என் மலர்
இந்தியா

நேற்று பாஜக தேசிய தலைமையகத்துக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியினர் வருகை.. இன்று ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு சர்ச்சை!
- பாஜக மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடையிலான உறவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது" என்று விஜய் சௌதாய்வாலே தெரிவித்தார்.
- "சீனா தனது சொந்த நிலப்பரப்பில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு முழு உரிமை உள்ளது. இதில் மற்ற நாடுகள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை.
சீனாவில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) உயர்மட்டப் பிரதிநிதிகள் குழு டெல்லியில் உள்ள பாஜக தேசியத் தலைமையகத்திற்கு நேற்று வருகை தந்தனர்.
பாஜக தலைமையகத்தில் வைத்து, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசத் துறையின் துணை அமைச்சர் சுன் ஹையான் தலைமையிலான குழுவினரும், பாஜக சார்பில் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் மற்றும் வெளியுறவுத் துறை பொறுப்பாளர் விஜய் சௌதாய்வாலே ஆகியோரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
"பாஜக மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடையிலான உறவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது" என்று விஜய் சௌதாய்வாலே தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
2018-ல் ராகுல் காந்தி சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ரகசிய ஒப்பந்தம் செய்ததாக பாஜக குற்றம் சாட்டியிருந்தது. அதே நேரத்தில் எல்லையில் சீன ஆக்கிரமிப்பு குறித்துப் பிரதமர் மௌனம் காப்பதாகக் காங்கிரஸ் விமர்சித்தது.
இத்தகைய சூழலில், எல்லையில் 20 இந்திய வீரர்கள் சீன ராணுவத்தால் கொல்லப்பட்ட 2020 கல்வான் தாக்குதலுக்கு பிறகு பாஜக - சீன கம்யூனிஸ்ட் கட்சி இடையே நடைபெற்றுள்ள இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதனிடையே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்துள்ள ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு சீனாவுக்கு தான் சொந்தம் என அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங் இன்று தெரிவித்துள்ளதும் தெரிவித்துள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
1963-ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு இடையே ஏற்பட்ட எல்லை ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு சீனாவிற்கு வழங்கப்பட்டது.
சீனா இந்தப் பள்ளத்தாக்கில் நிரந்தர சாலைகள் மற்றும் ராணுவத் தளவாட கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளது.
இது காரகோரம் மலைத்தொடருக்கு மிக அருகில் அமைந்துள்ளதால், இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது. இதனால் இந்திய வெளியுறவுத்துறை இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங், "சீனா தனது சொந்த நிலப்பரப்பில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு முழு உரிமை உள்ளது. இதில் மற்ற நாடுகள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை.
1963-ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் படியே இப்பகுதி சீனாவிற்கு வழங்கப்பட்டது. எனவே அது அது சட்டப்பூர்வமானது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிப்பது, வரலாற்று உண்மைகளை மறைக்கும் முயற்சி" என்று தெரிவித்தார்.
நேற்று சீன கம்யூனிஸ்ட் கட்சியினர் பாஜக தலைமையகம் வருகை, இன்று ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு தங்களுக்கு சொந்தம் என சீனா கூறியுள்ளது ஒன்றுக்கொன்று முரணாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் தரப்பிலும், சமூக வலைத்தளங்களிலும் கருத்துக்கள் பரவி வருகின்றன.
மகாராஷ்டிராவின் சரத் பாவர் தேசியவாத காங்கிரஸ் முக்கிய தலைவர் சுப்ரியா ஸ்ரீநாடே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஜம்மு காஷ்மீரின் ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கை சீனா தனது பிராந்தியமாக அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக சீனா இங்கு சிபிஇசி திட்டத்தின் பெயரில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. லடாக்கிற்குப் பிறகு, சீனா எப்படி இங்கு நுழைந்தது?
சீனா இவ்வளவு அத்துமீறல்களில் ஈடுபடுகிறதா? பாஜக தலைவர்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் சந்திப்பு நடத்துகிறார்கள்!" என்று பதிவிட்டுள்ளார்.






