என் மலர்
2025 - ஒரு பார்வை

2025 REWIND: ஆரவாரமாக இந்தியா வந்த அதிபர் புதின் - ஆர்ப்பரித்து வரவேற்ற பிரதமர் மோடி
- டெல்லி வந்த அதிபர் புதினை, பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார்.
- அதிபர் புதினுக்கு தனது இல்லத்தில் பிரதமர் மோடி இரவு விருந்தளித்தார்.
புதுடெல்லி:
சுகுமார் தஞ்சையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தான். ஒரு வாரம் கழித்து மீண்டும் ஊர் திரும்பினான்.
கடைக்குச் சென்று கொண்டிருந்த சுகுமாரை எதிரில் வந்த அவனது நண்பன் சுந்தர் பார்த்தான். உடனே, வாடா சுகுமார் எப்படி இருக்கே என கேட்டான் சுந்தர்.
நான் நல்லா இருக்கேன், நீ எப்படி இருக்கே என்றான் சுகுமார்.
ஊருக்குப் போயிருந்தியே என்ன விஷயம்? ஊருல எல்லாம் நல்லா இருக்காங்களா என்றான் சுந்தர்.
எல்லாம் நல்லா இருக்காங்க. சரி, நாட்டு நடப்புல என்ன முக்கியமான விஷயம் சொல்லு என ஆரம்பித்தான் சுகுமார்.
கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடுகளில் இந்திய நாட்டின் மதிப்பு அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் பிரதமர் மோடிக்கும் நல்ல வரவேற்பு அளிக்கிறார்கள். பிரதமரின் வெளிநாட்டு பயணங்களிலும் அந்நாட்டு உயரிய விருதுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இவை எல்லாம் இந்தியாவுக்கு பெருமைதானே என்றான் சுந்தர்.
ஆமாம், அதுபோலவே இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்களுக்கும் நாம் அளிக்கிற மரியாதை உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது தெரியுமா என கூறினான் சுகுமார்.
இந்த ஆண்டு இந்தியா வந்த அதிபர் புதினின் பயணம் உலக அளவில் பெரும் கவனத்தைப் பெற்றது எனக்கூறிய சுந்தர், அதிபர் புதினின் இந்திய பயணம் குறித்து சொல்லியதன் சாராம்சம் பின்வருமாறு:
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 3 ஆண்டுகளைக் கடந்துள்ளது. அதன் காரணமாக உலக அரங்கில் ரஷியா மிகவும் தனிமைப்படுத்தப்பட்டது.
இதற்கிடையே, இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி ரஷியா சென்றார். அப்போது, இந்தியாவுக்கு வருமாறு அதிபர் புதினுக்கு அழைப்பு விடுத்தார். அதிபர் புதினும் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று வருவதாக உறுதியளித்தார்.
இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமர் புதின் டிசம்பர் 4, 5 ஆகிய இரு தினங்கள் இந்தியாவிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார்.

டிசம்பர் 4-ம் தேதி டெல்லி வந்த அதிபர் புதினை, பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார். அதிபர் புதினுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பும், அணிவகுப்பு மரியாதைம் வழங்கப்பட்டது. இருவரும் ஒரே காரில் பயணம் செய்தது உலக அளவில் கவனம் பெற்றது. அதிபர் புதினுக்கு தனது இல்லத்தில் பிரதமர் மோடி இரவு விருந்தளித்தார்.
தலைநகர் டெல்லியில் நடந்த இந்தியா-ரஷியா இடையிலான 23-வது உச்சி மாநாட்டில் அதிபர் புதினும், பிரதமர் மோடியும் பங்கேற்றனர். அதன்பின், இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். இந்தப் பயணத்தின்போது இந்தியா-ரஷியா இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ரஷிய அதிபர் விளாடிமர் புதினுக்கு ஜனாதிபதி மாளிகையில் அரசு சார்பில் விருந்து அளிக்கப்பட்டது.
இந்த விருந்தில் பங்கேற்க காங்கிரஸ் மூத்த எம்.பி.யான சசி தரூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
வெளிநாட்டு தலைவர்கள் அரசுமுறை பயணமாக இந்தியா வரும்போது, ஜனாதிபதி அளிக்கும் விருந்தில் எதிர்க்கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் மற்றும் மூத்த எம்.பி.க்கள் அழைக்கப்படுவது வழக்கம். இந்த நடைமுறையில் ராகுல் காந்தி அழைப்பில் இடம்பெறாதது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
ரஷிய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி அளித்திருந்த பரிசுப் பொருட்கள்:
காஷ்மீர் குங்குமப்பூ, அசாமின் கருப்பு தேயிலை, ஆக்ராவின் பளிங்கு செஸ் செட், கைகளால் வடிவமைக்கப்பட்ட வெள்ளி குதிரை சிற்பம், முர்ஷிதாபாத் வெள்ளி தேநீர் கோப்பைகள், ரஷிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட பகவத் கீதை புத்தகம் ஆகியவை.
இந்தியாவின் பாரம்பரியம், கலாசாரத்தை பிரதிபலிக்கும் இந்த பரிசுப் பொருட்கள் பலரது கவனத்தை ஈர்த்தன.

இந்தியாவில் தனது அரசுமுறை பயணத்தை நிறைவு செய்த அதிபர் புதின் ரஷியா புறப்பட்டுச் சென்றார். வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் விமான நிலையத்திற்கு நேரில் சென்று அதிபர் புதினை வழியனுப்பி வைத்தார்.
அதிபர் புதினின் இந்திய பயணம் இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளது. உக்ரைன் போர் தொடங்கிய பிறகு ரஷிய அதிபர் புதின் இந்தியாவுக்கு மேற்கொண்ட முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது என தெரிவித்தான்.
பரவாயில்லையே, அதிபர் புதின் - பிரதமர் மோடி இடையிலான நட்பு இரு நாடுகளுக்கும் நல்ல பலனை அளித்தால் சரிதான் என சொன்னபடியே வீட்டுக்குப் புறப்பட்டான் சுகுமார்.






