என் மலர்
இந்தியா

நக்சல் ஆதரவாளர் என முத்திரை குத்திய அமித் ஷா.. துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி கொடுத்த பதில்
- அந்தத் தீர்ப்பை அவர் வழங்கியிருக்காவிட்டால், சல்வா ஜூடும் நடைமுறையில் இருந்திருந்திருக்கும்.
- இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான போட்டியாகப் பார்க்க வேண்டும்.
செப்டம்பர் 9 அன்று நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். என்டிஏ கூட்டணி சார்பில் ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் நிற்கிறார்.
இதற்கிடையே கேரளாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, " இந்தியா கூட்டணி, நக்சலைட்டுகளின் தீவிர ஆதரவாளரான சுதர்சன் ரெட்டியை துணை ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்ந்தெடுத்துள்ளது.
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளுக்கு எதிராகப் போராட பழங்குடி இளைஞர்களைக் கொண்டு அரசாங்கம் உருவாக்கிய 'சல்வா ஜூடும்' சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று நீதிபதி சுதர்சன் ரெட்டி 2011 இல் தீர்ப்பளித்தார்.
அந்தத் தீர்ப்பை அவர் வழங்கியிருக்காவிட்டால், சல்வா ஜூடும் நடைமுறையில் இருந்திருந்தால், நக்சலைட் இயக்கம் 2020 ஆம் ஆண்டிலேயே முடிவுக்கு வந்திருக்கும்.
இடதுசாரிகளின் அழுத்தத்தின் பேரில்தான் காங்கிரஸ் கட்சி நீதிபதி சுதர்சன் ரெட்டியை துணை ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்ந்தெடுத்துள்ளது" என்று குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு குறித்து சுதர்சன் ரெட்டி விளக்கம் அளித்துள்ளார்.
ஊடகத்தினரிடம் பேசிய அவர், அந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது என்றும், அவரால் தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்டது அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், விவாதத்தில் கண்ணியம் இருக்க வேண்டும் என்றும், ஆனால் இந்த விஷயத்தில் உள்துறை அமைச்சருடன் விவாதிக்க விரும்பவில்லை என்றும் கூறினார்.
துணை ஜனாதிபதி தேர்தலை இரண்டு தனிநபர்களுக்கு இடையிலான போட்டியாகப் பார்க்கக்கூடாது, மாறாக இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான போட்டியாகப் பார்க்க வேண்டும் என்றும் சுதர்சன் ரெட்டி தெரிவித்தார்.






