search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    50 லட்சம் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய சிவசேனா மாவட்ட தலைவர்களுக்கு உத்தவ் தாக்கரே உத்தரவு
    X

    50 லட்சம் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய சிவசேனா மாவட்ட தலைவர்களுக்கு உத்தவ் தாக்கரே உத்தரவு

    • ஏக்நாத் ஷிண்டே தரப்பு தாங்கள் தான் உண்மையான சிவசேனா என தேர்தல் ஆணையத்தை அணுக உள்ளது.
    • ஏக்நாத் ஷிண்டே பா.ஜனதாவுடன் சேர்ந்து மகாராஷ்டிராவில் ஆட்சியை அமைத்து உள்ளார்.

    மும்பை :

    ஏக்நாத் ஷிண்டே கடந்த மாதம் சிவசேனா தலைமைக்கு எதிராக திரும்பினார். அவருக்கு 40 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்தனர். இதன் காரணமாக சிவசேனா தலைமையிலான மகாவிகாஸ் ஆட்சி கவிழ்ந்தது. மேலும் ஏக்நாத் ஷிண்டே பா.ஜனதாவுடன் சேர்ந்து மகாராஷ்டிராவில் ஆட்சியை அமைத்து உள்ளார்.

    தற்போது அவருக்கு ஆதரவாக 12 எம்.பி.க்கள், தானே உள்ளிட்ட சில பகுதிகளை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர்களும் ஆதரவாக உள்ளனர். இந்தநிலையில் ஏக்நாத் ஷிண்டே தரப்பு தாங்கள் தான் உண்மையான சிவசேனா என தேர்தல் ஆணையத்தை அணுக உள்ளது.

    முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை உத்தவ் தாக்கரே கட்சியின் மாவட்ட தலைவர்களை ஆன்லைன் மூலம் சந்தித்து பேசினார். அப்போது அவர் 50 லட்சம் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய மாவட்ட தலைவர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தவுடன் மாவட்ட தலைவர்களை நேரில் சந்திப்பதாகவும் தெரிவித்தார்.

    ஏக்நாத் ஷிண்டே தரப்பு தேர்தல் ஆணையம் செல்லும் முன்பே, முன் எச்சரிக்கையாக பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய உத்தவ் தாக்கரே உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து சிவசேனா நிர்வாகி ஒருவர் கூறுகையில், "தற்போது கட்சியில் 36 லட்சம் முதன்மை உறுப்பினர்கள் உள்ளனர். இது 50 லட்சமாக அதிகரிக்கும்" என்றார்.

    ஏக்நாத் ஷிண்டே அணி பிரிந்து சென்ற பிறகு சிவசேனா தரப்பில் தேர்தல் ஆணையத்தில் கடிதம் ஒன்று கொடுக்கப்பட்டு இருந்தது. அதில் யாராவது கட்சியின் பெயர், சின்னம் கேட்டு முறையிட்டால் அதுகுறித்து எங்களிடம் கேட்டு தான் முடிவு எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

    Next Story
    ×