என் மலர்
புதுச்சேரி

புதுச்சேரி, தமிழ்நாடு என் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கும்- போலீஸ் அதிகாரி இஷா சிங் உருக்கம்
- மேலதிகாரிகளின் அழுத்தம் காரணமாக, இஷா சிங் கடந்த 4-ந்தேதி டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
- புதுச்சேரி மக்கள் மிகவும் அன்பானவர்கள். அவர்களை ‘மிஸ்’ பண்ணுகிறேன்.
புதுச்சேரி:
கடந்த மாதம் 9-ந்தேதி விஜய் பங்கேற்ற த.வெ.க. பொதுக்கூட்டம் புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அந்த கட்சி தொண்டர்கள் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே பாஸ் வழங்கப்பட்டு இருந்தது. அவர்களை மைதானம் உள்ளே அனுமதிக்கும் பொறுப்பு லஞ்ச ஒழிப்பு துறை சீனியர் போலீஸ் சூப்பிரண்டும், ஐ.ஆர்.பி.என். கமாண்டன்டுமான இஷா சிங்கிற்கு வழங்கப்பட்டது.
தொண்டர்கள் காலை முதலே பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு வரத் தொடங்கினர். அவர்கள் முண்டியடித்து உள்ளே செல்லும்போது அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு இஷா சிங்கிடம் 'மைதானத்தில் ஏராளமாக இடம் உள்ளது. பாஸ் இல்லாத தொண்டர்களையும் உள்ளே அனுமதிக்க வேண்டும் என்றார். இதனால் ஆவேசம் அடைந்த போலீஸ் சூப்பிரண்டு இஷா சிங், சிங்கப்பெண்ணாக மாறி, தனி ஆளாக நின்று கெத்து காட்டினார். இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகியது. அதன் பின்னர் இஷா சிங்கிற்கு சமூக வலைதளத்தில் பாராட்டுகள் குவிந்தன.
இந்த நிலையில் மேலதிகாரிகளின் அழுத்தம் காரணமாக, இஷா சிங் கடந்த 4-ந்தேதி டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. இது புதுச்சேரி மக்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது.
புதுச்சேரி மக்கள் சிலர், சமூக வலைதளத்தில் இஷா சிங் சீருடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படத்தில் உள்ள 'மெல்ல விடை கொடு.. விடை கொடு.. மனமே, இந்த நினைவுகள் நினைவுகள் கனமே, தாய் மண்ணே செல்கின்றோம் தூரம் தூரம், இங்கு உறவுகள் பிரிவுகள் வருதே, சில அழகிய வலிகளும் தருதே, போகின்றோம், போகின்றோம் தூரம் தூரம், ஓ ஓஹோ.. ஓ ஓ ஹோ... என்னை விட்டு செல்லும் உறவுகளே ஓ ஓ ஹோ'. என்னும் பாடலை ரீல்ஸ்சாக வெளியிட்டுள்ளனர். மேலும் 'மிஸ்.யூ.மேம்', உங்களது கடின உழைப்பு மற்றும் சிறந்த சேவைக்கு 'ராயல் சல்யூட்' என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக இஷா சிங், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'புதுச்சேரி மக்கள் மிகவும் அன்பானவர்கள். அவர்களை 'மிஸ்' பண்ணுகிறேன். நான் டெல்லிக்கு மாறுதலாகி சென்றாலும் புதுச்சேரி, தமிழ்நாடு என் வாழ்க்கையின் ஒரு அங்கமாக எப்போதும் இருக்கும்' என்று மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அவரது இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஐ.பி.எஸ். அதிகாரி இஷா சிங்கின் தந்தை, தாத்தாவும் ஐ.பி.எஸ். அதிகாரிகள்தான். இவரது தாயார் மும்பை கோர்ட்டு வக்கீல் ஆவார். சமூக சேவையில் அக்கறை கொண்ட இஷா சிங், தற்போது ஐ.ஏ.எஸ். மற்றும் நீதிபதி பதவிக்கான போட்டி தேர்வுக்கு தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






