என் மலர்
2025 - ஒரு பார்வை

2025 REWIND: தாலாட்டு சத்தம் கேட்குதம்மா... இந்தாண்டு அம்மா, அப்பாவான திரை பிரபலங்கள்
- இந்தாண்டு பல நடிகர்கள் தங்கள் வாழ்க்கையில் அம்மா, அப்பா என்ற புதிய பொறுப்பை பெற்றனர்.
- இந்த வருடம் குழந்தை பெற்ற திரை பிரபலங்கள், அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்
2025 ஆம் ஆண்டு இந்திய திரை பிரபலங்களுக்கு மகழ்ச்சிகரமான ஆண்டாக அமைந்தது. சினிமா வாழ்க்கை மட்டுமில்லாமல் அவர்களின் சொந்த வாழ்க்கையிலும் இந்த வருடம் புதிய வெளிச்சம் பெற்றது.
பல நடிகர், நடிகைகள் தங்கள் வாழ்க்கையில் அம்மா, அப்பா என்ற புதிய பொறுப்பை பெற்றனர். இந்த வருடம் குழந்தை பெற்ற திரை பிரபலங்கள், அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த விதமும் அதற்கு ரசிகர்கள் பொழிந்த வாழ்த்து மழையும் இணையத்தை ஆக்கிரமித்தன.
அவ்வகையில் 2025-இல் குழந்தை பெற்ற இந்திய திரை பிரபலர்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
1. சினேகன் - கன்னிகா:
தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிப்பாடல்களை எழுதி தனக்கென தனி இடத்தை பிடித்தவர் சினேகன். இவர் சில படங்களிலும் நடித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 1-ல் சினேகன் கலந்துகொண்டார். அதைத்தொடர்ந்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.கடந்த 2021-ம் ஆண்டு சினேகன் சின்னத்திரை நடிகையான கன்னிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்தாண்டு துவக்கத்தில் இந்த தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. அந்த குழந்தைகளுக்கு காதல் கவிதை என நடிகர் கமல்ஹாசன் பெயர் சூட்டினார்.
2. பிரேம்ஜி:
தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடிப்பவர் நடிகர் பிரேம்ஜி. இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு இந்தாண்டு இறுதியில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை 'வல்லமை' பட இயக்குநர் கருப்பையா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பிரேம்ஜிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துனர். தனது 47 வயதில் பிரேம்ஜி தந்தையாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
3. விஷ்ணு விஷால்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் விஷ்ணு விஷால். இவர் பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா குட்டா என்பவரை 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு இந்தாண்டு துவக்கத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. விஷ்ணு விஷால் - ஜுவாலா குட்டா தம்பதியின் மகளுக்கு 'மிரா' என நடிகர் அமிர்கான் பெயர் சூட்டினார்.
4. மாதம்பட்டி ரங்கராஜ்... ஜாய் கிரிசில்டா
தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டதாக சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையின் அப்பா நான் தான் என்று ஒப்புக்கொள்ளாத மாதம்பட்டி ரங்கராஜ், DNA பரிசோதனை தயார் என்று தெரிவித்துள்ளார்.
5. விக்கி கவுசல் - கத்ரீனா கைப்
பாலிவுட் திரை உலகில் நட்சத்திர தம்பதிகளாக இருப்பவர்கள் விக்கி கவுசல்-கத்ரீனா கைப். இவர்களது திருமணம் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இந்தாண்டு இறுதியில் அவர்களுக்கு முதல் குழந்தையாக ஆண் குழந்தை பிறந்தது.
6. கியாரா அத்வானி
பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் கியாரா அத்வானி. இவர் நடிப்பில் இந்தாண்டு கேம்சேஞ்சர், வார் 2 படங்கள் வெளியாகின.
கியாரா அத்வானி நடிகர் சித்தார்த் மல்கோத்ராவை கடந்த 2023-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ராஜஸ்தானில் பாரம்பரிய முறைப்படி பிரமாண்டமாக நடந்தது.
இதையடுத்து கியாரா அத்வானி தாய்மை அடைந்திருப்பதை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார். இந்தாண்டு இறுதியில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
7. பரினீதி சோப்ரா
பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராகவ் சதா. இவர் நடிகை பரினீதி சோப்ராவை கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இந்த ஆண்டு இறுதியில் ஆண் குழந்தை பிறந்தது.
8. ராஜ்குமார் ராவ்
பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ், 2021 ஆம் ஆண்டு பத்ரா லேகா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்தாண்டு ராஜ்குமார் ராவ் - பத்ரா லேகா தம்பதிக்கு இந்தாண்டு பெண் குழந்தை பிறந்தது. இந்த தம்பதி தங்களது 4 ஆம் ஆண்டு திருமண நாளில் பெற்றோர் ஆகியுள்ளனர். ராஜ்குமார் ராவ் கடைசியாக 'மாலிக்' மற்றும் 'பூல் சுக் மாஃப்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.






