என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • சிறிது நேரத்தில் காப்பியுடன் வந்தா சீதா.
    • தங்கராசுவின் வீட்டில் அவனது மனைவி லட்சுமி கேட்டாள்.

    "தங்கராசு அண்ணன் நாலு தடவ போன் பண்ணிட்டாரு. நீங்க போனை சார்ஜ்ல போட்டுட்டு அப்படி எங்க தான் போயிருந்தீங்க?" கேட்டாள் சீதா.

    "அப்படியே காலாறப் போயிருந்தேன். இப்ப என்ன வேணுமா அவனுக்கு? என்று எரிச்சலோடு சோபாவில் அமர்ந்தான் தண்டாயுதபாணி.

    "ஏன் அவர் எதுக்கு போன் பண்ணுவாருன்னு உங்களுக்குத் தெரியாதா?" சீதாவும் எகிறினாள்.

    "தெரியும், சும்மா பணம் பணம்னு கேட்டா எங்கப் போவேன்? மனுசன கொஞ்ச நேரம் கூட நிம்மதியா இருக்க விடமாட்டேங்கறான். போய் சூடா ஒரு காபி போட்டு எடுத்துட்டு வா போ" என்று விரட்டினான்.

    "ஆமா இப்ப டென்ஷனாகி என்ன பிரயோசனம்? தங்கராசு அண்ணாகிட்ட பணம் வாங்கும்போது இனிச்சுதாக்கும்"

    "இங்கப் பாரு சீதா, நானே டென்ஷனா இருக்கேன். இப்ப அந்தக் கடங்காரனப் பத்திப் பேசாத போயிடு"

    "என்னமோ பண்ணித் தொலைங்க இனிமே எங்கப் போனாலும் அந்தப் பாழாப்போன செல்போனையும் கூடவே எடுத்துக்கிட்டுப் போயிடுங்க சொல்லிட்டேன். அது இங்க இருக்கவும் தானே என்ன கத்துது, எதுக்கு கத்துதுன்னு பார்க்க வேண்டி இருக்கு?" என்று அவனை மேலும் எரிச்சலூட்டினாள்.

    "ஐயோ சாமி, போய் காபி போட்டு எடுத்துட்டு வரியா?" என்று பலமாகக் கத்தினான்.

    சிறிது நேரத்தில் காப்பியுடன் வந்தா சீதா.

    சோபாவில் சாய்ந்து கண்களை மூடி இருந்தவனைத் தட்டி எழுப்பி காபியை நீட்டிக்கொண்டே, "இங்க பாருங்க இனிமே அந்த தங்கராசுக் கிட்ட பணம் எதுவும் நீங்க வாங்கக்கூடாது. ஒழுங்கா வாங்கிய அம்பதாயிரத்தை திருப்பிக் கொடுத்துடுங்க" என்றாள்.

    செந்தில்குமார் அமிர்தலிங்கம்

    காபியை வாங்கியவன், "என்னடி புரியாம பேசிகிட்டு இருக்க? நான் என்ன தண்ணி அடிக்கவா அவங்கிட்ட கடன் வாங்கினேன்? நம்ம பொண்ணுங்கள ஸ்கூல்ல சேக்கத்தானே வாங்குனேன்? சரி வியாபாரம் நல்லாப் போகுதே எப்படியும் கொடுத்திடலாம்னு வாங்கினேன். ஆனா வியாபாரம் டல்லடிக்குது. அதான் தர முடியல. நான் என்ன வச்சுக்கிட்டா வஞ்சனை பண்றேன்? "என்றான்.

    "அது சரி நல்லா இருக்குது நியாயம். அவரென்ன அவர் பணத்தையாக் கொடுத்தார்? பாவம், அவரே கடன் பட்டு கஷ்டப்பட்டுகிட்டு கிடக்குறாரு. நீங்க அவர்கிட்ட போய் கால்ல விழுந்தா? நண்பனாச்சே இப்படி கதறுறானேன்னு இரக்கப்பட்டு வட்டிக்குக் கடன் வாங்கிக் கொடுத்தாரு. இப்ப நாம கட்ட வேண்டிய வட்டியையும் அவரே கட்டிக்கிட்டு இருக்காரு. பாவமில்ல?"

    "என்னடி? திடீர்னு அவனுக்கு வக்காலத்து வாங்குற. நாம ஏற்கனவே கந்துவட்டிகாரன் ஒருத்தங்கிட்ட பதினஞ்சாயிரம் வாங்கினோமே? அவன் நேத்து என் சட்டையை பிடிச்சி கேட்காத குறையா கேட்டுட்டான். "

    நான் அவனுக்கு என்ன பதில் சொல்றதுன்னு புரியாம இருக்கேன். நீ என்னமோ அந்த தங்கராசுப் பயலப்பத்தி பேசிகிட்டு இருக்க? "

    "அப்ப அந்த தங்கராசுக்கு என்னதான் பண்ண போறீங்க?"

    "இரு நான் அவனுக்குப் போன் போட்டு உன்கிட்ட தரேன். நீயே பேசு ஒரு பதினஞ்சாயிரம் யாருகிட்டயாச்சும் வாங்கி தரச்சொல்லு. அவன்கிட்ட வாங்கித் தான் கந்துவட்டிக்காரன் கடனை அடைக்கலாம்னு இருக்கேன்."

    "ஐயோ என்னால முடியாது. தங்கராசு நான் கேட்டதும் கொடுத்துடுவாரா என்ன? அவரே, 'வட்டி கட்ட முடியல சீக்கிரம் நான் வாங்கிக் கொடுத்த பணத்தை திருப்பி கொடுங்க' ன்னு கேட்டுகிட்டு இருக்காரு ஆரேழு மாசமா."

    "அதான்டீ நானும் சொல்றேன். அந்த தங்கராச விட்டா நமக்கு வேற இளிச்சாவாயன் கிடைக்க மாட்டான். நீ எப்படி அவன் கிட்ட பேசுறனா? 'ஒரு பெரிய ஆர்டர் கிடைச்சிருக்கு. அதுக்கு சாமான்கள் ரெடி பண்ணனும்னா இப்ப அவசரமா ஒரு பதினஞ்சாயிரம் தேவை இருக்கு. அதை கொடுத்தீங்கன்னா பத்தே நாள்ல உங்கக்கிட்ட வாங்கின எல்லா பணத்தையும் வட்டியோட திருப்பி கொடுத்துவிடுவோம். என்னய நம்பி கொடுங்க. இந்த ஆர்டர் மட்டும் இல்லாம போச்சுன்னா அப்புறம் உங்களுக்கு எங்களால பணமே கொடுக்க முடியாம போயிடும்' அப்படின்னு பேசுடி. அவன் இளகுன மனசுக்காரன் பட்டுன்னு விழுந்துடுவான்.

    உடனே யாரு கைல கால்லயாச்சும் விழுந்து பணத்த ரெடி பண்ணி நம்ம அக்கவுண்ட்ல போட்டுடுவான். அப்புறம் நம்ம கிட்ட வழக்கம் போல கெஞ்சிக்கிட்டே கிடப்பான்" என்று சிரித்தான் தண்டாயுதபாணி.

    "என்னால முடியாது" என்ற அவளை மல்லுக்கட்டி சம்மதிக்க வைத்தான். அவளும் தங்கராசுவிடம் அதேபோல் பேசினாள். தங்கராசும் மனம் இளகினான். அடுத்த ஒரு மணி நேரத்தில் தண்டாயுதபாணியின் வங்கிக் கணக்கில் பதினஞ்சாயிரம் ரூபாய் வந்து விழுந்தது.

    சில நாட்கள் கழிந்து இருந்தன. தங்கராசுவின் வீட்டில் அவனது மனைவி லட்சுமி கேட்டாள்.

    "என்னங்க அந்த தண்டாயுதபாணி பணம் திருப்பி கொடுத்துட்டாரா? இல்லையா?" கொஞ்சம் கோபமாகவேக் கேட்டாள்.

    நல்லவேளை இவளுக்கு அம்பதாயிரம் நாம கொடுத்தது தான் தெரியும். அதுக்கப்புறம் பதினஞ்சாயிரம் கொடுத்தது தெரியாது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்தவர் லட்சுமியிடம் திரும்பி,

    "எப்பக் கேட்டாலும் ஏதாவது ஒரு பதில் சொல்லிட்டு இருக்காரு. என்னாலயும் அவருகிட்ட அலைய முடியல லட்சுமி. என்ன பண்றது பாவம் ரெண்டு பொம்பள புள்ளைய வெச்சுகிட்டு கஷ்டப்படுறாரு."

    "நாம என்ன மாடமாளிகையிலயா வாழுறோம்?. நம்ம கஷ்டத்தை யாருகிட்டப் போய் அழறது? "

    "சரி விடு லட்சுமி, அவருக்கு ஒரு நல்ல வழி பொறந்து கைல பணம் புரண்டுச்சின்னா நமக்குத் தர வேண்டியத தந்துடுவாரு" என்று தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொண்டு வெளியில் கிளம்பினார் தங்கராசு.

    "எங்க கிளம்பிட்டீங்க?"

    "கடைத்தெரு வரைக்கும் போயிட்டு வரேன்" என்று தனது இருசக்கர வாகனத்தை கிளப்பினார். எதிர்பாராத விதமாக ஒரு திருப்பத்தில் வந்த லாரி மோதியதில் தங்கராசுவின் தலையில் அடிபட்டு அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரைவிட்டார்.

    விபரம் அறிந்த தண்டாயுதபாணிக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் கடனை திருப்பிக் கேட்க ஆளில்லை என்று உள்ளூர மகிழ்ச்சி உண்டானது.

    இறப்புக்குப் போய் அழுது புரண்டுவிட்டு வந்து வீட்டில் நிம்மதியாகத் தலைமுழுகினான்.

    ஒரு மாதம் கழிந்திருந்தது. சீதா ஆரம்பித்தாள்.

    "என்னங்க பாவம் அவரு. அவர் கொடுத்த பணத்தை அவரோட மனைவி கிட்டத் திருப்பிக் கொடுத்துடலாம்"

    "ஏன்டீ தொணதொணங்குற? அவனோட பொண்டாட்டிக்கு நாம பணம் வாங்குன விஷயமேத் தெரியாது" என்று வில்லத்தனமாக சிரித்தான்.

    "அவர் எப்படியும் சொல்லி இருப்பாருங்க. வேணும்னா முழுசா கொடுக்க வேணாம். சும்மா ஒரு பத்தாயிரம் கொண்டு போய் கொடுத்து கணக்கு நேராயிட்டதுன்னு சொல்லிட்டு வந்துருவோம். வாங்க நானும் வரேன்"

    "என்ன சீதா நீ?" என்று யோசித்தவன், "சரி பத்தாயிரம் தான் தருவேன். அதுக்கு மேல ஒரு பைசா தரமாட்டேன்" என்று கிளம்பினான்.

    லட்சுமி வீட்டில் இருந்தாள்.

    தங்கராசுவின் புகைப்படத்திற்கு மாலையும், பொட்டும் வைக்கப்பட்டிருந்தது.

    "அம்மாடி லட்சுமி, உன் புருஷன் கிட்ட நான் கொஞ்சம் கடன் வாங்கி இருந்தேன்மா. அத வட்டியோட திருப்பிக் கொடுத்திடலாம்னு வந்தேன்" என்று பவ்யாமாகத் தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த பத்தாயிரம் ரூபாயை எடுத்து நீட்டினான்.

    அதை வாங்காமல் தங்கராசுவின் புகைப்படத்திற்கு கீழே மேசையில் இருந்த ஒரு டைரியை எடுத்துப் புரட்டினாள் லட்சுமி.

    அதைப் பார்த்த இவர்கள், "எல்லாத்தையும் தெளிவா எழுதி வச்சிருப்பான் போலிருக்கே" என்று அதிர்ச்சியடைந்தார்கள்.

    புரட்டிய பக்கத்தோடு வந்து டைரியை தண்டாயுதபாணியிடம் நீட்டினாள் லட்சுமி.

    அதில் தங்கராசு எழுதியிருந்தவை,

    "தண்டாயுதபாணியிடம் பணத்தை திருப்பி வாங்க வேண்டாம். நம்மிடம் இருக்கும் நகைகளை விற்று நாம் வாங்கிய கடன்களை அடைத்துவிடலாம். அவன் குழந்தைகளுக்காகத்தானே வாங்கினான்.

    நம் பிள்ளைகளுக்கு செலவு செய்ய மாட்டோமா? அவர்களும் நம் பிள்ளைகள் போலத்தானே? கணக்கு நேர்'' என்று எழுதியிருந்தார்.

    வாசித்த இருவருக்கும் தலை சுற்றியது.

    • நெல்லை மாவட்டத்தில் மறவர், நம்பியார், வெள்ளாளர், யாதவர், ஆதிதிராவிடர், நாடார் என பலபிரிவினரும் நிழல்தாங்கல்கள் கொண்டுள்ளனர்.
    • அய்யாவை வழிபடும் மக்கள் தர்மம் அளிப்பதனை வழிபாட்டில் ஓர் முக்கிய நெறியாக கொண்டுள்ளனர்.

    இன்று தமிழ்நாடு மட்டுமன்றி கேரளாவிலும் பல பகுதிகளில் அய்யாவைகுண்டரின் நிழல்தாங்கல்கள் பரந்து காணப்படுகின்றன. எனினும் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் தான் நிழல்தாங்கல்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. குமரி மாவட்டத்தில் நிழல்தாங்கல்கள் இல்லாத இந்து சமயத்தினர் வாழும் கிராமத்தினை பார்ப்பது மிகவும் அரிதாகவே உள்ளது. நாடார் சமூகத்தவர் மட்டுமின்றி, வெள்ளாளர், நாயர், செட்டியார், வண்ணார், நாவிதர், பறையர், பள்ளர், அளவர், தச்சர், பணிக்கர் என அனைத்து சமூகத்தவர்களும் நிழல்தாங்கல்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

    கரம்பவிளை, சுந்தரபுரம், நரிக்குளம், கொட்டாரம், வாரியூர், மணலோடை, மூக்கரைக்கல், இடையன்விளை போன்ற கிராமங்களில் இன்று இயங்கி வரும் நிழல்தாங்கல்கள் இதனை உறுதி செய்கின்றன. மேலும் அகஸ்தீஸ்வரம், லீபுரம், பஞ்சலிங்கபுரம், சுண்டன்பரப்பு, குண்டல், முகிலன் குடியிருப்பு, சந்தையடி, பெரியவிளை, கல்விளை, பாலப்பள்ளம், புத்தளம், பெருவிளை, லாயம், ஆரல்வாய்மொழி வீயென்னூர் என நிழல்தாங்கல்கள் செயல்படும் கிராமங்களின் பெயர்ப்பட்டியலை கூறினால் பக்கங்கள் மிகுதியாகும்.

     

    நெல்லை மாவட்டத்தில் மறவர், நம்பியார், வெள்ளாளர், யாதவர், ஆதிதிராவிடர், நாடார் என பலபிரிவினரும் நிழல்தாங்கல்கள் கொண்டுள்ளனர். வள்ளியூர், நாங்குனேரி, ஏரல், கடையம், ஆலங்குளம், உடன்குடி, அழகிவிளை, கூடங்குளம், பணக்குடி, போலையர்புரம், களக்காடு, கயத்தாறு, கோவில்பட்டி, தூத்துக்குடி, புளியம்பட்டி, முக்கூடல், கீழக்கட்டளை, சிறுமணச்சி, மேலமங்கலக்குறிச்சி என மாவட்டம் முழுவதும் தாங்கல்கள் பரந்துக் காணப்படுகின்றன. இவை தவிர, ராமநாதபுரம், மதுரை, திருச்சி முதலிய மாவட்டங்களிலும் நிழல் தாங்கல்கள் உருவாகியிருக்கின்றன.

    1934-ம் ஆண்டு சிவகாசியில் திருத்தங்கல் நெடுஞ்சாலையில் முத்தப்ப நாடார், மாடசுவாமி பிள்ளை ஆகியோர் முயற்சியால் நிழல்தாங்கல் நிறுவப்பட்டதுடன் கிணறு, சோலை ஏற்படுத்தி தாங்கல் சிறப்புற நடைபெற்றிடவும் வகை செய்தனர். இன்று இத்தாங்கல் மேலும் சீரமைக்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது.

    கேரள மாநிலத்தில் நாயர், பணிக்கர், குறுப்பு, காணிக்காரர் என பல பிரிவினரும் தாங்கல்கள் அமைத்துள்ளனர். கரமனை, கோட்டக்கல், செங்கனூர், பாலராமபுரம், இடிச்சக்க பலாமூடு, பீர்மேடு, மூணாறு, நெய்யாற்றங்கரை, பாறசாலை எனபல இடங்களிலும் தாங்கல்கள் காணப்படுகின்றன. இங்ஙனம் நிழல்தாங்கல்களின் துரித வளர்ச்சியானது சுவாமிகளின் இயக்கம், மக்கள் மத்தியில் பெற்ற ஆதரவை உறுதி செய்கின்றது. சுவாமிகளின் கொள்கை விளக்கக்கூடங்களாக உருவெடுத்தாலும் இத்தாங்கல்கள் அந்தந்தப்பகுதியில் வாழும் மக்களின் வழிபாட்டுக்கூடங்களாகவும், தர்ம பரிபாலன இல்லங்களாகவும் விளங்குகின்றன. தாங்கல்களின் பெருக்கம் சுவாமிகளின் போதனைகளை மக்களிடம் முறைப்படியாக எடுத்துச் செல்லவும், சமுதாயத்தில் ஒரு விழிப்பு நிலையை ஏற்படுத்தவும் வகை செய்துள்ளது. அவரது சீர்திருத்தத்தின் தாக்குதலால் அவர் மறைந்த சில ஆண்டுகளில் மக்கள் புரட்சியாக உருவெடுத்து வெற்றியும் கண்டது.

    சுவாமிகள் தனது அன்பர்களிடம் கலியை அழிக்க 'தன்மானத்தை' ஆயுதமாக ஏந்துமாறு முழக்கமிட்டார். நாடார் சமூகப்பெண்களை தோள்சேலை அணிந்து கொள்ள ஊக்கப்படுத்தினார். மாதர்தம் நலன் பேணுவதே நமது தலையாய கடமை என்று மக்கள் மன்றத்தில் எடுத்துரைத்தார். அவர் எழுப்பிய தன்மான உணர்வு அவர் ஊட்டிய ஆண்மை நெறி மக்களை சிந்திக்க வைத்தது; மக்களின் இழிநிலை அகற்ற வெகுண்டெழச் செய்தது. சுவாமிகள் மூட்டிய புரட்சிக் கனல் அவர் மறைந்த சில ஆண்டுகளுக்குள் எரிமலையாக வெடித்தது.

    ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்கள் பிராமணர்களின் ஆதிக்கத்துட்பட்ட கோயில்களுள் செல்ல உரிமை மறுக்கப்பட்ட நிலையில் தங்கள் காணிக்கை பொருட்களைக்கூட நேரடியாக அளிக்க அனுமதிக்கப்படவில்லை. கோயிலுக்கு வெளியே தூரத்தில் நின்று தான் காணிக்கை செலுத்த வேண்டியதாயிற்று. உதாரணமாக, சுசீந்தரம் தாணுமாலையன் கோயிலுள் அனுமதி மறுக்கப்பட்ட நாடார், ஈழவர், பறையர், புலையர் போன்ற சமூகத்தவர்கள் கோயிலில் இருந்து ஒரு பர்லாங் தூரத்திற்கப்பால் நின்றே வழிபட வேண்டிய நிலை இருந்தது. அவர்கள் காலடிபட்டுவிட்டாலே கோயில் தெருக்கள் கூட தீட்டுப்பட்டு விட்டதாக கருதப்பட்டது. திருவிழா காலங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோயில் தெருக்களில் நுழைந்துவிடக்கூடாது என்பதற்காக தெரு நுழைவாயில்களில் திரைகள் (தெரு மறச்சான்கள்) போடப்பட்டன. துப்புரவு பணியாளர்கள் கூட அந்நாட்களில் அனுமதி மறுக்கப்பட்டனர்.

    வைகுண்ட சுவாமிகள் பிராமணர்களின் ஆதிக்கத்துக்குட்பட்ட கோயில்களில் வழிபாடு செய்திட எவ்வித விருப்பமும் இல்லாதவராய் இருந்த போதிலும் அவரது சமூக சமய சீர்திருத்த இயக்கம் 'சமத்துவம்' நோக்கி மக்களை விரைந்தோட செய்தது. அதன் விளைவாக ஆலயங்களிலும் ஓங்கு சாதியினருக்கு இணையாக வழிபடுவதற்கு தங்களுக்கும் உரிமை உண்டு என்பதில் நாடார் சமூகத்தவர் உறுதியாக இருந்தனர். எனவே பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி பகுதியில் ஆலய நுழைவு போராட்டங்கள் பரவலாக தோன்றலாயின. வைகுண்ட சுவாமிகள் நடத்திய சீர்திருத்த இயக்கம் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக-சமய வாழ்க்கையில் அரிய பல மாற்றங்களை ஏற்படுத்தியது. சமுதாயத்தில் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு தாழ்வு நிலைக்கு தள்ளப்பட்டிருந்த சாதியில் இருந்து தோன்றி, ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற பிரதிநிதியாக செயல்பட்டு செயல்பட்டு அவர்கள் நல்வாழ்விற்காக ஆளும் வர்க்கத்தையும், அதிகார மேட்டுக் குடியினரையும் எதிர்த்து குரல் எழுப்பி தென் இந்திய சீர்திருத்த இயக்க வரலாற்றில் சுவாமிகள் ஒரு சமூக புரட்சியாளராக இடம் பெறுகின்றார்.

    தாழ்த்தப்பட்ட மக்களின் சமுதாய முன்னேற்றத்திற்காக சுவாமிகள் ஆற்றிய பணிகள், மக்கள் மத்தியில் அவரை அய்யா என போற்றிடச் செய்ததுடன், வணக்கத்திற்குரிய அவதார புருஷராகவும் மாற்றின. எனினும் திருமாலின் அவதாரம், கிருஷ்ண அவதாரம் போலல்லாமல், "என்னினும் பெரியோனீங்கள் யான் உங்கள்தனிலும் மேலான்" என்ற அடிப்படையில் சுவாமிகள் பாமர மக்களுடன் இணைந்தே செயல்பட்டதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் புராண கால அவதாரங்களை போன்று மக்களிடமிருந்து ெவகுதூரம் விலகி கடவுள் என்ற முத்திரையில் தனித்தே நிற்காமல் சுவாமிகள் அனைத்து மக்கள் தம் குடும்பத்துள் ஒருவராய்-தந்தையாய் விளங்கி நிற்கிறார். அய்யாவை வழிபடும் மக்கள் தர்மம் அளிப்பதனை வழிபாட்டில் ஓர் முக்கிய நெறியாக கொண்டுள்ளனர்.

    • நமது நாக்கே இனிப்பாக மாறி அமைந்து இனிப்பைக் காட்டுகிறது.
    • இரண்டு நண்பர்கள் ஒரு மடாலயத்துக்கு சென்றனர்.

    "ஞானம் அடைந்த பிறகுதான் வாழவே ஆரம்பிக்கிறோம்" என்றார் நிசர்க தத்த மகராஜ் என்ற ஞானி.

    "ஞானம் என்று எதுவுமே கிடையாது!" என்று கூறிவிட்டார் ஜே.கிருஷ்ணமூர்த்தி என்ற ஞானி.

    இவற்றில் எதுதான் உண்மை?

    உண்மையில் இருவருடைய கருத்துகளும் சரியானவையே!

    இதனைத் தெளிவுபடுத்த, ஞானம் என்றால் என்ன, விடுதலை என்றால் என்ன என்பதையும் நாம் புரிந்து கொண்டாக வேண்டும்.

    ஆன்மிக சாஸ்திரங்களில் மனோ லயம் மற்றும் மனோ நாசம் என இரண்டு விதமான சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    நாம் எதையுமே சாப்பிடாமல் இருக்கும்போது நமது நாக்கு என்ன சுவையோடு இருக்கும்?

    அது எதனையும் காட்டாது சுவையற்று இருக்கும்.

    இப்போது நாம் நமது நாக்கின் மீது இனிப்பையோ அல்லது கசப்பையோ வைத்திடுவோமேயானால் என்ன ஆகும்?

    நமது நாக்கே இனிப்பாக மாறி அமைந்து இனிப்பைக் காட்டுகிறது. அது போல் கசப்பாக மாறி அமைந்து கசப்பைக் காட்டுகிறது.

    இவ்வாறுதான் நமது மனமும் செயல்படுகிறது.

    தெருவில் நண்பர் வந்து கொண்டிருக்கிறார். அவரை நண்பர் என்று எவ்வாறு புரிந்து கொள்கிறோம்?

    நம்முடைய மனதே ஒரு விநாடி நண்பராக வடிவெடுத்து நண்பரைப் புரிந்து கொள்கிறது.

    இப்படி நாம் எதனைப் புரிந்து கொள்வதானாலும் நம் மனம் அதுவாகவே வடிவெடுத்துதான் புரிந்து கொள்கிறோம்.

    மனம் இவ்வாறு வடிவெடுப்பதை மனோ லயம் என்று கூறுகிறோம்.

    ஸ்ரீ பகவத்

    தெருவில் வாகனம் ஒன்றும் வருகிறது. அந்த வாகனத்தை வாகனம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

    நமது மனம் நண்பராக வடிவெடுத்ததில் இருந்து விடுபட்டால் மட்டுமே அது புதிய வடிவத்துக்குச் செல்லமுடியும். எடுத்த வடிவத்தில் இருந்து விடுபடுவதை மனோ நாசம் என்று கூறுகிறோம்.

    லயம் மட்டுமே அனுபவமாக இருக்கிறது. நாசம் என்பது அனுபவம் அல்ல. அனுபவத்தில் இருந்து விடுபடுவது மட்டுமே

    லயம் சிறந்ததா அல்லது லயத்திலிருந்து விடுபடுவது சிறந்ததா?

    இரண்டு நண்பர்கள் ஒரு மடாலயத்துக்கு சென்றனர். அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது.

    அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் மடாலயத்தின் தலைவர் அவர்களிடம், "உங்களுக்கு குடிப்பதற்கு என்ன வேண்டும்? பழச்சாறுகள் எவையாவது வழங்கவா அல்லது மடாலயத்தின் சிறந்த பானத்தை அருந்துகிறீர்களா?" என்று கேட்டார்.

    நண்பர்கள் யோசித்தனர். 'நாம் சாப்பிடாத பழச்சாறுகளா? இன்று அந்த சிறந்த பானத்தை தான் குடித்து பார்ப்போமே'.

    இப்படி யோசித்த அவர்கள், மடாலயத்தின் சிறந்த பானத்தையே வழங்கும் படி கேட்டுக் கொண்டார்கள்.

    இதுதான் மடாலயத்தின் சிறந்த பானம் என்று கூறி, அவர்களுக்கு சுத்தமான குடிதண்ணீர் வழங்கப்பட்டது.

    'தண்ணீர் எனக் கூறி இருந்தால் பழச்சாறுகளைக் கேட்டிருக்கலாம்.

    மடாலயத்தின் சிறந்த பானம் என்று கூறி நம்மை ஏமாற்றி விட்டார்கள்' என்று நண்பர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

    மறுநாள் காலை உணவின் போதும் மடாலயத்தின் தலைவர் அவர்களிடம்,

    "குடிப்பதற்கு பழச்சாறுகள் எவையாவது வழங்கவா அல்லது மடாலயத்தின் சிறந்த பானத்தையே வழங்கவா?" என்று கேட்டார்.

    சுதாரித்துக் கொண்ட நண்பர்களும் சாமர்த்தியமாக, " மடாலயத்தின் சிறந்த பானத்தை நேற்றே சாப்பிட்டுப் பார்த்துவிட்டோம். இனிமேல் பழச்சாறுகளே போதும் சுவாமி!"

    என்று கூறினார்கள்.

    அவர்களுக்கு பழச்சாறுகள் வழங்கப்பட்டன. நண்பர்களும் அருந்தி மகிழ்ந்தனர். அதன்பிறகு அந்த நண்பர்கள் தங்கியிருந்த அத்தனை நாட்களிலும், தண்ணீரை மட்டும் அவர்களுடைய கண்களிலேயே காட்டவில்லை.

    எவ்வளவு தாகமாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு பழச்சாறுகள் மட்டுமே வழங்கப்பட்டன.

    ஒரு வாரத்துக்குப் பிறகு மடாலயத்தின் தலைவர் மீண்டும் அவர்களிடம், "இன்று குடிப்பதற்கு பழச்சாறுகள் எவையாவது வழங்கவா அல்லது மடாலயத்தின் சிறந்த பானத்தையே வழங்கவா?" என்று

    கேட்டார்.

    நண்பர்கள் இருவரும் ஒரு சேர,

    "மடாலயத்தின் சிறந்த பானமே எங்களுக்குப் போதும் சுவாமி!" என்று கூறினார்கள்.

    பழச்சாறுகளில் சுவையையும் இருக்கிறது ; சத்துக்களும் உள்ளன. ஆனால் தண்ணீரில் அப்படி என்னதான் விசேடம் உள்ளது?

    இவ்வாறுதான் மனோ லயங்களும் மனோ நாசமும் அமைந்துள்ளன. மனோ லயங்கள் அனைத்தும் வித விதமான பழச்சாறுகளைப் போன்றவையே.

    நாம் அனுபவிக்கும் அத்தனை இன்பங்களும் மனோ லயங்களே. அத்தனை துன்பங்களும் மனோ லயங்களே.

    நீங்கள் ஒரு வீட்டில் வசித்து வருகிறீர்கள். ஒரு வருடம் கழித்துப் பார்த்தாலும் அந்த வீடு அப்படியே தான் இருக்கும்.

    இயற்கையின் நியதிப்படி வீட்டுச் சுவர்களில் உள்ள ஒவ்வொரு அணுவும், கனந்தோறும் மாறிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அந்த மாற்றம் வெளிப்படையாகத் தெரியாது.

    இன்று நாம் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கிறோம். மீண்டும் நாம் இரண்டு நாட்கள் கழித்து ஒருவரை ஒருவர் சந்திக்கிறோம்.

    நாம் எவரும் அடுத்தவரிடத்தில் பெரிய மாற்றம் எதனையும் காணமுடியாது.

    ஆனாலும் நம் ஒவ்வொருவரின் உடலும் கணத்துக்கு கணம் மாற்றம் அடைந்து கொண்டே இருக்கிறது.

    வீட்டுச் சுவர்களை விட, உடலின் மாற்றத்தை சுலபமாக கண்டுபிடித்துவிட முடியும்.

    இது போல் நம்முடைய மன இயக்கமும் கணத்துக்கு கணம் மாற்றம் அடைந்து கொண்டே இருக்கிறது.

    நம்முடைய மனம் கனந்தோறும் மாறிக் கொண்டிருப்பதை நமக்கு நாமே கூட உணர்ந்து கொள்ள முடியும்.

    நம்முடைய மனதைப் பொறுத்த வரையில், ஒவ்வொரு விநாடியும் புதிய உணர்வுகளும், புதிய நினைவுகளுமே வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

    நமது மன இயக்கத்தின் வேகமானது மின்னல் வேகத்தில் உள்ளது.

    ஒளியின் வேகம் என்னவென்று நமக்குத் தெரியும். விநாடிக்கு சுமார் இரண்டு லட்சம் கிலோ மீட்டர்.

    அதனால் அது ஒவ்வொரு விநாடியும் புத்தம் புதியதாக இருந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. இப்படி நம்முடைய மனம் கணத்துக்கு கணம் புத்தம் புதியதாக இயங்கிக் கொண்டிருக்கும் நிலைக்குப் பெயர் தான் விடுதலை அல்லது முக்தி அல்லது மோட்சம் ஆகும்.

    இந்த விடுதலையை ஒருவர் அடைந்திட அவர் என்ன செய்ய வேண்டும்?

    எதுவுமே செய்யத் தேவையில்லை. மனதின் இயற்கையான நிலையே விடுதலைதான்.

    மனோ நாசம் என்பதும், விநாடிக்கு விநாடி புதிது புதிதாக இருக்கும் விடுதலை என்பதும் ஒன்றே.

    மனித வாழ்வின் - ஆன்மிக வாழ்வின் உன்னதமான உயர்நிலையே, இந்த விடுதலை தான். இந்த முக்தி தான்.

    ஆனால் அதுவோ மிகவும் சர்வசாதாரணமாக உள்ளது. - இயற்கையாகவே உள்ளது.

    இயற்கையாக இருக்கும் இந்த விடுதலையின் மகத்துவம் ஏன் நமக்குப் புரியவில்லை? அரிதினும் அரிதாக இருக்கும் இந்த முக்தி நிலை எப்படி நமக்கே தெரியாமல் நம்முடனேயே இருந்து வருகிறது?

    அதற்குக் காரணம் நம்முடைய மனோ லயங்கள் மட்டுமே.

    நம்முடைய மன அனுபவங்கள் அனைத்தும் மனோ லயங்களே.

    நம் அனைவருக்கும் மகிழ்ச்சியும், மன அமைதியும் மிகவும் பிடித்திருக்கிறது.

    அவை இரண்டுமே மனோ லயங்கள் தாம்.

    பயம், வருத்தம் போன்றவை நமக்குப் பிடிக்காது. அவை இரண்டுமே மனோ லயங்கள் தாம்.

    நமக்குப் பிடித்தமான அனுபவங்கள் ஏற்படும் போது அவற்றை தக்கவைத்துக் கொள்ளப் போராடுகிறோம்.

    அது போல் நமக்குப் பிடிக்காத அனுபவங்கள் ஏற்படும் போது அவற்றை அப்புறப்படுத்தப் போராடி விடுகிறோம்.

    இதனால் நம்முடைய மனது இரண்டு பகுதிகளாகி விடுகின்றது.

    மனதின் ஒரு பகுதி நம்முடைய அனுபவமாக இருக்கிறது. அதனை நெறிப் படுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்றிடும் அம்சம் நமது மனதின் இன்னொரு பகுதியாக உள்ளது.

    இப்படி நம் மனது இரண்டு பகுதிகளாக இருந்து செயல்படும் காரணத்தினால் மனோலயம் மட்டுமே முக்கியத்துவம் பெற்று விடுகிறது. இதனால் மனோ நாசம் புறக்கணிக்கப்பட்டு விடுகிறது. விடுதலை புறக்கணிக்கப்பட்டு விடுகிறது.

    மன அனுபவங்களைத் தேர்ந்தெடுப்பது தான் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம்.

    மன அனுபவங்களைத் தேர்ந்தெடுத்து நிர்வாகம் செய்யத் தேவையில்லை என்று கண்டுபிடிப்பது மட்டுமே ஞானம் ஆகும்.

    ஞானம் என்பது ஒரு நிலை அல்ல. அது ஒரு புரிதல் மட்டுமே.

    அனுபவங்களைக் கட்டுப்படுத்தாத நிலையில், மன அனுபவங்கள் யாவும் தடையற்ற ஆறாக ஓடுகின்றன.

    இதுதான் விடுதலை. இதுதான் முக்தி.

    தொடர்புக்கு: வாட்ஸப் - 8608680532

    • வாழை நடவு செய்து, அதை நல்ல முறையில் வளர்ப்பதற்குக்கூட எவ்வளவோ பக்குவம் தேவைப்படுகிறது.
    • அவள் முகத்தில் எப்போதும் விரக்தியின் நிழல் படர்ந்திருக்கும்.

    'சந்தோஷமான குடும்பங்கள் எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கின்றன. துக்ககரமான குடும்பங்களோ வெவ்வேறு மாதிரியாக இருக்கின்றன'.

    -டால்ஸ்டாய்

    இன்றைய சமூகம் எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. திசை தெரியாமல் தாறுமாறாய் ஓடுவதுபோல் இருக்கிறது. அன்றாடம் கேள்விப்படுகின்ற விஷயங்கள் நம்மைப் பெரிதும் கவலை கொள்ளச் செய்கின்றன.

    தொழில்நுட்ப வசதிகள் பெருகி இருக்கின்றன; கூடவே ஆபத்துகளும் பெருகி வருகின்றன. வசதிகளும் வாய்ப்புகளும் மானுடத்திற்கு எதிரானவையோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    வழிப்பறி, வன்புணர்வு, கொலை, கொள்ளை ஆகிய கொடூரச் செய்திகள் வராத நாளே இல்லை. இப்படியெல்லாம் நடப்பதற்கு என்ன காரணம்? வக்கிர எண்ணங்கள் தலைவிரித்து ஆடுகின்றன. மனிதாபிமானமற்ற செயல்கள் தாராளமாய் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

    பள்ளி, கல்லூரி, அலுவலகம், தொழில் நிறுவனங்கள் எனப் பல்வேறு இடங்களுக்குச் செல்கின்ற பிள்ளைகளும் பெரியவர்களும் பத்திரமாக வீடு திரும்புவதே பெரிய விஷயம்தான். இச்சூழ்நிலையில், பாதுகாப்பிற்கு என்ன வழி? குடும்பக் கட்டமைப்பைப் பலப்படுத்திக் கொள்வதுதான் ஒரே வழி. ஏனெனில், சீரான குடும்பக் கட்டமைப்புதான், ஒவ்வொருவருக்கும் நம்பகமான பாதுகாப்பு அரணாக இருக்க முடியும்.

    குறிப்பாக, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடத்தில் இணக்கமான நட்புறவை வளர்த்துக் கொள்வது மிக அவசியம். அப்படியானால்தான், பிள்ளைகள் ஒளிவு மறைவின்றி எல்லா விஷயங்களையும் பெற்றோர்களுடன் பகிர்ந்து கொள்ள முன்வருவார்கள். பிள்ளைகளின் தேவைகளைப் புரிந்து கொள்வதற்கும், பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்வதற்கும் இந்த இணக்கம் பெற்றோர்களுக்குப் பெரிதும் உதவும்.

    வாழை நடவு செய்து, அதை நல்ல முறையில் வளர்ப்பதற்குக்கூட எவ்வளவோ பக்குவம் தேவைப்படுகிறது.

    மழைக்காலங்களில் வெள்ளத்தில் வாழை மரங்கள் மூழ்கும் அபாயம் அதிகம். இரண்டு நாட்களுக்குமேல் முழுமையாக நீரில் மூழ்கியிருந்தால், மரங்கள் அழிந்துவிடும். எனவே, அத்தகைய பகுதிகளில் ஆழமான வேர்ப்பிடிப்புகளைக் கொண்டு உயரமாக வளரக்கூடிய செடிகளை நட வேண்டும் என்கிறார்கள்.

    வாழை மரங்கள் குறைந்தபட்சம் 50 சதவீதம் ஈரப்பதத்திலும், முடிந்தவரை நிலையான ஈரப்பதத்திலும் சிறப்பாக வளருமாம். நடவு செய்வதற்குமுன் களைகளை அகற்றிவிட வேண்டும்.

    நடவு செய்த உடனேயே கன்றுகளுக்குத் தண்ணீர் ஊற்றி ஈரப்பதமாக வைக்க வேண்டும். வாழை மரங்கள் வளர்ந்து செழித்து, நல்ல மகசூலைத் தருவதற்கு இத்தனை விஷயங்கள் மிக முக்கியம்.

    வாழை மரத்துக்கே அப்படியெனில், பிள்ளைகளின் நல்வாழ்விற்கு? பெற்றோரின் அரவணைப்பும் ஆலோசனைகளுமே பிள்ளைகளுக்குப் பலம். சில குடும்பங்களில் அந்தப் பிணைப்பு இல்லாததால், பிள்ளைகளின் வாழ்க்கை வழிதவறிப் போய்விடுகின்றது.

    சில வருடங்களுக்கு முன்பு, ஒரு விளம்பர நிறுவனத்தில் ஓர் இளம்பெண் 'இங்கிலீஷ் காப்பி ரைட்ட'ராகப் பணியில் சேர்ந்தாள். நான் கிரியேடிவ் கன்சல்டன்ட்டாக இருக்கும் நிறுவனங்களில் அதுவும் ஒன்று. எனவே, வாரத்திற்கு இரண்டு முறையாவது அங்கு சென்று வருவேன்.

    அவள் ஓர் அழகிய தமிழ்ப்பெண். ஆங்கிலத்திலும் நல்ல தேர்ச்சி. மென்மையாகப் பேசுவாள். விளம்பரக் கலையின் நுணுக்கங்கள் பற்றி மிகுந்த ஆர்வத்துடன் என்னிடம் கேட்பாள். மிக நாகரிகமாகப் பழகக்கூடியவள்.

    ஒருமுறை நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, தனது 'லெதர் பேக்'கில் இருந்து சிகரெட் பாக்கெட்டையும் லைட்டரையும் எடுத்தாள். எவ்வித சங்கோஜமுமின்றி, சிகரெட்டை பற்றவைத்து இழுத்தபடி, என்னிடம் சிகரெட் பாக்கெட்டை நீட்டினாள்.

    'வேண்டாம்' என்றேன்.

    'ஏன், பழக்கமில்லையா?' என்றாள்.

    'பழகிப் பார்த்து விட்டுட்டேன்' என்றேன்.

    முகத்தைப் பக்கவாட்டில் திருப்பி, புகையை ஸ்டைலாக ஊதியபடி தலையை அசைத்தாள்.

    'உனக்கு எதுக்கு இந்தப் பழக்கம்?' என்று நான் கேட்டதும், பட்டென்று என்னைப் பார்த்து, 'இது என்னோட விருப்பம். நான் யாரையும் கெடுக்கலையே' என்றாள். நானும் விடவில்லை.

    'இது உன்னோட உடம்புக்குக் கேடுதானே'.

    'அதைப்பற்றி நான் கவலைப்படல'.

    'பேரன்ட்சுக்கு தெரியுமா?'

    'தெரியிறதுக்கு வாய்ப்பில்ல... தெரிஞ்சாலும் அவங்க கவலைப்படப் போறதில்ல'.

    'ஏன்...?'

    'அவங்க பிரிஞ்சிட்டாங்க'.

    'வெரி சாரி'.

    'எதுக்கு சாரி. ரெண்டு பேருக்கும் ஒத்துப்போகல. எப்பவும் சண்டைதான். நான் ஒரே பொண்ணு. வீட்ல நிம்மதியே இருக்காது'.

    'கேட்கிறதுக்கே கஷ்டமா இருக்கு'.

    'பேரன்ட்ஸ் லவ் எனக்கு கிடைச்சதே இல்ல. நான் ரொம்பவே அழுது முடிச்சிட்டேன். இப்ப என் மனசு கல்லாயிடுச்சி. கல்யாணம் பண்ணிக்கிற ஆசையும் இல்ல. எனக்குன்னு ஒரு தனி உலகம். லோன்லி லைப்' என்று அவள் சொன்னபோது அவளின் கண்கள் பனித்திருந்தன.

    என் மனதிற்குள் மிகப்பெரிய பாரத்தையே இறக்கி வைத்ததுபோல் இருந்தது. அதன்பிறகு, அங்கு நான் செல்லும்போதெல்லாம் அவளை ஊக்கப்படுத்துவதற்கும், வாழ்வின் உன்னதங்களை அவள் விளங்கிக் கொள்வதற்கும் அவளுடன் நிறைய பேசுவேன். அமைதியாகக் கேட்பாள். ஆனால், அவற்றைச் சிந்தித்துச் செயல்படுத்துவதற்கான மனநிலையில் அவள் இருந்ததில்லை என்பதை நான் அறிவேன்.

    எல்லோரிடமும் மரியாதையுடன் பழகுவாள். ஆனால், அவள் முகத்தில் எப்போதும் விரக்தியின் நிழல் படர்ந்திருக்கும்.

    சில மாதங்களுக்குப்பின், கூடுதல் சம்பளத்தில் வேறொரு நிறுவனத்தில் வேலை கிடைத்திருப்பதாகச் சொன்னாள். நல்ல வாய்ப்பு வரும்போது, அதைப் பற்றிக் கொள்வதுதான் வாழ்வை அடுத்த நிலைக்கு நகர்த்திச் செல்லும் என்றேன். விடைபெற்றுச் சென்றாள்.

    அன்றாடப் பணிகள், பரபரப்பான வாழ்க்கை ஓட்டம் ஆகியவற்றில், அவளைப் பற்றிய நினைவு எனக்கு இல்லாமற் போய்விட்டது. ஒவ்வொரு நாளின் செய்திகளும், சந்திப்புகளும் நம் மனதை நிரப்பிவிடுகின்றன. புதிய புதிய விஷயங்கள் பழைய விஷயங்களை மனதின் அடிவாரத்திற்கு ஆழ்த்திவிடுகின்றன.

    சில வருடங்கள் ஓடி மறைந்தன.

    ஒருநாள் காலையில் வழக்கம்போல் செய்தித்தாளை படித்துக் கொண்டிருந்தபோது, ஒரு செய்தி என் உச்சந்தலையை இரண்டாக வெட்டிப் பிளந்தது.

    ஒரு அபார்ட்மென்டின் இருபத்து நான்காவது மாடியில் இருந்து, ஓர் இளம்பெண் குதித்துத் தற்கொலை செய்து கொண்ட செய்தியில், அவளின் படம் இணைத்து வெளியிடப்பட்டிருந்தது. பூமி அதிர்வதுபோல் என் உள்ளம் அதிர்ந்தது. பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்காத தனிமையின் விரக்தியில், அவள் தற்கொலை செய்து கொண்டதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவளின் பரிதாப முடிவு, ஒரு பயங்கரமான கனவுபோல் எனக்குத் தோன்றியது. பாசப் பிணைப்பற்றக் குடும்பங்களுக்கு இது ஒரு பாடம்.

    பெற்றோரின் அன்புதான் பிள்ளைகளின் மனதை பலப்படுத்தும். அவர்களின் அரவணைப்புதான் மிகச்சிறந்த பாதுகாப்பின் உணர்வை அவர்களுக்குள் ஏற்படுத்தும். தாயின் மடியில் விளையாடும் குழந்தை, அதைவிடப் பேரின்பமாக வேறெதையும் எண்ணுவதில்லை. தந்தையின் தோளில் சாய்ந்து கொள்ளும்போது, அதைவிட நம்பகமான புகலிடமாக வேறெதையும் பிள்ளை கருதுவதில்லை.

    குடும்பம் என்ற அமைப்பே, அன்பின் வழியில் ஆரோக்கியமான உறவைக் கட்டி எழுப்புவதற்காகத்தான். அதன்மூலம்தான் குடும்பத்தின் மேன்மையை நிலைநாட்ட முடியும். பிள்ளைகளின் இனிய நண்பர்களாகப் பெற்றோர் விளங்குவதும், உயர்ந்த பண்புகளில் பிள்ளைகள் சிறந்தோங்குவதும் எத்தனை பெரிய பாக்கியம்!

    சில குடும்பங்களில் பெற்றோர் அதை உணர்வதில்லை. அவர்கள் போடும் சண்டை களில், பிள்ளைகளின் நிம்மதி பறிபோவதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதுமில்லை. அதனால் ஏற்படுகின்ற விளைவுகள் அபாயகரமானவை.

    சிறுவயதில் என்னுடன் படித்த நண்பன் ஒருவனை, பல வருடம் கழித்துத் தற்செயலாக நான் காண நேர்ந்தது.

    சட்டை அணியாமல் முழங்கால் அளவு கால்சட்டை அணிந்திருந்தான். மெலிந்த தேகம். தன் இரண்டு தோள்கள் மீதும் இரண்டு பிளாஸ்டிக் குடங்கள் நிறைய தண்ணீரைச் சுமந்து சென்று, ஒரு மிகச்சிறிய ஹோட்டலின் முகப்பில் இருந்த தொட்டியில் ஊற்றிவிட்டுத் திரும்பியபோது என்னைப் பார்த்தான்.

    மிகுந்த வருத்தத்துடன் விசாரித்தேன். தாயார் இறந்து போனார். தந்தையார் இன்னொரு திருமணம் செய்து கொண்டார். சித்தியின் கொடுமையைத் தாங்க முடியவில்லை. அவளின் பேச்சைக் கேட்டு, தந்தையும் இவனை அடித்துத் துரத்த, வீட்டை விட்டு ஓடி வந்தவன். ஆதரவின்றிக் கூலி வேலை செய்து கொண்டிருந்தான். படிப்பும் பாழாய்ப் போனது. வாழ்க்கையோ நடுத்தெருவில் நின்றது.

     

    கவிஞர் தியாரூ, 9940056332

    சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் கனிவாகப் பேசுவதே இல்லை. எப்போதும் சலிப்பையும் எரிச்சலையும் வெளிப்படுத்திக் கொண்டிருப்பார்கள். ரம்மியமான சூழல் இல்லாத குடும்பங்களில் மகிழ்ச்சி இருக்காது. மகிழ்ச்சி இல்லாத குடும்பங்களில் ஆரோக்கியம் இருக்காது. எனவே, குடும்ப நல்லிணக்கம் மிக மிக அவசியம்.

    நல்லிணக்கம் என்பது, எந்தவித வாதங்களும் இல்லாத நிலை என்று அர்த்தமல்ல; கருத்து வேறுபாடுகளை ஆக்கப்பூர்வமான முறையில் அணுகுவது. தவறு செய்கின்ற போதும், அன்பின் அரவணைப்பில் திருத்துவது. ஒருவருக்கொருவர் உறுதுணை என்னும் நம்பிக்கையை ஏற்படுத்துவது. ஒற்றுமையையும் நேசத்தையும் வளர்ப்பது!

    இன்றைய நவீன உலகில் பல்வேறு சவால்கள். கல்விச்சாலை தொடங்கி பணித்தளங்கள் வரையில் பல பிரச்சினைகள்; ஒவ்வொருவருக்கும் மன அழுத்தங்கள். இவற்றை எல்லாம் சரிசெய்து, மன அழுத்தங்களை நீக்கி மகிழ்ச்சியை மலரச் செய்வதற்கு குடும்ப அமைப்பினால் மட்டுமே முடியும்.

     

    குடும்பம் என்றால் ஏதோ பெயரளவிலான ஒரு கட்டமைப்பு அல்ல. அது உறவுகளின் கூட்டாட்சி. அன்பு, ஆசை, கருணை, மகிழ்ச்சி என எல்லா இன்பங்களும் உலவுகின்ற மன்றம். தியாகம், தவம், வரம் - எல்லாமே குடும்பம்தான்.

    போதைப் பொருட்களும், தீய தொடர்புகளுக்கான வாய்ப்புகளும் பெருகிக் கொண்டிருக்கின்றன. இந்தக் காலகட்டத்தில், குடும்ப ஐக்கியத்தை வலுப்படுத்திக் கொள்வதன் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    சம்பாத்தியத்தில் மட்டுமே கவனம் செலுத்துபவர்கள், வாழ்வின் சந்தோஷத்தை இழந்துவிடுகிறார்கள். சந்தோஷத்தையே சம்பத்தாகக் கருதுபவர்கள், குடும்பத்தை அன்பின் ஆலயமாகப் பார்க்கிறார்கள். குடும்பம் என்பது எந்திரங்களால் ஆனதல்ல; உள்ளங்களால் ஆனது. இல்லம் என்பது கட்டிடம் அல்ல; இன்பத்தின் ஊற்று.

    பெற்றோர் ஒருமித்த கருத்துடன் இயங்கும் குடும்பங்களில், பிள்ளைகள் மகிழ்ந்திருப்பார்கள்; ஒளிமயமான எதிர்காலத்தைப் பெறுவார்கள். நல்ல சமுதாயம் தழைத்தோங்கும்.

    • டேவிட் குழப்பமாய் அவனை பார்த்தான்.
    • நண்பர்கள் தியாகு, நெல்சன், செந்திலிடம் மெசேஜை காட்டியபின் டேவிட் கேட்டான்.

    போலீஸ் ஸ்டேஷன் போன் அடிக்க, ஏதோ பைலை பார்த்துக்கொண்டு இருந்த ஏட்டையா எடுத்து பேசினார்.

    காத்திருந்த டேவிட், பெருமாள் உள்பட அனைவரும் பதட்டமாய் அவரையே பார்த்தனர்.

    "ஓ.கே. ஐயா... சரிங்க ஐயா... அப்படியே செய்யுறன் ஐயா..." எனக்கூறி ரிசிவரை வைத்தார். பின் இவர்களை பார்த்தார்.

    "கல்லல் கிராம பார்டர்லதான் இன்ஸ்பெக்டர் ஐயா நிக்குராராம். விசாரணை போய்கிட்டு இருக்குதாம். ஏதாவது முக்கிய தகவல் கிடைச்சா சொல்றன்னு, சொல்லச் சொன்னாரு... சொல்லிவிட்டு திடும்பவும் பைல்களுக்குள் முகத்தை நுழைத்தார் அவர்.

    "டேவிட் ஒரு நிமிஷம்!"

    டேவிட்டை தனியே அழைத்து சென்ற பெருமாள். எதோ கூறிவிட்டு தன் காரை எடுத்துக் கொண்டு ஸ்டேஷனில் இருந்து கிளம்பி சென்றான். அவன் போவதையே பார்த்தபடி டேவிட் நிற்க. அவனருகில் வந்த நண்பன் தியாகு கேட்டான்..

    "இவன் எங்கடா போறான்...?"

    "இனிமே பொறுக்க முடியாது... நான் போயி கட்சிக்காரங்களை கூட்டிட்டு கல்லல் பார்டருக்கு போறன்னு சொல்லிட்டு போறான்."

    "இந்த ஊர்ல போயி, எந்த கட்சிக்காரனை கூப்பிட போறானாம் இவன்?" - செந்தில் நக்கலாய் கேட்டான்.

    "ஏம்பா... அவன் கட்சிக்காரங்களுக்கு போன் பண்ணா அவங்கல்ல முக்கியமானவங்க வரப் போறாங்க... தவிர லோக்கல்ல உள்ள கட்சிக்காரங்களுக்கும் தகவல் சொல்லவாங்க. இப்படி எல்லாம் 'பிரஷர்' போட்டாத்தான் திவ்யாவ கண்டுபிடிக்க போலீஸ், கொஞ்சம் வேகம் காட்டுவாங்க..." - ரங்கராஜன், தன் மகன் பெருமாள் செய்வது சரி என்ற தோரணையில் பேசினார்.

    "எல்லோரும் பெருமாளை நம்புறாங்க... எனக்கு என்னவோ இந்த 'திவ்யா கடத்தல்'ல அவன் கள்ள ஆட்டம் ஆடுறானோன்னு தோணுது..." - நெல்சன் கிசுகிசுப்பாய் டேவிட்டிடம் சொல்ல, டேவிட் குழப்பமாய் அவனை பார்த்தான்.

    "இப்போ... நாம் என்னப்பா பண்ணப் போறாம்...?" டேவிட்டின் அம்மா லிசா கேட்டாள்.

    "நாமளும் கிளம்பி அந்த இடத்திற்கு போவோமா...?" என திவ்யா அம்மா ராஜேஸ்வரி ஈனஸ்வரமாய் கேட்டாள். ராஜேஸ்வரி இப்படி கேட்டதும், ஸ்டேஷனில் பைல் பார்த்துக் கொண்டிருந்த, ஏட்டு சடாரென்று நிமிர்ந்தார்.

    "யம்மா... நான் தான் சொன்னேன்ல... இன்ஸ்பெக்டர் ஐயா கிட்ட இருந்து, அடுத்த போன் வர்ர வரைக்கும் கொஞ்சம் அமைதியா இருங்க... பெண்ணை பெத்த உங்க வலி எங்களுக்கும் புரியுது. கொஞ்சம் போலீஸ் கூட ஒத்துழைங்க..."

    அவரது குரலில் இருந்த கனிவான உத்தரவில் அனைவரும் காத்து இருப்பதை தவிர, வேறு வழி இல்லை என முடிவு செய்த சமயம்...

    திவ்யா இருந்த அறையின் விளக்குகள் எரிந்தன. திடீர் வெளிச்சத்தில், திவ்யா எதிரில், நின்ற அவனையும், கூட நின்ற மற்ற நால்வரையும் கண்கள் கூச பார்த்தாள்.

    இயக்குநர் A. ெவங்கடேஷ்

    மாஸ்க் அணிந்த அவனை தவிர இரு ஆண்கள். மற்ற இருவரும் பெண்கள். அவன் கண்களை இதற்கு முன்பு பார்த்ததாய் திவ்யாவுக்கு தோன்றியது. அவனைத் தவிர மற்றவர்கள் இருவரும் மத்திய வயது தோற்றம். பெண்களில் ஒருத்திக்கு ஒரு 27 வயதும், இன்னொருத்திக்கு 40 வயதும் இருக்கும்!

    "என்னை கடத்தியது இவர்களா? என்னை கடத்தியதில் பெண்களுக்கு என்ன பங்கு" திவ்யா யோசிக்கும்போது, நடு நாயகமாய் நின்று இருந்த அந்த மாஸ்க் முகமூடி அணிந்து இருந்தவன் கையில் ஒரு கட்டிங் பிளேடை எடுத்தபடி, திரும்பி சிரித்தபடி மற்றவர்களிடம் கேட்டான் - கரகரப்பு குரலில்.

    "கட் பண்ணிடலாமா?" - பயத்தில் திவ்யா கட்டிப்போட்டு இருந்த தன் கை விரல்களை மடக்கினாள்.

    அந்த ரோடு வலது, இடதாய் ரெண்டாக பிரிந்தது. ஜீப்பில் இருந்த அழகர் கேட்டார். "சிம் கார்டை கட் பண்ணி வீசிவிட்டு, அந்தப் பொண்ணோட கல்லல் பார்டர் ரோட்ல இருந்து இந்தப் பக்கம்தான் வந்து இருக்கணும். அவனுங்க திவ்யாவோட வந்த கார், ஒன்னு இடதுபுறம் 'முருகநத்தம்' ரோட்ல போயிருக்க ணும்... இல்ல... வலது பக்கம் 'பண்ணையார்' பட்டி ரோட்ல போயிருக்கணும்... ம்...!"

    அவர் யோசிக்க... "சார்... முருகநத்தம் போய் பார்க்கலாம் சார்... அங்க வெறும் காடு தான். ஒரு பழைய முருகன் கோவிலும், வேட்டைக்காரன் பங்களான்னு ஒரு பழைய இடிஞ்ச வீட்டைத் தவிர, ஆட்கள் யாரும் கிடையாது. முருகன் கோவிலுக்கு கிருத்திகை, சஷ்டின்னு எப்பவாவதுதான் ஜனங்க போவாங்க..." கான்ஸ்டபிள் மணி தைரியமாக சொன்னார்.

    "அதனால... இப்படித்தான் திவ்யாவ கடத்தனவன் கார் போயிருக்கும்கிறியா?"

    "ஆமா சார்... ஆள் நடமாட்டம் இல்லாத இடமா போகத்தானே பார்ப்பாங்க..."

    "தப்பு... ஜனங்க நடமாடுற இடத்துல போனாதான் போய்... வர்ர காருங்கள்ல, நம்ம கார் தனியா தெரியாதுன்னு, கடத்துனவன் கணக்கு போடுவான் இல்லியா..." கான்ஸ்டபிள் பதில் பேசவில்லை.

    "யோவ் டிரைவர்... வண்டிய வலதுபக்கம் விடு... அங்க போயி விசாரிச்சிட்டு... அப்புறம் முருகநத்தம் பாக்கலாம்..." அழகரின் சொல்லுக்கு, டிரைவர் வண்டியை வலதுபுறம் திருப்ப, தொங்கிய முகத்துடன் கான்ஸ்டபிள் தன் பாக்கெட்டில் இருந்து செல்போனை எடுத்தார். அழகர் பார்க்காதவாறு, தன் அருகில் அமர்ந்திருக்கும், மற்ற கான்ஸ்டபிள்ஸ்க்கும் தெரியாதவாறு, யாருக்கோ மெசேஜ் டைப் செய்தார்.

    "என்ன இது... காதுல ஒத்த ஜிமிக்கி மட்டும் தொங்குது...?" அந்த மாஸ்க் அணிந்தவன், கட்டிப் போட்டிருந்த தன் சேர் அருகில் வந்து, பேசும்போது, மீண்டும் அந்த கண்களை கூர்ந்து கவனித்தாள், திவ்யா.

    "இந்த கண்களை இதுக்கு முன்பு, எங்கேயோ பார்த்து இருக்கேனே...!" யோசிக்க, யோசிக்க எங்கே? என நினைவு வரவில்லை.

    "ஏய் மீனா... அந்த ஒத்த ஜிமிக்கிய கழட்டிடு..." அவன் கூட வந்த இரு பெண்களில் ஒருத்தி, அவள் வலது காதில் கிடந்த ஒத்த ஜிமிக்கியை கழட்டி அவனிடம் கொடுத்தாள்.

    அதை கையில் வாங்கி, கனத்தை சின்னதாய் தூக்கி போட்டு பார்த்து "1 1/2 பவுன் இருக்கும் போலியே... இன்னொரு 1 1/2 பவுன் ஜிமிக்கி, "பசங்க வண்டி மாத்தி வண்டி ஷிப்ட் பண்ணி கொண்டு வரும்போது தவறிபோயிருக்கும்..."

    "திவ்யா ஏதோ சொல்ல முயல, ஆனால் வாயில் பிளாஸ்திரி ஒட்டப்பட்டு இருந்ததால் ம்.... ம்...க்கம் என சத்தம் மட்டுமே அவளிடம் இருந்து வெளிப்பட்டது. "

    "ஓ... யாருடா நீன்னு கேட்குறியா? அதான் என் பேரு நல்லவன்... உன்னை கடத்தி இருக்கிற ஒரு கெட்டவன்..." திவ்யா கண்கள் விரித்து பார்த்தாள்.

    "எதுக்காகடா கடத்தி இருக்கிறன்னு உன் கண்ணால கேட்குற... சரியா? திவ்யா ஆமா என்பதுபோல் தலையாட்டினாள்.

    எல்லாத்தையும் உடனே சொல்லிட்டா, சப்புனு இருக்கும். முதல்ல கட் பண்ணிடுறேன். அதை பார்சல்ல அனுப்பிட்டு கட் பண்ண வலி போற வரைக்கும் டீட்டையிலா சொல்றன்..." கட்டிங் பிளேடுடன் அவளை நோக்கி செல்ல, அந்த பெண்கள் இருவரும், கூடவே வந்த மற்ற இரு ஆண்களும் குரூரமாக சிரித்தார்கள்,

    போலீஸ் ஸ்டேஷன்..

    தனது செல்போனுக்கு வந்த மெசேஜை பார்த்தான் டேவிட்.

    'சார்... இன்ஸ்பெக்டர் பண்ணையார்பட்டிக்கு போறாரு... எனக்கென்னவோ... முருகநத்தம் போய் தேடணும்னு தோணுது. உடனே போங்க! லொக்கேஷன் ஷேர் பண்றேன். நான் அனுப்பின லொக்கேஷன்ல இருந்து இடதுபுறம், 30-வது கிலோ மீட்டர் முருகநத்தம். கான்ஸ்டபிள் முருகன்போலீஸ் ஸ்டேஷன் வந்ததில் இருந்து, அவர்கள் மீது கருணையும், அக்கறையும் கொண்டு அவ்வப்போது தண்ணீர், காபி தந்ததோடு, ஆறுதல் வார்த்தைகளையும்தான் தந்தவர் இந்த கான்ஸ்டபிள் முருகன். இன்ஸ்பெக்டரோடு போனவர்தான் அந்த மெசேஜை அனுப்பி இருக்கிறார். தன் நண்பர்கள் தியாகு, நெல்சன், செந்திலிடம் மெசேஜை காட்டியபின் டேவிட் கேட்டான்..

    "இப்ப என்னடா பண்ணலாம்...?"

    "மாப்ள... நாம நாலு பேரு மட்டும் கிளம்புவோம்... உன் அம்மா, அப்பா திவ்யாவோட அம்மா, அப்பா மேரியோட இங்க ஸ்டேஷன்ல இருக்கட்டும்..." நெல்சன் சொன்னான்.

    "நோ... செந்தில்..." மேரி குறுக்கிட்டாள்.

    "திவ்யாவ நானும் பாக்கணும்... அவ கிடைச்சவுடனே ஆறுதல் சொல்ல ஒரு பொண்ணா நான் இருந்தா அவளுக்கு ஒரு ரிலீப் இருக்கும்!"

    "அதுக்கு அவ நமக்கு கிடைக்கணுமே..." ஆதங்கமாய் கூறினான் செந்தில்.

    "ஏய்... யப்பா... டிஸ்கஸ் பண்ண நேரமில்லை! வயசானவங்க நாலு பேரு ஸ்டேஷன்ல இருக்கட்டும்... நாம கிளம்பலாம்... வாங்க..." தியாகு துரிதப்படுத்தினான்.

    தன் அப்பாவிடம் வந்த டேவிட், "அப்பா... அம்மா, மாமா, அத்தையோட அங்க இருங்க... அப்பப்போ போன்ல தகவல் சொல்றேன்... இங்க ஸ்டேஷன்ல ஏதாவது திவ்யாவ பத்தி அப்டேட் கிடைச்சாலும் எனக்கு சொல்லுங்க... நாங்க முருகநத்தம்-ங்கிற ஊருக்கு போறோம்... கவலைப்படாதீங்க... திவ்யாவோடதான் வருவோம்..." ஆறுதல் படுத்திவிட்டு, டேவிட் கிளம்ப அவர்கள் நால்வரும் கவலை தோய்ந்த முகத்துடன் தலையாட்டினார்கள்.

    எஸ்.பி ஆபீஸ், மதுரை.

    கட்சிக்காரர்கள் பத்து பேருடன் பெருமாள் காத்து கொண்டு இருந்தான். தன் தங்கை திவ்யாவை தேடித்தருவதில் போலீஸ் தாமதமும், மெத்தனப்போக்கும் காட்டுவதாய் புகார் மனு எழுதி, கட்சிக்காரர்களையும் அழைத்து வந்து தன் பவரை காட்ட காத்திருந்தான்.

    "பெருமாள்..." அழைக்கப்பட, மொத்த பேருமாய் உள்ளே நுழைந்தனர்.

    "வணக்கம் சார்..." கம்பீர மீசையுடன் ஐந்து, ஆறு ஆபிசர்களுடன் புடைசூழ அமர்ந்திருந்த எஸ்.பி பார்த்ததும், தானாக மரியாதை வெளிப்பட்டது.

    "ஆங்..." தலையாட்டிய எஸ்.பி. மொத்த பேரையும் பார்த்து, "இவ்வளவு பேரா...? பாதி பேரு வெளியே இருக்கலாமே... பிளீஸ்..." அவரது கோரிக்கையின் கண்டிப்பை உணர்ந்து கட்டுப்பட்டனர். மெருமாள் தந்த புகார் மனுவை வாங்கி உன்னிப்பாக படித்து பார்த்தார். "அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பேரு அழகர். அவரு எப்படி?" என தன் அருகில் நின்ற ஒரு போலீஸ் அதிகாரியிடம் கேட்டார். அவர் குனிந்து அவர் காதில் கிசுகிசுத்தார். "ஓ... சரி... அவரை போன்ல கூப்பிடுங்க..." கிசுகிசுத்த ஆபிசரிடம் உத்தரவு போட்டு,

    பெருமாளை பார்த்த எஸ்.பி.

    "அந்த அழகர் மேல் நல்ல அபிப்பிராயம் டிபார்ட்மெண்டல இல்ல. ரெண்டு மெமோ ஏற்கெனவே வாங்கி இருக்காரு... விசாரிச்சுடலாம்... டோண்ட் ஒர்ரி..."

    சொல்லிக் கொண்டு இருக்கும்போதே "ஐயா... இன்ஸ்பெக்டர் அழகர் லைன்ல இருக்காரு..."

    அந்த ஆபிசர் கொடுத்த போனை வாங்கி, காதுக்கு கொடுத்தார் எஸ்.பி.

    (தொடரும்)

    E-Mail: director.a.venkatesh@gmail.com / வாட்ஸப்: 7299535353

    • நன்கு தீட்டப்பட்ட அரிசியில் தையமின் அளவு குறைவாக இருப்பதால், அரிசி உணவு அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு "பி1" குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
    • வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் "சி" மிக  அதிகமாக உள்ளது. 

    வைட்டமின்கள் நம் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு, வளர்சிதை மாற்றங்களுக்கு மிகவும் வேண்டிய ஒன்றுதான். ஆனால் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது உடலுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. வைட்டமின்களின் தேவை என்ன என்பது பற்றியும், பலர் சத்து மாத்திரைகளை வருடக்கணக்கில் சாப்பிடுகிறார்கள், இது சரிதானா? என்பது பற்றியும் பார்ப்போம்.

    உடலுக்குத் தேவையான வைட்டமின்கள்:

    இதை இரு பிரிவுகளாகக் வகைப்படுத்தலாம்.

    1. நீரில் கரைவன - பி1, பி6, பி7, பி12 பிரிவுகள் மற்றும் வைட்டமின் சி

    2. கொழுப்பில் கரைவன- ஏ, டி, ஈ, கே

    வைட்டமின்களின் பயன்களும், குறைபாட்டினால் ஏற்படும் சிக்கல்களும்: வைட்டமின் "ஏ" -

    இது அதிக அளவில் கேரட், பால், கடல் உணவுகள், கீரை வகைகள், முட்டை ஆகியவற்றில் அதிகம் உள்ளது. இதன் குறைபாட்டால் மாலைக் கண்நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

    அதிகமுள்ள உணவுப் பொருட்கள்: கேரட், சர்க்கரை வள்ளி கிழங்கு, கடல் உணவுகள், கீரை மற்றும் பட்டாணி.

    வைட்டமின் "இ" - இதன் குறைபாட்டால் மூளை, நரம்பு, சருமம், தசைகள் வலுவிழப்பது, குழந்தைப் பேற்றில் சிக்கல்கள், நோயெதிர்ப்புச் சக்தி குறைவது, செரிமானம் மற்றும் பார்வைக் கோளாறுகள் ஏற்படுகின்றன. அதிகமுள்ள உணவுப் பொருட்கள் – தாவர எண்ணெய் வகைகளில் சூரியகாந்தி, பருத்திவிதை, ஆலிவ் மற்றும் தேங்காய் எண்ணெய்கள் அடங்கும். பாதாம், சிவப்புக் குடைமிளகாய், கிவி பழம், பப்பாளி, புரக்கோலி, அடங்கும் ஆகியவை ஆகும்.

    வைட்டமின் "கே" - ரத்தம் உறைதலில் ஏற்படும் குறைபாடு சிறுநீரில் ரத்தம் கலந்து வருவது, எலும்பு வலுவிழந்து இருப்பது, தோலில் சருமத்தில் தடிப்புகள், விரைவான இதயத்துடிப்பு இவையாவும் வைட்டமின் "கே" குறைபாட்டின் அறிகுறிகள். ஊட்டச்சத்துக் குறைபாடு, கல்லீரல் நோய், போதுமான அளவு உணவு உட்கொள்ளாதது, நோய்த் தொற்று, ரத்த உறைவுத் தடுப்புக்குக் கொடுக்கும் மருந்துகள் போன்றவை வைட்டமின் "கே" குறைபாட்டை உண்டாகக் காரணமாகின்றன. நாளும் தேவையான அளவில் ஆண்களுக்கு 120 மைக்ரோ கிராமும், பெண்களுக்கு 90 மைக்ரோ கிராமும் தேவை.

    அதிகமுள்ள உணவுப் பொருட்கள்:- கீரை, புரக்கோலி உள்ளிட்ட பச்சை இலைக் காய்கறிகள், தாவர எண்ணெய்கள், அவுரி நெல்லி மற்றும் அத்திப்பழங்கள், சுண்டல், சோயாபீன்ஸ், பச்சைத் தேயிலை தேநீர் (கிரீன் டீ).

     

    மரு.அ.வேணி MD., DM(Neuro), 75980-01010, 80564-01010.

    வைட்டமின் "பி1" - (தையமின்)

    நன்கு தீட்டப்பட்ட அரிசியில் தையமின் அளவு குறைவாக இருப்பதால், அரிசி உணவு அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு "பி1" குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால் பசியின்மை, எடைக்குறைவு, மனக்குழப்பம், நினைவுமறதி போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக மதுப்பழக்கம் உள்ளவர்களுக்குத் தசைகளில் பலவீனம், கண் தொடர்புள்ள நோய்கள் மற்றும் நரம்பு மண்டலத்தில் இடர்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    அதிகமுள்ள உணவுப் பொருட்கள் - தானியங்கள், அசைவ உணவுகள், பீன்ஸ், உலர்ந்த கொட்டைகள்.

    வைட்டமின் "பி2" - (ரைபோபிளேவின்)

    நமக்கு நாளும் தேவைப்படும் வைட்டமின்களில் முதன்மையானது. இதை உடல் சேமித்து வைத்து கொள்ளமுடியாது. நாளும் உணவில் இதை எடுத்து கொள்ளத்தான் வேண்டும். இவை தாம் ஆற்றல் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கின்றன. அதனால் மிகவேண்டிய ஊட்டச்சத்தில் இதன் பங்கு இன்றியமையாதது. உடலில் கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்களின் வளர்சிதை மாற்றத்துக்கு உதவுவதில் ரைபோபிளேவின் சிறந்த பங்கு வகிக்கிறது. உடலில் புரதங்கள் உருவாக்குவதோடு தொடர்பு கொண்டவை என்பதால் உடலின் இயல்பான வளர்ச்சிக்கு உதவுகிறது. இது தைராய்டு செயல்பாட்டையும் சீர்செய்கிறது. இனப்பெருக்க உறுப்புகளின் சரியான வளர்ச்சியை உறுதிசெய்வதற்கு இது உதவுகிறது. உடலில்தோல், திசு, கண்கள், சவ்வு, நரம்பு மண்டலம் மற்றும் நோய் எதிர்ப்புமண்டலம் போன்றவற்றின் திசு வளர்ச்சியை உறுதி செய்ய உதவுகிறது. நலமான சருமத்துக்கும், நகங்களின் வலுவுக்கும், வலுவான கூந்தலுக்கும் கூட உதவுகிறது. காயங்களை மீட்டுத் தோலைப் பாதுகாப்பதிலும் சிறந்த பங்கு வகிக்கிறது. கண்புரை வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

    அதிகமுள்ள உணவுப் பொருட்கள் - பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், முட்டை, மீன், காளான்

    வைட்டமின் "பி3" - (நியாசின்)

    தோல் பாதிப்புகளில் இருந்தும், செரிமான கோளாறுகளிலிருந்தும் காக்கிறது. நாளும் நமக்கு 14-17 மிகி போதுமானது. அளவிற்கு அதிகமாக எடுக்கும்போது கல்லீரலில் இடர் ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் குறைபாட்டால் பெல்லங்ரா (Pellegra) - வயிற்றுப் போக்கு, நினைவுமறதி, தோல் ஒவ்வாமை போன்றவை ஏற்படுகின்றன. அதிகமுள்ள உணவுப் பொருட்கள் - அசைவ உணவுகள், மீன், முட்டை மற்றும் காய்கறிகள்.

     

    வைட்டமின் "பி6" - (பைரிடாக்சமைட்)

    இது இதயம், தோல் மற்றும்  நரம்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஹார்மோன்கள் சீராக செயல்பட வைக்கிறது. மற்றும் அறிவாற்றலை அதிகரிக்கிறது. இதன் குறைபாடு இருக்கும் போது உடல் சோர்வு, பசியின்மை, வறண்ட சருமத்தின் தோற்றம், முடிஉதிர்தல், உதடுகளைச் சுற்றி விரிசல், தூக்கமின்மை, வாய் மற்றும் நாக்குப் பகுதியில் வீக்கம் உண்டாகலாம். அதிகமுள்ள உணவுப் பொருட்கள் – முழு தானியங்கள், பருப்புவகை, முட்டை, மீன், இறைச்சி, வாழைப்பழங்கள், காலிபிளவர், முட்டைகோஸ், சோயாபீன்ஸ், கேரட் மற்றும் கீரைகள்.

    வைட்டமின் "பி12" - (சயனோகோபாலமைன்)

    குழந்தைகளின் மூளை வளர்ச்சியைத் தூண்டுவதற்கும், மூளை மற்றும் நரம்புகளைச் சுற்றி உள்ள மைலின் உருவாவதற்கும், செயல்படுவதற்கும் மற்றும் செயல்பாட்டிற்கும், மூளையில் உள்ள வேதியியல் பொருட்களின் தயாரிப்பிற்கும் தயாரிப்பதற்கும், ரத்தச் சிவப்பணுக்களின் உருவாக்கத்திற்கும், நம் அணுக்களில் உள்ள டிஎன்ஏ-வின் உருவாக்கத்திற்கும், ஞாபக மறதி நோய் வராமல் தடுப்பதற்கும், ரத்தக் குழாய்களின் ஆரோக்கியத்திற்கும், மனநோய்களான மனஅழுத்தம், படபடப்பு, மனப்பதற்றம் போன்றவை வராமல் தடுப்பதற்கும், பிறவியில் ஏற்படும் குறைபாடுகளைத் தடுக்கவும், எலும்புகளின் வளர்ச்சிக்கும், வயது மூத்தோருக்கு வரும் கண் குறைபாடுகளைத் தடுக்கவும், இதய நலனுக்கும், நகம், தோல், கண்களின் நலனிற்கும், எதிர்ப்புசக்தியை அதிகரிக்கவும், மூட்டுகளைச் சுற்றியுள்ள சவ்வுகளின் ஆரோக்கியத்திற்கும், இவை யாவற்றிற்கும்அனைத்திற்கும் வைட்டமின் பி12 தேவைப்படுகிறது. இவ்வளவு நன்மைகளைத் தரும் வைட்டமின் "பி12"-ஐப் போதுமான அளவு எடுத்துக் கொள்வது அவசியம். அப்போதுதான் அதன் குறைபாட்டால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க முடியும்.

    வைட்டமின் "பி9" (போலிக் ஆசிட்)

    ரத்த உற்பத்திக்கு மிகவும் அவசியமான வைட்டமின். இதன் குறைபாட்டால் ரத்தச் சோகை, பிறக்கும் குழந்தைகளுக்குப் பிறவி குறைபாடு, வாய்ப்புண், தலைவலி, பசியின்மை, அதிகக் கோபம், மனக்கட்டுப்பாடின்மை ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது. உடலால் இதைச் சேமித்து வைக்க முடியாது. நாளும் உணவில் இதைச் சேர்த்துக் கொள்வது நல்லது. அதிகமுள்ள உணவுப் பொருட்கள் - புரக்கோலி, விதைகள் மற்றும் கொட்டைகள், அசைவ உணவு, அவகேடோ, சோயா, வாழைப்பழம், தக்காளி, பப்பாளி, சிட்ரஸ் பழங்கள், வெண்டைக்காய், காலிிபளவர், பீட்ரூட், கேரட், கீரைகள்

    வைட்டமின் "சி" - (அஸ்கார்பிக் அமிலம்)

    இது உடலில் உள்ள எலும்புகள், தசைகள் மற்றும் பற்களை வலுவாக்க உதவுகிறது. புரதத்துடன் இணைந்து நம் உடலின் திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமித் தொற்றுகளிடமிருந்து காக்கிறது. உணவிலிருந்து இரும்புச்சத்தை உறிஞ்சவும், கால்சியம் எலும்புகளுக்குச் சென்றடையவும் இது வேண்டும். ஸ்கர்வி என்னும் நோய் இதன் குறைபாட்டால் வருகிறது. இதனால் எலும்புகளும் தசைகளும் வலுவிழந்துவிடும். அதிகமுள்ள உணவுப் பொருட்கள் – நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள், குடைமிளகாய், கீரைகள், ப்ரக்கோலி, பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, காலிஃப்ளவர், முட்டைகோஸ், அன்னாசிப்பழம், கிவி பழம், மாம்பழம், கொய்யாப்பழம்.

     

    நெல்லிக்காயின் மகத்துவம்:

    மேற்கூறிய பழங்களில் வைட்டமின் "சி" இருக்கிறது. ஆனால், வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் "சி" மிக  அதிகமாக உள்ளது.  மேலும் இதில் கால்சியம், புரதம் போன்ற சத்துக்கள் இருப்பதால் வைரஸ் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்துகிறது. எலும்புகளின் உறுதிக்கும், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை  அதிகரிக்கவும், தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும், ரத்தச் சர்க்கரையைக் கட்டுக்குள் வைப்பதற்கும் உதவுகிறது. வைட்டமின்கள் நம் உடலுக்குத் தேவை, அதிகமாக எடுத்துக் கொள்வதும் கேடுதரும் என்பதை ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வருடக்கணக்கில் சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

    • மறு பிறவி பற்றிய செய்திகளை புராணங்கள் மட்டுமன்றி, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காவியங்களும் சொல்கின்றன.
    • சிலகாலம் வசித்த பின் எஞ்சிய தனது கர்மாவைக் கழிக்க மீண்டும் பிறப்பெடுக்கிறான் என்கிறது கருடபுராணம்.

    மறு பிறவி பற்றிய செய்திகளை புராணங்கள் மட்டுமன்றி, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காவியங்களும் சொல்கின்றன. அறிவியல் ஆய்வுகளும் மறுபிறப்பைப் பற்றி சில ஆச்சரியமூட்டும் தகவல்களைக் கொடுத்துள்ளன.

    '2500 ஆண்டுகளுக்குப் பின் மைத்ரேஜன் என்ற பெயரில் மீண்டும் பிறப்பேன்' என்றார் புத்தர்.

    "முற்பிறவியில் நீங்கள் எதுவாக இருந்தீர்கள் என்பதை அறிந்து கொண்டால் தற்போதைய உங்கள் வாழ்க்கை சிக்கலாகிவிடும். சென்ற பிறவியின் விருப்பு வெறுப்புகளை தாங்க வேண்டி வரும் அது உங்களது வாழ்க்கை முறையே மாற்றிவிடும்" என்கிறார் ஓஷோ.

    இப்படியெல்லாம் யார் என்ன சொல்லி வைத்திருந்தாலும் நடக்க வேண்டியது நடந்து கொண்டுதானே இருக்கிறது. மிகவும் முற்போக்குச் சிந்தனை உள்ளவள்தான் சாலினி. மூட நம்பிக்கைகளைக் கண்டு எள்ளி நகையாடுபவள்தான். ஆனால் அனைத்தும் அவள் கட்டுப்பாட்டையும் மீறி அல்லவா நடக்கிறது.

    இன்றளவும் உலகளாவிய அளவில் மறு பிறவி பற்றிய ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுதானே இருக்கின்றன. மனிதன் இறக்கிறான். இறந்த பின் ஆவி நிலை அடைகின்றான். அவன் செய்த பாவ, புண்ணியங்களுக்கேற்ப சொர்கத்தையோ, நரகத்தையோ அடைகிறான். அவற்றில் சிலகாலம் வசித்த பின் எஞ்சிய தனது கர்மாவைக் கழிக்க மீண்டும் பிறப்பெடுக்கிறான் என்கிறது கருடபுராணம்.

    தத்துவ ஞானி சாக்ரடீசு மறுபிறவியில் நம்பிக்கை கொண்டிருந்தார். மரணத்திற்குப் பின் ஆன்மா ஹேடஸ் என்ற சூட்சும உலகிற்குச் சென்று பல நதிகளைக் கடக்கும். பின் பல்வேறு அனுபவங்களைப் பெற்று மறுபிறவி எடுக்கும் என்று குறிப்பிடுகிறார்.

    காரணம் அறியாமல் சிலரை வெறுப்பது, காரணம் புரியாமல் சிலரை விரும்புவது எல்லாம் முற்பிறப்பின் விளைவே என்றும் கூறப்படுகிறது.

    CONVERSATIONS WITH A SPIRIT என்னும் நூலில் ஆய்வாளர் DOLORES CANNON என்பவர் இறந்து போன ஆவிகளுடன் பேசுபவர். அவர் முற்பிறவிச் செயல்களும் மணங்களும் எண்ணங்களாக நமது மூளையில் பதிவுபெற்று, அந்த வாசனை உணர்வுகளோடுதான் நாம் பிறக்கிறோம். அந்த வாசனைகளை நம்மையும் அறியாமல் சிந்தனைகளாக, செயல்களாக உருப்பெற்று நல்ல வினைகளையோ அல்லது தீய வினைகளையோ உருவாக்குகின்றன. மனிதரின் மனம் கட்டுப்படுத்தப்பட்டு, சில நேரங்களில் அவனையும் மீறி, அவனுடைய விருப்பமின்றியே சிந்தனைகளாலும் உணர்வுகளாலும் இயங்குகிறது. மனிதர்களின் விருப்பு, வெறுப்புகளும், சமூக நம்பிக்கைகளும் இத்தகைய செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்கின்றது. அவற்றிற்கேற்பவே அவன் வினையாற்றுகிறான் என்கிறார். இதே நிலைதான் சாலினிக்கும் ஏற்பட்டது. அவள் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருந்து வெகு தொலைவிற்கு வந்துவிட்டாள்.

    முற்பிறவி பற்றி பல ஆய்வாளர்கள் பல்வேறு தகவல்களைக் கூறினாலும், அமெரிக்காவின் புகழ்பெற்ற வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தவரான கனடாவைச் சேர்ந்த உளவியல் நிபுணர் மரு. இயான் இசுடீவன்சன், உலகெங்கும் பயணம் மேற்கொண்டு முற்பிறவி நினைவுகள் வந்ததாகக் கூறப்படுபவர்களை நேரில் சென்று சந்தித்து, அதனுடன் தொடர்புடைய சம்பவங்கள், மனிதர்கள் குறித்தும் ஆராய்ந்து இறுதியாக சிலருக்கு மட்டும் முற்பிறவி நினைவுகள் ஏற்படுவது உண்மையே என்றும் அதற்கான காரணங்கள் பல இருக்கின்றன என்றும் கூறியுள்ளார். அமெரிக்காவின் புகழ்பெற்ற பேராசிரியர்களும், மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் இவருடைய ஆய்வு முடிவுகளை ஏற்றுக் கொண்டுள்ளனர். பல உளவியல் மருத்துவர்களும்கூட நம்ப முடியாத பல செய்திகளை பதிவு செய்து கொண்டுதான் வருகின்றனர். இவ்வளவு பீடிகையும் எதற்கு என்று கேட்டீர்களானால், அடுத்தடுத்து நடக்கப் போகும் சம்பவங்களே அவற்றை விளங்கச் செய்யும்.

    ஆங்கில வரலாற்றாசிரியர் ஹுல்பெர்ட் கூற்றுப்படி கயா அரசு கொரியாவுக்கு வெளியில் இருந்து உள் நுழைந்த சிறந்த வாழ்வியல் மற்றும் அரசாளுமையில் சிறந்த ஒரு குழுவால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவதையும், தென் கொரியாவின் கயா அரசு பற்றிய வரலாற்றாய்வுக்கு ஆய்வாளர்களுக்கு அதிகம் அறிமுகமான ஆவணமாகவும் உள்ள சாம்குக் யுசா பற்றியும், தங்கள் நாட்டை வெளியுலகுக்கு அறிமுகப்படுத்திய மார்க்கோபோலோவின் பயணத் தொகுப்பு பற்றியும் விரிவான விளக்கம் அளித்தார் யாங்க்.

    "எங்கள் நாடு இன்று உலக அரங்கில் தொழில்நுட்பம், சமூக வளர்ச்சி எனும் அனைத்திலும் முன்னணியில் இருப்பதற்கான முக்கிய காரணம் என்றால் அது ஈராயிரம் ஆண்டுக்கு முன்னால் எங்கள் சுரோ மன்னனின் புதுமணப் பெண்ணாக, 16 வயதில் அடியெடுத்து வைத்து, பட்டத்து அரசியாக 157 ஆண்டுகள் வாழ்ந்து தாம் புகுந்த மண்ணை வானளாவ உயர்த்திவிட்டுச் சென்றுள்ளதால்தான் என்றே எம் மக்கள் அனைவரும் உறுதியாக நம்புகிறோம். எங்கள் முன்னேற்றப்பாதையின் வித்திட்ட அந்த தெய்வப் பெண் இன்று எங்கள் குலதெய்வமாகவே இருக்கிறார். 1ஆம் நூற்றாண்டில் வெகு தொலைவு கடல் கடந்து வந்தபோது கயா என்ற ஒரு சிறிய பகுதியின் தலைவனாக மட்டுமே இருந்த சுரோவை மணம் புரிந்து அவனை பேரரசனாக உருவாக்கியதோடு எங்கள் நாட்டையும் செல்வ வளமிக்க சுவர்க பூமியாக மாற்றியிருக்கிறார். கலப்புத் திருமணம் செய்து கொண்ட முதல் பெண்ணரசி என்ற பெருமையைப் பெற்றவர், எங்கள் நாட்டின் அபரிமிதமான வளர்ச்சிக்கு வித்திட்டவராகி மக்கள் மனதில் நீங்காததொரு இடத்தைப் பிடித்துவிட்டார்" என்று உணர்ச்சி பொங்க பேசிக் கொண்டிருந்தார்.

     

    பவளசங்கரி, 63743 81820

    கொரிய அரசி ஹியோ ஹவாங் ஓக் பற்றிய செய்திகளை ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருந்த சாலினி ஒரு கட்டத்தில் உடலெல்லாம் முறுக்கிக் கொள்ள வித்தியாசமாகக் காணப்பட்டாள். அருகில் இருந்த ஆந்திரப் பெண் அவள் தோற்றத்தைப் பார்த்து அப்படியே உறைந்து நின்றாள்.

    "என்ன ஆயிற்று இவளுக்கு? என்று சிந்தித்தவாறு சாலினியின் அருகில் சென்று,

    "ஏதும் உடல் நலக்குறைவாக உள்ளதா? குளிர்பானம் ஏதாவது அருந்துகிறீர்களா? தண்ணீர் கொண்டு வரச்சொல்லவா?" என்றெல்லாம் விசாரித்துக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்து மற்றவர்களும் என்னவோ, ஏதோ என்று அவளருகில் வந்து பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அவள் முகத்திலும், கண் பார்வையிலும் வெளிப்படையான மாற்றங்கள் தெரிய ஆரம்பித்திருந்தன. மிக அமைதியான தோற்றமும், நிதானமாகப் பேசும் இயல்பும் கொண்ட சாலினி முற்றிலும் எதிர்மறையாக, அதிகாரத் தோரணையுடன் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்ததோடு, அதே தோரணையில் பேசவும் தயாராக ஆரம்பித்திருந்தாள்.

    இதை ஏதும் அறியாத கொரிய ஆய்வாளர் யாங்க் மிகவும் ஆர்வமாக, உணர்வுப்பூர்வமான ஒரு நிலையில் தனது பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தவர், அரசி தொடர்பான மேலும் ஒரு சம்பவத்தை விளக்கினார்.

    "கொரிய ஆய்வாளர் கிம் என்பவர் எங்கள் நாட்டின் பெரும்பாலான மஞ்சள் நிற மனிதர்களிடையே தான் மட்டும் கருமை நிறமாக இருப்பதன் காரணம் என்னவாக இருக்கும் என்று தங்கள் பரம்பரையின் வேரைத் தேடிக் கொண்டிருக்கையில் தங்கள் நாட்டின் வரலாற்றின் முக்கியமான ஆவணமாக இருக்கும், 'சாம்குக்யுசா' என்ற தொன்மம் பற்றி அறிகிறார். தங்கள் மூதாதையர் ஒரு அயலக இளவரசியின் கொரிய இனக்கலப்பால் இருக்குமோ என்ற யூகத்துடன் தன் தேடலைத் தொடங்குகிறார்.

    இதன் அடிப்படையில், தொல்லியல் அறிஞர் கிம் தன்னுடைய மூதாதையரைத் தேடி பல பகுதிகளுக்குப் பயணம் செய்கிறார். கொரிய அரசியின் நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்பட்டிருந்த இரட்டை மீன் சின்னம் ஒரு அசைக்க முடியாத ஆதாரம் என்ற நம்பிக்கையில், அயோத்தியில் காணும் இடமெல்லாம இரட்டை மீன்கள் சின்னங்களாக வடித்திருப்பதாகக் குறிப்பிடுவதைக் கூடுதல் ஆதாரமாகக் கருதினார். கொரிய தொலைக்காட்சிக்கான தொல்லியல் தொடருக்காக அவர் பாகிசுத்தான் வடமேற்கு நாடுகளுக்கு மேற்கொண்ட பயணத்தை இந்த தேடுதலுக்குப் பயன்படுத்திக் கொண்டவர் முதலில் மொகஞ்சதாரோ சென்று இரட்டை மீன் தொடர்பான தொல்பொருள் ஆதாரங்களைத் தேடினார். எதுவும் கிட்டாத நிலையில் அவரின் அடுத்த நகர்வு பாகிசுத்தானாக அமைந்தது. பாகிசுத்தான் பெசாவர் நகருக்குச் சென்ற அவருக்கு இரட்டை மீன் சின்னம் அனைத்து வாகனங்களிலும், ஓட்டுநர்களின் தலையணியிலும் இருப்பதைக் கண்டார். ஆயினும் பாகிசுத்தான் அறிஞர்கள் இரட்டை மீன் சின்னம் உள்ள அரச குடும்பம் இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று கூறியதால் ஏமாற்றத்துடன் திரும்பினார்.

    அடுத்த அனுமானம் அந்த இளவரசி தன்னுடைய நாடு ஆயுத்தா என்று கூறியதாக உள்ள குறிப்பு. அதன் அடிப்படையில் அறிஞர் கிம் தாய்லாந்து சென்று பின்னர் அங்கிருந்து அயோத்தியா சென்று அங்கே இருந்த மீன் சின்னத்தையும் அங்கு வாழ்ந்த அரச குடும்பத்தையும் இணைத்து கொரிய அரசி அயோத்தியாவின் இளவரசி என்ற முடிவுக்கு வந்தார். இருப்பினும் அதில் முழுமையான உடன்பாடு அற்றவராக இரட்டை மீன் சின்னம் தொடர்பான மர்ம முடிச்சு தொடர்வதாகவே குறிப்பிட்டுள்ளார்", என்று அந்த ஆய்வாளர் பேசி முடித்த அடுத்த நொடியில் அங்கு ஒரு பிரளயமே நடந்தது போன்ற சூழல் உருவானது.

    சாலினியின் தோற்றமும், குரலும், நடவடிக்கையும் முற்றிலுமாக மாறியிருந்தது. "ஹ..ஹ..ஹா" என்ற அவளுடைய சிரிப்பு இடியென முழங்கியதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியில் அமைதியானார்கள். ஒரு சில நொடிகள் என்ன நடக்கிறது என்பதை அறியாமலேயே நின்றிருந்தார்கள்.

    சாலினியோ, சிரித்து முடித்தவள், "ஏன் இத்துணைக் குழப்பங்கள்? உங்கள் தெய்வப் பெண் எங்கிருந்து எப்படி வந்தாள் என்பதுதானே உங்கள் ஐயப்பாடு? சொல்கிறேன், கேளுங்கள். அதற்குத்தானே மீண்டும் வந்திருக்கிறேன்" என்று தெளிவாக பேச ஆரம்பித்ததும், அங்கு மயான அமைதி நிலவியது. இதற்குள் செய்தி பரவ ஆரம்பிக்க, ஆய்வாளர்களும், பொது மக்களும், பத்திரிக்கையாளர்களும் குழும ஆரம்பித்திருந்தனர். அவள் அப்படி என்ன சொல்லப் போகிறாள் என்ற பேரார்வத்துடன் காத்திருந்தனர் அனைவரும்!

    (தொடரும்)

    • கன்ட்ரோல் ஓவரியன் ஸ்டிமுலேஷன் படி முட்டைகளின் வளர்ச்சி தூண்டப்படுகிறது.
    • கர்ப்பப்பையில் கருவை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று சில வரைமுறைகள் இருக்கிறது.

    குழந்தையின்மை சிகிச்சையை பொருத்த வரையில் சோதனைக்குழாய் குழந்தைக்கு தம்பதிகள் தயாராக உள்ள நிலையில், ஐ.வி.எப். சோதனைக்குழாய் நவீன சிகிச்சை முறையில் கருவாக்கம் செய்து குழந்தை பேறு உருவாக்கும் ஒவ்வொரு வழிமுறை களையும் விரிவாக பார்க்கலாம்.

    கருமுட்டைகளின் வளர்ச்சியை அதிகரித்தல்:

    சோதனைக்குழாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான ஐ.வி.எப். கருத்தரிப்பு முறையின் ஆரம்ப நிலையே கன்ட்ரோல் ஓவரியன் ஹைப்பர் ஸ்டிமுலேஷன் எனப்படும் கருமுட்டைகளின் வளர்ச்சியை அதிகரிக்கும் நிலை ஆகும். பொதுவாக பெண்களின் சினைப்பையின் உள்ளே கருமுட்டைகள் இருக்கும். அந்த முட்டைகள் நாம் நினைப்பது போல ஸ்கேனில் தெரியாது. வழக்கமாக எல்லா நோயாளிகளும் டாக்டர்களிடம் இப்படி கேட்பதுண்டு, 'டாக்டர்... சினைப்பையில் 10-க்கும் மேற்பட்ட முட்டைகள் இருப்பது போல் தெரிந்ததே, 6 முட்டைகள் தான் வந்ததா' என்பார்கள்.

    சினைப்பை அறைக்குள் இருக்கும் முட்டைகள் ஸ்கேனில் தெரியாது. ஏனென்றால் கருமுட்டைகள் என்பது செல் ஆகும். இதை மைக்ரோஸ்கோப்பால் மட்டும் தான் பார்க்க முடியும். அதாவது சினைப்பையில் உள்ள பாலிக்குலர் திரவத்தை எடுத்து, அந்த திரவத்தில் உள்ள முட்டைகளை பிரித்து எடுத்து அதை மைக்ரோஸ்கோப்பில் பரிசோதித்து பார்க்க முடியும்.

    சோதனைக்குழாய் முறையில் 2 சினைப்பையிலும் முட்டை களின் வளர்ச்சியை தூண்டு வதற்கான ஊசி கொடுப்போம். இதுதான் கன்ட்ரோல் ஓவரியன் ஹைப்பர் ஸ்டிமுலேஷன் எனப்ப டும் படிநிலையாகும். சோதனைக் குழாய் குழந்தை சிகிச்சையை பொருத்த வரையில் இது ஒரு முக்கிய மான விஷயம். ஏனென் றால் முட்டைகளின் தரம், முட்டைகளின் எண்ணிக்கை, முட்டைகளின் கருத்தரிக்கும் திறன் ஆகியவை எல்லாமே இந்த முட்டைகளின் வளர்ச்சியில் தான் இருக்கிறது.

    ஆரோக்கியமான பெண்ணாக இருக்கும் நிலையில் அவர்களுக்கு 10 முதல் 15 கருமுட்டைகள் வந்தால் அந்த பெண்ணுக்கு எந்தவித பிரச்சினைகளும் வராது. அந்த முட்டைகளின் எண்ணிக்கை சீராகவும், தரமாகவும் இருக்கும். இந்த முட்டைகளை சீராக வளர வைப்பதற்கு அதற்கான ஊசி செலுத்துவோம்.

    முட்டையின் நல்ல கருவாக்கத்திற்கான அடிப்படை:

    இந்த சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டுமென்றால் சில நெறிமுறைகள் இருக்கிறது. அதன்படி உங்களுடைய மருத்துவர் என்ன நெறிமுறைகளை நிர்ணயிக்கிறார்களோ, அந்த நெறிமுறைகள் படிதான் முட்டைகளின் வளர்ச்சியை தூண்டுவார்கள். இந்த முட்டைகள் வளர்ச்சி தூண்டுதலுக்கான ஊசி, மருந்துகளை 10 முதல் 15 நாட்கள் கொடுப்பார்கள். அந்த முட்டைகளின் வளர்ச்சியை பரிசோதித்து அதற்கு ஏற்ப மருந்து கொடுப்பார்கள்.

    அதன் மூலமாக முட்டை வளர்ச்சி சீராக அமைய அந்த மருந்துகள் உபயோகமாக இருக்கும். இந்த கன்ட்ரோல் ஓவரியன் ஸ்டிமுலேஷன் வழிமுறை நன்றாக அமைய என்ன ஊசி பயன்படுத்துகிறோம், ஒவ்வொ ருவரின் எதிர்வினை எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். அதனுடைய பலன் எப்படி இருக்கிறது என்பதை சில ரத்த பரிசோதனைகள் மூலம் தெரிந்து கொள்வோம். சிலர் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலமாகவும் தெரிந்து கொள்வார்கள்.

    பெண்களின் கருமுட்டைகளுக்கு தூண்டுதல் கொடுக்கின்ற 15 நாட்களில், முதல் 3 நாட்கள் தினமும் ஊசி போட வேண்டி இருக்கும். அந்த முட்டைகளின் வளர்ச்சியை 3 நாட்களுக்கு ஒருமுறை பரிசோதிக்க வேண்டி இருக்கும். தேவைப்பட்டால் சில ரத்த பரிசோதனைகள் செய்து சீரான நிலையில் முட்டை வளருகிறதா என்பதை பார்க்க வேண்டும்.

    இந்த கன்ட்ரோல் ஓவரியன் ஸ்டிமுலேஷன் என்பது, ஒரு மருத்துவர் செய்ய வேண்டிய முக்கியமான விஷயமாகும். பொதுவாக ஐ.வி.எப். அனுபவம் பெற்ற மருத்துவர்கள் தான் செய்ய வேண்டும். அனுபவம் பெற்ற மருத்துவர்கள்செய்யும் போதுதான் முட்டைகளின் வளர்ச்சி சீராக இருக்கிறதா, அதனுடைய ஹார்மோன் சரியாக இருக்கிறதா என்பதை சரியாக தெரிந்து கொள்ள முடியும். இதுதான் முட்டையை நல்ல ஒரு கருவாக்குவதற்கான அடிப்படையாக அமைகிறது.

    முட்டையில் விந்தணுவை ஊசி மூலம் செலுத்துதல்:

    எனவே கன்ட்ரோல் ஓவரியன் ஸ்டிமுலேஷன் படி முட்டைகளின் வளர்ச்சி தூண்டப்படுகிறது. அது முறையாக தம்பதிகளுக்கு தெரிவிக்கப்படுகிறது. முட்டை முதிர்ச்சியான பிறகு முட்டையை சேகரிப்பதற்காக ஒரு தினத்தை சொல்வோம். இதற்கு ஒரு தூண்டுதல் ஊசி கொடுப்போம். அந்த தூண்டுதல் ஊசி கொடுத்த 34 முதல் 36 மணி நேரத்தில் அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து சினைப்பையில் இருந்து முட்டைகளை பிரித்து எடுப்போம்.

    முட்டைகளை எடுத்த பிறகு, கணவரின் விந்தணுக்களை எடுத்து கொடுப்பார்கள். பொதுவாக விந்தணுக்கள் இயல்பாக இருக்கும் ஆண்களுக்கு சேகரித்து வைத்த விந்த ணுக்களை கொடுத்துவிடுவார்கள். அந்த விந்தணுக்களில் ஏதாவது சில பிரச்சினைகள் இருந்தால், முதலிலேயே சில விந்தணுகளை எடுத்து உறை நிலையில் வைத்திருப்பார்கள். அதில் இருந்து நல்ல விந்தணுகளை சில செயல் முறை மூலமாக பிரித்து எடுப்பார்கள்.

    இந்த நல்ல விந்தணுக்களை பிரித்து எடுத்து அந்த விந்தணுக்கள் மூலம் ஐ.வி.எப். செய்யும் போது ஒரு முட்டைக்கு 10 ஆயிரம் விந்தணுக்கள் செலுத்துவார்கள். இதுவே இக்சி என்றால் ஒரு முட்டைக்கு ஒரு விந்தணுவை ஊசி மூலம் செலுத்து வார்கள். முட்டையை எடுத்த 4 மணி நேரத்துக்குள் இந்த செயல்முறையை ஆய்வகத்தில் செய்வார்கள்.

    ஆய்வகத்தில் கரு வளரும் முறை:

    இந்த ஆய்வகம் மிகவும் தரமானதாக இருக்கும். மிகவும் சுத்தமாக சுகாதாரமான முறையில் இருக்கும். இதில் விளக்குகள் இருக்காது, இருட்டாக இருக்கும். குளிர்சாதன வசதி இருக்காது. கருமுட்டைகள் சென்சிட்டிவாக இருப்பதால், இதுபோன்ற சில வழிமுறைகளை அதற்கேற்ற சூழ்நிலை களில் வைத்திருக்க வேண்டும். அதன்படி அந்த முட்டைகளை ஐ.வி.எப். முறையிலோ, இக்சி முறையிலோ கருவாக்கம் செய்து இந்த கருவை இன்குபேட்டர்களில் வளர்ப்பார்கள்.

    இந்த இன்குபேட்டரில் ஆக்சிஜன், கார்பன்டை ஆக்சைடு சேர்ந்து வாயு செல்லும். அதன் மூலம் ஆய்வகத்தில் கரு வளரும். பெண்ணின் கருக்குழாயில் கரு வளரும் அதே சூழல்களை ஆய்வகத்தில் வைத்தி ருப்பார்கள். இதை 3 நாட்கள் கரு மற்றும் 5 நாட்கள் கரு வரை வளர வைப்போம். அதன் வளர்ச்சியை கருவியல் நிபுணர் பரிசோதனை செய்வார்.

     

    முட்டைகளும், விந்தணுக்களும் நன்றாக இருந்தால் உருவாகும் கருவும் நன்றாக இருக்கும் என்ற வகையில் 3 முதல் 5 நாள் வரை வளர வைத்து இந்த கருவை பெண்ணின் கர்ப்பப்பையில் வைப்போம். எனவே முட்டைகளின் வளர்ச்சியை தூண்டுதல், முட்டை சேகரிப்பு, ஆய்வகத்தில் கருவை வளர்த்தல், வளர்ந்த கருவை பெண்ணின் கர்ப்பப்பைக்கு மாற்றுதல் ஆகிய 4 முறைகளுமே மிகவும் முக்கியமானவை ஆகும்.

    கர்ப்பப்பையில் கருவை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று சில வரைமுறைகள் இருக்கிறது. எந்த அளவு நீளத்தில் வைக்க வேண்டும், என்ன நிலையில் வைக்க வேண்டும், எப்படி வைத்தால் கரு கப்பப்பையை ஒட்டி வளரும் என்கிற முறைப்படி அதை வைக்கும்போது கரு ஒட்டி வளருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.

    கரு வளர்ச்சியை பார்ப்பதற்கான பரிசோதனை:

    பொதுவாக இந்த கரு வளரும்போது கருவை வைத்த பிறகு அது வளருவதற்கு தேவையான புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் மற்றும் ஊக்குவிப்பு மருந்துகள் கொடுக்கும்போது இந்த கருவானது கர்ப்பப்பையில் நன்றாக ஒட்டி வளரும். கருவை வைத்த 14 அல்லது 15-வது நாளில் அந்த கரு வளர்ந்திருக்கிறதா என்பதை ஒரு பீட்டா எச்.சி.ஜி. சோதனை மூலமாக பரிசோதிப்போம். இதன் மூலம் கரு வளர்ச்சியை சீராக பார்க்க முடியும்.

    ஒரு கருவானது ஆரோக்கியமாக வளருவதற்கு இத்தனை விஷயங்கள் சீராக இருக்க வேண்டும். அந்த வகையில் சீராக இருந்தால் உங்களுக்கு கொடுக்கப்பட்ட வெற்றி விகிதத்தில் கரு வளருவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஒரு நல்ல ஐ.வி.எப். கருத்தரிப்பு முறை என்றால் 10 முதல் 15 முட்டைகள் வரவேண்டும். அதில் 8 முதல் 9 கரு நன்றாக உருவாக வேண்டும்.

     

    டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

    அதில் 5 நாள் கரு நன்றாக உருவானால், அது ஒட்டி வளருவதற்கான வாய்ப்புகள் அதிகம். பல நேரங்களில் இந்த கருவை அதே மாதத்தில் பரிமாற்றம் செய்வோம், சிலருக்கு கருவை உறை நிலையில் வைத்து விடுவோம். ஏனென்றால் சிலருக்கு ஹார்மோன் அதிகமாக இருக்கும், கருப்பை வரிசை சீராக இருக்காது, பல நேரங்களில் உடல் ரீதியாக அந்த பெண்ணுக்கு சினைப்பை பெரிதாகி வலிகள் இருக்கும்.

    இந்த மாதிரி ஏதாவது பிரச்சினை இருந்தால் உடனடியாக கருவை பரிமாற்றம் செய்ய மாட்டோம். எல்லா கருவையும் உறைநிலையில் வைத்து விடுவோம். மைனஸ் 192 டிகிரி லிக்யூட் நைட்ரஜனில் கருவானது உறை நிலையில் இருக்கும். உறை நிலையில் வைத்த கருவை அடுத்தடுத்த மாதங்களில் திரும்ப கர்ப்பப்பையில் செலுத்துவோம்.

    இந்த வகையில் ஐ.வி.எப். சோதனைக்குழாய் செயற்கை கருத்தரிப்பு முறைக்கு கிட்டத்தட்ட 35 நாட்கள் தேவைப்படுகிறது. அதாவது முட்டைகளின் வளர்ச்சியை தூண்டி, கரு முட்டைகளை எடுப்பதற்காக 15 நாட்கள் தேவைப்படுகிறது. பின்னர் கருவை 5 நாட்கள் வரை ஆய்வகத்தில் வளர்த்து கருப்பையில் பரிமாற்றம் செய்யப்படுகிறது. பரிமாற்றம் செய்த 15-வது நாளில் பரிசோதனை செய்து அதனுடைய வெற்றி விகிதத்தை அறியலாம். அதன் மூலம் அவர்கள் குழந்தை பேறு அடைவது உறுதி செய்யப்படும்.

    • இறைவன் ஒன்றே என்னும் கோட்பாட்டைக் கொண்டவர் அவர்.
    • திருச்செந்தூரிலே கந்தமான மலையிலே முருகன் வசிக்கிறார்.

    கேரள மாநிலத்தில் காலடி என்னும் ஊரில் அவதரித்தவர் ஆதிசங்கரர். அவர் ஊரில் இருந்து ஆறு வெகு தூரத்தில் இருந்தது. தன் தாயினால் அவ்வளவு தூரம் நடந்து சென்று குளிக்க இயலாது என்பதை அறிந்த ஆதி சங்கரர் இறைவனை வேண்டி அந்த ஆற்றின் போக்கை மாற்றி தன் வீட்டின் அருகில் ஓடச் செய்தார். அந்த அளவுக்கு அவர் அற்புதமான சித்தர். பறக்கும் ஆற்றல் படைத்தவர்.

    சிவபெருமானின் அம்சமாய் கி.பி. 8-ம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய ஆதி சங்கரர், இந்து சமயத்திற்கு மறுமலர்ச்சியும், புத்துணர்வும் ஊட்டியவர். இந்து சமயத்தை ஆறு வகையாகப் பகுத்து அனைத்து தெய்வங்களையும் சரி சமமாக வழிபட செய்தார். இறைவன் ஒன்றே என்னும் கோட்பாட்டைக் கொண்டவர் அவர்.

    பூமியில் பிறந்த அனைவரும் ஒன்றே. உயர்வு, தாழ்வு என மனிதரிடையே பிரிவினை கூறுவது பாவம். இறைவனின் அருள்மழை அனைவர் மீதும் சமமாகவே பொழிகிறது. அனைவரும், இறைவனை வழி படுவதற்கும், அவன் திருவடி அடைவதற்கும் தகுதியுடையவர்களே. இறைவன் யாரையும் ஒதுக்கித் தள்ளுவதில்லை என்று எடுத்துக்கூறி, உலகுக்கு உண்மையை உணர்த்தினார்.

    இவரது கருத்துகளை ஏற்றுக் கொள்ளாத சில துஷ்டர்கள் இருந்தனர். அவர்களில் அபிநவகுப்தன் என்பவன் ஆதிசங்கரர் மீது பில்லி சூனியம் ஏவி காச நோயை ஏற்படுத்தினான். ஆதிசங்கரர் திருக்கோகர்ணத்தில் சிவபெருமானை வழிபடும் போது, திருச்செந்தூர் சென்றால் நோய் தீரும் என்று அசரீரி சொல்லியது.

    ஆகாய வழியாகத் திருச்செந்தூரை வந்தடைந்தார் ஆதிசங்கரர். செந்தூர் கோவில் குகைக்குள் காட்சி அளித்தார் குமரன். குகைக்குள் இருந்த குமரனை நோக்கி நடந்தார். ஆறுமுகப் பெருமான் ஒளிமயமாக விளங்கினார். பாலசுப்பிரமணியர் பாதங்களில் பாம்பு (ஆதி சேஷன்) பூஜை செய்வதைக் கண்டு மகிழ்ந்தார். சுப்பிரமணிய புஜங்கம் என்ற நூலைப் பாடினார். புஜங்கம் என்றால் பாம்பு. தோளால் ஊர்வது.

    இக்கோவிலிலே பன்னீர் மரத்து இலையில் வைத்து வழங்கப்படும் விபூதியின் மகிமையை உணர்ந்தார். இலை விபூதியை உட்கொண்டார். காசநோய் மறைந்தது. இலை விபூதியின் பெருமையைப் பாடினார்.

    முருகனுடைய அழகு உருவத்தைக் கண்டவுடன் வேறு எதுவும் தோன்றவில்லை. தம்மை மறந்து அந்த இன்பத்தில் மூழ்கி இருந்தார்.

    "எனக்கு ஒரு சொல்லும் பொருளும் தோன்றவில்லை. என் உள்ளத்தில் ஒரு ஒளி பிரகாசிக்கிறது. அது ஆறுமுகத்துடன் தோற்ற மளிக்கிறது. அதனால், என்னை அறியாமல் சொற்கள் என் வாக்கில் இருந்து வெளி வருகின்றன" என்றார். அந்த அழகிய சொற்களே "ஸ்ரீ சுப்பிரமண்ய புஜங்கம்" எனும் பாடல்களாகும்.

    ஸ்ரீ சுப்பிரமண்ய புஜங்கத்தின் ஒவ்வொரு சுலோகத்திலும் முருகனுடைய ஒவ்வொரு வடிவத்தையும் நேரில் காண விரும்பி ஆதி சங்கரர் பிரார்த்தித்தார். அவர் விருப்பப்படியே முருகனும் தரிசனம் அளித்தான்.

    இவர் இயற்றிய ஸ்ரீ சுப்பிரமண்ய புஜங்கம் 33 சுலோகங்களைக் கொண்டது. இதனை யார் தினமும் பாராயணம் செய்கிறார்களோ, அவர்கள் நல்ல சந்ததியையும், ஆயுளையும், அபரிமிதமான செல்வத்தையும் அடைவார்கள். இந்தச் சுப்பிரமணிய புஜங்கத்தைப் பாடியதும் ஆதிசங்கரரை பிடித்திருந்த பில்லி சூனியம் விலகியது. இத்தகைய சிறப்பான அந்த சுப்பிரமணிய புஜங்கத்தில் இடம் பெற்றுள்ள 33 பாடல்களின் பொருள் வருமாறு:-

    1. எப்போதும் குழந்தையாகவே இருந்தாலும் விக்னங்களாகிய மலையைப் பொடியாக்கும் சக்தி உள்ளவராகவும், யானை முகத்தை உடையவராகவும், கணேசன் எனும் பெயர் கொண்டவராகவும் இருக்கும் பெருமைமிக்க பரமமூர்த்தி எனக்கு மங்களமுண்டாக அருள் புரியட்டும்.

    2. என் உள்ளத்தில் ஏதோ ஓர் ஒளி ஆறுமுகத்துடன் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அதனால் என் நாவினின்றும் ஆச்சரியத்தக்க முறையில் வார்த்தைகள் அருவிபோல் வெளி வருகின்றன.

    3. மகான்களது மனதையே வீடாக உடைய வராகவும், வேதங்களின் பொருளாக விளங்குபவராகவும், சிவபெருமானின் புதல்வராகவும் இருக்கின்ற சுப்ரமணியக் கடவுளை நான் வணங்குகின்றேன்.

    4. எப்போது எந்த மனிதர்கள் என் சன்னதிக்கு வருகிறார்களோ அப்போதே அந்த மனிதர்கள் சம்சாரக் கடல் கடந்தவர்கள் ஆவார்கள்.

    5. கடல் அலைகள் எப்படி விழுந்து அழிகின்றனவோ அப்படியே என்னை தரிசனம் செய்கின்றவர்களின் சகல பாவங்களும் எனது சன்னதியில் அழியும்.

    6. திருச்செந்தூரிலே கந்தமான மலையிலே முருகன் வசிக்கிறார். இந்த மலை மீது ஏறி அவரை எவன் வணங்குகிறானோ அவன் கைலாச மலை மீது ஏறி சிவபெருமானை வணங்கிய பலன் அடைகிறான்.

    7. பஞ்ச மகா பாதகங்களையும் நாசம் செய்கிறதாகவும், மகிரிஷிகள் தவம் செய்யத் தகுந்ததாகவும், உள்ள சுகந்த மலையில் குகைக்குள் வாசம் செய்பவனாகவும் தன்னுடைய ஜோதியாலே விளங்குகிற வனாகவும், ஜீவன்களின் பீடை போக்குபவனாகவும் உள்ள சுப்ரமணிய சுவாமியைத் துதிக்கின்றேன்.

    8. ஆயிரம் சூர்ய பிரகாசத்துடன் கூடிய ஒளி வீசுபவராகவும் கார்த்திகைப் பெண்களின் பால் உண்டு தேவர்களின் ஈசுவரராகவும் இருக்கும் சுப்ரமணியரை நான் துதிக்கின்றேன்.

    9. உனது திருவடித் தாமரைகளில் சம்சாரம் எனும் வேதனையால் தவிக்கும் எனது மனம் எனும் வண்டு எப்போதும் மொய்ப்பதால் மகிழ்வடைகிறேன்.

    10. கந்த சுவாமியே, பொன்மயமான ஆடைகளால் அலங்கரிக்கப்பட்டதாயும், சத்தமிடும் சலங்கைகள் கொண்டதாயும் உள்ள உனது இடுப்பை நான் தியானம் செய்கிறேன்.

    11. வள்ளியை மார்புடன் அணைத்துக் கொண்டதால் அவள் மார்பை அலங்கரித்த குங்குமம் உன் மார்பில் பட்டு உன் மார்பும் சிவப்பாகக் காட்சி தருகிறது. அன்பர்களைக் காக்க நீ உன் உள்ளத்தில் கொண்டுள்ள ஆவலையே அது வெளிப் படையாகக் காட்டுகிறது. அத்தகைய மார்பை நான் வணங்குகிறேன்.

    12. சத்ருக்களுக்குப் பயம் கொடுப்பதாயும், உள்ள உனது பன்னிரண்டு கைகளையும் நான் வணங்குகிறேன்.

    13. உனது ஆறு முகங்களையும் சந்திரனுக்கு ஒப்பிடலாம் என்றாலோ ஆறு சந்திரனும் இல்லை, களங்கமில்லாத சந்திரனும் இல்லை. எனவே உனது திருமுகங்களுக்கு எதை ஒப்புமை சொல்லவோ?

    14. உன் அதரங்கள் அமுதம் பொழிவன. ஆகவே உனது ஆறுமுகங்களும் ஆறு தாமரை மலர்களே


    15. உனது பன்னிரண்டு கண்களிலிருந்து ஒரு கடை கண் பார்வை என்மீது ஒருமுறை விழுந்தால் அதனால் உனக்கு என்ன குறைந்து போகும்?

    16. எந்த ஆறு தலைகளை சிவன் மகிழ்ச்சியுடன் உச்சி முகர்ந்து பார்க்கிறாரோ அந்த ஆறு சிரசுகளுக்கும் வணக்கம்.

    17. இடுப்பில் பீதாம்பரம் தரித்தவரும், கையில் அழகிய சக்தி ஆயுதம் தாங்கியவரும், சிவபெருமானின் குமாரனுமாகிய முருகன் என் எதிரில் எப்போதும் வந்து அருள்வாராக.

    18. குமரா, ஜகத்துக்கெல்லாம் தலைவனான சிவபெருமான் மைந்தா! குகன் என்ற பெயர் கொண்டவனே! உன்னை தியானிக்கிறேன்.

    19. அன்பருக்கு வீடு அளிக்கவல்ல பெருமானே! தேவ சேனாதிபதியே! பராசக்தி சொரூபமாகிய வேலைக் கையில் ஏந்திய வீரனே! என்னைக் காப்பாற்று.

    20. எம பயத்தால் நடுங்கும் உடல் கொண்டவனாய் பரலோகம் செல்லும் நிலையில் நான் இருக்கும் போது விரைவில் வந்து என்முன் தோன்றிக் காத்திடுவாய்.

    21. எமதூதர்கள் என்னைத் துன்புறுத்தும் போது, வேலாயுதத்துடன் மயில் மீது ஏறி அஞ்சேல் என்று அபயம் அளித்து விரைவாக வந்து அருள வேண்டும்.

    22. எனது இறுதிக் காலத்தில் பேச சக்தியற்ற வனாகி விடுவேன். அப்போது அலட்சியம் செய்யாமல் அருள் புரிய வேண்டுகிறேன்.

    23. இந்த உலகத்தை ஆயிரம் அண்டங்களாகச் செய்து ஆண்டு வந்த சூரன் உள்னால்அழிக்கப்பட்டான், அப்படியே தாரகாசுரன் சிம்ம வக்தரன் முதலியோரும் கொல்லப்பட்டனர். எனது இதய ஆகாசத்தில் இருக்கும் கிலேசம் என்ற ஒன்றை மாத்திரம் கொல்லாமல் இருக்கிறாயே! நான் என்ன செய்வேன்! எங்கு போவேன்?

    24. உன்னைத் தவிர வேறு ஒரு தெய்வத்திடம் நான் யாசிக்கமாட்டேன். எனக்குத் துன்பம் தருவதாயும், உன் மீது பக்தி கொள்ளாது தடுப்பதாயும் உள்ள எனது மன நோயை விரைவில் அழித்து விடு.

    25. தாரகனை வதைத்த முருகா! மிகவும் கொடிய குஷ்ட ரோகம், வலிப்பு, சயம், சுரம், பைத்தியம், வயிற்றுவலி முதலிய வியாதிகளும் பூதபிரேத பிரம்ம ராட்சசுகளும், பன்னீர் இலையில் விளங்கும் உன்விபூதியைக் கண்ட உடனே ஓடி மறைகின்றன.

    26. கண்களால் உன்னைக் காணவும், காதுகளால் உன்புகழ் கேட்கவும், நாவினால் உன்புகழை மற்றவர்களுக்கு சொல்லவும், கைகளால் உன் திருவடிகளுக்கு அர்ச்சனை செய்வதுமாக எனது எல்லா உடல் உறுப்புகளும் உன்னிடம் லயிப்பவையாக இருக்கட்டும்.

    27. கீழ் குலத்தில் பிறந்தவனுக்கும் கூட அருள்புரிவதில் சுப்பிரமணிய சுவாமியை விட வேறு தெய்வம் எதையும் நான் அறியேன்.

    28. குமாரக் கடவுளே! எனது மனைவியோ, பிள்ளையோ, உறவினர்களோ, பசுக்களோ, மற்ற எந்த மனிதனோ, எந்த பெண்மணியோ, என்னைச் சேர்ந்தவர்களோ, ஆகிய எல்லோரும் உன்னை பூஜிக்கின்றவர்களாகுக ; வணங்குகிறவர்களாகுக; துதிப்பவராகுக ; நினைப்பவர்கள் ஆகுக.

    29. விலங்குகளாலோ கொடிய வியாதியாலோ எனது உடலுக்கு துன்பம் ஏற்பட்டால் உன் கையில் உள்ள வேலாயுதமானது அந்தப் விலங்கையும் வியாதியையும் தாக்கித் தூக்கி எறிந்து நாசம் செய்யட்டும்.

    30. பிள்ளைகள் செய்யும் தவறுகளைப் பெற்றோர் பொறுத்துக் கொள்வதுபோல எனது தவறுகளைப் பொறுத்தருள வேண்டுகிறேன்.

    31. வேத சொரூபமான மயிலுக்கு வணக்கம், பராசக்தியாகிய வேலுக்கு வணக்கம். மாயதத்துவ ரூபமான ஆட்டுக்கடாவுக்கு வணக்கம். அகங்கார தத்துவமாகிய கோழிக்கு வணக்கம். ஆனந்த ரூபமான சமுத்திரத்துக்கு வணக்கம். முக்திநகரி எனும் திருச்செந்தூருக்கு வணக்கம்; கந்தக்கட வுளே! மீண்டும் மீண்டும் உன்னை வணங்குகிறேன்.

    32.ஆனந்தமே உருவான முருகா! உனது அருளைப் பிரகாசமாக்கு. எல்லையற்ற பரஞ்சோதியாய் உருவான முருகா! உனது அருளைப் பிரகாசமாக்கு. உனது பெருமையை வெளிப்படுத்து. ஆனந்தக் கடலே! உனது சக்தியை வெளிப்படுத்து. எல்லா உயிர்களுக்கும் உறவே! உனது திறமை முழுவதையும் பிரகாசமாக்கு. சிவகுமாரா! முக்திப்பேறு தரும் முதல்வா! உனது திறமை முழுவதையும் என் மீது உபயோகித்து என்னைப் பிரகாசமாக்கி அருள்வாய்.

    33. சுப்ரமண்ய புஜங்கம் என்ற இந்த ஸ்தோத்தி ரத்தை தினமும் எவன் பக்தியுடன் படிக்கிறானோ அவன், மனைவி, மக்கள், செல்வம்,பெற்று முடிவில் முருகன் அருளும் முத்திப் பேறும் பெறுவான்.

    இப்படி 33 பாடல்களில் திருச்செந்தூர் முருகனை புகழ்ந்த ஆதிசங்கரர் உருவச்சிலை பாலசுப்பிரமணியருக்கு எதிரில் மகா மண்டபத்தில் உண்டியல் பெட்டிக்குத் தென்புறமுள்ள தூணில் அமைந்துள்ளது. மறக்காமல் அவரையும் வழிபடுங்கள். அதோடு சுப்பிரமணிய புஜங்கமும் படியுங்கள். எந்த பில்லி சூனியம் இருந்தாலும் ஓடி விடும். அவர் பாடிய முப்பத்து மூன்று வடமொழிப் பாடல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு சலவைக் கல்லில் செதுக்கி வைக்கப்பட்டு உள்ளன. இரண்டாம் பிரகாரம் வடக்குச் சுவரில் அவற்றை இன்றும் காணலாம்.

    அடுத்த வாரம் திருச்செந்தூர் முருகன் அருள் பெற்ற அருணகிரிநாதர் பற்றி காணலாம்.

    • ஒவ்வொரு மனிதனும் உழைக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொள்ளலாம்.
    • வாழ்வின் அருமையான கொள்கைகளை வரையறுக்க முடியாமல் கோட்டைவிட நேரிட்டுவிடும்.

    வேலையற்ற வெறுமையில் மூழ்கிப்போகாமல் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பதில் ஆர்வம் காட்டும் அன்பு வாசகப் பெருமக்களே! வணக்கம்!.

    தமிழில் 'சும்மா!' என்றொரு சொல் இருக்கிறது; ஆன்மீகத் தத்துவ நோக்கில் 'சும்மா இருத்தலே சுகம்' என்று ஞானியரும் தவசீலர்களும் குறிப்பிடும் 'சும்மா' என்பதற்கு ஆழ்ந்த பொருள் விரிவுகள் இருக்கலாம். அன்றாட வாழ்வியலில், வேலை பார்க்கும் வாய்ப்புகள் எத்தனையோ இருந்தும், வெட்டியாய் உட்கார்ந்து, வீணாய்ப் பொழுதைக் கழித்துக்கொண்டிருக்கும் மனிதர்களை " சும்மா இருப்பவர்கள்' என்று குறிப்பிடுவதைவிட இன்னும் கொஞ்சம் சுருக்கென்று உரைக்கும்படியாக 'வேலையற்ற வெற்று மனிதர்கள்' என்று குறிப்பிடலாம். இதையே பேச்சு வழக்கில், ' வேலையத்த வெறும் பயல்கள்' என்று செல்லமாகத் திட்டும்பாங்கில் சொல்லலாம்.

    ஆறடி உயரத்திற்கு உடம்பைப் படைத்து, அதிலேயே அரை சாண் வயிற்றையும் படைத்திருக்கும் கடவுளின் சூட்சுமம் புரிந்து கொண்டால், ஒவ்வொரு மனிதனும் உழைக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொள்ளலாம். உழைப்பு என்பது எந்நேரமும் உழைத்துக் கொண்டிருப்பது என்று பொருளல்ல; உழைப்பிற்கான ஆயத்தங்களில் இயங்கிக் கொண்டிருப்பதும்கூட ஒரு வகையில் உழைப்புதான். பயன்படுத்தாத இரும்பு துருப்பிடித்து அழிவதைப் போல, இயக்கப்படாத மனமும் உடம்பும் விரைவில் கெட்டழிந்துவிடும் நிலைமையை எட்டிவிடும்.

    மிகப்பெரிய அளவில் திட்டமிட்டு, உழைத்துப், பொருளீட்டிப் பெரிய அளவிற்கு வருவது ஒருபுறம் இருக்கட்டும்; அன்றாடம் உண்பதற்கேற்ற உணவை ஈட்டுவதற்காகவாவது நாம் நமது உழைப்பைச் செய்தே ஆக வேண்டும் அல்லவா?. அடுத்தவர் உழைப்பில் உண்டு சுகம்காண நினைப்பது, பிச்சையெடுப்பதினும் கீழான தன்மை அல்லவா?. உழைக்கக் கூடிய வலுவோடு உடம்பு இருந்தாலும், அதனைச் சரியான வழியில் இயக்கக் கூடிய ஆர்வத்தோடு மனம் இருக்கவேண்டும். அதனால், மனத்தை வெறுமையாக அல்லாமல் எப்போதும் யாதானும் ஒரு உழைப்புச் சிந்தனையில் மகிழ்ச்சியோடு இயங்கும் தன்மையதாய் வைத்துக்கொள்ள வேண்டும். வெற்று மனமாய் மனத்தை காலியாக விட்டுவிட்டால் அது பேய் பிசாசுகளின் பட்டறையாய் மாறிவிடும் பயங்கர நிலைமை உண்டாகிவிடும்.

    சுய சிந்தனையற்ற மனம் நமக்குச் சொந்தமற்றதாக விரைவில் மாறிப்போகும்; நம்முடைய அனுமதியில்லாமல் நம்முடைய வீட்டில் யார்யாரோ வந்து வாடகை தராமல் குடியிருந்து சீரழிக்கும் அவல நிலைபோல் ஆகிவிடும். ஓர் ஊருக்கு ஒரு ஞானி வந்தார்; கேட்பவர்களுக்குக் கேட்ட வரம்தரும் வல்லமை அவரிடம் இருந்தது. அவரிடம் ஓர் இளைஞன் வந்து பணிந்து நின்றான். "என்ன வேண்டும்?" ஞானி கேட்டார். " சுவாமி! மனத்தில் பல விஷயங்களை நினைக்கிறேன்; ஆனால் அதில் எதுவும் கைகூட மாட்டேன் என்கிறது; அதனால் நான் எதை நினைத்தாலும், அது உடனே நடக்கின்ற சக்தியை எனக்கு வரமாக அருளுங்கள்!" என்று கேட்டான்.

    "பொதுவாக மனம் ஒன்றை நினைத்தால், உடல் அதனைச் செய்து முடிக்க வேண்டும்; ஆனால் மனத்திற்கும் உடலுக்கும் புறவழி போட்டு உடனடியாக நிறைவேற்றும் சக்தி வேண்டும் என்று கேட்கிறாய்!. ஆனால் இது பெரும் தொந்தரவில் போய் முடியும் பரவாயில்லையா?" ஞானி கேட்டார். " பரவாயில்லை! எந்தத் தொந்தரவையும் நான் பார்த்துக்கொள்கிறேன்!" என்றான் இளைஞன். அவனுடைய காதில் ஞானி ஒரு நாலடி மந்திரத்தைச் சொன்னார். "இதை மனப்பாடமாய்ச் சொல்!: சக்தி வரும்" என்று சொல்லி விட்டு வேறு ஊர்நோக்கி நகர்ந்தார்.

    ஞானி கிளம்பிய மறுநிமிடம், இளைஞன் மந்திரத்தைச் சொன்னான், ஒரு பூதம் புகையாக வந்து அவன் முன்னே தோன்றியது." இன்று முதல் நீ எனக்கு எஜமான்! நான் உனக்கு அடிமை!. எனக்குத் தொடர்ந்து ஏதேனுமொரு கட்டளையை இட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அவற்றையெல்லாம் தட்டாமல் அடுத்தடுத்த வினாடிகளில் செய்து முடித்துக் கொண்டே இருப்பேன். எனக்குக் கட்டளை வழங்காமல், என்னை வேலையற்றவனாக வைத்திருந்தால், அடுத்த வினாடியே உன்னை நான் விழுங்கி விடுவேன்! ஜாக்கிரதை! " என்று இளைஞனுக்கு எச்சரிக்கையும் விட்டது பூதம்.

    உடனே இளைஞன், எனக்கு அரண்மனை வேண்டும், நிலபுலன்கள் வேண்டும், தேர் வேண்டும், ஆடை ஆபரணங்கள் வேண்டும், நகை அணிமணிகள் வேண்டும், யானைகள், குதிரைகள் வேண்டும்! என்று தொடர்ந்து கொண்டே இருந்தான். பூதமும் அவன் கேட்கும் அனைத்தையும் வழங்கிக்கொண்டே "அடுத்த கட்டளை! அடுத்த கட்டளை!" என்று கேட்டுக் கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் பூதத்தின் தொந்தரவு தாங்க முடியாத அளவுக்குப் போனது.

    சுந்தர ஆவுடையப்பன்

    பொறுக்க மாட்டாத இளைஞன் அந்த ஞானி இருக்கும் இடம்தேடிச் சென்று, பூதத்தின் தொந்தரவிலிருந்து தப்பிக்கும் வழி கேட்டான். ஞானி புன்னகைத்துக்கொண்டே, "உன் அரண்மனையிலிருக்கும் தூண்களில் ஒரு இரும்புத் தூணை நன்கு வழவழப்பாக இழைத்து, அதில் ஏறி இறங்கிக் கொண்டே இருக்கச் சொல்!; இந்தச் செயலை நான் சொல்லும்வரை நிறுத்தக்கூடாது! என்பதையும் உத்தரவாகச் சொல்லிவிட்டு, நீ உன் வேலையைப் பார்!" என்றார். தன்மனத்தைத் தானே கவனித்துப் பயன்படுத்தி வேலை செய்திருக்கலாம்; இந்த பாழாய்ப்போன பூதத்திடம் ஒப்படைத்தது தான் தவறு! என்பதை நன்கு உணர்ந்து கொண்டான் இளைஞன்.

    நல்ல மனிதர்களின் மனத்தில் உண்டாகும் சிந்தனைகள் நல்ல இடைவெளிவிட்டுத் தோன்றினாலும், அது விதை, வேர்பிடித்து முளைத்து மரமாகும் தன்மைபோல நாலுபேருக்குப் பயன்படும். ஆனால் வெறுமையாக்கி விடப்பட்ட மனம் பூதங்களின் ஆக்கிரமிப்பில் வேண்டத்தகாத செயல்களால் விபரீத விளைவுகளை விரைவாகவே ஏற்படுத்தும். ஒளியற்ற இடங்களை இருள் சென்று ஆக்கிரமித்துக் கொள்வதைப்போல, வெற்று மனங்களை எதிர்மறைச் சிந்தனைகள் ஆக்கிரமித்துக்கொண்டு , பேயாட்டம் போடத் தொடங்கிவிடும்.

    மனம் என்பதே எல்லாத் திட்டமிடல்களுக்கும் ஆதாரமாகத் திகழ்ந்து, மனிதனின் எல்லாச் செயல்பாடுகளுக்கும் அடிப்படை ஊக்கியாகத் திகழ்கிறது. மனத்தைச் செம்மையாக வைத்துக்கொண்டால் நமது வாழ்க்கை ஒழுகலாறுகளும் செம்மையாகவே அமைந்து விடும். சிலர் மிக நன்றாகத் திட்டமிடுவார்கள்; செயல்பட மாட்டார்கள். சிலர் மிக அழகாகச் செயல்படுவார்கள்; ஆனால் திட்டமிடுதலில் கோட்டை விட்டுவிடுவார்கள். இந்த இருவகைக் குறைபாடுகள் உள்ளவர்களும் சோம்பேறிகளே. சோம்பலின் குழந்தைகளே காலம் தாழ்த்துதல், ஆர்வமின்மை, பொறாமைப்படுதல், அமைதி இழத்தல் போன்ற அவல நிலைகள் ஆகும்.

    மனத்தை எப்போதும் செயல்பாட்டிலேயே வைத்திருப்பவர்கள் எப்போதும் உரிய நேரத்தில் உரிய செயலை உரிய முறையில் செய்து வெற்றி காண்பார்கள்; காலத்தைத் தவற விட்டால் வாழ்வில் எல்லாவற்றையும் தவற விட்டுவிடுவோம் என்பதை அவர்கள் உணர்ந்திருப்பார்கள். வாழ்க்கையில் ஒரு நண்பனை இழக்கலாம்; மீண்டும் அதே நண்பனையோ அல்லது அவனைப்போன்ற வேறொரு நண்பனையோ சிலகாலம் கழித்து நண்பனாகப் பெற்றுக்கொள்ளலாம். சில நேரங்களில் சம்பாதித்து வைத்திருந்த பணத்தை அடியோடு இழக்க நேரலாம்; அதே வேளையில் மீண்டும் முயற்சித்து இழந்தவை அனைத்தையும் சம்பாதித்தும் கொள்ளலாம். வாழ்க்கையில் வந்த அருமையான வாய்ப்பை ஒருமுறை இழக்க நேரிடலாம். ஆனாலும் அந்த வாய்ப்பு மறுபடியும் வந்து நம்மை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதற்கான நேரம் வந்து, நாம் அந்த நேரத்தைப் பயன்படுத்திச் செயல் படாமல் வெறுமனே இருந்து தவற விட்டுவிட்டால், அந்தப் பொழுது மீண்டும் வரவே வராது; வாய்க்கவும் வாய்க்காது. அதனால் எப்போதும் எல்லாவற்றிலும் மனத்தை கவனத்துடன் செலுத்துபவர்களாக இருக்க வேண்டும்.

    மனத்தை அதன் போக்கில் விட்டுவிட்டால் நமது போக்கு நற்போக்காக அமையவே அமையாது. எப்போதும் ஒரு திட்டமிடலிலோ அல்லது செயல்படுத்துதலிலோ நம்முடைய மனத்தை ஈடுபடுத்திக்கொண்டே இருந்தால், நம்முடைய எண்ணத்தில் தேவையற்ற பொறாமைகளோ பரபரப்போ வந்து சேராது. எந்தச் சிந்தனையுமற்று, எந்தச் செயலுமில்லாத மனத்தில்தான் வக்கிரமான சிந்தனைகள் எல்லாம் புற்றுக்கட்டிக் குடித்தனம் நடத்தத் தொடங்கிவிடும். எதிர்மறை எண்ணங்கள் பெருகப் பெருக நாம் எதிர்முக நாயகனாய் உருமாறி எல்லோராலும் வெறுக்கப்படுபவராக மாறிப்போவோம். காலியாக உள்ள மனத்தில் பேய் பிசாசுகள் குடியேறிவிடுவதால் அவை இடும் கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டிய கட்டாயம் உண்டாகிவிடும். உலகில் எந்தப் பேய்தான் ஆக்கபூர்வமான செயல்களுக்கு ஆதரவளித்ததாய் வரலாறு இருக்கிறது?.

    வாழ்வில் ஒவ்வொரு மனிதரும் அவர வருக்கான லட்சியங்களை வகுத்துக்கொண்டு, அந்தந்தக் குறிக்கோளை நோக்கிய செயல்களில் தொடர்ந்து ஈடுபட வேண்டும். 'குறிக்கோள், லட்சியம் என்றெல்லாம் சொல்லிக் கொள்ளும்படி எதுவும் என்னிடத்தில் இல்லை; நான் ஒரு சாதாரண மனிதன்' என்று கூறிக் கொள்பவர்கள்கூட, அன்றாட வாழ்வியல் தேவைகளான உணவு உடை உறைவிடம் ஆகியவற்றிற்காகக் கட்டாயம் உழைத்தே ஆகவேண்டும். அதுவும் தனக்காக மட்டுமன்றித், தன்னைச் சார்ந்து வாழக்கூடிய குடும்ப உறுப்பினர்களுக்காகவும் அவன் பொருளீட்டியே ஆகவேண்டும். இந்த அடிப்படைத் தேவைகள் அனைத்திற்காகவும் தரமான வகையில், நேர்மையான முறையில் அதன் ஆக்க பூர்வமான செயல்களில் மனத்தை ஈடுபடுத்தித் திட்டமிட வேண்டும்.

    ஆக்கபூர்வமான வழிகளில் ஈடுபடுவதற்கு இயலாமல் வெறுமனே காலியாக மனத்தை வைத்திருந்தால் எதிர்மறையான அதிர்வுகளுக்கும் சிந்தனைகளுக்கும் இடம் கொடுத்து விட நேரிடும். அதனால் வாழ்க்கையில் தொந்தரவுகளைத் தவிர வேறெதுவும் நிகழாது. ' குறிக்கோள் இலாது கெட்டேன்' என்று ஓர் அருளாளர் குறிப்பிடுவது போல, சும்மா வெறுமனே இருக்கும் மனத்திற்குள் சேட்டைகள் குடியேறி, வாழ்வின் அருமையான கொள்கைகளை வரையறுக்க முடியாமல் கோட்டைவிட நேரிட்டுவிடும்.

    ஒரு சிறிய விருப்பம், பிறகு ஆசையாக மாறி, அதுவே நியாயமான நெறியில் இலட்சியம் அல்லது குறிக்கோளாக உருவெடுக்கும்போது, அதனை அடைவதற்கு, மனத்தின் அனைத்து சக்தியையும் ஒன்றுதிரட்டி, சதா சர்வகாலமும், அதனை அடைவதற்காகவே ஈடுபடுத்த வேண்டும். எந்நேரமும் இயங்கிக் கொண்டிருக்கும் மனம் மேற்கொள்ளுகிற முயற்சிகள், தெய்வத்தால் ஆகாத காரியத்தையும் ஆகவைக்கும் வலிமை பெற்றுவிடும். மனத்தை நம் கைவசமிருந்து நழுவ விட்டுவிட்டால், வேலையற்ற வெற்றுமனம், பூதங்களின் கைப்பாவையாகி நம்மைப் படுபாதாளத்தில் தள்ளிவிடும்.

    மனம் செய்வோம்! அதை தினம் செய்வோம்!

    தொடர்புக்கு 94431 90098

    • வாடகைவீடுகள் மாற்றி-மாற்றிச் சலித்துப் போன என் மனைவி சந்திராவின் எண்ணமும் அதுவாகவே இருந்தது.
    • மதியச் சாப்பட்டுக்குப் பின்னால் கூடத்தில் நான் படுத்திருந்தபோது, அடியில் என்னவோ சத்தம் கேட்பதை உணர்ந்தேன்.

    இந்தத் தொகுப்பு வீடுகளை அரசாங்கம் கட்டி, விற்பனைக்குத் தந்து ஆண்டுகள் பதினைந்து முடிந்துவிட்டன. ஒப்பந்தக்காரர்கள், யாருக்கெல்லாம் கொடுக்கவேண்டி இருந்ததோ அவை அனைத்தையுமே வீட்டுக்குப் பயன்படுத்திய பொருட்ளின் தரத்தில்தான் வைத்திருப்பார்கள் என்று நண்பர்கள் சொன்னார்கள். என்றாலும், நான் பிடிவாதமாய் வீட்டுக்கடனுக்கு விண்ணப்பித்து இந்த வீட்டை வாங்கினேன். பணி ஓய்வுக்குப் பிறகாவது சொந்தவீட்டில் படுத்துறங்க வேண்டும் என்பது என் முடிவாக இருந்தது. வாடகைவீடுகள் மாற்றி-மாற்றிச் சலித்துப் போன என் மனைவி சந்திராவின் எண்ணமும் அதுவாகவே இருந்தது.

    இத்தனை ஆண்டுகளின் பின் வீடு, அதன் வேலையைக் காட்டத் தொடங்கி விட்டது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வீட்டுக்கு ஏதாவது வைத்தியம் பார்க்கவேண்டி இருக்கிறது.

    நேற்றுமுன்தினம் மதியச் சாப்பட்டுக்குப் பின்னால் கூடத்தில் நான் படுத்திருந்தபோது, அடியில் என்னவோ சத்தம் கேட்பதை உணர்ந்தேன். உறக்கம் கலைந்து லேசாகப் பயம் கூட வந்துவிட்டது. சிறிது நேரத்தில் `பட்' என்று ஊசிவெடிச் சத்தம் கேட்டது. பாயை விலக்கிப் பார்த்தபோது தரையில் போடப்பட்டிருந்த `டைல்ஸ்' வீங்கித் தெறிப்பு கண்டிருந்தது!

    அது என்னவோ எனக்கு அப-சகுனமாய்த் தோன்றவே என் நண்பனான பொறியாளர் ஜீவாவை வரவழைத்தேன்.

    அவன் வந்து பார்த்துவிட்டு, ``இதுல பயப்படுவதற்கு ஒண்ணுமில்ல வாசு... இது கற்கள் பதிக்கும் போதே கவனிச்சிப் பதிக்காததால் ஏற்படும் பாதிப்பு... உள்ளே காற்று வாங்கி இருக்கும்... அது வெப்பமாகி இந்த மாதிரி கற்கள் தெறிச்சிடும்...!"

    ``நல்லா சொல்லுங்கண்ணே... இவங்க மனசைப் போட்டுத் தேவை இல்லாமக் குழப்பிக்கிட்டே இருக்காங்க...!"-என்றாள் சந்திரா.

    ``இந்தத் தொகுப்பு வீடுகள் எல்லாம் கட்டிப் பதினைந்து வருசங்களுக்கு மேல் ஆய்ட்டுது ஜீவா...! இத்தனை வருடங்கள் அந்த வெப்பம் பூமியிலேயே தங்கி இருந்துச்சா?"

    ``வருடங்கள் ஆனால் என்ன வாசு?...எல்லா வீடுகளிலும் இப்படி நடக்குமுன்னு சொல்லமுடியாது... நாலஞ்சி வீடுகளில் நானே `டைல்ஸ்' மாற்றியும் இருக்கேன்!" என்றான் ஜீவா.

    ``சரிய்யா, எனக்கு உடனே `டைல்ஸ்' மாற்றிக் கொடுத்திடு... இதைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கலை... என்னென்னவோ தப்பான எண்ணங்கள் வருது!"

    ``ஒண்ணும் கவலைப் படாதே, மாத்திடலாம்... ஆனா இதே மாதிரி கலர்ல `டைல்ஸ்' கிடைக்குமுன்னு சொல்லமுடியாது...!"

    ``அது பரவாயில்லை ஜீவா... இதில் மேட்சிங்கெல்லாம் பார்க்க முடியாது... எனக்கு சீக்கிரம் வேலை முடிந்தால் போதும்."

    பட்டுக்கோட்டை ராஜா

    ``நாளைக்கே ஆட்களை அழைச்சிட்டு வர்றேன் வாசு!...வேலையை முடிச்சிட்டுப் பணம் வாங்கிக்குறேன்!"

    சொன்னபடியே மறுநாள் இரண்டு பேரை ஜீவா வீட்டுக்கு அழைத்து வந்து விட்டான். அவர்கள் வருவதற்கு முன்பே தேவையான பொருட்கள் ஆட்டோவில் வந்து இறங்கி விட்டன. இதுதான் ஜீவா ஸ்டைல்; `முதலில் பணி-அப்புறம் மனி!'

    வேலைக்கு ஜீவா அழைத்துவந்த ஆட்கள் இருவருமே வடக்கத்தியர்கள். இருவருக்கும் வயது இருபதுக்கு மேல் இருக்காது. ஒருவன் நல்ல நிறமாய் இருந்தான். அடுத்தவன் கறுப்பு. காதுகளில் சின்ன வளையங்கள். கைகளில் செம்பில் ஒரு காப்பு. களையான முகம். கறுப்பு சட்டை-முக்கால் பேண்ட். அவர்களுக்கு என்ன கஷ்டமோ? பிழைப்புக்காக குடும்பத்தார்களை விட்டுத் தொலைவில் வந்து வேலை பார்க்கிறார்கள்.

    சிகப்பாய் இருந்தவன் சந்திராவை உற்றுப் பார்த்தான். அது எனக்குப் பிடிக்கவில்லை. -``என்ன ஜீவா, நீயும் இவைங்கள வேலைக்கு வச்சிருக்கியா?"

    ``ஆமாம் வாசு... என் ஆபீசுக்குப் பக்கத்துலயே சின்னதா கீற்றுக் கொட்டகை போட்டுக் கொடுத்திருக்கேன்... இவைங்களே சமைச்சி சாப்பிட்டுக்கிறாய்ங்க... ஆறு பேர் தங்கி இருக்காய்ங்க... இதுவரை எந்தப் பிரச்சனையும் வரலை... என்ன, பாக்கு போடுவாய்ங்க... ஆனா வேலை சுத்தமா இருக்கும்...!

    ``இவைங்களுக்கு தமிழ் தெரியுமா?... இவைங்க பேர் என்ன?"

    ``நாம சொல்ற சேதியைப் புரிஞ்சுக்குவாய்ங்க... சிகப்பா இருக்குறவன் பேரு விகாஸ்... கறுப்பன் பேரு கிருஷ்ணா... இவைங்க குடும்பங்கள் பெரிசு… வீடியோவில் பார்த்தேன்... ஏழைங்க... சாப்பாட்டுக்கு வழியில்லாமத்தான் இங்கே வந்திருக்காய்ங்க... வாரா வாரம் வீட்டுக்குப் பணம் அனுப்பிடுவாய்ங்க!"

    ``இப்படியே போனா எதிர்காலத்துல என்ன நடக்குமோன்னு எனக்குப் பயமா இருக்குது ஜீவா... நம்ம ஆளுகளுக்கு எதிர்காலத்துல வேலை கிடைக்குமாங்கிற கேள்வி வருது...! காலம்தான் இதுக்குப் பதில் சொல்லணும்... சரி ஜீவா, இவைங்க நல்ல பயல்கள்தானே?"

    ``நல்லவைங்கதான்... பாக்கு மட்டும் போடுவாய்ங்க... அதைக் கண்டுக்காம விட்டுரு!" என்ற ஜீவா, அவர்களுக்குச் செய்யவேண்டிய வேலையைத் தமிழிலேயே விளக்கி விட்டுக் கிளம்பினான். அவனுக்கு நான்கு இடங்களில் வேலை நடந்து கொண்டிருக்கிறது.

    ``சரிடா, நான் கிளம்புறேன்... அவைங்களுக்கு நீ எதுவும் பணம் தர வேண்டாம்... எல்லாம் நான் பார்த்துக்குறேன்... மதியச் சாப்பாட்டுக்கு அவைங்களே சப்பாத்தி சுட்டுக் கொண்டு வந்திருப்பாய்ங்க!"- என்ற ஜீவா புல்லட்டைக் கிளப்பினான்.

    ஜீவா போன உடனே கிருஷ்ணா அலைப்பேசியை முடுக்கி அதில் ஏதோ இந்திப் பாட்டை ஓடவிட்டான். விகாஸ் உடைந்த டைல்ஸ்களை சுத்தம் செய்து இரும்புச் சட்டியில் அள்ளினான். அள்ளியபின்பு என்னைப் பார்த்தான். `இதை எங்கே கொட்டுவது?' என்ற கேள்வி அவன் விழிகளில் இருந்தது. நான் வெளியே ஓரிடத்தைக் கைக்காட்டினேன். அங்கே கொட்டிவிட்டு வந்தான்.

    கற்கள் பதிக்கவேண்டிய பகுதியை டேப்பில் அளந்து பையிலிருந்த பேப்பரில் குறித்துக் கொண்டான். வாங்கி வந்திருந்த டைல்ஸ் சற்றே அளவு பெரிதாய் இருந்தது. முன்பு போடப்பட்டிருந்த கற்கள் ஓரடிக்கு ஒன்று என்ற அளவில் இருந்தன. புதிய கற்கள் இரண்டுக்கு இரண்டு என்ற அளவில் இருந்தன. அதனால் கற்களை அளவு குறைக்க, `கட்டிங் - மெஷினை' தயார் செய்த விகாஸ், `ப்ளக்-பாயிண்ட்' தேடி மீண்டும் என்னைப் பார்க்க, நான் கண்களால் காட்டினேன். அதில் செருகப் பட்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டியின் வயரைக் கழற்றி விட்டு, மெஷினின் வயர்-முனைகளை பாந்தமாய்ச் செருகினான்.

    கட்டிங்-பிளேடு சுழல்கிறதா என்று ஒருமுறை ஓடவிட்டு அணைத்தான். பதிக்கவேண்டிய இடத்தின் அளவிற்கேற்ப புதிய கற்களை வெட்ட முனைந்தவன் என்னைப் பார்த்து, `தூசி பறக்குமென்று செய்கையால் உணர்த்தி அறைக்குள்ளே போகச் சொன்னான். அடுக்களைக் கதவுகளையும் மூடச் சொன்னான்.

    அடுக்களைக் கதவை நான் மூடப் போனபோது, ``என்னங்க, டீ சாப்பிட்ருங்க!" என்ற சந்திரா. ``அந்தப் பசங்களுக்கும் டீ போட்டிருக்கேன்... கொடுத்திடவா?" என்று என்னைக் கேட்டாள்.

    ``போட்டீன்னா கொடு!" என்றேன்.

    சந்திரா கொடுத்த தேநீர் டம்ளரை வாங்கும் போதும் விகாஸ் அவளைப் பார்த்த பார்வை எனக்குப் பிடிக்கவில்லை. கிருஷ்ணா யதார்த்தமாய் இருந்தான். வடக்கத்தியர்கள். எல்லாவிதத்திலும் காய்ந்து கிடப்பவர்கள். நாம்தான் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். அடுக்களைக்குள் நுழைந்து சந்திராவைத் தாழ்வான குரலில் எச்சரித்தேன்.

    ``நான் குளிக்க போறேங்க… நீங்க கவனிச்சிக்கங்க!"- என்ற சந்திரா மாற்றுக்கு நைட்டி மற்றும் உள்ளாடைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள்.

    நான் எனது அறைக்குள்ளே வந்ததும் மெஷின் ஓடும் சத்தம் கேட்டது. என்றாலும் என் காதுகளை நான் கூடத்தின் பக்கத்திலேயே வைத்திருந்தேன். கிருஷ்ணா சிமெண்டைப் பேஸ்ட்டுடன் கலந்து குழைத்தான்.

    மெஷின் நிறுத்தப்பட்டதும் எனக்கு அறைக்குள் இருப்பு கொள்ளாமல் கூடத்துக்கு வந்தேன். இன்னும் தூசி முற்றிலும் வெளியேறவில்லை என்று விகாஸ் கை காட்டினான். நான்,``பரவாயில்லை" என்றேன்.

    வெட்டிய கற்களைத் தன் கைக்கு வாகாக எடுத்து வைத்துக் கொண்ட விகாஸ், அதன் பின் புறத்தில் சிமெண்ட்டை கரணையால் பூசினான். பள்ளத்திலும் கலவையைக் கொட்டிக் கல்லை அவன் வைக்கப் போன வேளையில் குளியலறையில்,`தொம்' என்ற சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து சந்திராவின்,``அம்மா!" என்ற அலறல்.

    நான் ஓடிப்பார்த்தேன். குளியலறைக் கதவு உள்ளே நாதாங்கி போடப் பட்டிருந்தது.

    நான் கதவைத் தட்டினேன். ``சந்திரா, சந்திரா... என்னாச்சு?"

    உள்ளிருந்து எந்தச் சத்தமும் வரவில்லை. எனக்குப் பயத்தில் உடம்பு நடுங்கத் தொடங்கியது.

    என் பின்னால் வந்த விகாஸ் கதவைத் தட்டினான். பிறகு ஸ்குரூ-டிரைவரை கதவிடுக்கில் விட்டு உள் பக்கத்து நாதாங்கியை விலக்கித் திறந்து விட்டான். நான் உள்ளே நுழைந்தேன். சந்திரா மூர்ச்சையாகி கிடந்தாள்.வெளியே தூக்கிவந்து முகத்தில் தண்ணீர் தெளித்து, ``சந்திரா, சந்திரா" என்று கன்னங்களில் தட்டினேன். விழிகள் லேசாய்த் திறந்தாளே ஒழிய, பேச்சு வரவில்லை. எனக்குப் பதற்றமானது.

    விகாஸ், ``சார், டாக்டர்!" என்றான்.

    நான் எனது ஸ்கூட்டியைத் தெருவில் இறக்கினேன். மருத்துவரிடம் போகுமுன்னால் அலைப் பேசியில், ஜீவாவை அழைத்துத் தகவல் சொன்னேன். மருத்துவ மனைக்கு வரச்சொன்னேன்.

    நான் ஸ்கூட்டியை முடுக்க, விகாஸ், சந்திராவை அலாக்காய்த் தூக்கிவந்து என் பின்னால் அமர்த்தி, அவன் அவளுக்குப் பின்னால் உட்கார்ந்து பிடித்துக் கொண்டான். கிருஷ்ணாவிடம் வீட்டை ஒப்படைத்துவிட்டு நாங்கள் மருத்துவ மனைக்கு விரைந்தோம்.

    மருத்துவமனையிலும் விகாஸ்தான் சந்திராவைத் தூக்கி ஸ்ட்ரெச்சரில் கிடத்தினான்.

    மருத்துவர் எனக்கு நன்கு பழக்கமானவர்தான். பரிசோதித்தபின்,``இது அதிர்ச்சியில் உண்டான மயக்கம்தான் சார்…ஒண்ணும் பயப்பட வேண்டாம்…!" என்று டாக்டர் சொன்னபோது சந்திராவும் முழுதாய்க் கண்கள் திறந்து விட்டாள்.

    ``என்னம்மா, எப்படி இருக்கீங்க?" - டாக்டர் கேட்டார்.

    ``நல்லா இருக்கேன் டாக்டர்... நான் எப்படி இங்கே வந்தேன்?"-என்று கேட்டாள் சந்திரா.

    ``பாத்-ரூமுல வழுக்கி விழுந்து மயக்கமாய்ட்டே!" என்றேன் நான்.

    அதற்குள் ஜீவாவும் அங்கே வந்துவிட்டான்.``என்னம்மா, எப்படி இருக்கே?"

    ``நல்லா இருக்கேண்ணே!"

    ``வாசுதாம்மா ரொம்ப பயந்திட்டான்!"

    ``ஓகே சார், நான் கிளம்புறேன்!" - என்றார் டாக்டர்.

    ``தேங்க் யூ வெரிமச் டாக்டர்... இவங்களை வீட்டுக்கு அழைச்சிட்டுப் போகலாமில்லையா?"

    ``தாராளமா!"என்ற டாக்டர் விலகி நடந்தார்.

    ``ஜீவா, நான் இந்த விகாசுக்குதாண்டா நன்றி சொல்லணும்... இவன்தான் பாத்-ரூம் கதவைப் புத்திசாலித்தனமாத் திறந்தான்... இவனைப் போய் நான் சந்தேகப் பட்டேன்!"

    ஜீவா, விகாசிடம் என்னவோ இந்தியில் சொல்ல, அவன் சொன்ன பதில் எனக்குப் புரியவில்லை.

    ``வாசு, இவன் என்ன சொல்றான்னு புரிஞ்சதா?... இவனோட அம்மா, நம்ம சந்திரா மாதிரியே இருப்பாங்களாம்... அதான் இவனும் பயந்திட்டேன்னு சொல்றான்!"

    நான் குற்ற உணர்ச்சியெல்லாம் விலகி, விகாசை அன்போடு கட்டிக் கொண்டேன்.

    • அய்யாவை பின்பற்றி தங்களை ‘அய்யாவழி மக்கள்’ என அழைத்துக்கொள்வதில் பூரிப்படைந்தனர்.
    • சுவாமிகளின் இயக்கத்தால் சமயமாற்றம் அதிக அளவில் நடைபெறுவது தடை செய்யப்பட்டது.

    பேய், பிசாசு, பில்லி, மந்திரம், மை என்ற பல்வேறான மூட நம்பிக்கைகளில் உழன்ற பாமரர் கூட்டத்திற்கு நீங்கள் ஒரே நினைவுடன் வாழ்க்கையை நடத்துங்கள்; அந்த மாஞால நினைவுகள் எல்லாம் மாயை அன்றி வேறல்ல' என்று அன்புடனும், உறுதியுடனும் கூறி அவைகளின் மேலிருந்த நம்பிக்கையை ஒழித்து, புதுமையான வாழ்விற்கு மக்களை வழி நடத்திச் சென்றார் அய்யா வைகுண்டர். மேலும் அக்காலத்தில் மலையரசர் என்ற காணிக்காரர்கள்தான் பேய்களை மந்திரங்களால் ஓட்டுவார்கள். அவர்களிடமிருந்து மந்திரங்களை பறித்து விட்டதாகவும், இனிமேல் அவர்களிடம் போக வேண்டாமென்றும் மக்களைத் தைரியப்படுத்தினார்.

    திருக்கோவில்களில் வழிபாடு செய்ய வேண்டி அமர்த்தப்பட்டவர்கள் வல்லுடும்பாகப் பற்றிக்கொண்டு மேட்டுக்குடியினர் என்ற போர்வையில் நடமாடினர்; இறைவனுக்கு உரிமை சுற்றம் பூண்டனர்; மற்றவர்களை ஒதுக்கினர்; எளியோரை எட்ட நிறுத்தினர். திருவிதாங்கூரில் திருக்கோவில்களின் உள்ளே மட்டுமின்றி அவைகளின் சுற்றுப்புற நடை பாதைகளில் கூட காலடி வைக்க முடியாத நிலையில், ஒடுக்கப்பட்ட இன அப்பாவி மக்கள் தங்களின் பக்தி மிகுதியால் தொலைவில் நின்று காணிக்கைகளை எறிந்து செலுத்தி பூசாரிகளால் வீசி எறியப்படும் இலைக்கட்டுப் பிரசாதங்களை பெற்று மகிழ்ந்தனர். தாழ்த்தப்பட்ட மக்களின் இவ்விழி நிலையை போக்க வைகுண்ட சுவாமிகள் விரும்பினார். திருச்செந்தூரில் விஞ்சை பெற்ற உடனே முருகன் கோவில் நடைமுறைகளுக்கெதிராக வைகுண்டர் குரல் எழுப்பினார்.

    "காணிக்கை வேண்டாதுங்கோ

    கைக்கூலி கேளாதுங்கோ

    பூசை ஏறாதுங்கோ

    பலி தீபம் ஏறாதுங்கோ

    பொய் கொண்ட தேரோட்டம்

    புனக்காரம் ஏறாதுங்கோ

    தாதி கை காட்டல்

    சப்பிறங்கள் ஏறாதுங்கோ

    ஆலத்தி கை விளக்கு

    ஆராட்டு பாராதுங்கோ

    சாலத்திப் பாராதுங்கோ

    சகலப் பூவேறாதுங்கோ

    கொளுந்து மஞ்சணை மாலைக்கும்

    பையுடன் சந்தனமும்

    விழுந்து நமஸ்காரம் முதல்

    வேண்டாமென்று சொல்லிடுங்கோ

    ஓவென்று உரையாதுங்கோ

    ஓமமுறை ஏறாதுங்கோ

    தீவரணைக் காணாதுங்கோ

    திருநாளைப் பாராதுங்கோ"

    என்று எச்சரிக்கை விடுத்தார்.

    மக்களின் வழிபாட்டு முறைகளில் காணப்பட்ட மூட நம்பிக்கை நிறைந்த சடங்கு முறைகளையும், அர்த்தமற்ற ஆசாரங்களையும் வீண்செலவுமிக்க விழா நிகழ்ச்சிகளையும் கைவிடுமாறு வற்புறுத்தினார். காணிக்கை, காவடி, பூசை, தீபாராதனை, தேரோட்டம், தாதி கை காட்டல், சப்பரங்கள், ஆராட்டு என்பன போன்றவற்றை நீக்கிவிடுமாறு கேட்டுக்கொண்டார். இறைவழிபாட்டு ஊர்வலங்களில் மேளதாளங்கள் ஒலித்திட, தேவதாசியர் ஆடல்பாடல்களுடன் அமர்க்களப்படுத்தினர். சுவாமிகள் இத்தகைய செயல்களை அறவே வெறுத்தார்.

    "பம்பை பரத்தை பகட்டு கைகாட்டலெல்லாம்

    எம்பரனுக்கேற்ற இயல்பல்ல மாமுனியே"

    என அகிலம் சுவாமிகளின் வெறுப்பினை வெளிக்காட்டுகிறது.

    ஒடுக்கப்பட்ட மக்களின் நலன் காத்திட வைகுண்ட சுவாமிகள் செய்த உயரிய பணிகள் அவரை 'அய்யா' என உரிமையோடும் அன்போடும் மக்கள் நெஞ்சங்களில் ஒலித்துக் கொண்டிருக்குமாறு செய்தன. மக்கள் அவரை கடவுளின் ஓர் அவதாரம் எனக் கருதினர். அவராற்றிய அற்புதங்கள் அவரது அன்பர்களை நல்வழிப்படுத்திடவே அரங்கேறின. அய்யாவை ஆண்டவனாகவே அவர்கள் கண்டனர். முதற்பொருளே தங்கள் முன்னிலையில் வந்ததாக எண்ணி பெருமிதம் அடைந்தனர். அய்யாவை பின்பற்றி தங்களை 'அய்யாவழி மக்கள்' என அழைத்துக்கொள்வதில் பூரிப்படைந்தனர்.

    அய்யாவழி மக்கள் அய்யாவை வழிபடுதலின்றி பிற தெய்வங்களை வழிபடுதலில் ஆர்வமின்றி இருந்தனர். தங்களுடைய வழிபாட்டு நெறிகளுக்கேற்ப சில பதிகளையும் ஆயிரக்கணக்கான நிழல்தாங்கல்களையும் தோற்றுவித்தனர். இந்து ஆலயங்களில் சென்று வழிபட உரிமை மறுக்கபட்டவர்களின் குறையை தீர்க்கும் வண்ணம் வைகுண்ட சுவாமிகளே பஞ்சப் பதிகளை எழுப்புவித்தார். அவை தோப்புப்பதி (சாமி தோப்பு), அம்பலப்பதி (மூலகொண்டப்பதி), முட்டப்பதி, தாமரைகுளம் பதி, பூப்பதி.

    இவை அய்யா வழி மக்களின் புனிதமிக்க வழிபாட்டு தலங்களாக மாறின. இவை தவிர ஊர்தோறும் உள்ள நிழல்தாங்கல்களும் மக்களின் ஆன்மீக தேவையை பூர்த்தி செய்தன.

    வைகுண்ட சுவாமிகளின் சீர்திருத்த இயக்கம் கிறிஸ்தவ மத போதகர்களுக்கு ஒரு சவாலாகவே விளங்கியது. சுவாமிகளின் வருகையால் அவர்களின் பணியில் தேக்கம் ஏற்பட்டது. வைகுண்டர் தனது இயக்க பணியில் எம்மதமும் சம்மதம் என கொண்டு, அனைத்து மக்களிடமும் அன்பு காட்டினாரே அல்லாமல் சாதி, மதம் பாராட்டி எப்பிரிவினரிடமும் காழ்ப்புணர்ச்சி காட்டவில்லை. எனினும் தென்திருவிதாங்கூர் மண்ணில் கிறிஸ்தவம் வேரூன்றி, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக தழைத்து பரவிவரும் காலத்தில் கிறிஸ்தவ மதப்போதகர்கள் இந்து மதம் விட்டு கிறிஸ்தவ மதத்திற்கு அதிக மக்களை மதமாற்றம் செய்து கொண்டிருந்த வேளையில் சுவாமிகளின் இயக்கம் ஒரு பெரிய தடைக்கல்லாக அமைந்துவிட்டது. எனவே, கிறிஸ்தவ போதகர்கள் ஆத்திரமடைந்தனர். வைகுண்டரின் இயக்கத்தை வெகுவாக சாடினர். அவரை பரம எதிரியாக கருதினர்.

    கிறிஸ்தவ சமய போதகர்கள் உரைத்த அவதூறுகள் யாவற்றையும் சுவாமிகள் சகித்துக்கொண்டார். எனினும் கிறிஸ்தவத்தின் வருகையால் ஏற்பட்ட பாதகமான விளைவுகளை விமர்சித்தார். சமுதாய அமைப்பில் சாதிகள் ஏற்படுத்திய பிரிவினைகளையும் கடந்து சமயப்பிரிவினைகள் ஏற்படுத்திய பிரச்சனைகள் கண்டு சுவாமிகள் வருத்தமுற்றார்.

    புதிய சமயத்தின் வருகையால் சாதி என்ற பெயரில் நிலவிய ஒருவிதமான சிறு ஒற்றுமை கூட சிதறடிக்கப்பட்டது; உறவுகள் ஊஞ்சலாடின; குடும்ப அமைப்பில் கூடபிளவுகள் துளிர்விடலாயின. சமய நிலையினை அடிப்படையாக கொண்டு சமுதாய நிகழ்வுகளில் கூட பிரிவினை பேதங்கள் இடம் பெறலாயின. சகோதரத்துவமும், ஒற்றுமையும், சகிப்புத்தன்மையும் ஒரே சாதியில் கூட சிறிது சிறிதாக மறையத்தொடங்கின. இப்பிரிவினையை சுவாமிகள் வன்மையாக கண்டித்தார்.

    "விருச்சமுள்ள நீசன் வேசை நசுறாணியவன்

    வையகங்களெல்லாம் வரம்பழித்து மானீசன்

    நெய்யதிய சான்றோர்கள் நெறியை யெல்லாம் குலைத்து

    பேரழித்து தர்மம் பெருமையெல்லாம் தானழித்தான்"

    என சமுதாய கட்டுக்கோப்பானது புதிய சமயப்போதகர்களால் அழிக்கப்பட்டதை கடுமையாக விமர்சித்தார்.

    சுவாமிகளின் இயக்கத்தால் சமயமாற்றம் அதிக அளவில் நடைபெறுவது தடை செய்யப்பட்டது. வைகுண்ட சுவாமிகளின் இயக்கம் கிறிஸ்தவம் பரவிட ஒரு தடைக்கல்லாக அமைந்தது. சுவாமிகள் நடத்திய சமய சீர்திருத்தம் அன்றைய சமய வாழ்வில் நிலவிய மூடப்பழக்க வழக்கங்களையும், குறைகளையும் இடித்துரைத்ததுடன், எளியதோர் சமய வாழ்வினை சமைத்தது. அதன் விளைவாக சுவாமிகளை பின்பற்றி, திருவிதாங்கூர் சமய வரலாற்றில் இந்து சமயத்துள்ளாக ஒரு புது சமயப் பிரிவு தோன்றியது. பிராமணியத்திற்கு எதிராக, பாமரரும் புரிந்து கொள்ளத்தக்க எளிமையான சமய நெறியினை வழங்கியது. தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தது. இறைவழிபாட்டில் இடைத்தரகர்களாக செயல்படும் புரோகிதர்களை வெளியேற்றியது. மொத்தத்தில், புதியதொரு, புதுமையான சமயநெறியினை அய்யா அருளினார். அய்யாவின் சமய சீர்திருத்தம் கிறிஸ்தவம் பரவுவதை ஓரளவு தடைப்படுத்தியது.

     

    வைகுண்ட சுவாமிகளின் சீர்திருத்த இயக்கம் சமுதாயத்தில் பற்பல மாற்றங்கள் ஏற்பட காரணமாய் அமைந்தது. சுவாமிகளின் காலத்திலும் அதன் பின்னரும் நிழல் தாங்கல்கள் பெருவாரியாக தோன்றலாகி மக்களிடையே சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தின. அடிப்படை உரிமையினை பெறும் நோக்கினில் தோள் சேலைப்போராட்டம் நடத்தப்பட்டது. ஆலய நுழைவுப் போராட்டம் பல்வேறு ஆலயங்களில் நடந்தேறியது. எதிர்காலத்தில் நாராயண குரு, ராமலிங்க அடிகள் போன்ற சீர்திருத்தப் பெரியார்களின் இயக்கங்களில் வைகுண்ட சுவாமிகளின் சீர்திருத்தக் கோட்பாடுகள் எதிரொலிக்கலாயின.

    சுவாமிகள் தனது கொள்கைகளை பரப்பிட நிழல் தாங்கல்கள் பலவற்றை நிறுவினார் என்பதை முன்னர் அறிந்தோம். நிழல்தாங்கல்கள் அதிக எண்ணிக்கையில் ஏற்படுத்திட வேண்டுமென்பதில் சுவாமிகள் மிக்க நாட்டம் கொண்டிருந்தார். அதற்காக தனது சீடர்களை பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி தனது கொள்கைகளை மக்களிடையே எடுத்துக்கூறி, நிழல் தாங்கல்களை நிறுவிடுமாறு பணித்தார். சீடர்களும் தங்கள் பணிகளை செவ்வனே நிறைவேற்றினர். அனைத்து சமூகத்தவர்களும் சுவாமிகளின் கட்டளையை ஏற்று ஏராளமான நிழல்தாங்கல்களை நிறுவினர். சுவாமியின் சீர்திருத்தம் மக்கள் புரட்சிக்கு வித்திட்டது. அதை பற்றி வரும் தொடரில் காண்போம்....

    ×