என் மலர்tooltip icon

    ரியோ ஒலிம்பிக்ஸ்-2016

    ரியோ ஒலிம்பிக் பேட்மின்டன் போட்டியில் பி.வி.சிந்து மோதும் அரை இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது. இதில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைப்பாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறார்கள்.
    ரியோ ஒலிம்பிக்கில் பேட்மின்டன் போட்டியில் இந்தியாவை சேர்ந்த 7 வீரர்- வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் மனு அட்ரி- சுமித் ரெட்டி ஜோடி தொடக்க சுற்றில் தோற்று நாக்-அவுட் வாய்ப்பை இழந்தது.

    இதேபோல பெண்கள் இரட்டையர் பிரிவிலும் ஜூவாலா கட்டா- அஸ்வின் ஜோடியும் தொடக்க சுற்றில் தோற்றது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவாலும், பெண்கள் ஒற்றையரில் தொடக்க சுற்றை தாண்டவில்லை.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் களம் கண்ட ஸ்ரீகாந்த் கடாம்பி கால்இறுதியில் சீன வீரர் லின்டானிடம் போராடி தோற்று அரை இறுதி வாய்ப்பை இழந்தார்.

    பேட்மின்டன் களத்தில் பி.வி.சிந்து மட்டும் உள்ளார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார். பி.வி.சிந்து கால்இறுதியில் 2-ம் நிலை வீராங்கனையான சீனாவின் வாங் யுஹானை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தார்.

    பி.வி.சிந்து மோதும் அரை இறுதி போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் 6-ம் நிலை வீராங்கனையான நோஜோமி ஒகுஹராவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.

    இதில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டால் தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் உறுதியாகிவிடும். மேலும் ஒலிம்பிக் பேட்மின்டனில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து முதல் இந்தியர் என்ற வரலாற்று பெருமையையும் பெறுவார்.

    ஒரு வேளை அரை இறுதியில் தோற்றால் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் மோத வேண்டும்.

    கடந்த ஒலிம்பிக்கில் சாய்னா நேவால் அரை இறுதியில் தோற்று வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் வென்றார். இதேபோல் இல்லாமல் பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 200 மீட்டர் அரை இறுதி போட்டியில் அமெரிக்க வீரர் ஜஸ்டின் கேட்லின் பந்தய தூரத்தை 20.13 வினாடியில் கடந்து இறுதிபோட்டிக்கான வாய்ப்பை இழந்தார்.
    ரியோ ஒலிம்பிக்கில் இன்று காலை ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் அரை இறுதி போட்டிக்கள் நடைபெற்றன. 3-வதாக நடந்த அரை இறுதியில் அமெரிக்க வீரர் ஜஸ்டின் கேட்லின் ஓடினார். அவர் பந்தய தூரத்தை 20.13 வினாடியில் கடந்து 3-வது இடத்தை பிடித்தார். இதனால் அவர் இறுதிபோட்டி வாய்ப்பை இழந்தார்.

    மற்றொரு அரையிறுதியில் அதிவேக வீரரான உசேன் போல்ட் பந்தய தூரத்தை 19.78 வினாடியில் கடந்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

    கேட்லின், உசேன் போல்டுக்கு சவால் கொடுக்க கூடிய வீரர் ஆவார். 100 மீட்டர் ஓட்டத்தில் அவர் வெள்ளி பதக்கம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாக்சிக்கு ரூ.2 கோடி பரிசு வழங்கப்படும் என அரியானா அரசு அறிவித்துள்ளது
    ஒலிம்பிக்கில் அரியானா மாநிலத்தை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் தங்கம் வென்றால் ரூ.6 கோடியும், வெள்ளி வென்றால் ரூ.4 கோடியும், வெண்கலத்துக்கு ரூ.2 கோடியும் பரிசு வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருந்ததது. மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற அரியானாவை சேர்ந்த சாக்சி மாலிக்குக்கு ரூ.2.5 கோடி பரிசை அறியானா அரசு அறிவித்துள்ளது.

    மேலும் அவருக்கு அரசு வேலையும், நிலமும் வழங்கப்படுகிறது. இந்திய ஒலிம்பிக் சங்கம் ரூ.20 லட்சமும் பரிசு தொகை அறிவித்துள்ளது.
    ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்றுக் கொடுத்த மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் 12 ஆண்டுகால கடின உழைப்புக்கு கிடைத்த முடிவு தான் இந்த வெண்கலப் பதக்கம் என கூறியுள்ளார்.
    ரியோடி ஜெனீரோ:

    ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் பெற்றுக் கொடுத்தார். பெண்களுக்கான 58 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் அரியானவை சேர்ந்த அவர் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

    ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது குறித்து சாக்சி மாலிக் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் எனது கனவு நனவானது. இந்த சாதனையை நினைத்து பெருமைப்படுகிறேன். எனது வாழ்க்கையில் இது மறக்க முடியாத தருணமாகும்.

    ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனையாக நானாக இருப்பேன் என்பதை நினைத்து பார்க்கவில்லை. மற்ற மல்யுத்த வீரர்களும் பதக்கங்களை பெறுவார்கள் என்று நம்புகிறேன்.

    12 ஆண்டுகால கடின உழைப்புக்கு கிடைத்த முடிவு தான் இந்த வெண்கலப் பதக்கம். இந்தியாவுக்கு பெருமை சேர்த்ததை நினைத்து நான் மிகவும் சந்தோ‌ஷம் அடைகிறேன். என் மீது அன்பையும், பாராட்டையும் வெளிப்படுத்திய நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஒலிம்பிக் வெண்கல பதக்கத்தை எனது குடும்பத்தினர் மற்றும் எனது பயிற்சியாளர்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    சாக்சி மாலிக் ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்றதால் அவரது பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தனது மகள் நாட்டுக்கு பெருமை சேர்த்து உள்ளதாக அவரது தாயார் சகேஷ் கூறியுள்ளார்.
    ரியோ ஒலிம்பிக்கில் 200 மீட்டர் ஓட்டத்திலும் தங்கம் வென்று உலக சாதனை படைக்கும் ஆர்வத்தில் உசேன் போல்ட் உள்ளார். அவர் இன்று நடந்த 200 மீட்டர் அரை இறுதியில் அவர் 19.78 வினாடியில் கடந்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.
    ரியோடி ஜெனீரோ:

    உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட். ஜமைக்காவை சேர்ந்த இவர் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனாக இருக்கிறார்.

    உசேன் போல்ட் 100 மீட்டர் ஓட்டத்தை 9.58 வினாடியிலும் (2009-ம் ஆண்டு) 200 மீட்டர் ஓட்டத்தை 19.19 வினாடியிலும் கடந்ததே உலக சாதனையாக இருக்கிறது.

    மேலும் 4x100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் அவர் அடங்கிய ஜமைக்கா அணி உலக சாதனை படைத்து இருந்தது. ஒலிம்பிக் போட்டியிலும் அவர்தான் சாதனையாளராக உள்ளார்.

    ரியோ ஒலிம்பிக் போட்டியில் உசேன் போல்ட் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார். இதன் மூலம் தொடர்ச்சியாக ஒலிம்பிக்கில் 3-வது தங்கம் வென்று வரலாறு படைத்தார். பெய்ஜிங் (2008), லண்டன் (2012) ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இருந்தார்.

    ரியோ ஒலிம்பிக்கில் 200 மீட்டர் ஓட்டத்திலும் தங்கம் வென்று உலக சாதனை படைக்கும் ஆர்வத்தில் உசேன் போல்ட் உள்ளார்.

    இன்று நடந்த 200 மீட்டர் அரை இறுதியில் அவர் 19.78 வினாடியில் கடந்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். இறுதி போட்டி இந்திய நேரப்படி நாளை காலை 7.00 மணிக்கு நடக்கிறது.

    200 மீட்டர் ஓட்டத்திலும் தங்கம் வென்று புதிய வரலாற்று சாதனையை உசேன் போல்ட் படைப்பாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். அவர் கடந்த இரண்டு ஒலிம்பிக்கிலும் 200 மீட்டர் ஓட்டத்திலும் தங்கம் வென்று இருந்தார்.

    200 மீட்டர் ஓட்டத்தின் இறுதி சுற்றுக்கு ஒரு நாள் இடைவெளி இருப்பதால் உசேன் போல்ட் நாளை புதிய உலக சாதனை படைக்கும் நோக்கில் உள்ளார்.
    நமது நாட்டில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மாற்றி அமைக்காத வரை ஒலிம்பிக் போட்டியில் நாம் பெரிய அளவில் பதக்கத்தை எதிர்பார்க்க முடியாது என்று அபினவ் பிந்த்ராவின் கருத்து தெரிவித்துள்ளார்.
    2008-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரரான அபினவ் பிந்த்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘இங்கிலாந்தில் ஒலிம்பிக்கில் ஒவ்வொரு பதக்கம் வெல்பவர்களுக்கும் கிட்டத்தட்ட ரூ.47 கோடி வரை செலவிடப்படுகிறது.

    ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் வெல்ல இவ்வளவு முதலீடு செய்ய வேண்டியது அவசியமாகிறது. நமது நாட்டில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மாற்றி அமைக்காத வரை ஒலிம்பிக் போட்டியில் நாம் பெரிய அளவில் பதக்கத்தை எதிர்பார்க்க முடியாது’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.
    ஒலிம்பிக் கால்பந்து வரலாற்றில் அதிவேகமாக கோல் அடித்து நெய்மார் சாதனை செய்துள்ளார்.
    ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான கால்பந்து அரைஇறுதியில் பிரேசில்-ஹோண்டுராஸ் அணிகள் நேற்று மோதின. ஆட்டம் தொடங்கிய 15-வது வினாடியிலேயே பிரேசில் கேப்டன் நெய்மார் கோல் அடித்து அமர்க்களப்படுத்தினார். ஒலிம்பிக் கால்பந்து வரலாற்றில் அதிவேகமாக அடிக்கப்பட்ட கோல் இது தான். முதல் பாதியில் பிரேசில் 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

    பெண்களுக்கான கால்பந்து அரை இறுதி ஆட்டங்களில் சுவீடன் பிரேசிலையும், ஜெர்மனி கனடாவையும் தோற்கடித்து இறுதி போட்டிக்கு முன்னேறியது.
    ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான ஆக்கி போட்டியில் பெல்ஜியம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
    ரியோ டி ஜெனீரோ :

    ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான ஆக்கியில் நடந்த ஒரு அரைஇறுதியில் பெல்ஜியம் அணி 3-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி முதல் முறையாக இறுதிசுற்றை எட்டியது.

    இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் பெல்ஜியம்-அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன. எந்த அணி ஜெயித்தாலும், அது முதல் ஒலிம்பிக் மகுடமாக இருக்கும்.
    ஒலிம்பிக்கில் பெண்கள் கால்பந்து போட்டியில் சுவீடன் பிரேசிலுக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
    ரியோ டி ஜெனீரோ :

    ரியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான கால்பந்தில் நடந்த ஒரு அரைஇறுதியில் பிரேசில்- சுவீடன் அணிகள் மோதின. வழக்கமான மற்றும் கூடுதல் நேரத்தில் கோல் எதுவும் அடிக்கப்படாததால் பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.

    இதில் சுவீடன் 4-3 என்ற கோல் கணக்கில் உள்ளூர் அணியான பிரேசிலுக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரைஇறுதியில் ஜெர்மனி 2-0 என்ற கோல் கணக்கில் கனடாவை தோற்கடித்தது.
    ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் டின்டு லூக்கா தகுதி பெறும் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.
    ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை டின்டு லூக்கா ஏமாற்றம் அளித்தார்.

    அவர் தகுதி சுற்றில் தனது பிரிவில் 2 நிமிடம் 00.58 வினாடிகளுடன் 6-வது இடத்தை பிடித்தார். ஒட்டுமொத்தமாக ஓடிய 65 வீராங்கனைகளில் 29-வது இடத்தை பெற்ற டுன்டு லூக்கா அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறினார்.
    ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்-வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் அனைவருக்கும் தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்று இந்திய அணியின் நல்லெண்ண தூதரான சல்மான்கான் அறிவித்துள்ளார்.
    ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய அணி வீரர்-வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் அனைவருக்கும் தலா ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று இந்தி நடிகரும், ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் நல்லெண்ண தூதருமான சல்மான்கான் அறிவித்துள்ளார்.

    ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியில் 118 வீரர்-வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.
    ரியோ ஒலிம்பிக்கில் இங்கிலாந்து வீரர் ஜாசன் கென்னி இவரது காதலி லாரா டிரோட்டும் சைக்கிள் போட்டியில் தங்கம் வென்றனர். ‘தங்க ஜோடி’யாக வலம் வந்த கென்னி-லாரா டிரோட் மைதானத்தில் முத்தமழை பொழிந்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
    ரியோ டி ஜெனீரோ :

    ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான சைக்கிள் போட்டியில், உள்ளரங்க ஓடுபாதையில் நடக்கக்கூடிய கெய்ரன் டிராக் பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் ஜாசன் கென்னி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். நடப்பு ஒலிம்பிக்கில் அவரது 3-வது தங்கமாகும். மொத்தத்தில் அவரது ஒலிம்பிக் தங்கத்தின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. இதன் மூலம் இங்கிலாந்து வீரர்களில் அதிக தங்கம் வென்றவரான முன்னாள் சைக்கிள் பந்தய வீரர் சர் கிறிஸ் ஹோயின் சாதனையை 28 வயதான ஜாசன் கென்னி சமன் செய்தார்.

    இவரது காதலியும், வருங்கால மனைவியுமான 24 வயதான லாரா டிரோட்டும் சைக்கிள் பந்தய வீராங்கனை தான். இதே நாளில் நடந்த ஒம்னியம் பிரிவில் சாம்பியன் மகுடத்தை தக்க வைத்து பிரமாதப்படுத்தினார். ஒலிம்பிக் போட்டிகளில் தனது தங்கப்பதக்கத்தை 4ஆக உயர்த்திய லாரா டிரோட், அதிக தங்கம் வென்ற இங்கிலாந்து வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார்.

    ‘தங்க ஜோடி’யாக வலம் வந்த கென்னி-லாரா டிரோட் மைதானத்தில் முத்தமழை பொழிந்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். ஏற்கனவே நிச்சயதார்த்தம் செய்து கொண்ட இவர்கள் அடுத்த மாதம் திருமணம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள். ரியோ ஒலிம்பிக்கில் சைக்கிள் பந்தயத்தில் மட்டும் இங்கிலாந்து 6 தங்கம் உள்பட 12 பதக்கங்களை அள்ளியிருப்பது குறிப்பிடத்தக்கது.
    ×