search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பெண்களுக்கு மகளிர் தின பரிசு- சமையல் கியாஸ் விலை ரூ.100 குறைப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு
    X

    பெண்களுக்கு மகளிர் தின பரிசு- சமையல் கியாஸ் விலை ரூ.100 குறைப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு

    • 657-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாமல் அதே விலையே நீடிக்கிறது.
    • பெண்களின் முன்னேற்றத்தை உறுதிபடுத்துதல் மற்றும் அவர்கள் எளிமையாக வாழ்வதை உறுதிபடுத்துவதற்கான எங்களின் உறுதிமொழியாகும்.

    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களின் விலை அதிகரிக்கும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தால் பெட்ரோலிய பொருட்களின் விலையும் குறையும்.

    கடந்த 6 மாதங்களாகவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மிகப்பெரிய அளவில் உயர்வு ஏற்படவில்லை. மாறாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. எனவே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் இன்று 657-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாமல் அதே விலையே நீடிக்கிறது. அதாவது சென்னையில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.94.24-க்கும் விற்கப்படுகிறது. இதன் மூலம் எண்ணெய் நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது. எனவே எப்போது வேண்டுமானாலும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி பெண்களுக்கு மகளிர் தின பரிசாக, வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது. மகளிர் தினத்தையொட்டி வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை ரூ. 100 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் பிரதமர் மோடி கூறி இருப்பதாவது:-

    மகளிர் தினமான இன்று நமது அரசு வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைக்க முடிவு செய்துள்ளது. இந்த முடிவு நாடு முழுவதும் உள்ள மக்களின் குடும்ப நிதிச்சுமையை பெருமளவு குறைக்கும். குறிப்பாக, பெண்சக்தி திட்டத்தின்கீழ் நல்ல பலன் கிடைக்கும்.

    சமையல் கியாசை மலிவு விலைக்கு கொண்டு வருவதன் மூலம் குடும்பங்கள் நலமுடன் இருக்கவேண்டும், அவர்களின் குடும்ப சூழ்நிலை வளமாக அமைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இது பெண்களின் முன்னேற்றத்தை உறுதிபடுத்துதல் மற்றும் அவர்கள் எளிமையாக வாழ்வதை உறுதிபடுத்துவதற்கான எங்களின் உறுதிமொழியாகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் ஏற்கெனவே ரூ.918.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது 100 ரூபாய் குறைக்கப்பட்டு இருப்பதன் மூலம் இனி சமையல் கியாஸ் ரூ.818.50-க்கு கிடைக்கும்.

    பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் பெறும் பயனாளிகளுக்கு வழங்கப்படும் ரூ.300 மானியத்தை ஓராண்டுக்கு நீட்டிக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய மந்திரி பியூஷ் கோயல் நேற்று தெரிவித்திருந்தார்.

    சமையல் கியாஸ் திட்ட மானியத்துக்கு மத்திய மந்திரிசபை ரூ.12 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது. இதன் மூலம் பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்ட பயனாளிகளுக்கு ரூ.603-க்கு மானியத்துடன் சிலிண்டர் கிடைக்கும். மகளிர் தினத்தையொட்டி இந்த சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்து இருந்தார்.

    அதன் தொடர்ச்சியாக இன்று மற்ற சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை ரூ.100 குறைத்து பிரதமர் மோடி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    Next Story
    ×