என் மலர்
2025 - ஒரு பார்வை

2025 REWIND: ரசிகர்களை குஷிப்படுத்திய தமிழ் படங்களின் ரீ-ரிலீஸ் ஹிட்ஸ்!
- இந்த ஆண்டு, 90கள் மற்றும் 2000களின் ஹிட் படங்கள் பலவும் 4K தொழில்நுட்பத்தில் வெளியாகின.
- ரசிகர்களின் நாஸ்டால்ஜியாவை தூண்டிய இந்த ரீ-ரிலீஸ்கள், பாக்ஸ் ஆபிஸில் சாதனைகளை படைத்தன.
2025 ஆண்டு தமிழ் சினிமாவுக்கு ஒரு தனித்துவமான ஆண்டாக அமைந்தது. புதிய படங்களின் வரவு ஒருபுறம் இருந்தாலும், கிளாசிக் படங்களின் ரீ-ரிலீஸ் அலை மறுபுறம் ரசிகர்களை திரையரங்குகளுக்கு இழுத்தது.
இந்த ஆண்டு, 90கள் மற்றும் 2000களின் ஹிட் படங்கள் பலவும் 4K தொழில்நுட்பத்தில் மீண்டும் திரையில் ஜொலித்தன. ரசிகர்களின் நாஸ்டால்ஜியாவை தூண்டிய இந்த ரீ-ரிலீஸ்கள், பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனைகளை படைத்தன.
சூப்பர்ஸ்டார் ரஜினி, விஜய், அஜித், போன்ற உச்ச நட்சத்திரங்களின் ரீரிலீஸ் படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களை திரையரங்குகளில் கொண்டாட வைத்தன.
அவ்வ்கையில் இந்தாண்டு ரிலீசான ரீரிலீஸ் படங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1. படையப்பா:
நடிகர் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால திரைப்பயணம், அவரது 75வது பிறந்தநாள் உள்ளிட்டவற்றை சிறப்பிக்கும் வகையில் அவரது பிளாக்பஸ்டர் படமான படையப்பா, டிச.12ஆம் ரீரிலீஸ் செய்யப்பட்டது. இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு வீடியோ எல்லாம் வெளியிட்டிருந்தார். ரீரிலீஸுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
ரஜினியின் ஸ்டைல், சௌந்தர்யாவின் அழகு, ரம்யா கிருஷ்ணனின் வில்லத்தனம் ஆகிய அனைத்தும் புதிய தலைமுறை ரசிகர்களையும் கவர்ந்தன. இப்படம் ரூ.15 கோடிக்கும் மேல் வசூல் செய்து, ரீ-ரிலீஸ் சாதனை படைத்தது.

2. பாட்ஷா:
1995ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான படம் ரஜினியின் 'பாட்ஷா'. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் நக்மா, ரகுவரன், விஜயகுமார், தேவன், ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக திரையில் ஓடி பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற படம் 'பாட்ஷா'. இந்த படம் 2017-ம் ஆண்டு மீண்டும் டிஜிட்டலாக ரீஸ்டோர் செய்து வெளியிடப்பட்டது.
இந்நிலையில், 'பாட்ஷா' திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், ஜூலை 18ம் தேதி அப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. ரஜினி ரசிகர்கள் உற்சாகத்துடன் தங்களுக்கு மிகவும் பிடித்த பாட்ஷா படத்தை திரையரங்குகளில் கண்டு ரசித்தனர்.

3. சச்சின்:
ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான படம் 'சச்சின்'. படத்தில் ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன், பிபாசா பாசு ஆகியோர் நடித்து இருந்தனர். வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு படத்தை தயாரித்து இருக்கிறார். படம் திரைக்கு வந்து மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு 'சச்சின்' படம் மீண்டும் ஏப்ரல் 18-ந்தேதி திரைக்கு வந்தது. சுமார் 300 தியேட்டர்களில் உலக அளவில் வெளியான 'சச்சின்' படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கொண்டாடினர்.
கிட்டத்தட்ட ரூ.13 கோடிக்கும் மேல் வசூலித்து இந்தாண்டு ரீரிலீஸ் படங்களில் படையப்பா படத்திற்கு அடுத்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

4. குஷி:
2000-ம் ஆண்டில் விஜய், ஜோதிகா நடிப்பில் வெளியான 'குஷி' திரைப்படம் இந்தாண்டு ரீரிலீஸ் ஆனது. எஸ். ஜே. சூர்யா இயக்கிய இந்த படத்தில் விஜயகுமார், விவேக், மும்தாஜ், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இப்படம் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. விஜய்யின் சினிமா கேரியரில் முக்கியமான படமாக குஷி அமைந்தது.

5. ப்ரண்ட்ஸ்:
விஜய், சூர்யா நடிப்பில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான படம் 'ப்ரண்ட்ஸ்'. மறைந்த இயக்குநர் சித்திக் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் வடிவேலு, தேவயானி, விஜயலட்சுமி, ராதாரவி, மதன்பாப், ரமேஷ் கண்ணா, சார்லி உள்பட பலர் நடித்துள்ளனர்.
நட்பை மையமாக கொண்டு உருவான இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும், காமெடி காட்சிகளும் படம் திரைக்கு வந்து 24 ஆண்டுகளை கடந்தும் கொண்டாடப்பட்டு வருகின்றன. நீ ஒரு ஆணியையும் புடுங்க வேண்டாம் என்பது உள்பட படத்தில் இடம்பெற்ற அனைத்து காமெடி காட்சிகளும் இன்றும் ரசித்து சிரிக்க வைக்கின்றன.
இந்நிலையில் 'ப்ரண்ட்ஸ்' படம் 24 ஆண்டுகளுக்கு பிறகு 4 கே டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ரீரிலீஸ் செய்யப்பட்டது.

6. அட்டகாசம்:
சரண் இயக்கத்தில் நடிகர் அஜித், பூஜா நடிப்பில் 2004-இல் வெளியான திரைப்படம் அட்டகாசம். தல போல வருமா உள்ளிட்ட பாடல்கள், ஆக்ஷன் காட்சிகள், காமெடி என கமெர்சியல் ரீதியாக அட்டகாசம் ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில் அட்டகாசம்' திரைப்படம் நவம்பர் 28ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வசூலை குவித்தது. வசூல் ரீதியாக படையப்பா, சச்சின் படங்களுக்கு அடுத்த இடத்தை பிடித்தது.

7. வீரம்:
கடந்த 2014 ஆம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியானது வீரம் திரைப்படம். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது.
இப்படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிக்க விதார்த், பாலா, சந்தானம், நாசர்,பிரதீப் ரவாத் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தனர். படத்தின் இசையை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொண்டார்.
திரைப்படம் வெளியாகி 11 வருடங்கள் நிறைவு பெற்றதையொட்டி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் மே 1 ஆம் தேதி படத்தை ரீ-ரிலீஸ் செய்தனர். இந்தாண்டு ரீரிலீஸ் படங்களில் அதிக வசூல் பெற்ற படங்களில் இப்படம் 4 ஆம் இடம் பிடித்தது.

8. அஞ்சான்:
நடிகர் சூர்யாவின் 'அஞ்சான்' படத்தின் மறுவெளியீட்டு டிரெய்லர் வெளியானது.
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான படம் அஞ்சான். இதில் வித்யூத், சமந்தா, சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் கலவையான விமர்சங்களை பெற்று வசூலில் சறுக்கியது.
இந்நிலையில், அஞ்சான் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நவ.28ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.

9. புதுப்பேட்டை:
நடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு 'புதுப்பேட்டை' திரைப்படம் இந்தாண்டு ஜூலை 26ல் புதுப்பொலிவுடன் 4K தரத்தில் ரீ-ரிலீஸ் ஆனது.
2006 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை திரைப்படம் வெளியானது. இப்படத்தில் தனுஷ், சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகின.
புதுப்பேட்டை திரைப்படம் வெளியான சமயத்தில் மக்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை. ஆனால் இத்திரைப்படம் பின்னாளில் மக்களிடம் பெரும் கவனத்தை பெற்று கல்ட் கிளாசிக் கேங்ஸ்டர் படமாக மாறியது குறிப்பிடத்தக்கது.

10. எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி:
2004-ம் ஆண்டு இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி அசின், நதியா, பிரகாஷ் ராஜ் மற்றும் விவேக் ஆகியோர் நடிப்பில் 'எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி' திரைப்படம்.
இந்தப் படம் வெளியானபோது நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியிலாகவும் நல்ல வெற்றி திரைப்படமாக இருந்தது. இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடலகள் அனைத்தும் ஹிட். பலரும் ரிப்பீட் மோடில் கேட்டது. இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி இந்தாண்டு இபபடம் ரீரிலீஸ் செய்யப்பட்டது.

11. கேப்டன் பிரபாகரன்:
தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற ஆக்ஷன் நாயகனாகவும், 'கேப்டன்' என்று கோடிக்கணக்கான மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவருமான விஜயகாந்தின் நினைவுகளைப் போற்றும் வகையில், அவரது 100-வது திரைப்படமான கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தை புதுப்பொலிவுடன் தமிழ்நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படம் பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.
1991-ம் ஆண்டு, தமிழ்ப் புத்தாண்டு அன்று இயக்குனர் ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் வெளியான 'கேப்டன் பிரபாகரன்', பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இத்திரைப்படம் விஜயகாந்த் அவர்களுக்கு மக்கள் மத்தியில் 'கேப்டன்' என்ற அடையாளப் பெயரைப் பெற்றுத் தந்தது, அதுவே அவரது வாழ்நாள் முழுவதும் நிலைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

12. ஆட்டோகிராப்:
சேரனின் தயாரிப்பில், இயக்கத்தில், நடிப்பில் வெளியான 'ஆட்டோகிராப்' படம் இந்தாண்டு ரீரிலீஸ் செய்யப்பட்டது.
21 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் முறையில் தமிழகம் உள்ள திரையரங்குகளில் இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
முடிவுரை:
கொரோனா நோய்த்தொற்றுக்கு பிறகு, ரசிகர்கள் பழைய படங்களை திரையில் பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். 4K ரீமாஸ்டர் இதை சாத்தியமாக்கியது.
பாக்ஸ் ஆபிஸ் சாதனைகள்: சச்சின், படையப்பா போன்ற படங்கள் ரூ.10 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தன.
இந்தாண்டு வெளியான ரீ-ரிலீஸ்கள், பழைய நினைவுகளை மீட்டெடுத்து, புதிய தலைமுறையை சினிமாவுடன் இணைத்தன.






