என் மலர்
இந்தியா

வக்பு சட்டத் திருத்த மசோதா குப்பைத் தொட்டியில் வீசப்படும் - தேஜஸ்வி யாதவ்
- காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.
- நாளை சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் குறிவைக்கப்படுவார்கள்
பீகாரில் தனது கட்சி ஆட்சி அமைத்தால் வக்பு திருத்த மசோதா குப்பைத் தொட்டியில் வீசப்படும் என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
வக்பு திருத்த மசோதா மசோதா இந்த வாரம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நேற்று ஜனாதிபதி ஒப்புதலை பெற்று சட்டமாக மாறியது. இதற்கு எதிராக காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தை பாஜகவின் இந்த மசோதா பறிக்கிறது என்பது எதிர்க்கட்சிகளின் வாதம்.
இந்நிலையில் பீகார் எதிர்கட்சித் தலைவரும் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத்தின் மகனுமான தேஜஸ்வி யாதவ் இந்த மசோதாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த வருட இறுதியில் பீகாருக்கு சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் ஆர்ஜேடி ஆட்சிக்கு வந்தால் வக்பு மசோதா குப்பைத் தொட்டியில் வீசப்படும் என்று தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, இந்த மசோதாவை பீகாரில் செயல்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மாநிலத்தில் அடுத்து அரசாங்கத்தை அமைத்தால், மசோதா குப்பைத் தொட்டியில் போடப்படும் வக்பு மசோதாவுக்கு எதிராக நாங்கள் உச்ச நீதிமன்றத்தையும் நாடியுள்ளோம். இன்று முஸ்லிம்கள் குறிவைக்கப்படுகிறார்கள், நாளை சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் குறிவைக்கப்படுவார்கள்என்று தெரிவித்தார்.
மேலும் வக்பு மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தை தேஜஸ்வி யாதவ் கடுமையாக விமர்சித்தார். வக்பு மசோதாவுக்கு ஆதரவளித்ததால் நிதிஷ் குமார் கட்சியின் ஐந்து தலைவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளதால், கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.






