என் மலர்
இந்தியா

மனைவி சித்ரவதை தாங்க முடியல... வீடியோ வெளியிட்டு என்ஜினீயர் தற்கொலை
- மனதளவில் பாதிப்பு அடைந்து ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டார்.
- வீடியோ ஒன்றை பதிவு செய்து நெருங்கிய உறவினர்களுக்கு அனுப்பி வைத்தார்.
லக்னோ:
உத்திரப் பிரதேச மாநிலம், லக்னோவை சேர்ந்தவர் மோகித் யாதவ். இவரது மனைவி பிரியா. 7 ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
மோகித் யாதவ் சிமெண்ட் தயாரிக்கும் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வந்தார். திருமணத்திற்கு பிறகு அவரது மனைவி கணவரின் பெயரில் உள்ள சொத்துக்களை தனது பெயரில் மாற்றி எழுத வேண்டும் என அடிக்கடி தகராறு செய்து வந்தார். மனைவியின் குடும்பத்தினரும் சேர்ந்து சித்ரவதை செய்தனர்.
சொத்துக்களை மனைவியின் பெயரில் எழுதித் தராததால் மோகித் யாதவ் மீது போலீசில் வரதட்சணை கொடுமை புகார் செய்தனர்.
மனதளவில் பாதிப்பு அடைந்த மோகித் யாதவ் ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன்பு வீடியோ ஒன்றை பதிவு செய்து தனது நெருங்கிய உறவினர்களுக்கு அனுப்பி வைத்தார். அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது:-
திருமணத்தின் போது மனைவியின் வீட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை. சொத்துக்களை மனைவி பெயருக்கு மாற்றித் தராததால் போலீசில் பொய் வழக்கு கொடுத்தனர்.
மனைவியுடன் சேர்ந்து அவரது குடும்பத்தினரும் என்னை சித்திரவதை செய்தனர். மனைவி அடிக்கடி என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனியார் பள்ளியில் மனைவிக்கு ஆசிரியர் வேலை கிடைத்தது. இதனால் எனது மாமியார் கர்ப்பமாக இருந்த எனது மனைவியின் கருவை கலைத்து விட்டார். மேலும் எனது குடும்பத்தினர் மீது பொய் வழக்கு கொடுப்பதாக மிரட்டல் விடுத்தனர்.
தொல்லை தாங்க முடியாததால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் அப்பா, அம்மா என்னை மன்னித்து விடுங்கள் என வீடியோவில் கூறியிருந்தார்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மோகித் யாதவின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.






