரள மிக கோரமாய் சிரித்தான் அவன்.

    (தொடரும்)

    E-Mail: director.a.venkatesh@gmail.com / வாட்ஸப்: 7299535353

    • பகை அரசர்களோ அல்லது பகை வேந்தர்களோ என்னவரை அணுகுதல் என்பது அருமைப் பாடுடைத்து என்பதைப் பெருமையுடன் கூறுவேன்.
    • இத்துணை சிறப்பு வாய்ந்த மலையில்தான் தமிழ் மாமுனி அகத்தியச் சித்தர் தவம் புரிகிறார்!

    திடீரென்று சாலினியின் முகத்திலும், நடவடிக்கையிலும் பெரும் மாற்றம் ஏற்பட ஆரம்பித்திருந்ததை கவனித்தவர்கள் ஆச்சரியத்தில் மௌனமானார்கள். அமைதியாக அந்தக் கல்லறையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தவள், என்ன நினைத்தாளோ திடீரென அதை நெருங்கிச் சென்று,

    "அன்புச் செல்லமே... அருமை மகளே இங்குதான் இருக்கிறாயா கண்மணி", என்று ஆரம்பித்தவளின் குரலும், மொழியும், அங்க அசைவுகளும்கூட முற்றிலுமாக மாறியிருந்தன. கண்களை மூடிக்கொண்டு அவள் நின்றிருந்த தோரணை வேறொரு உலகில் சஞ்சரிப்பவள் போலவே தன்னையறியாமல் பேச ஆரம்பித்தாள்.

    "என்ன சொன்னீர்கள் உங்கள் நாட்டின் முதல் அரசி அயோத்தியிலிருந்து வந்தவள் என்றா? தவறு. தவறு. எங்கள் அன்பு மகள் செம்பவளம் தங்கத் தமிழ் பெண்ணல்லவா? புரியாமல் பேசுகிறீர்களா? சரி நானே சொல்கிறேன்" என்று ஆரம்பித்தவளின் அந்த வித்தியாசமான உரையை, அசாதாரண உடல் மொழியுடன், கண்கள் அகல, தெளிந்த நீரோடையான அவள் பேச்சைக் கேட்க ஊரே கூடி விட்டாலும், ஊடகம் வரை செய்திகள் விரைவாகப் பரவி அனைத்து ஊடகத்தாரும் சூழ்ந்துவிட அந்த இடமே முற்றிலும் அமைதியாகி, சாலினியின் பேச்சு மட்டுமே உரக்கக் கேட்டுக் கொண்டிருந்தது. பல ஆயிரம் ஆண்டுகளானாலும் உண்மையை ஒருநாளும் மறைத்து வைக்க முடியாது. என்றாவது ஒரு நாள் அது பருத்திப்பூ போல வெடித்து சிதறிக்கொண்டு வெளியே வந்துவிடும் என்ற உண்மையை அனைவரும் ஆதாரங்களுடன் புரிந்துகொள்ள வாய்ப்பாக அமைந்த அற்புதமான தருணம் அது!

    முற்பிறவி நினைவு வந்த சாலினி என்ற அந்த இளம் பெண், பொற்பூங்கோதை என்ற ஒரு தாயாக, ஆய்நாட்டு அரசியாக மாறி 2050 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறார்!

     

    பொற்பூங்கோதையாக மாறிய சாலினி "கடையேழு வள்ளல்களுள் ஒருவரான ஆய் அண்டிரன் எனும், ஆய் நாட்டின் சிற்றரசன், பொதிய மலையின் தலைவன், கொங்கு நாட்டின் கவிர மலைக்குக் காவலன், வேளிர் குடித் தலைவன், முடியுடை வேந்தருக்குப் பெண் கொடுக்கும் தகுதி வாய்ந்த தலை மகனின் தர்ம பத்தினி நான். பொற்பூங்கோதை எனது பெயர்.

    கல்வி கேள்விகளிற் சிறந்தவராய், வில் வாள் பயிற்சிகள் மிகுதியும் பெற்றுப் பெரியோர்களைப் பணிந்து, எளியவர்களைப் பேணி நாடே போற்ற இனிது வாழும் நல்லிதயம் படைத்தவர். ஆய் வம்சத்தின் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்.

    தமிழகத்தின் தென்கோடியில் அமைந்திருக்கும் எங்கள் ஆய் நாட்டின் பெருமை என்றால் அது உலக வணிகத்தைக் கிழக்கிலும் மேற்கிலும் இணைக்கும் முக்கியப் புள்ளியாக அமைந்திருப்பதுதான். ஆய் அண்டிரனால் உருவாக்கப்பட்ட தனி நாடாக சிற்றரசு அமைப்புடன் குடியாட்சியாகச் செயல்பட்டு வரும் கொங்கு நாடு அவர்தம் அரசாளுமையில் வணிகம் தொடங்கி புதிய கண்டுபிடிப்புகள் வழியே செல்வம் கொழிக்கும் நாடாக உயர்ந்துள்ளது.

    ஆய்அண்டிரன் உழுதுண்ணும் வேளாளர், உழுவித்துண்ணும் வேளாளர் எனப் பாகுபடுத்திக் கூறப்படும் வேளாண் மரபில் உழுவித்துண்ணும் சிறப்புமிக்க வேளாளர் மரபினர். வேளாளர்கட்குரிய தனியுரிமைப் பெயரான, 'வேள்' என்னும் பட்டப்பெயரைப் பெற்று ஆய் வேள் என்றும் வேள் ஆய் என்றும் அன்போடு அழைக்கப்படுபவர்.

    பாண்டிய நாட்டில் பெருமைக்கோர் உறைவிடமானதும், அகத்தியர் வாழும் அழகிய இடமுமான பொதிகை மலைக்கும், அதன் அண்மியதான ஆய்குடிக்கும் தலைவர் இவர்தான். சேர சோழ பாண்டியர்கட்கு முறையே பனை, அத்தி, வேம்பு மாலைகள் அடையாளமாக அமைந்திருப்பனபோல, இவருக்குச் சுரபுன்னை மாலை அடையாளப் பூவாகும்.

    பகை அரசர்களோ அல்லது பகை வேந்தர்களோ என்னவரை அணுகுதல் என்பது அருமைப் பாடுடைத்து என்பதைப் பெருமையுடன் கூறுவேன். கொங்கு நாட்டவரோடு பொருது அவர்களைப் புறங்காட்டி ஓடச் செய்தவர்.

    கொடையிலும் மிகச் சிறந்தவரானதால், புலவர் மகிழ்ந்து போற்றிப்பாடும் புகழினைப் பெற்றவர். புலவர்கட்கு வரையாது கொடுக்கும் வள்ளலாய் திகழ்பவர். தன்னையடைந்த பாணர்கட்கும், இரவலர்கட்கும் யானைகளைக் கணக்கின்றி ஈந்து கொண்டிருப்பவர்.

     

    பவளசங்கரி, 63743 81820

    எம் தலைவனுக்கு உரிமையான பொதிகை மலையும், அதற்கு அண்மையதான ஆய்குடியும் புலவர்களால் சிறப்புடன் வர்ணிக்கப்படுவன.

    எங்கள் பொதிய மலையில் வாழும் குரங்குகள் பரிசிலர்கள் கட்டிவைத்த முழாக்களைப் பலவின் பழங்களோ என எண்ணி, அவற்றினைத் தொட்டமாத்திரத்தில் அவை ஓசையை எழுப்ப, அவ்வோசைக்கு மாறாக எதிர் ஓசையினை எழுப்பும் அன்னச்சேவல். உடலையும் மனதையும் இதமாக்கும் குளிர்த் தென்றல் காற்றும் பேரமைதியும், பொன்னென மின்னும் நீர்க்கோடுகளாக பாறைகளைத் தழுவி விழும் அருவிகள் என அழகின் உச்சம் பெற்ற எங்கள் பொதிய மலை. அதுமட்டுமா ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்கும் மூலிகை வளங்கள், காய்கள், கனிகள், அரிய வகை விலங்குகள், வண்ண வண்ணப் பூச்சிகள் என பிரமிக்கவைக்கும் இயற்கைச் செல்வங்கள் நிறைந்த மலை.

    இத்துணை சிறப்பு வாய்ந்த மலையில்தான் தமிழ் மாமுனி அகத்தியச் சித்தர் தவம் புரிகிறார்!

    கொளுத்தும் தீக்கங்குகளாகத் தோன்றிய இவ்வுலகம், முதன் முதலில் குளிர்ந்து, சாம்பல் பூத்து, மண்ணும், கல்லும் மட்டுமின்றி, தாவரங்களோடு செந்தமிழும் தோன்றிய இடம், சித்தர்கள் வாழும் பொதிய மலை!

    அசம்பு மலை, அகத்தியர் மலை எனும் பொதியமலையில் அன்னப்பறவைகள் விளையாட்டுக் காட்டும் அழகில் மையல் கொள்வீர்கள். சந்தன மரமும், செங்காந்தள் மலரும் அதிகம் விளையும் மலை!

    காணிகள் வாழும் சோலை வனமும், பாணதீர்த்தமும், யானை சூழுலகும், குளிர் மேகத் தாலாட்டும், வழுக்குப் பாறைகளும், சித்தர்களின் வாழ்க்கை இரகசியங்களும் என கண்கொள்ளாக் காட்சிகளுக்குக் குறையேதுமில்லாத பூலோகக் கைலாயமல்லவோ!

    தென் பொதிகையில் வற்றாத சீவநதியான தாமிரபரணி உற்பத்தியாகும் பூங்குளம் சுனையும், அச்சுறுத்தும் சூறைக்காற்றும் உண்டு. நெடிதுயர்ந்த அம்மலையின் உச்சியில் சென்றால் அகத்திய மாமுனியைக் காணலாம்!

    இன்னுமொரு சம்பவம் சொல்கிறேன் கேளுங்கள். அகத்திய மாமுனியை தரிசனம் பெற வேண்டி பொதிகைக்குப் புறப்பட்ட பிரம்மச்சாரி ஒருவர் எம் ஆய் மன்னனிடம் தானமாகப் பெற்று வந்த மிகுந்த அளவிலான சிறுசிறு தானியங்கள் போன்ற பொன் மணிகளை, களவு கொடுக்காமல் இருக்க தனக்கு நம்பிக்கைக்குரிய, வழியில் இருந்த ஒரு ஆலயத்தின் குருக்களிடம் பாதுகாப்பாகக் கொடுத்துவிட்டு மலயம் புறப்பட்டார்.

    அகத்திய முனிவரைக் கண்ட பின்பு, இந்த பொன் மணிகள் நிறைந்த மூட்டைகளை நல்ல முறையில் செலவழிக்கும் முறைமையும் அறிந்து கொண்டு வந்து இவரிடம் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவு செய்து அவற்றை ஒப்படைத்துவிட்டு மகிழ்ச்சியாகக் கிளம்பி வந்தார்.

    சில்லறைக்காகப் பயன்படுத்தும் இம்மாதிரிப் பொன்மணிகளைத்தான் எங்கள் அரசில் பெரும்பாலும் தானமாகக் கொடுப்பார்கள்.

    பசி, தூக்கம் ஏதுமின்றி, காடும், மலையும் கடந்து வந்த களைப்பில் மயங்கி விழத் போனவரை தாங்கிப் பிடித்து ஆதரவாகப் பற்றியது ஒரு கரம். வயோதிகர் வடிவில் வந்த அவர் வேறு யாருமல்ல. அகத்திய மாமுனியேதான் வேறு வடிவில் வந்து காப்பாற்றியுள்ளார் என்று அவருக்குப் புரிய நேரமானது. அதற்குள் அந்த வயோதிகரும், சித்தம் போக்கு, சிவன் போக்கு என்று அலையும் அந்த முனிவரை எங்கு போய்த் தேடப்போகிறாய், திரும்பிப் போய் வேலையைப் பார் மகனே, என்றார்.

    ஆனாலும் அகத்திய முனிவரைக் காணாமல் நான் திரும்பிப் போகமாட்டேன் என்று உறுதியாக இருந்தவர் முன் அகத்தியர் உடனே சுய உருவில் தோன்றி ஆசிர்வதித்தார்.

    அவர் மீதிருந்த நல்ல நம்பிக்கையில் அவருக்கு ஒரு முக்கியமானப் பணியும் அளித்தார். அதாவது, அருகில் இருக்கும் தாமிரபரணி கரையில் பசு ஒன்று வந்து நிற்கும். அந்த இடத்தில் ஆற்றுக்கு அணை கட்டி, அதிலிருந்து ஒரு கால்வாய் வெட்டி, நிற்கிற பசுவின் வாலைப் பிடித்துக் கொண்டால் அது ஓட ஆரம்பிக்கும். அப்படி அது ஓடுகிற வழியை அடையாளம் வைத்துக் கொண்டு கால்வாய் வெட்டிக் கொண்டு போக வேண்டும் என்றும், வழியில் ஆங்காங்கு மடையும், வடிகால்களும் அமைக்க வேண்டும் என்றும், பசு படுத்துக் கொள்ளும் இடங்களில் ஏரி தோண்டவும், பசு அவர் பார்வையிலிருந்து மறையும் அந்த குறிப்பிட்ட இடத்தில் கால்வாயை முடித்து விடவும் வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

    மனிதர்கள், பிராணிகள் என அனைவருக்கும் தாகம் தீரவும், உடல் அழுக்கும், அசதியும் தீரவும், பயிர்கள் பசுமையாக விளைந்து பசியாற்றவும் பயன்படப் போகும் என்பதால் உன் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும், நீயும் சொர்கம் சென்று சேர்வாய் என்று அருள் புரிந்தார் அகத்திய மாமுனி.

    இப்படித்தான் அகத்தியர் காவிரியையும், தாமிரபரணியையும் கொடுத்து நீர் வளம் பெருக்கி, மக்கள் நலம் காத்து வருகிறார்".

    செம்பவளம் எனும் தங்கள் அரசி ஹியோ ஹவாங் ஓக் அம்மையின் நற்குடிப் பிறப்பு பற்றி அறியும் நல்வாய்ப்பு என்றே அனைவரையும் எண்ண வைத்த உறுதியான பேச்சு தடையின்றித் தொடர்ந்தது.

    (தொடரும்)

    • ஐ.வி.எப். சிகிச்சை ஏற்கனவே தோல்வி அடைந்து, இப்போது மீண்டும் ஐ.வி.எப். சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் கையில் எந்தவித அறிக்கையும் இருக்காது.
    • 100க்கு 100 சதவீதம் குழந்தை பேறு என்பதை ஒரே முறையில் கொடுக்க முடியும் என்று உத்தரவாதம் அளிக்க முடியாது.

    குழந்தையின்மை சிகிச்சையில் இன்று நாம் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகிறோம். குழந்தையின்மை சிகிச்சைக்காக வரும் நிறைய பெண்கள் கேட்கும் விஷயம்... டாக்டர், எனக்கு 2 முறை ஐ.வி.எப். செய்தும் தோல்வி அடைந்து விட்டது. அந்த மையத்தில் ஒரு ஐ.வி.எப். செய்தேன், இந்த மையத்தில் ஒரு ஐ.வி.எப். செய்தேன், இப்போது உங்களிடம் ஐ.வி.எப். சிகிச்சைக்காக வந்திருக்கிறேன் என்பார்கள்.

    இன்று என்னிடம் வரும் நோயாளிகளில் பலர் ஏற்கனவே 2 முறை ஐ.வி.எப். தோல்வி, 3 முறை ஐ.வி.எப். தோல்வி, கருமுட்டைகளை தானமாக வாங்கியும் ஐ.வி.எப். செய்து தோல்வி அடைந்து விட்டது என்கிற பிரச்சினைகளோடு கவலையுடன் வரும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகம்.

    தோல்வி அடைந்தவர்களுக்கு ஐ.வி.எப். சிகிச்சை அளிப்பது மிகப்பெரிய சவால்:

    கடந்த 3 வருடங்களாக நாங்கள் எதிர்நோக்கும் ஒரு முக்கியமான பிரச்சினை, ஐ.வி.எப். தோல்வி அடைந்த பிறகு பலர் எங்களிடம் சிகிச்சைக்கு வருவதுதான். அவர்களுக்கு நாம் எப்படி சிகிச்சை அளிக்கப்போகிறோம் என்பது எங்களுக்கு ஒரு பெரிய சவால். பல நேரங்களில் எதனால் ஐ.வி.எப். தோல்வி அடைந்துவிட்டது என்று கேட்டால், ஒருமுறை அல்லது 2 முறை நல்ல கருவை எடுத்தோ அல்லது கருவின் தரமே தெரியாமலோ ஐ.வி.எப். செய்தோம். ஆனால் தோல்வி அடைந்து விட்டது என்கிற காரணத்தோடு நிறைய பேர் வருகிறார்கள்.

    தோல்வி எதனால் ஏற்பட்டது என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதில் இம்பிளான்டேஷன் (5 நாள் கரு) மூலம் தோல்வியா அல்லது கரு முட்டைகளின் மூலம் தோல்வியா அல்லது கருத்தரித்தலில் குறைகள் இருக்கிறதா அல்லது விந்தணுக்களில் குறை உள்ளதா என்று கேட்டால், இதற்கான காரணம் தொடர்பான எந்த வித விளக்கமும் அவர்களிடம் இருப்பதில்லை.

    எல்லோரும் சொல்கிற பொதுவான விஷயம், அந்த மையத்தில் ஐ.வி.எப். செய்தேன். 3 முறை பரிமாற்றம் செய்தனர். ஆனாலும் தோல்வியில் முடிந்தது என்றுதான் சொல்வார்களே தவிர, யாரிடமும் முறையான அறிக்கை இருப்பதில்லை. அந்த அறிக்கையை சும்மா ஏனோ தானோ என்று கொடுத்து விடுவார்கள். மோசமான தரமுள்ள முட்டை, மோசமான தரமுள்ள கரு என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கும். ஆனால் இந்த மோசமான தரம் ஏன் வருகிறது என்பது தேர்ச்சி பெற்ற சிறப்பு மருத்துவர்களுக்கு மட்டுமே தெரியும்.

     

    ஐ.வி.எப். வெற்றி பெறுவதற்கான விஷயங்கள்:

    இப்போது நான் ஒரு பெண்ணுக்கு ஐ.வி.எப். சிகிச்சை அளிக்கிறேன் என்றால், அதில் எவ்வளவு வெற்றி இருக்கிறது என்பது எனக்கு தெரியும். அவரது வயது, ஹார்மோன் அளவு, முட்டைகளின் எண்ணிக்கை, அவரது கணவரின் விந்தணுக்கள், அவரது உடல் ரீதியான விஷயங்கள் ஆகியவற்றை வைத்து அதை அறிந்து கொள்வேன். இந்த விஷயங்கள் தான் ஒரு ஐ.வி.எப். வெற்றியை குறிக்கிறது.

    இவை அனைத்தையும் சீராக வைத்திருந்து, ஒரு குறிப்பிட்ட சதவீதம் வெற்றி கிடைக்கும் என்று உத்தரவாதம் கொடுக்கிறோம் என்றால், அந்த எதிர்பார்த்த சதவீதம் வெற்றி வருகிறதா என்பது தான் என்னை நானே பரிசோதித்துக் கொள்வதற்கான முக்கியமான விஷயமாக கருதுகிறேன்.

    ஏனென்றால் எங்களை நம்பி வருகிறார்கள். அவர்களுக்கு ஐ.வி.எப். சிகிச்சையில் ஒரு நல்ல வெற்றியை கொடுக்க வேண்டும் என்பதுதான் எல்லோரும் விரும்புகிற விஷயம். அப்படியென்றால் அதற்கான வழிமுறைகள், சீரான செயல்பாடுகள், சீரான திட்டங்கள், அதற்கான சிறந்த கட்டமைப்பு ஆகியவை இருந்தால் தான் இது சாத்தியமாகும்.

    ஐ.வி.எப். சிகிச்சை ஏற்கனவே தோல்வி அடைந்து, இப்போது மீண்டும் ஐ.வி.எப். சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் கையில் எந்தவித அறிக்கையும் இருக்காது. ஒருவேளை அறிக்கை இருந்தால் என்ன ஊசி கொடுத்தார்கள் என்பது இருக்காது.

    ஏனென்றால் ஒரு இயல்பான பெண்ணுக்கு கூட, முட்டை வளர்ச்சிக்கான முறையான தூண்டுதல் ஊசி கொடுக்கவில்லை, என்றால் பல நேரங்களில் மாறுபாடு வரும். பல நேர ங்களில் அவர்களுக்கு உகந்த அளவில் தூண்டுதல் ஊசி கொடுக்கவில்லை என்றாலும் இதுபோன்ற நிலைமை வரும். எனவே இந்த விஷயத்தில் திட்டமிடுதல் என்பது மிகவும் முக்கியம்.

    ஐ.வி.எப். தோல்விக்கான காரணங்களை ஆராய வேண்டும்:

    ஒரு முறை ஐ.வி.எப். தோல்வி அடைந்தவர்களுக்கு அடுத்த முறை செயற்கை கருத்தரிப்பு செய்ய மருத்துவர் முற்படும்போது, முக்கியமாக என்னென்ன காரணங்களால் ஏற்கனவே குறை ஏற்பட்டது, என்னென்ன காரணங்களால் ஐ.வி.எப். தோல்வி அடைந்தது என்பதை முறையாக ஆராய வேண்டும். அதன் மூலம் அடிப்படையான விஷயங்களில் நம்மால் முடிந்த அளவுக்கு சரி செய்ய வேண்டும்.

    அதற்காக வயதை நம்மால் மாற்ற முடியாது. 35 வயது என்றால் 35 வயது தான். 35 வயதில் கருத்தரிக்கும் திறன் எவ்வளவோ அந்த அளவுக்கு தான் கருத்தரிக்கும் திறன் இருக்கும். இவர்களுக்கு 100க்கு 100 சதவீதம் குழந்தை பேறு என்பதை ஒரே முறையில் கொடுக்க முடியும் என்று உத்தரவாதம் அளிக்க முடியாது. ஆனால் அடுத்தடுத்து தொடர்ச்சியான முறையில் சிகிச்சை அளிக்கும்போது அவர்களுக்கு குழந்தைபேறு கொடுக்க முடியும். இந்த வகையில் தான் நாம் அவர்களை அணுகவே முடியும்.

     

     ஐ.வி.எப். சிகிச்சை பற்றிய தவறான கருத்து:

    ஐ.வி.எப். சிகிச்சைக்கு வரும் நிறைய பெண்களிடம் தவறான கருத்து ஒன்று உள்ளது. டாக்டர், ஐ.வி.எப். சிகிச்சையில் முதல் முறையிலேயே எனக்கு 100 சதவீத வெற்றியை கொடுத்து விடுங்கள் என்பார்கள். ஆனால் 100க்கு 100 சதவீதம் வெற்றியை முதல் தடவையில் கொடுப்பதற்கான விஷயங்கள் என்பது சாத்தியம் அல்ல. முதல் முறையிலேயே 100 சதவீதம் வெற்றி கிடைக்கும் என்று யாராவது கூறினால் அதை நீங்கள் நம்ப தேவையில்லை.

    ஏனென்றால் இன்றும் உலக அளவில் இருக்கும் நவீன முறைகளில் சிறப்பான சிகிச்சையாக, அதாவது கருவை பரிசோதித்து விட்டு, கர்ப்பப்பையை பரிசோதனை செய்து விட்டு, அதற்கான எல்லா காரணங்களையும் பார்த்துவிட்டு சிறந்த முறையில் ஐ.வி.எப். சிகிச்சை அளித்தால் கூட அதற்கான வெற்றி விகிதம் என்பது 50 முதல் 55 சதவீதம் தான் இருக்கும்.

    உலக அளவில் இதுபற்றி விஷயம் தெரிந்த எல்லா அறிவியல் அறிஞர்களும் இந்த அளவை சொன்னால் தான், சரி என்று புரிந்து கொள்வார்கள். 100 சதவீதம், 80 சதவீதம் வெற்றி என்று சொன்னால் கண்டிப்பாக விஷயம் தெரிந்தவர்களுக்கு அது தவறானது என்பது தெரியும்.

    அந்த வகையில் உங்களுடைய கருத்தரிக்கும் திறன் இந்த பக்குவத்துக்கு ஏற்ப எவ்வளவு இருக்கிறது என்பதுதான் முக்கியமான விஷயம். திரும்பத் திரும்ப ஐ.வி.எப். சிகிச்சையில் தோல்வி என்று எங்களிடம் சில பெண்கள் வரும் போது அவர்களிடம் மனக்கவலைகள் மற்றும் வருத்தங்கள் நிறையவே இருக்கிறது.

    எனவே நீங்கள் ஐ.வி.எப். சிகிச்சை பெற நினைக்கும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள், நீங்கள் சிகிச்சைக்கு செல்லும் கருத்தரிப்பு மையங்களில் உள்ள மருத்துவரின் நிபுணத்துவம், அவருடைய முந்தைய அனுபவங்கள், அந்த மருத்துவமனையில் அளிக்கப்பட்டுள்ள ஐ.வி.எப். சிகிச்சைகளின் வெற்றி விகிதம், அவர்களுடைய அணுகுமுறை, சிகிச்சை மையங்களின் கட்டமைப்பு, அவர்கள் செய்யும் அனைத்து சிகிச்சைகளின் தரம் ஆகியவற்றை பார்க்க வேண்டும்.

     

    டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

    அப்படிப்பட்ட மையங்களில் சிகிச்சைக்கு சென்றால் அங்கு அளிக்கப்பட்டுள்ள சிகிச்சைகளின் எல்லா மருத்துவ அறிக்கைகளும் உங்களுக்கு கிடைக்கும். உங்களுக்கு என்னென்ன பரிசோதனை செய்கிறார்களோ அந்த அறிக்கை உங்களிடம் இருக்கும்.

    இதுபோன்ற மருத்துவ பரிசோதனை அறிக்கைகளுடன் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு தேவையில்லாத பரிசோதனையை திரும்ப செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இதுவே ஒரு விஷயத்தில் தெளிவு இல்லாமல் இருந்தால் அந்த பரிசோதனையை மீண்டும் எடுத்து பிரச்சினைகளை சரி செய்து அதன் பிறகு ஐ.வி.எப். செய்யும்போது வெற்றி விகிதம் அதிகமாகும்.

    ஐ.வி.எப். சிகிச்சை ஏன் தோல்வி அடைகிறது என்பதற்காக சில முக்கியமான விஷயங்களை பார்க்க வேண்டும். அது என்னென்ன விஷயங்கள், அந்த விஷயங்களை எப்படி சரிசெய்து ஆரோக்கியமான குழந்தை பேறு பெறுவது எப்படி என்பது பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

    • தம் வேலால் அருணகிரியார் நாவிலே ‘சரவணபவ’ என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்தார்.
    • தமிழ்த்தொண்டும் தவத்தொண்டும் செய்துவந்த அருணகிரியார் தமிழகத்தின் பல இடங்களுக்கும் சென்று பாடல்கள் புனைந்து முருகக் கடவுளை வழிபட்டு வந்தார்.

    முருகனிடமிருந்து நேரடியாக உபதேசம் பெற்றோர் மூவர் மட்டுமே! முதலாமவர் அகத்தியர், இரண்டாமவர் அருணகிரிநாதர், மூன்றாமவர் பாம்பன் சுவாமிகள், இவர்கள் மூவர் தவிர வேறு யாருக்கும் அந்த மகாபாக்கியம் இதுவரை கிடைக்கவில்லை. மகான்கள், ஞானிகள் பலர் முருகனைத் தொழுதிருக்கலாம். அவர்தம் காட்சியினையும் பார்த்திருக்கலாம். அடியார்களாகவும், அருளாளர்களாகவும் இருந்திருக்கலாம். ஆனால் நேரடி உபதேசம் பெற்றது இம்மூவர் மட்டுமே!

    அருணகிரிநாதர் பதினைந்தாம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் வணிகர் குலத்தில் பிறந்தார். தந்தை திருவெண்காடர். தாயார் முத்தம்மை.

    அருணகிரிக்கு ஆதி என்றொரு மூத்த சகோதரி இருந்தார். அருணகிரியின் தந்தை சிறுவயதிலேயே துறவு பூண்டு சென்று விட்டார். அதனால் அவரை அன்போடு வளர்த்து வந்தாள் அன்னை முத்தம்மை. அருணகிரிக்கு இளவயதிலேயே நல்ல அறிவாற்றலும், அரிய நினைவாற்றலும், கவித்திறனும் இருந்தன. அவர் திண்ணைப் பள்ளியில் படித்துவரும் காலத்தில் திடீரெனத் தாயார் முத்தம்மை காலமானார். தந்தை, தாய் இருவரையும் இழந்து வருந்திய அருணகிரியைத் தாய்போல் இருந்து அவரது சகோதரி ஆதி வளர்த்து வந்தார்.

    ஆனால் இளமை மிடுக்காலும், செல்வச் செருக்கினாலும், தீய நண்பர்களின் தொடர்பாலும் பரத்தையரை நாடிச்செல்ல ஆரம்பித்தார்.

    கண்டிக்க யாருமில்லை. சகோதரியின் அறிவுரை காதில் ஏறவில்லை. நாளடைவில் உடல்நலம் சீர்குலைந்தது. நோய் தாக்கியது. நோய் முற்றிய நிலையிலும் காம வேட்கை தணியவில்லை. பரத்தையர் இவரை ஒதுக்கினர். இவரைத் தவிர்ப்பதற்காக மிக அதிகப் பொருள் கேட்டனர். செல்வம் குன்றியதால் அருணகிரியாரின் கையில் பணமில்லை.

    இளமை வேட்கையால் தவித்த அவர், பரத்தையரிடம் செல்வதற்காக சகோதரியிடம் பொருள் கேட்டார். வறுமையின் பிடியில் இருந்த சகோதரியோ நொந்துபோய், தன்னிடம் பணமில்லை என்றும் நானும் ஒரு பெண்தான்' என்றும் கூறினார். அந்தச் சொல் தீயாய் அருணகிரியின் உள்ளத்தைச் சுட்டது. ஆசை விட்டது. அகம் தெளிந்தது. உடல் தளர்ந்தது. ஆனாலும் குற்றச்செயல் முள்ளாய் மனதை உறுத்த, செய்த பாவங்களுக்குப் பிராயச்சித்தமாக உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்தார்.

     

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஒரு கோபுரத்தின் மேலேறிக் கீழே குதித்தார். அப்போது இவரது முன்வினைப் பயனால் முதியவர் ரூபத்தில் அங்கே தோன்றிய முருகன். அருணகிரியைத் தன் கையில் தாங்கினார். உடல் நோயினை நீக்கினார். முருகன் காட்சி தந்து அருணகிரியின் மனவருத்தம் போக்கினார்.

    முருகனின் காட்சி கண்டு மகிழ்ந்த அருணகிரி அழுது புலம்பி தவித்தார். அருணகிரியின் நிலை கண்டு இரங்கிய முருகப் பெருமான் தம் வேலால் அருணகிரியார் நாவிலே 'சரவணபவ' என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்தார். அதோடு ஞான உபதேசம் அளித்தார். அருணகிரி ஆனந்த அருள் வெள்ளத்தில் குளித்தார்.

    பின் அருணகிரியின் தாயார் பெயரான 'முத்து' என்பதையே முதல் வாக்கியமாகக் கொண்டு தம்மைப் பாடும்படி 'முத்தைத் தரு' என முதல் சொல்லை எடுத்துக் கொடுத்தார் முருகப்பெருமான்

    முத்தைத்தரு பத்தித் திருநகை

    அத்திக்கிறை சத்திச் சரவண

    முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்.. என்று தொடங்கி பாடினார்.

    அதுமுதல் பரவசநிலையில் திளைத்தார் அருணகிரி. திருவண்ணாமலை ஆலயத்தின் கம்பத்து இளையனார் சந்நிதியில் அமர்ந்து தவத்தில் ஆழ்ந்தார். தவத்தில் இருந்து மீண்ட வேளைகளில் சத்தமாகப் பாடல்களை மனமுருகிப் பாடினார். விரைவிலேயே அருணகிரிக்கு ஞானம் கைவரப் பெற்றது. உடல் பொன்போல் ஒளி வீசிற்று. முருகன் மீது எண்ணற்ற பாடல்களைப் பாடினார். அவரைத் தரிசிக்க பக்தர் கூட்டம் பெருகியது. ஆனாலும் அருணகிரி எல்லோரையும் தவிர்த்து எப்போதும் தவத்திலேயே ஆழ்ந்திருந்தார். இடையிலே ஒற்றை ஆடை தவிர்த்து வேறேதும் அணியாதவராய், பசித்தபோது மட்டும் ஒரு கவளம் உணவு உட்கொண்டு வாழ்க்கை நடத்தினார். இதனால் அருணகிரியின் பெருமை நாடெங்கும் பரவியது.

    தமிழ்த்தொண்டும் தவத்தொண்டும் செய்துவந்த அருணகிரியார் தமிழகத்தின் பல இடங்களுக்கும் சென்று பாடல்கள் புனைந்து முருகக் கடவுளை வழிபட்டு வந்தார். பின்னர் முருகப்பெருமான் அருணகிரிநாதரை வயலூர் வருமாறு உத்தரவிட்டார்.

    வயலூரில் பொய்யாக் கணபதி முன் "கைத்தல நிறைகனி" என்ற திருப்புகழைப் பாடித் துதித்து, முருகனையும் பாடிவிட்டு அங்கிருந்து திருச்சி, மதுரை, முதலிய தலங்களைத் தரிசித்துவிட்டு திருப்பரங்குன்றம் வந்தார். பிறகு அங்கு இருந்து திருச்செந்தூருக்குப் புறப்பட்டார். காடு அடர்ந்திருந்ததால் வழி தெரியவில்லை. முருகனை உருகி வேண்டினார். அவர் முன் மயில் ஒன்று பறந்து வந்து பாதையைக் காட்டியது. இன்றும் மதுரை செல்லும் வழியில் மயில்களைக் காணலாம்.

     

    திருச்செந்தூரைக் கண்டார். கயிலாயத்தைக் கண்டது போல மகிழ்ந்தார். கயிலை மலையனைய செந்தில் என்று திருப்புகழ் பாடினார். முருகனின் நடனக் காட்சியைக் காண விரும்பிப் பாடினார். அவர் வேண்டுகோளை ஏற்ற முருகன் நடனம் ஆடிக் காட்டினார்.

    இன்றும் பெருவிழாவின் ஏழாம் திருவிழா அன்று சிவப்புச் சாத்தி ஆறுமுகப் பெருருமான் எழுந்தருளும் போது, சப்பரத்தின் பின்புறத்தை நோக்கினால் நடராசர் கோலத்திலே முருகன் காட்சி தருவதைக் காணலாம்.

    திருச்செந்தூரில் வழிபாடுகளை முடித்த பிறகு பழனி வந்து முருகவேலைத் துதிக்க முருகன் அவருக்கு ஜெபமாலையைத் தந்து அருள்புரிந்தார். சுவாமிமலையில் அவருடைய தமக்கை ஆதியம்மையார் அவரைக் கண்டு வணங்கி முருகனடியைச் சேர வேண்டினார். அருணகிரியார் முருகப்பெருமானைத் துதிக்க முருகன் காட்சி தந்து ஆதியம்மையாரை தமக்குள் ஐக்கியமாக்கிக் கொண்டார். மீண்டும் வயலூர் வந்த அருணகிரிநாதர் கனவில் முருகன் தோன்றி விராலிமலைக்கு வரும்படி பணித்தார்.

    அந்த இரவில் அவர் விராலிமலைக்கு நடந்து சென்றார். நடுவில் வழி தெரியாமல் தவிக்க முருகப்பெருமான் வேடன் வடிவத்தில் வந்து அருணகிரியாரை விராலிமலையில் சேர்த்து காட்சி தந்து அட்டமாசித்திகளையும் அளித்து அருள் புரிந்தார். திருச்செந்தூரில் வில்லிபுத்தூராரை வாதில் வென்றார். அவருடன் போட்டியிட்டபோது பாடிய நூல் "கந்தரந்தாதி". பல தலங்களைத் தரிசனம் செய்துக் கொண்டு திருவண்ணாமலையை அடைந்தார்.

    பின்னர் அருணகிரியார் வடநாடு சென்று பல தலங்களை தரிசனம் செய்து கொண்டு அரித்துவாரை அடைந்தபோது தவசீலர் ஒருவர் அவரைப் பற்றி விசாரித்தார். அருணகிரியாரும் தம்மைப் பற்றிக் கூற, அதற்கு அந்த தவசீலர் தாமே அவரது தந்தை என்று கூறி தமது உயிரை விட்டார். தம்மை நல்ல நிலையில் பார்க்கவே தமது தந்தையார் இத்தனைக் காலம் உயிரோடு இருந்தார் என்று கருதி அவருக்குச் செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளை செய்து முடித்தார். இதற்கிடையே அரசன் பிரபுடதேவனின் கண்பார்வை மங்கியது.

    அங்கு வந்து சேர்ந்த சம்பந்தாண்டான், அருணகிரியாரை வெல்ல வேண்டும் என்று கருதி மன்னனிடம், அருணகிரியார் பாரிஜாத மலர் கொண்டு வந்தால் கண்நோய் தீரும் என்று கூறினான். திருவண்ணாமலை திரும்பிய அருணகிரியாரிடம் மன்னன் தனது கருத்தைத் தெரிவிக்க, அருணகிரியார் தமது திருமேனியை கோயிலின் பேய்க்கோபுரத்தில் வைத்து விட்டு கிளி உருவில் விண்ணுலகம் சென்று பாரிஜாத மலரை கொண்டு வந்து மன்னனுக்குப் பார்வை பெற்றுத் தந்தார். அவர் கிளி உருவில் வந்து அமர்ந்த கோபுரம் தற்போதும் கிளிக்கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. அப்போது அருணகிரியார் "கந்தரனுபூதி" பாடினார்.

    இதனை மெய்ப்பிப்பது போலக் கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் பரம் குன்றம் ஏறி நின்று திருக்குமரா… என்கிறது கந்தரனு பூதிப் பாடல் வரிகள். தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்த அருங்கவியின் படத்தை மத்திய அரசு அஞ்சல் தலையாக வெளியிட்டுள்ளது.

    அருணகிரியார் விண்ணுலகம் சென்றபோது, சம்பந்தாண்டான் அவருடைய உடலை எடுத்து கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் புதைத்துவிட்டு ஓடிவிட்டான். விஷயமறிந்த மன்னன் அந்த இடத்தில் மண்டபம் கட்டினான். கிளி உருவில் இருந்த அருணகிரியார் தனது பழைய உருவைக் காட்டி அருள்புரிந்து, ஆனி மாதம், பவுர்ணமி நாளில், மூல நட்சத்திரத்தன்று கந்தவேலின் திருவடிகளை அடைந்தார்.

    நாளடைவில் இறைவனோடு இரண்டறக் கலந்து, அத்வைத நிலையாகிய சாயுஜ்ய நிலையை அடைந்தவுடன், கோவிலில் மேலைப் பிரகாரத்தில் அடக்கம் செய்து சிறிய கோயிலும் அமைத்தான் மன்னன் பிரபுடதேவ ராயன். அதில் அருணகிரி நாதரின் கல் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்தார். இந்தச் சமாதிக் கோயில் இன்றும் உள்ளது. கந்தரலங்காரம், வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், திருவெழு கூற்றிருக்கை, திருவகுப்பு ஆகியவை இவர் பாடிய பிற பாடல்களின் தொகுப்பு. அவர் பாடிய 1327 பாடல்களும் "திருப்புகழ்" என்று வழங்கப்படுகிறது.

    திருச்செந்தூர் தலத்தில் மட்டும் அவர் 83 பாடல்கள் பாடினார். அவை ஒவ்வொன்றும் அற்புதம் நிகழ்த்துபவை. அதுபற்றி அடுத்த வாரம் காணலாம்.

    • திருப்பதியில் திருமணம் முடிந்து சென்னை திரும்பினோம்.
    • அம்மா வீட்டில் எந்த பொறுப்பையும் நான் ஏற்றது கிடையாது.

    அந்த இனிய நாளும் வந்தது.

    ஆம். ஜூலை 12, 2009 திருப்பதி திருமலையில் வைத்து திருமணம்.

    உறவினர்கள், விருந்தினர்கள், நண்பர்கள் என்று திரண்டு இருந்தவர்களால் மண்டபம் களைகட்டியிருந்தது. பட்டு சேலை கட்டி மணப்பெண் அலங்காரத்தில் நான்.

    அந்த காட்சியும், அந்த அலங்காரமும் எனக்கு புதுமையாக தெரியவில்லை. காரணம், இதேபோல் எத்தனை மணமேடையை பார்த்திருக்கிறேன்? எத்தனை மணமேடையில் மணமகளாக இருந்திருக்கிறேன்? அதே போல்தான் இதுவும். எனக்கு ஷூட்டிங் போன்ற உணர்வு தான் வந்தது.

    மணமகள் அறையில் இருந்து வெளியேறி அரங்கத்துக்குள் மேடையை நோக்கி நடந்து சென்ற போது வேறு எந்த உணர்வும் வரவில்லை.

    எல்லோரையும் பார்த்து ஹாய்... ஹாய்... என்று கை காட்டியபடியே சென்றேன். பறக்கும் முத்தங்களை கூட வாரி விட்டேன்.

    மேடையில் ஏறியதும் தான் ஒரு விதமான உணர்வு என்னை சூழ்ந்து ஆட்டி படைத்தது. மேடையில் புரோகிதர், கழுத்தில் மாலையுடன் வித்யாசாகர், ஓம குண்டம், அங்கு நின்று கொண்டிருந்த இரு வீட்டு உறவினர்களின் கூட்டம் ஆகியவற்றை பார்த்ததும் தான் அய்யய்யோ இது ஒரிஜினல் திருமணம்.

    நமக்குத்தான் இன்று திருமணம்? ஷூட்டிங்போல் நினைத்து விட்டோமே என்று மனதுக்குள் நினைத்ததும் வெட்கம் வந்து என்னை சூழ்ந்தது. மணமகன் வீட்டார் நம்மை பற்றி என்ன நினைத்து இருப்பார்கள் என்ற எண்ணமெல்லாம் என் மனதில் ஓடியது.

    மேடையில் ஏறி அவர் அருகில் அமர்ந்ததுமே அவரிடம் 'ஷீட்டிங் வந்தது போல் வந்து விட்டேன். தப்பா நினைச்சிருப்பாங்களோ' என்றேன்.

    அதை கேட்டதும் சிரித்துக்கொண்டே 'வெரிகுட்... அப்போ இனி நான் தான் நிஜ ஹீரோ...' என்றார். அதை கேட்டதும் ஏதோ சொல்ல மனம் நினைத்தது வெட்கம் தடுத்து விட்டது.

    திருமண காட்சிகளில் நடிக்கும் போதெல்லாம் எப்படி அமர்ந்திருக்க வேண்டும்? எப்படி வெட்கப்பட வேண்டும்? ஓரக் கண்ணால் மாப்பிள்ளையை எப்படி பார்க்க வேண்டும்? என்று சொல்லித் தருவதை கேட்டு நடிப்பேன்.

    ஆனால் அன்று எல்லாம் தானாக வந்தது. அது தான் நிழலுக்கும் நிஜத்துக்கும் உள்ள வேறுபாடு. என்றுமே நிழல் நிழல் தான்!

    நிஜம் நிஜம் தான்! அதை நினைத்தபோது எனக்கே என்னை பார்த்து சிரிப்பு வந்தது.

    திருப்பதியில் திருமணம் முடிந்து சென்னை திரும்பினோம்.

    சென்னையில் அடையாறில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

    மொத்த திரை உலகமும் திரண்டு வந்து வாழ்த்தியது மனதில் பெருமையாக இருந்தது. மணவிழா என்றால் போட்டோ ஷூட்தானே முக்கியம். முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொரு வரும், வரும் போதெல்லாம் வளைத்து வளைத்து போட்டோ எடுத்தார்கள். எனக்கு அதில் எந்த சலிப்பும் தெரியவில்லை. சளைக்காமல் போஸ் கொடுத்து கொண்டிருந்தேன்.

    ஆனால் சாகர்தான் இன்னும் எவ்வளவு நேரம் நிற்கனும்... இன்னும் நிற்கணுமா? என்று அடிக்கடி என் காதில் கேட்டுக்கொண்டே இருந்தார். நான் தான் அவரை சமாளித்து கொண்டிருந்தேன். போட்டோ எடுப்பதையெல்லாம் அவர் விரும்பமாட்டார். திருமணம் முடிந்த பிறகும் அதே குணம் தான் அவரிடம் இருந்தது.

    திருமணத்துக்கு பிறகு கணவன்-மனைவியாக அதாவது குடும்பத்தலைவி என்ற அந்தஸ்தோடு பெங்களூருவில் அவர் வீட்டில் குடியேறினேன்.

    எங்களுக்குள் இன்னொரு ஒற்றுமையும் இருந்தது. எங்கள் வீட்டில் நான் ஒரே பெண் மட்டும் தான். உறவுகளாக இருப்பது அம்மா மற்றும் அப்பா வழி சொந்தக்காரர்கள் தான்.

    அதேபோல் அவர் வீட்டிலும் அவர் ஒருவர் மட்டும் தான். மற்றபடி அவரது அம்மா மற்றும் அப்பா வழி உறவினர்கள் தான். திருமண வாழ்க்கையில் எதிர்பார்ப்பு என்பது எல்லோரையும் போல்தான் எனக்கும் இருந்தது. ஆனால் எனக்கு குடும்ப பொறுப்புகள் தான் புதுசு.

    அம்மா வீட்டில் எந்த பொறுப்பையும் நான் ஏற்றது கிடையாது. வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவது முதல் வரவு-செலவுகளை பார்ப்பது வரை எல்லாமும் அப்பா-அம்மா தான். நான் ஒரு ரிமோட் போல் இயங்கி கொண்டிருந்தேன்.

    முதல் முறையாக எனது தலையில் பொறுப்பு என்ற சுமை வைக்கப்பட்டது. எப்படி சமாளிக்கப் போகிறோமோ என்ற பயமும் இருந்தது. ஆனால் அந்த பயத்தையும் போக் கியது சாகர்தான்.

    பிறந்த வீட்டில் அப்பாவும், அம்மாவும் என்னை குழந்தையாக வளர்த்தார்கள். புகுந்த வீட்டில் சாகர் என்னை குழந்தை போல் தாங்கி வளர்த்தார். கவனித்துக் கொண்டார். அதனால் தான் வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி என்னால் வளர முடிந்தது.

    அது ஒரு வசந்த காலம்...

    அந்த மறக்க முடியாத இனிமையான தருணங்களை அடுத்த வாரம் பகிர வருகிறேன்...

    (தொடரும்...)

    • நமது உணவில் முக்கிய இடத்தை பிடித்துள்ள ஒரு பொருள் வெங்காயம்.
    • சியா விதைகளை பகல், இரவு உணவிற்கு 20 நிமிடங்கள் முன்னால் எடுத்துக் கொள்வது அதிக உணவினைத் தவிர்க்கும்.

    சில நிகழ்வுகள், சில செயல்கள், சில யோசனைகள் இவை நம்மை அப்படியே மனமொடிந்து, பலமிழந்து இருப்பது போல் ஆக்கி விடும். மிகப்பெரிய தாக்குதல்கள் யாராக இருந்தாலும் உலுக்கி விடும். ஆனால் சிறு சிறு விஷயங்களில் நம்மை நாமே மீட்டுக் கொண்டு வெளிவர வேண்டும். இதற்கான சில முயற்சிகளாக கீழே குறிப்பிடப்பட்ட வைகளை செய்து பார்ப்போமே.

    மனம் கட்டுக்கடங்காது அதிகம் யோசித்துக் கொண்டே இருக்கின்றதா? ஒரு பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள், எவையெல்லாம் உங்களை பாதிக்கின்றதோ, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ அவை களை பொறுமையாய் எழுதுங்கள். மனம் அமைதி படுவது தெரியும். இந்த அமைதி நல்ல நிம்மதி தரும்.

    என்ன ஆகுமோ, என்ன ஆகுமோ என்று கவலை பிய்க்கின்றதா? ஓர் இடத்தில் அமருங்கள். கண்களை மென்மையாய் மூடிக் கொள்ளுங்கள். குறைந்தது 10 முறை ஆழ்ந்து மூச்சு விட்டெடுங்கள். கவலை, படபடப்பு கட்டுப்படும்.

    பொறுமை இல்லாது நடந்து கொள்கின்றீர்களா? அசையாமல் 5 நிமிடம் அமருங்கள். கண்களை மென்மையாய் மூடிக் கொள்ளுங்கள். எதனையும் பற்றி சிந்திக்க வேண்டாம். இது முடியவில்லையா? மூச்சு உள் செல்வதையும், வெளியே வருவதனையும் கவனியுங்கள்.

    மன மகிழ்ச்சி இல்லையா- கிடைத்த பல நன்மைகளை எழுதி இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். மனம் ஆரவாரமற்ற மகிழ்ச்சி பெரும்.

    வாழ்க்கையினை தொலைத்து விட்டது போல் இருக்கின்றதா- வாழ்வில் உங்கள் இலக்குகளை தெளிவாய் எழுதுங்கள்.

    சில செயல்களால் குற்ற உணர்வு உங்களை முள்ளாய் குத்துகின்றதா, நம்மை நாமே மன்னிக்க வேண்டும். இனி இவ்வாறு தவறுகளை செய்யாது இருக்க உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

    சக்தி குறைந்தது போல் உள்ளதா? சில எளிய உடற்பயிற்சிகள் நன்மை தரும்.

    பாதுகாப்பு இல்லாதது போல் தோன்றுகின்றதா? உங்கள் சாதனைகளை நீங்களே பட்டியலில் பாருங்கள். உங்களால் பத்து பேருக்கு பாதுகாப்பு அளிக்க முடியும் என்பது புரியும்.

    இந்த முயற்சிகளை கையாண்ட பிறகு நீங்களே சற்று யோசித்துப் பாருங்கள்.

    (கீழ்) கடைசி படிக்கட்டு- நான் முயற்சி செய்ய மாட்டேன்

    ஒரு படி மேல் - என்னால் முடியாது

    ஒரு படி மேல்- எனக்கும் சாதிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.

    ஒரு படி மேல்- எப்படி சாதிப்பது?

    ஒரு படி மேல்- நான் முயற்சி செய்கிறேன்

    ஒரு படி மேல்- என்னால் முடியும்.

    மேல் படிகட்டு, நான் வெற்றி பெற்று விட்டேன். ஆக இப்படித்தான் வாழ்ந்தாக வேண்டும். எனவே முயற்சிகளை இந்த நிமிடமே மேற்கொள்வோம்.

     

    நீரிழிவு நோயால் பாதத்தில் ஏற்படும் புண்:

    * சுமார் 15 சதவீதம் நீரிழிவு பாதிப்புடையோர் காலில் புண் ஏற்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இதில் 6 சதவீத மக்களுக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் அளவு பாதிப்பு ஏற்படுகின்றது.

    * காலில் உணர்வின்மை * ரத்த ஓட்ட குறைபாடு * கால் குறைபாடு * அழுத்தம் * உரசல் * அடி படுதல் போன்ற பல காரணங்கள் சர்க்கரை நோயாளிகளின் இந்த பாதிப்பிற்கு காரணம் ஆகின்றது

    இதனை தவிர்க்கும் முறை என்பது கிருமி தாக்குதல் இன்றி இருத்தல் * அழுத்தம் இன்றி இருத்தல் * காலினை மிக சுத்தமாக வைத்திருத்தல் * சிறு காயத்துக்கும் மருத்துவம் மூலம் நன்கு சிகிச்சை அளித்தல் * சர்க்கரை அளவினை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் * செருப்பு அணிந்து நடத்தல் ஆகியவை ஆகும்.

    * அன்றாடம் குளித்த பிறகு கால்களை நன்கு துடைத்து கவனிக்க வேண்டும்.

    * முறையான, தரமான காலணிகள் அணிதல் வேண்டும்.

    * மாஸ்ட்சரைஸர் தடவுதல் போன்றவையும் அவசியமானவை.

    * நகரங்களை சீராய் வெட்ட வேண்டும்.

    * சிகரெட், மது தவிர்க்க வேண்டும்.

    * கால் நிபுணரின் ஆலோசனை பெற வேண்டும்.

    நுரையீரல் புற்றுநோய்:

    புற்றுநோய் பாதிப்பிற்கு அதிக கவனம் கொடுக்க வேண்டிய கால சூழல் இருந்து கொண்டுதான் உள்ளது. அவ்வகையில் நுரையீரல் புற்றுநோய்க்கான சில ஆரம்ப கால அறிகுறிகளைப் பார்ப்போம். இவை கண்டிப்பாய் இருக்கும் என்று கூறுவதனை விட கீழ்க்கண்ட அறிகுறிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற கருத்தினைக் கொள்வோம்.

    * தீரா இருமல் * மூச்சு வாங்குதல் * ஆழ் மூச்சின் பொழுது நெஞ்சு வலி * எடை குறைதல் * குரலில் கரகரப்பு * ரத்தம் கலந்த சளி * மேல் முதுகு வலி * அடிக்கடி கிருமி தாக்குதல் * தோள் அல்லது தோள் பட்டை வலி * பலவீனம் ஆகிய அறிகுறிகள் உடனடியாக கவனம் பெற வேண்டியவை. * அதிக சோர்வு * விழுங்குவதில் கடினம் * எலும்பு வலி * ஜூரம் * பசியின்மை * நிமோனியா போன்ற பாதிப்பு ஆகியவையும் இதில் அடங்கும்.

     

    பூசணி விதை:

    உணவில் பருப்பு வகைகள், கொட்டை வகைகள் என்பது போல் விதை வகைகளும் இன்று அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. நார் சத்து, வைட்டமின், தாது உப்புகள் நிறைந்தது. வைட்டமின் ப நியாசின் போலேட் மற்றும் மக்னீசியம், விங்க், தாவர இரும்பு, கால்சியம், காப்பர், செலினியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் சத்து நிறைந்தது. பிளாக்ஸ், சிமா, பூசணி, எள், சூரியகாந்தி, தர்பூஸ் விதைகள் நமக்கு எளிதாக கிடைப்பவை.

    * காலையில் இவைகளை எடுத்துக் கொள்வது சிறந்தது.

    * சியா விதைகளை பகல், இரவு உணவிற்கு 20 நிமிடங்கள் முன்னால் எடுத்துக் கொள்வது அதிக உணவினைத் தவிர்க்கும்.

    அவ்வகையில் பூசணி விதை புரதச்சத்து நிறைந்தது

    கெட்ட கொழுப்பினை நீக்க வல்லது

    100 கி விதையில் 30கி புரதம் உள்ளது

    * பூஞ்சைகளை அழிக்கும்

    * தாது உப்புகள் நிறைந்தது

    * தினமும் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளலாமே

    வெங்காயம்:

    நமது உணவில் முக்கிய இடத்தை பிடித்துள்ள ஒரு பொருள் வெங்காயம். தேவை, சுவை என்பதனைத் தாண்டி மருந்துவ உலகில் இதற்கு முக்கியத்துவம் உள்ளது. இதனை சமைத்து உண்பதனை விட 2 வில்லைகள் பச்சையாக சாலட் முறையில் உணவில் சேர்த்துக் கொள்வது இனசுலின் சுரப்பினை தூண்டி நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக உள்ளது.

    * வைட்டமின் சி, பி6 மற்றும் பொட்டாசியம் சத்து நிறைந்தது

    * ஆன்டி ஆக்ஸிடன்ட் சத்து நிறைந்தது

    * இருதயத்திற்கு நல்லது

    * வீக்கங்களை குறைக்க வல்லது

    * ஜீரண சக்தியினை கூட்ட வல்லது

    * புற்றுநோயின் தாக்குதலை எதிர்க்க வல்லது

    * சர்க்கரை நோயினை கட்டுப்படுத்த உதவும்

    * எலும்புக்கு பாதுகாப்பு அளிப்பது

    * சுவாச மண்டல ஆரோக்கியத்திற்கு உதவுவது

    * ஞாபகத்திறனை கூட்ட வல்லது

    முருங்கை இலை பொடி:

    வெங்காயம் போல் முருங்கை இலை பொடியினைப் பற்றியும் அறிந்து கொள்ளுங்கள். * கண் நோய்களில் இருந்து காக்கிறது * சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகின்றது. * பாதுகாப்பு * சத்து நிறைந்தது * கெட்ட கொழுப்பினை குறைக்க வல்லது. ஆனால் எதனையும் எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

     

    கமலி ஸ்ரீபால்

    உயர் ரத்த அழுத்தம்:

    பலர் தனக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதே தெரியாமல் இருப்பர். முறையான பரிசோதனைகளை மேற்கொள்ளவும் மறுப்பர். கீழ்க்காணும் சில அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நன்மை தரும். காப்பாற்றும்.

    * இருதய துடிப்பில் ஒரு மாற்றம் இருப்பது போல் உணருவது

    * உடல் நலம் சரியில்லாதது போன்ற மன அழுத்தம்

    * கண் பார்வை மங்குதல் * காதில் சத்தம் * நெஞ்சு வலி * குழப்பம் * மூச்சு விடுவதில் சிரமம் * மயக்கம் * தலை சுற்றல் * வயிற்றுப் பிரட்டல் * கடும் தலைவலி * மூக்கில் ரத்தம் வடிதல் * வாந்தி

    இந்த அறிகுறிகள் உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவை. உயர் ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்துவதன் மூலம் பக்கவாத பாதிப்பு சுமார் 37 சதவீதம், இருதய பாதிப்பு சுமார் 21 சதவீதம், இருதய பாதிப்பால் இறப்பு சுமார் 25 சதவீதம், இதன் தொடர்பாக ஏற்படும் இறப்பு சுமார் 13 சதவீதம் குறைகிறது என ஆய்வுகள் கூறுகின்றன.

    சுமார் 50 சதவீத மக்களே உயர் ரத்த அழுத்தத்தினை சிகிச்சை, உடற்பயிற்சி, உரிய கவனம் இவற்றின் மூலம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என ஆய்வுகள் கூறுகின்றன.

    இடது இடுப்புக்கு மேல் பகுதியில் உணர்வின்மை அல்லது மரத்து போகுதல், இடது தாடையில் உணர்வின்மை, இடது தோள் பட்டை உணர்வின்மை மற்றும் ஒருவித வலி உணர்வு இருந்தால் உடன் இருப்பவர் உதவியுடன் மருத்துவமனையினை ஆம்புலன்ஸ் அல்லது வாகன உதவியுடன் அணுகவும். ஸ்கூட்டர், சைக்கிள் இவற்றினை தவிர்க்கவும். உடனடி கவனிப்பு மாரடைப்பு பாதிப்பு இருந்தால் சிகிச்சை மூலம் பலன் பெற பெரிதும் உதவும்.

     

    சூரிய காந்தி விதையின் பயன்கள்:

    வீக்கத்தினை குறைக்கும். வைட்டமின் ஈ சத்து நிறைந்தது. சரும ஆரோக்கியம் கூடும். இருதய ஆரோக்கியம் கூடும். கொழுப்பு குறையும். இதில் உள்ள மக்னீசியம் உயர் ரத்த அழுத்தம் குறைய உதவும். இதனாலும் இருதய நோய் பாதிப்புகள் குறையும். நோய் எதிர்ப்பு சக்தி கூடும். சக்தி கூடும். புற்றுநோய் பாதிப்பு அபாயம் குறையும். சர்க்கரை அளவினை கட்டுப்படுத்த உதவும். கலோரி சத்து அதிகம் கொண்டது. எனவே சத்துணவு நிபுணர் ஆலோசனை பெற்று அளவோடு எடுத்துக் கொள்ளவும்.

    • எல்லாவற்றையும் துறந்து துறவு வாழ்க்கையில் கணவனும் மனைவியும் அடியெடுத்து வைத்தனர்.
    • உணவை மருந்தாக்கிக் கொண்டால், மருந்தைத் துறந்து மகிழ்ச்சியாய் வாழலாம்.

    இல்லறம் மற்றும் துறவறத்தின் மேன்மைகளை அறிந்து கொள்வதற்காக ஆவலோடு காத்திருக்கும் வாசகப் பெருமக்களே! வணக்கம்.

    எது நேர்மையான முறையில் திறமாகக் கையாளப்படுகிறதோ அதுவே அறம் என்று அழைக்கப்படும். மனத்தளவில் தூய்மையாக இருப்பது தொடங்கிப், பல்வேறு வாழ்வியல் ஒழுகலாறுகளில் நெறிபிறழாமல் வாழ்வது வரை அனைத்துமே அறம் சார்ந்தவைதாம். எழுத்தில் ஒரு நேர்மை இருந்தால் அது 'எழுத்து அறம்'; பேச்சில் ஒரு செம்மை இருந்தால் அது 'பேச்சு அறம்'; செயலில் ஒரு உண்மைத்துவம் இருந்தால் அது 'செயல் அறம்'.. இப்படி நேர்த்தியின் உச்சம் தொட்ட எல்லாச் செயல்களுமே அறம் சார்ந்தவையாகப் போற்றப்படும். நமது தமிழ் மரபில், ஆணும் பெண்ணும் இணைந்து குடும்பமாக வாழும் இல்வாழ்க்கையையும், குடும்ப வாழ்க்கையைத் துறந்து தனியராய் வாழும் துறவு வாழ்க்கையையும் இரண்டையுமே அறம் சார்ந்த நிலையில் வைத்து எண்ணுகிறோம். இல்லறம், துறவறம் ஆகிய எதிரெதிர் வாழ்முறை இரண்டிற்கும் பொதுமுறையாக அறம் வலியுறுத்தப்படுகிறது.

    உலகில் எல்லாவகை இன்ப துன்பங்களுக்கும் ஆட்பட்டு, கணவன், மனைவி, மக்கள், சொத்து, சுகம், செல்வம், மகிழ்ச்சி என ஆண்டு அனுபவித்து, வீட்டோடு வாழ்ந்து, சமூகத்தோடு இணைந்து, வாழ்வாங்கு வாழ்வது இல்லறம் ஆகும். வாய்த்திருக்கும் உலகியல் இன்பங்கள் அத்தனையையும் துறந்தும் உலக வாழ்க்கையை வெறுத்தும் காடுகள் வனங்களுக்கு ஏகி, ஏகாந்தமாய்த் தனித்திருந்து, வாழ்க்கையின் உண்மை அர்த்தம் தேடித் துறவு வாழ்க்கை வாழ்வது துறவறம் ஆகும்.

    இல்லற வாழ்க்கை எனப்படும் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்கிற வாழ்க்கை பெரும்பாலும் எல்லா உயிரினங்களுக்கும் இயல்பாய் உடலியல்ரீதியாய் அமைந்து காணப்படுவது ஆகும். இரை உண்பதிலும் இனவிருத்தி செய்வதிலும் அவை இணைந்தே இயங்குகின்றன என்றாலும் ஆறாவது அறிவுத்துணையோடு, குடும்பமாய், குடியாய், சமூகமாய், வாழையடி வாழையாய், தலைமுறை தலைமுறையாய் இயைந்து வாழும் வாழ்க்கைமுறை மனித இனத்திற்கு மட்டுமே வாய்த்திருக்கிறது. மனித இனம் மட்டுமே, அன்பு மற்றும் அறத்தின் வழிநின்று வாழ்க்கை நடத்துவதே இல்வாழ்க்கையின் பண்பும் பயனுமாக எண்ணிச் செயல்பட்டு வருகிறது. அதே போலத் துறவு வாழ்க்கை என்பது மனித இனத்திற்கேயுரிய பிரத்யேக வாழ்க்கை என்றாலும், அது மனித இனம் தவிர்ந்த வேறு எந்த உயிரினத்திற்கும் வாய்ப்பதில்லை; துறவில் தனித்து வாழ்வதும் அவற்றிற்குச் சாத்தியமுமில்லை.

    ஆணும் பெண்ணுமாக இணைந்து வாழும் இல்லற வாழ்க்கையில், குடும்ப வாழ்க்கை நடத்தும்போதே, சில துறவற நெறிகளைக் கையாண்டு வாழ்வதால், இல்லறத்தார்க்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடுவதில்லை; வயோதிகப் பருவம் எட்டியபிறகோ அல்லது எட்டுகிற தறுவாயிலோ சில தம்பதியர் துறவியர்போல ஆகிக்கொண்டு குடும்பத்தில் சேர்ந்தேவாழும் நிலைகளையும் காணலாம். அனால், துறவு வாழ்க்கை என்பது தூய தவ வாழ்க்கை மற்றும் தொண்டு வாழ்க்கை என்று ஆனபிறகு அங்கு, பந்தபாசம் பார்க்கிற, உடலியல் இச்சைக்கு ஆட்படுகிற இல்லறத் தன்மைகளுக்குத் துளியளவும் இடம் கிடையாது. இல்லறத்தில் அழுந்தத் தோய்ந்தவர்கள் ஒருநாள் திடீரெனத் துறவியாகித் துறவறம் மேற்கொள்ளலாம்; ஆனால் துறவறம் மேற்கொண்டு வாழ்பவர்கள், இல்லறத்தில் ஈடுபடப் போகிறோமென்று திடீரென்று கிளம்பினால் சமூகம் அவர்களைப் போற்றிப் பாராட்டாது; அவர்களுக்கு அவச்சொல்லே மிஞ்சும். சுருங்கச் சொன்னால், இல்லறத்தில் துறவறம் சாத்தியம்!. துறவறத்தில் இல்லறம் கூடவே கூடாது.

    ஒரு வைர வியாபாரி; இரவுபகல் பாராது உழைத்துப் பெருமளவில் சொத்துச் சேர்த்தார். திருமணமும் செய்துகொண்டார். பல்லாண்டுகாலம் ஆகியும் அவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை. ஒரு நாள் இரவில் கணவனும் மனைவியும் அமர்ந்து தங்களது வாழ்க்கையைப் பற்றி ஆலோசனை செய்தனர். இவ்வளவுநாள் படாத பாடுபட்டுச் சேர்த்த சொத்துக்களை அனுபவிக்கக் குழந்தை வாரிசு இல்லை; இவ்வளவு செல்வம் இருந்து என்ன பயன்?. கணவன் மனைவியைப் பார்த்துச் சொன்னார், " எனக்கு இல்லற வாழ்க்கை அலுத்துவிட்டது; காவியைக் கட்டிக்கொண்டு சாமியாராகப் போய்விடலாம் என்று முடிவெடுத்து விட்டேன்" என்றார். " அப்படியானால் இவ்வளவு நாளும் அயராது பாடுபட்டு நீங்கள் சேர்த்த செல்வங்களையெல்லாம் என்ன பன்னுவீர்கள்?" மனைவி கேட்டார்.

    வைர வியாபாரி சொன்னார், " இதோ பீரோவில் இருக்கிற நகை, பணம், சொத்துப்பத்திரங்கள் அத்தனையையும் எடுத்து உனக்கு முன்னே வைக்கிறேன்!. உனக்கு என்னென்ன வேண்டுமோ அவ்வளவையும் எடுத்துக்கொள்!. மீதமிருந்தால் தர்மத்திற்கு எழுதி வைத்து விடுகிறேன்!. அப்படியே நான் சன்னியாசம் வாங்கிக்கொண்டு கிளம்பி விடுகிறேன்! நீ வசதியாக வாழ்!" என்று. " நீங்கள் துறவியாகக் கிளம்பியபின் எனக்குமட்டும் எதற்கு சொகுசு வாழ்க்கை?; நானும் உங்களுடனேயே துறவியாக வந்து விடுகிறேன்; சொத்துகள் அனைத்தையும் தர்மத்திற்கே எழுதி விடுங்கள்; இதோ இந்தத் தாலி உட்பட அனைத்தையும் துறந்து விடுகிறேன்!" என்று கூறித், தாலியைக் கழற்றப்போன மனைவியைத் தடுத்து நிறுத்தி, " அது நமக்குக் கல்யாணம் ஆனதன் அடையாளமாய் அப்படியே கழுத்தில் இருக்கட்டும்!. இனி நாம் எங்கு சென்றாலும் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாய்ச் சேர்ந்தே செல்வோம் துறவு மனப்பான்மை மாறாமல்!" என்றார் வைர வியாபாரி.

    சுந்தர ஆவுடையப்பன்

    எல்லாவற்றையும் துறந்து துறவு வாழ்க்கையில் கணவனும் மனைவியும் அடியெடுத்து வைத்தனர். ஊர் ஊராகக், கோயில் கோயிலாக நடந்தனர்; கிடைத்த உணவை உண்டனர்; வாய்த்த இடத்தில் உறங்கினர். இன்பமும் துன்பமும் அவர்களுக்கு ஒன்றுபோலவே தோன்றத் தொடங்கின. ஊர்ப்புற வாழ்க்கையை விட்டு ஒதுங்கி, இனிக் காடுகளுக்குள் சென்று வாழலாம் என்று முடிவெடுத்து மலைப் பகுதியை நோக்கி நடந்தனர். அப்போதும்கூட கணவன், மனைவியிடம், "இனிமேல் தான் காட்டில் துறவுவாழ்க்கை கடினமானதாக இருக்கும்; இப்போதும்கூட ஒன்றும் கெட்டுப் போகவில்லை; நீ ஊருக்குள் திரும்பிப் போய்விடு; போய் உன் வாழ்க்கையை நீ மகிழ்ச்சியாக வாழ்ந்துகொள்!" என்று ஆலோசனை கூறினார். அதற்கு மனைவி, "நான் துறவுவாழ்க்கை வாழ்வதில் மிகவும் உறுதியாக இருக்கிறேன். காட்டுக்குள் செல்லுங்கள்; நான் பின்தொடர்ந்து வருகிறேன்" என்றார்.

    காட்டுப்பகுதிக்குள் நுழைந்த கணவன், தனது காலடியில் ஒரு விலைமதிக்க முடியாத மணி கிடப்பதைப் பார்த்துவிட்டார். கீழே குனிந்து மணியை எடுத்தால், அதை மனைவி பார்த்துவிட்டால், உலகியல் ஆசை அவருக்கு மீண்டும் வந்துவிடுமே! என்று அஞ்சி, அந்த மணியின்மீது ஒரு காலை வைத்து மிதித்து நின்றுகொண்டு மனைவியைக் கடந்து போகச் சொன்னார். " நீங்கள் ஏன் அப்படி நிற்கிறீர்கள்?" என்று மனைவி கேட்டுவிட்டார். " அது ஒன்றுமில்லை!. விலைமதிக்க முடியாத மணி ஒன்று கீழே கிடக்கிறது; அது உன் கண்ணில் பட்டுவிடக் கூடாது என்பதற்காக மறைத்து மிதித்துக்கொண்டு நிற்கிறேன்!" என்றார் கணவர். " துறவு மேற்கொண்டு இவ்வளவு காலத்திற்குப் பின்னுமா உங்களுக்கு மணிக்கும் மண்ணாங்கட்டிக்கும் வேறுபாடு தெரிகிறது? எனக்கு எல்லாமே மண்ணாங்கட்டிகளாகத்தான் தெரிகிறது!" என்று கூறிக்கொண்டே கடந்து சென்றார் மனைவி. ஆம்! பொருள்களைத் துறப்பதுமட்டுமல்ல: பொருள்களின் பெயர்களையும் துறப்பதே துறவு.

    துன்பங்களே மனிதர்களைத் துறவிகள் ஆக்குகின்றன; மனித வாழ்க்கையில் நேரும் துன்பங்களையும் துயரங்களையும் கண்ட சித்தார்த்தன் புத்தனானதும் இப்படித்தான். ஆயினும் எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுபட்டு இன்பநிலை எய்துவதற்கு எல்லா மனிதர்க்கும் எளிய வழி துறவியாகப் போவதுதான் என்கிற முடிவுக்கும் வந்து விடக்கூடாது. இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் துறவுநிலையும் ஆசிரமங்களும் பெருநிறுவனத்தன்மையில் இயங்கத் தொடங்கியிருக்கும் சூழலில், முற்றும் துறந்து துறவுவாழ்க்கை வாழ்வதைப் பழங்கால நிலைகளோடு ஒப்பிட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது. அன்றைய துறவுநிலையில் மனித வாடையற்ற வனாந்தரங்களில் தவவாழ்க்கை வாழ்ந்து மறைந்துபோன தவமுனிவர்களும் உண்டு; ஆன்மீகத் திருத்தலங்களில் மக்களோடு மக்களாய், வினாக்களோடு தவம்புரிந்து வாழ்வியல் விடைகளைத் தெரிந்துகொண்டு, மக்களிடம் பகிர்ந்து கொண்ட ரமண மகரிஷிகளும் உண்டு. ஆனால் இல்லற வாழ்வில் ஈடுபாட்டோடு இணைந்திருக்கும் இன்றைய மனிதனுக்குத் துறவு வாழ்வின் தத்துவங்களும் நலம் கூட்டுவனவாகவே மாறியிருக்கின்றன.

    அறிவியல் வேறு! ஆன்மீகம் வேறு! வாழ்வியல் வேறு! தத்துவம் வேறு! என்று தனித்திருந்த காலத்தையெல்லாம் கடந்து. இன்று எவரும் எதைப்பற்றியும் பேசக்கூடிய இணைய உலகில் இணைந்திருக்கிறோம். இமயமலையின் தவக்காட்சிகள், இப்போது அதே நேரத்தில், நேரலையில் தனுஷ்கோடியில் உள்ளவர் கண்களுக்கு தத்ரூபமாக விரிகின்றன. உணர்வு நிலையில் மட்டுமே இடங்கள் வெவ்வேறு என்கிற புரிதல் புலப்படுகிறது.

    பொருள்களோடு வாழ்ந்தாலும் அந்தப் பொருள்களின்மீது பற்றுகள் இன்றி வாழ்வதே இல்லறத்தில் துறவு ஆகும். நோயற்ற வாழ்வு வாழ விரும்புவோர் உணவு முதற்கொண்டு எவ்வெவற்றில் துறவு மனப்பான்மை கைக்கொள்ள வேண்டும் எனபதைப் புரிந்துகொள்ள வேண்டும். உணவை மருந்தாக்கிக் கொண்டால், மருந்தைத் துறந்து மகிழ்ச்சியாய் வாழலாம். ஒத்துக்கொள்கிற உணவை மறுத்து மறுத்துச் சாப்பிட்டால் இல்லற வாழ்விலும் தவசியைப்போல தூய உடம்போடு வாழலாம்.

    திருவள்ளுவர் துறவு என்கிற அதிகாரத்தைத் துறவிகளுக்காக மட்டுமே படைக்கவில்லை; பெரும்பான்மையும் இல்லறத்தார்க்காகவே பல நெறிகளை வகுத்துக்காட்டுகிறார். பொருள்களினால்தான் நமக்குத் துன்பங்கள் உண்டாகின்றன; அவை இருந்தாலும் துன்பம்! காக்க வேண்டுமே என்று!; இல்லாவிட்டாலும் துன்பம்! சேர்க்க வேண்டுமே என்று!. பொருள்களோடு வாழ்ந்தாலும் அவற்றின்மீது பற்று வைக்காமல் அவற்றைப் பயன்படுத்திமட்டும் வாழக் கற்றுக்கொண்டால் எப்போதும் துன்பமில்லை.

    நம்மிடம் இல்லாத பொருள்களை வெறுப்பது என்பது 'சீச்சீ இந்தப்பழம் புளிக்கும்' என்கிற கதையைப் போன்றதுதான். இருக்கும்போதே அவற்றோடு துறவு மனப்பான்மையோடு இருப்பது; அதுவே உண்மைத் துறவு. இதைத்தான் வள்ளுவர் 'வேண்டின் உண்டாகத் துறக்க!' என்கிறார். எல்லாவற்றிற்கும் ஆசைப்படுவதல்ல இல்லறம்!. தேவையானவற்றிற்காக ஆசைப்படுவது! அவற்றை அடைவதற்கு நியாயமான வழிகளில் கடமையாற்றுவது; பெற்ற பொருளையும் செல்வத்தையும் தமக்கென ஆசைப்பட்டு வைத்துக் கொள்ளாமல் தேவைப்படும் மனிதர்க்கு ஒரு துறவியைப்போலப் பகிர்ந்து கொடுப்பதுமாகும்.

    பற்றில்லாத வாழ்க்கை அனைவரையும் சமமாகப் பார்க்கும் பரோபகாரப் பார்வை ஆகும்; இன்றைய ஒவ்வொரு இல்லறத்தார்க்கும் தேவைப்படும் துறவறப்பார்வையும் அதுவே ஆகும்.

    தொடர்புக்கு 9443190098

    ×