search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    புதிய கட்டிடத்தில் துணை ஜனாதிபதி தேசிய கொடி ஏற்றினார்: பாராளுமன்ற சிறப்பு கூட்டம் நாளை தொடங்குகிறது
    X

    புதிய கட்டிடத்தில் துணை ஜனாதிபதி தேசிய கொடி ஏற்றினார்: பாராளுமன்ற சிறப்பு கூட்டம் நாளை தொடங்குகிறது

    • பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல்நாள் நிகழ்வுகள் வழக்கம்போல பழைய கட்டிடத்திலேயே நடைபெற உள்ளன.
    • புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு செல்லும்போது, ​​பாராளுமன்ற ஊழியர்கள் புதிய சீருடை அணிந்து செல்வார்கள்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) பழைய கட்டிடத்தில் தொடங்குகிறது.

    இதையொட்டி இன்று புதிய பாராளுமன்ற வளாகத்தில் துணை ஜனாதிபதி ஜகதீப் தங்கர் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

    கடந்த மே மாதம் 28-ந் தேதி திறக்கப்பட்ட புதிய கட்டிடத்தில் தேசிய கொடி ஏற்றப்படவில்லை என்பதால் இன்று கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

    லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய மந்திரிகள் பிரகலாத் ஜோஷி, முரளீதரன், பியூஷ் கோயல், அர்ஜூன் ராம்மேக்வால், காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பிரமோத் திவாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

    பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல்நாள் நிகழ்வுகள் வழக்கம்போல பழைய கட்டிடத்திலேயே நடைபெற உள்ளன. அடுத்த நாள் முதல் 22-ந்தேதி வரை புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

    பாராளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் அறிவிக்கப்படாததற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து, பாராளுமன்ற செய்தி இதழில் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    அரசியல் நிர்ணய சபை தொடங்கப்பட்டது முதல் பாராளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் வரை இந்தக் கூட்டத் தொடரின் முதல் நாளில் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதாவை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. இந்த மசோதா மக்களவையில் விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுதவிர, வழக்கறிஞர்கள் (திருத்த) மசோதா, அஞ்சல் அலுவல் மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் மக்களவை நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றுள்ளன. மேலும், பாராளுமன்றம், சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவும் இந்தக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

    சிறப்புக் கூட்டத்தொடரில் பா.ஜ.க. உறுப்பினர்கள் அனைவரும் தவறாது பங்கேற்குமாறு அக்கட்சி கொறடா உத்தரவிட்டு உள்ளார். இதனிடையே சிறப்புக் கூட்டத்தொடரை முன்னிட்டு, மத்திய அரசு இன்று அனைத்துக் கட்சிக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.

    இதில், கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக அனைத்துக்கட்சிகளின் ஒத்துழைப்பை மத்திய அரசு கேட்கும் எனத் தெரிகிறது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இதனால், அதுபற்றி இந்த சிறப்பு கூட்டத்தொடரில் விவாதிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    அதேபோல் சந்திரயான் 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டது, ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்தது பற்றியும் ஆலோ சிக்கப்படும் என கூறப்படுகிறது.

    புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு செல்லும்போது, பாராளுமன்ற ஊழியர்கள் புதிய சீருடை அணிந்து செல்வார்கள். இவற்றை நிப்ட் எனப்படும் பாட்னா தேசிய பேஷன் தொழில்நுட்ப மையம் தயாரித்துள்ளது.

    பாராளுமன்றத்தில் பணியாற்றும் அதிகாரிகளின் சீருடை இனி அடர் இளஞ்சிவப்பு நிறத்திலான அல்லது மஜெண்டா நிறத்திலான நேரு ஜாக்கெட் மாடலில் இருக்கும். இவற்றில் தாமரைப் பூக்கள் அச்சாகி இருக்கும். பேண்ட் காக்கி நிறத்திலேயே இருக்கும்.

    அதேபோல் பாராளுமன்றத்தின் இரு அவைகளின் காவலர்களின் உடைகளும் மாற்றப்படுகின்றன. அவர்கள் மணிப்பூரி தலைப்பாகை அணிந்திருப்பார்கள்.

    பாராளுமன்ற வளாகப் பாதுகாவலர்களின் சீருடையும் மாற்றப்படுகிறது. சபாரி உடைக்குப் பதிலாக அவர்களுக்கு ராணுவத்தினர் அணியும் உருமறைப்பு உடைகள் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பாராளுமன்ற புதிய கட்டிடத்தின் வடிவமைப்பு, நிறம் ஆகியனவற்றையும் இந்த சீருடைகள் பிரதிபலிக்கும். அனைத்து சீருடைகளிலும் செல்போனை வைத்துக் கொள்வதற்காகவே பிரத்யேக பாக்கெட்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×