என் மலர்
இந்தியா

வக்பு மசோதா கொண்டு வரப்பட்ட நோக்கம் தவறானது, தீங்கானது: மாநிலங்களவையில் திருச்சி சிவா எதிர்ப்பு
- வக்பு மசோதா கொண்டு வரப்பட்ட நோக்கம் தவறானது, தீங்கானது.
- அரசியலமைப்புச் சட்டத்த்துக்கும், மதச் சார்பின்மைக்கும் எதிரானது.
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்று வருகிறது.
விவாதத்தின்போது திமுக எம்.பி. திருச்சி சிவா மசோதாவை எதிர்த்து கடுமையாக பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-
வக்பு மசோதா கொண்டு வரப்பட்ட நோக்கம் தவறானது, தீங்கானது. அரசியலமைப்பு சட்டத்த்துக்கும், மதச்சார்பின்மைக்கும் எதிரானது. வக்பு நிர்வாகத்தையே கைப்பற்றுவதற்குத்தான் இந்த திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
அரசியல், சட்ட ரீதியாக தவறான வக்பு மசோதாவை நாங்கள் ஒட்டுமொத்தமாக எதிர்க்கிறோம். மத்திய பாஜக அரசு குறிப்பிட்ட ஒரு மதத்தை குறிவைத்து சட்டத்தை இயற்றுவது ஏன்?. நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் சுதந்திரத்தின்போது இது எங்கள் நாடு, இங்கேதான் இருப்போம் என்று தெரிவித்தனர்.
அனைவருக்குமான வளர்ச்சி என்று கூறும் பாஜக அரசு இஸ்லாமியர்களுக்கு மட்டும் வேறு கொள்கையை கடைபிடிக்கிறது. பாஜக அரசின் செயலால் அந்நியப்படுத்தப்படும் இஸ்லாமியர்கள் பாதுகாப்பற்றவர்களாக உணருகிறார்கள்.
கண்கள் இருந்தும் மக்கள் படும் துயரங்களை ஆளுங்கட்சியினர் பார்ப்பதில்லை. ஆளுங்கட்சியினருக்கு காதுகள் இருக்கலாம், ஆனால் எதிர்க்கட்சியினரின் பேச்சை கேட்பதே இல்லை. வக்பு வாரியத்தின் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காக சட்டத் திருத்தம் எனக் கூறுவது உண்மைக்கு புறம்பானது.
இவ்வாறு திருச்சி சிவா எதிர்ப்பு தெரிவித்தார்.






