என் மலர்
இந்தியா

மத்திய கிழக்கில் போர் சூழல் - இந்தியாவின் ரூ.6 ஆயிரம் கோடி அரிசி ஏற்றுமதி கடும் பாதிப்பு
- இந்தியா உலகின் முன்னணி தானிய ஏற்றுமதியாளராக உள்ளது.
- ஈரானுக்கு சென்ற ஏற்றுமதிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
புதுடெல்லி:
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதட்டமான போர் சூழல் காரணமாக இந்தியாவில் இருந்து ஈரான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல வளைகுடா நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து பாதிப்பு, பணம் செலுத்துவதில் தாமதம் உள்ளிட்ட பல இடையூறுகள் குறித்து ஏற்றுமதியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
குறிப்பாக பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்தியாவின் பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 50 சதவீதம் 5 மேற்கு ஆசிய நாடுகளான சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஏமன் ஆகியவற்றுக்கு செல்கிறது. போர் காரணமாக வர்த்தகம் நீண்டகால உறுதியற்ற தன்மைக்கு ஆளாகி உள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதனால் இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு அதன் உறுப்பினர்களுக்கு ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு புதிய 'செலவு, காப்பீடு மற்றும் சரக்கு' உறுதிமொழிகளில் நுழைவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தி உள்ளது.
மேலும் நிலைமை மோசமடைந்தால் காப்பீட்டு பிரீமியங்கள் கடுமையாக உயரக்கூடும் என்றும், புதிய ஆர்டர்களை முடிக்கும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், ஏற்றுமதியாளர்களை வலியுறுத்தி உள்ளது.
இந்தியா உலகின் முன்னணி தானிய ஏற்றுமதியாளராக உள்ளது. இது உலகளாவிய உற்பத்தியில் 70 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. இதில் தற்போது பாஸ்மதி அரிசி ஏற்றுமதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதமாக பாஸ்மதி அரிசி மொத்த விலை ஏற்கனவே 10 முதல்15 சதவீதம் உயர்ந்து வருவதாலும், ஈரான் ஒரு முக்கிய சந்தையாக இருப்பதாலும், வரும் நாட்களில் விலைகளில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
இதனால் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும். மொத்த பிரீமியம் பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் இரு மாநிலங்களும் கிட்டத்தட்ட 75 சதவீதம் பங்களிக்கின்றன.
ஈரானுக்கு சென்ற ஏற்றுமதிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நிலைமை மேம்படும் வரை இந்த ஏற்றுமதிகள் தேக்க நிலையில் இருக்கும். இது சந்தையை கடுமையாக பாதிக்கும்.
அரசின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தின் தரவுகளின்படி, கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல்-டிசம்பர் மாதங்களுக்கு இடையில் மேற்கு ஆசிய நாடுகளுக்கு பாஸ்மதி ஏற்றுமதி ரூ.27,197 கோடியாக இருந்தது.
இதில் ஈரானுக்கு மட்டும் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்புள்ள பாஸ்மதி அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது. தற்போது நிலவும் போர் சூழலால் இந்த ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.






