என் மலர்
இந்தியா

மணிப்பூர் கலவரம்: வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை- அமித் ஷா எச்சரிக்கை
- ஆயுதம் வைத்திருந்தால் போலீசில் சரணடைய வேண்டும்.
- நாளை முதல் தேடுதல் வேட்டை தொடங்கப்படும்.
மணிப்பூரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
போலிச் செய்திகளுக்கு மணிப்பூர் மக்கள் செவி சாய்க்க வேண்டாம். செயல்பாடுகளை நிறுத்துதல் (SoO) ஒப்பந்தத்தின்படி வன்முறையில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆயுதம் ஏந்தியவர்கள் போலீஸ் முன் சரணடைய வேண்டும். இதற்கான நடவடிக்கை நாளையில் இருந்து தொடங்கும். யாரிடமாவது ஆயுதம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.
முன்னதாக,
மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனர். இதற்கு நாகா, குகி சமூகத்தினர் அடங்கிய சிறுபான்மை பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே கடந்த மாதம் 3-ந்தேதி மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது. இதில் 74 பேர் பலியானார்கள். பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கடந்த மாதம் 27-ந்தேதி முதல் மீண்டும் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது.
மே 28-ந்தேதி பாதுகாப்பு படையினர் நடத்திய வேட்டையில் 40 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வன்முறை காரணமாக பதற்றம் நிலவி வரும் மணிப்பூர் மாநிலத்தில் ஆய்வு செய்ய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முடிவு செய்தார். அதன்படி அவர் தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து இம்பாலுக்கு கடந்த 29-ந்தேதி சென்றடைந்தார்.
மணிப்பூர் சென்ற மாநில முதல்-மந்திரி பிரேன்சிங், ஆளுநர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாநிலத்தில் நிலவும் சட்டம்- ஒழுங்கு சூழலை கேட்டறிந்த அமித் ஷா, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தார். மேலும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் அமித் ஷா, மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் ஆலோசனையில் ஈடுபட்டனர்.






