என் மலர்
இந்தியா

ED சோதனைக்கு கடும் எதிர்ப்பு: வீதியில் இறங்கி போராடிய மம்தா பானர்ஜி
- தேர்தல் உத்தி வகுத்து கொடுக்கும் ஐ-பேக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை.
- தேர்தல் தொடர்பான முக்கியமான தரவுகளை திருட சோதனை நடத்தப்பட்டதாக மம்தா குற்றச்சாட்டு.
மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் உத்தி வகுத்து கொடுக்கும் ஐ-பேக் (I-PAC) நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை தீவிர சோதனைகளை மேற்கொண்டது.
கொல்கத்தாவின் சால்ட் லேக் செக்டர் V-ல் உள்ள ஐ-பேக் (I-PAC) அலுவலகம் மற்றும் லௌடன் வீதியில் உள்ள அதன் இயக்குநர் பிரதீக் ஜெயின் இல்லம் உட்பட சுமார் 10 இடங்களில் சோதனைகள் நடைபெற்றது. மம்தா பானர்ஜியின் தேர்தல் உத்தி குழுவின் முக்கிய உறுப்பினராக ஜெயின் பரவலாக விவரிக்கப்படுகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரி கடத்தல் ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் இந்தச் சோதனைகள் நடத்தப்படுவதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சோதனை தொடர்பான செய்திகள் வெளிவந்ததும் பானர்ஜியின் ஆதரவாளர்கள் சால்ட் லேக் அலுவலகத்திற்கு வெளியே கூடத் தொடங்கியுள்ளனர்.
மேலும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, பிரதீக் ஜெயினின் இல்லத்திற்கு சென்றுள்ளார். மேலும் அங்கு அவர் சில ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகளை கையில் எடுத்துக்கொண்டு வெளியே வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து விசாரணைக்கு இடையூறு விளைவித்ததாகவும், முக்கிய ஆதாரங்களை மம்தா பானர்ஜி எடுத்துச் சென்றுவிட்டதாகவும் கூறி அமலாக்கத்துறை கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல்கள் மற்றும் தேர்தல் ரகசியங்களை அபகரிக்கவே மத்திய அரசு இந்தச் சோதனையை நடத்துவதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலையில் அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில் இன்று மதியம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தொண்டர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கொல்கத்தாவில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.






