என் மலர்
இந்தியா

TN Government | நவோதயா பள்ளிகளை எதிர்த்து வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல்
- நவோதயா வித்யாலயா பள்ளிகள் இல்லாமலேயே தமிழ்நாட்டின் கல்வி சிறப்பாக உள்ளது.
- தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்பட வேண்டிய கல்வி நிதி ரூ.3548.22 கோடியை வழங்க வேண்டும்.
புதுடெல்லி:
தமிழ்நாட்டில் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் நிறுவ எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் கூறி இருப்பதாவது:-
ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தமிழ்நாட்டின் இரு மொழிக் கொள்கைக்கு எதிராக உள்ளது. ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் இந்தி, ஆங்கிலம் மற்றும் மாநில மொழி ஆகிய 3 மொழிகளை உள்ளடக்கிய மும்மொழி கொள்கையின் மூலம் வரையறுக்கப்பட்டுள்ளது.
இது தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வரும் இரு மொழி கொள்கைக்கு எதிரானது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 38 உறைவிட வசதியுடன் அரசின் மாதிரி பள்ளிகள் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அனைத்து நிலையில் உள்ள மக்களும் எளிதாக அணுகும் வகையில் தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது.
அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த மாதிரி பள்ளிகளில் பயின்ற 1,340 மாணவர்கள் கடந்த 2024-2025 கல்வி ஆண்டில் மட்டும் அகில இந்திய கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர்.
பல மாணவர்கள் முழுமையாக அரசின் ஸ்காலர்ஷிப் பெற்று சர்வதேச அளவில் கல்வி நிறுவனங்களில் பயின்று வருகின்றனர். இது தமிழ் நாட்டின் மேம்படுத்தப்பட்ட கல்வியின் தரத்தை எடுத்துக் காட்டுகிறது.
நவோதயா வித்யாலயா பள்ளிகள் இல்லாமலேயே தமிழ்நாட்டின் கல்வி சிறப்பாக உள்ளது. தமிழக அரசை பொருத்தவரைக்கும் சிறந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்க உறுதிப்பூண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஏற்கனவே தமிழ்நாட்டில் அரசினுடைய மாதிரி பள்ளிகள் செயல்பாட்டில் இருக்கும்போது, புதிதாக அதன் நகல் போல் இருக்கும் நவோதயா வித்யாலயா பள்ளிகளை தவிர்த்து விட்டு, மாநில சுயாட்சியை பாதுகாக்க, தற்போதுள்ள உள்கட்டமைப்பு மூலம் தேசிய கல்வி நோக்கங்களை அடைய, மாநிலத்தில் தற்போது செயல்பட்டு வரும் மாதிரி பள்ளிகளுக்கு மத்திய அரசு நிதி உதவியை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
ஏற்கனவே சமகிரக சிக்ஷா திட்டத்தின் கீழ் மாநில அரசுக்கு கல்விக்காக வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு விடுவிக்காமல் உள்ளது. அது தொடர்பாகவும் மத்திய அரசிடம் எடுத்துரைத்திருக்கிறோம். எனவே தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்பட வேண்டிய கல்வி நிதி ரூ.3548.22 கோடியை வழங்க வேண்டும்.
மத்திய அரசு தனது பங்கு கல்வி நிதியை விடுவிக்காததால் மாநிலத்தில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பு பராமரிப்பு, மாணவர்கள் நலத்திட்டங்கள், ஆசிரியர்களுக்கான ஊதியம் மற்றும் கல்வி தொடர்பான செயல்பாடுகளில் தொய்வு ஏற்படுகிறது. எனவே இதனை போக்கும் வகையில் மத்திய அரசு கல்வி நிதியை விரைவாக விடுவிக்க வேண்டும்.
எனவே கூடுதலாக கல்வி நிறுவனங்களை கொண்டு வருவதற்கு பதிலாக, மத்திய அரசு ஏற்கனவே ஏற்றுள்ள தனது கடமைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு நிறைவேற்றாமல் கூடுதலாக கல்வி நிறுவனங்களை திறப்பது என்பது நிதி ரீதியில் மேலும் சிக்கலை ஏற்படுத்தும். எனவே மத்திய அரசு ஏற்கனவே மாநிலத்திடம் உறுதியளித்த விஷயங்களை நிறைவேற்றி தர வேண்டும்.
இவ்வாறு தமிழக அரசு தனது பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது.






