search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திரிணாமுல் காங்கிரஸ் எதேச்சதிகார ஆட்சி நடத்துகிறது: காங்கிரஸ் மூத்த தலைவர் குற்றச்சாட்டு
    X

    திரிணாமுல் காங்கிரஸ் எதேச்சதிகார ஆட்சி நடத்துகிறது: காங்கிரஸ் மூத்த தலைவர் குற்றச்சாட்டு

    • சந்தேஷ்காளி விவகாரத்தில் ஷேக் ஷாஜகானை திரிணாமுல் பாதுகாப்பதாக குற்றச்சாட்டு.
    • அவர்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கப்பட்டால் வழக்கு போடப்படுகிறது.

    மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில் உள்ளது. ஆனால் மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் தொகுதிகளை பகிர்ந்து கொள்ள மறுத்து வருகிறது. 42 தொகுதிகளில் இரண்டு தொகுதிகள் மட்டுமே வழங்க மம்தா முடிவு எடுத்துள்ளார். இதனை ஏற்க காங்கிரஸ் மறுத்து வருகிறது.

    இதனால் மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக பேசத் தொடங்கியுள்ளனர். தற்போது அங்கே சந்தேஷ்காளி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எதேச்சதிகார ஆட்சியை நடத்துகிறது என மேற்கு வங்காள காங்கிரஸ் கட்சி தலைவரும், எம்.பி.யுமான ஆதிர் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ஆதிர் ரஞ்சன் கூறுகையில் "திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் மேற்கு வங்காளத்தில் எதேச்சதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கப்பட்டால் வழக்கு போடப்படுகிறது. அது பத்திரிகையாளர்கள் இருந்தாலும் கூட. அவர்களுக்குக்கூட பாதுகாப்பு இல்லை. நிருபர்கள் கைது செய்யப்படுகிறாரக்ள். செய்தி ஆசிரியர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது." என்றார்.

    மேற்கு வங்காள மாநிலம் வடக்கு பர்கானஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காளி என்ற இடத்தில் ஷேக் ஷாஜகான் பெண்களுக்கு எதிராக தனது கூட்டாளிகளுடன் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும், அவர்களின் சொத்துகளை சட்டவிரோதமாக பறித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பெண்கள் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

    இதனால் அந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷேக் ஷாஜகான் பாதுகாப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் மீது எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஷேக் ஷாஜகான் கைதாகாமல் தலைமறைவாக உள்ளார்.

    Next Story
    ×