என் மலர்
இந்தியா

இருசக்கர வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுமா?: நிதின் கட்கரி விளக்கம்
- பைக்குகளுக்கு சுங்க வரி விதிக்க உள்ளதாக இணைய தளங்களில் செய்திகள் வெளியாகின.
- இருசக்கர வாகனங்களுக்கு முழுமையான வரி விலக்கு தொடரும் என்றார் நிதின் கட்கரி.
புதுடெல்லி:
இந்திய நெடுஞ்சாலைகளில் ஜூலை 15-ம் தேதி முதல் சுங்க சாவடிகளில் இருசக்கர வாகன ஓட்டிகளும் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும் என இணைய தளங்களில் தகவல்கள் பரவின.
இந்நிலையில், இருசக்கர வாகனங்களுக்கு அரசு சுங்க வரி விதிக்கப் போவதாக சில ஊடகங்களில் வெளியான செய்தி உண்மையல்ல என மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக நிதின் கட்கரி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இருசக்கர வாகனங்களுக்கு சுங்க வரி விதிக்க இருப்பதாக சில ஊடகங்கள் தவறான செய்திகளைப் பரப்புகின்றன. அத்தகைய முடிவு எதுவும் முன்மொழியப்படவில்லை. இருசக்கர வாகனங்களுக்கு முழுமையான வரி விலக்கு தொடரும். உண்மை தெரியாமல் தவறான செய்திகளைப் பரப்புவதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்துவது ஆரோக்கியமான ஊடக அறம் அல்ல. இதை நான் கண்டிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
இதேபோல், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் இருசக்கர வாகனங்களுக்கு சுங்கவரி விதிக்கும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என தெளிவுபடுத்தியுள்ளது.






