என் மலர்
இந்தியா

எனக்கு முன்னதாகவே ராகுல் காந்தி சிறைக்கு செல்லமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்: அசாம் முதல்வர் பதிலடி
- ஹிமாந்தா மற்றும் அவரது குடும்பம் அவர்களுடைய ஊழலுக்கு பொறுப்பேற்க வேண்டும்.
- சிறைக்கு அவர் செல்வதை மீடியாக்கள் காட்டும் என ராகுல் காந்தி கூறியிருந்தார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், இந்திய பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி "அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தன்னை 'ராஜா' என்று நினைத்துக்கொண்டு உங்கள் செல்வத்தையும், நிலத்தையும் அதானி மற்றும் அம்பானிக்கு ஒப்படைப்பதில் 24 மணி நேரமும் மும்முரமாக இருக்கிறார்.
ஆனால் நீங்கள் அவரது குரலைக் கவனமாகக் கேட்டால், டிவியில் அவரது முகத்தை உற்றுப் பார்த்தால் பயம் அதிகமாக இருக்கும். பயப்படாத காங்கிரஸ் தொண்டர்கள், அவரை ஜெயிலில் வைப்பார்கள் என்பது ஹிமாந்தா பிஸ்வா சர்மாவுக்கு தெரியும்.
ஹிமாந்தா மற்றும் அவரது குடும்பம் அவர்களுடைய ஊழலுக்கு பொறுப்பேற்க வேண்டும். சிறைக்கு அவர் செல்வதை மீடியாக்கள் காட்டும். மோடி அல்லது அமித் ஷாவால் கூட அவரை காப்பாற்ற முடியாது. காங்கிரஸ் அதை செய்ய வேண்டியதில்லை. இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், அனைத்து சமுதாயத்தினர் மற்றும் மதத்தினருக்கு அவர் எப்படி ஊழல் செய்துள்ளார் என்பது தெரியும். அவர்கள் அதை செய்வார்கள்" எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் எனக்கு முன்னரே ராகுல் காந்தி சிறைக்கு செல்லாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் என ஹிமாந்தா பிஸ்வா சர்மா பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பாக ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது:-
ஒரு மாநிலத்திற்கு வந்து ஒருவரை சிறைக்கு அனுப்புவேன் அல்லது மாட்டேன் என்று சொல்வது ஒரு தேசியத் தலைவருக்குப் பொருந்தாது. நான் எவ்வளவு முக்கியமானவன் என்பதை இது நிரூபிக்கிறது. எனக்கு முன்னதாகவே ராகுல் காந்தி சிறைக்கு செல்லமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?.
நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட பல குற்ற வழக்குகளில் தானும் ஜாமினில் வெளியே இருப்பதை காங்கிரஸ் தலைவர் (ராகுல் காந்தி) "வசதியாக மறந்துவிட்டார்.
இவ்வாறு ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.






